சாதத் ஹசன் மண்ட்டோ
தமிழாக்கம்: ராமாநுஜம்
இருந்தாலும் ஒரு சமயத்தில், அது “ஆல்ரைட்டாக’’ மாற முடியாமல் போக, மிஸ். ஜின்னா சமையற்காரர்கள் இருவரை வேலையை விட்டு வெளியேற்றும் அளவிற்கு அவர்கள் மீது கோபம் கொண்டார். அதில் ஒருவன் பிரத்தியேகமாக ஐரோப்பிய உணவுகள் சமைப்பதற்காகவே இருக்க, மற்றொருவன் இந்திய உணவுகளுக்குப் பொறுப்பாளனாக இருந்தான். பின்னவன் எப்போதும் வேலை எதுவும் இல்லாமல் இருப்பான் – சில சமயங்களில் மாதக் கணக்கில்கூட. ஆனால் அவனுடைய முறை வரும்போது சுறுசுறுப்பாகக் காரியத்தில் குதிப்பான்.
காயிதே அஸாம் உண்மையில் இந்திய உணவுகளைப் பெரிதாக விரும்பியது கிடையாது. இருந்தாலும் அவருடைய சகோதரி விஷயங்களில் அவர் எப்போதும் தலையிடாததால், இரண்டு சமையல்காரர்களும் வேலையை விட்டு நீக்கப்பட்ட போது அமைதியாகவே இருந்தார். உணவு உண்பதற்காக அவர்கள் இருவரும் பல நாட்கள் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று வந்தார்கள். எங்களைப் பொறுத்தவரை இதனால் நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். புது சமையல்காரர்களைத் தேடுகிறோம் என்று நாங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு, சௌகரியமாக நகர வீதிகளில் வெறுமனே சுற்றிவிட்டு, வேலைக்குத் தகுதியான ஆட்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று திரும்பி வந்தவுடன் எங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்போம். இறுதியில் மிஸ். ஜின்னா அந்த இரண்டு பழைய சமையல்காரர்களையே திரும்ப வருமாறு அழைத்தார்.
மிகக் குறைவாக சாப்பிடுபவர்கள், அவர்களைக் காட்டிலும் மிக அதிகம் சாப்பிடுவர்களைப் பார்த்து ஒன்று பொறாமைப் படுவார்கள் அல்லது அவர்கள் சிறப்பாகச் சாப்பிடுவதைப் பார்த்துச் சந்தோசப்படுவார்கள். காயிதே இரண்டாவது வகையைச் சேர்ந்த குறைவாகச் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அதனால் தான் மளிகைப் பொருட்களும் இறைச்சியும் வாங்கியது போக வெளிப்படையாக தெரியக்கூடிய மிச்சப்பணத்தை நாங்கள் என்ன செய்தோம் என்று அவர் எப்போதும் கேட்டதே கிடையாது. நான் உன்னிடம் ஒரு கதை சொல்கிறேன். அது 1939ம் வருடம் கடல் அலைகள் உற்சாகமாய்க் கரை மீது மோதிக்கொண்டிருக்க, நான் காயிதேவை அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியில் மேரின் டிரைவில் மிக மென்மையாக ஓட்டிக்கொண்டிருந்தேன். காற்றில் சற்றே சில்லிட்ட தன்மை இருந்தது. ஜின்னா சாகிப் மிக நல்ல மனநிலையில் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகும் ஈத் பண்டிகையைப் பற்றிச் சொல்வதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தேன்.
பின் பகுதியைப் பார்க்கக்கூடிய கண்ணாடியில், அவரைப்பார்க்க முடிந்தது. அவருடைய உதட்டில் மிக மெல்லிய புன்னகை தோன்றியது. நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அவர் எப்போதும் பிடித்துக் கொண்டிருக்கும் சிகார் அவருடைய உதடுகளுக்கு இடையில் இருந்தது. இறுதியாக அவர், “நல்லது, நல்லது நீ திடீரென்று ஏன் முசல்மானாக மாறிவிட்டாய்… கொஞ்சநாட்களுக்கு கொஞ்சம் போல் இந்துவாக இருப்பதற்கு முயற்சி செய்’’ என்று பேசினார். நான்கு நாட்களுக்கு முன்னர்தான் காயிதே எனக்கு இருநூறு ரூபாய் நோட்டை அன்பளிப்பாகக், கொடுத்து என்னுள் இருந்த முசல்மானைச் சந்தோசப்படுத்தினார். மேலும் பணம் கேட்க நினைத்ததால், நான் இந்துயிசத்தைச் சற்றே தழுவிச் கொள்ளுமாறு இப்போது அறிவுரை கொடுக்கிறார்.
காயிதே அஸாமின் அந்தரங்க வாழ்க்கை எப்போதும் மர்மமாகவே இருந்தது. அப்படியே தான் எப்போதும் இருக்கும். அவருடைய எல்லா நேரங்களும் அரசியலுக்காகக் கொடுக்கப்பட்டதால், அவருக்கு என்று அந்தரங்க வாழ்க்கை என்பது ஏறக்குறைய கிடையாது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு அவர் மனைவியை இழந்ததோடு, அவருடைய மகளும் அவரின் விருப்பத்திற்கு எதிராக ஒரு பார்சியைத் திருமணம் செய்து கொண்டார்.
“சாகிப்புக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த நிறத்தில் இருந்தாலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவள் ஒரு முசல்மானைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவருடைய மகள் அவரோடு விவாதம் செய்தாள். அவரே, மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் அவருடைய சுதந்திரத்தை நிலைநாட்டியிருக்க, அதே சுதந்திரத்தை அவளுக்குக் கொடுக்க அவர் ஏன் மறுக்கிறார் என்று அவள் கேட்டாள்’’ என்றான் அசாத்.
மிகப் பிரபலமான பம்பாய் பார்சி ஒருவருடைய மகளை காயிதே அஸாம் திருமணம் செய்து கொண்டது, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் கோபம் கொள்ள வைக்க அதற்குப் பழிவாங்கவேண்டும் என்று இருந்திருந்தார்கள். காயிதே மகளுக்கு ஒரு பார்சி உடனான திருமணம் என்பது சிந்தித்துச் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் என்று சிலர் சொன்னார்கள். நான் இதை அசாத்திடம் தெரிவித்த போது அவன், “கடவுளுக்குத் தான் எல்லாம் தெரியும். ஆனால் எனக்குத் தெரிந்தது எல்லாம், அவருடைய மனைவியின் மறைவிற்குப் பிறகு இது தான் காயிதே அஸாமை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்தது. இந்தத் திருமணம் பற்றிய செய்தியை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய முகத்தில் இருந்த சோகத்தைப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில் அவர் மிகவும் வெளிப்படையானவர். அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும். எளிதில் புண்படக்கூடிய அவரை ஒரு சாதாரண நிகழ்ச்சி கூட பெரிய அளவில் இம்சைப்படுத்தும். அவருடைய புருவங்கள் விரிவதை வைத்தே அவர் கோபமாக இருக்கிறாரா அல்லது குழப்பத்தில் இருக்கிறாரா என்று சொல்லிவிட முடியும். அவரது துக்கத்தை அவரால் மட்டுமே அளக்க முடியும் என்றாலும், அந்த நாட்களில் அவரைப் பார்த்தவர்கள் எவ்வளவு நிலைகுலைந்து இருந்தார் என்று உணர்ந்திருப்பார்கள். இரண்டு வாரங்களுக்கு, அவரைப் பார்க்க வந்தவர்கள் எவரையும் அவர் சந்திக்கவில்லை. சிகார் பிடித்துக்கொண்டு, வெறுமனே அறையில் மேலும் கீழும் நடந்து கொண்டே இருந்தார். அந்த இரண்டு வாரங்களில் அவர் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்திருக்க வேண்டும்.’’
அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால், எப்போதும் தன்னந்தனியே, பின்னிரவில் மிகச் சுத்தமான அவரது அறையில் அளந்தெடுத்தாற்போல் அடி வைத்து, மேலும் கீழும் நடந்து கொண்டேயிருப்பார். அவருடைய பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ இருக்கும், கனத்த தோல் செருப்பு தாள சுதியோடு சப்தம் எழுப்ப, அந்த இரவுகள் நகர்ந்து கொண்டிருக்கும். அது கடிகார துடிப்புப் போல் இருக்கும். காயிதே அஸாம் அவருடைய காலணிகளை மிகவும் விரும்புவார். அதற்குக் காரணம் அது எப்போதும் அவருடைய காலடியிலேயே இருப்பதாலும், அவர் விருப்பப்படுவது போல் மிகச்சரியாக செயல்படக்கூடியது என்பதினாலும் தானா?
இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வெளியே வந்தார். அவருடைய முகத்தில் துக்கத்திற்கான அறிகுறிகளையோ மன அழுத்தத்திற்கான அறிகுறிகளையோ காணமுடியவில்லை. இரண்டு வாரங்களாக தாழ்ந்திருந்த அவருடைய தலை இப்போது மீண்டும் நிமிர்ந்து இருந்தது. ஆனால் இதற்கு நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்றோ, அந்த அதிர்ச்சியிலிருந்து தேறிவந்துவிட்டார் என்றோ அர்த்தம் இல்லை.
அசாத்துக்கு இது எப்படி தெரியும் என்று கேட்டேன். “பணியாளர்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படுவதில்லை’’ என்று பதில் தந்தான். “சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழைய இரும்புப் பெட்டியை அவரது அறைக்கு எடுத்து வந்து அதன் பூட்டைத் திறக்கச் சொல்வார். அது முழுக்க இறந்து போன அவருடைய மனைவி மற்றும் பிடிவாத குணம் கொண்ட அவருடைய மகள் சிறு குழந்தையாய் இருந்தபோது அணிந்திருந்த துணிமணிகளால் நிரம்பி இருக்கும். அந்தத் துணிமணிகள் வெளியே எடுக்கப்பட, ஒரு வார்த்தையும் பேசாமல் அதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார். ஓட்டிப்போய் இருக்கும் அவருடைய முகம் கருத்துப் போகும். “இட்ஸ் ஆல்ரைட் இட்ஸ் ஆல்ரைட்’’ என்று சொல்லி, ஒற்றைக்கண் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்வார்.
காயிதேவுக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள். பாத்திமா, ரெஹ்மத், மற்றும் மூன்றாவது சாகோதரியின் பெயர் என் நினைவில் இல்லை. அவள் டோங்கிரியில் வசித்து வந்தாள். ரெஹ்மத் ஜின்னா ‘சினாய் மோட்டர்ஸ்’ அருகில் இருந்த சௌபாத்தி கார்னரில் வசித்து வந்தார். அவருடைய கணவர் எங்கோ வேலை பார்த்து வந்தாலும் பெரிதாக வருமானம் ஏதும் இல்லை. சாகிப் ஒவ்வொரு மாதமும் சீல் வைக்கப்பட்ட உறையை என்னிடம் கொடுப்பார் – அதில் பணம் இருக்கும். சில சமயங்களில் பெரிய பொட்டலத்தைக் கொடுப்பார் – அதில் துணிமணிகள் இருந்திருக்கலாம். நான் இதை ரெஹ்மத் ஜின்னாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வப்போது சாகிப்பும் மிஸ். ஜின்னாவும் அவரைப் போய் பார்த்து வருவார்கள். டோங்கரியில் இருந்த அவருடைய மற்றொரு சகோதரியும் திருமணமானவர்தான். எனக்குத் தெரிந்தமட்டில் அவர் மிக நல்ல நிலையில் இருந்ததால் அவருக்குப் பொருளாதார உதவிகள் ஏதும் தேவைப்படவில்லை. காயிதேவுக்கு ஒரு சகோதரனும் இருந்தான், அவனுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருந்தாலும், அவருடைய வீட்டிற்கு வர மட்டும் அவனுக்கு அனுமதி கிடையாது.
ஒரு முறை நான் அவனைப் பம்பாயில் பார்த்தேன். சவாய் பாரில் தான், பார்ப்பதற்குக் காயிதே போலவே இருந்த அவன், அப்போதுதான் சிறு அளவு ரம் சொல்லியிருந்தான். அதே மூக்கு, அதே முக அமைப்பு, அதேபோல் வாரியிருந்த தலைமுடி அதே போல் நடுவில் நரைத்தமுடி. நான் எவரோ ஒருவனிடம் அந்த மனிதர் யார் என்று கேட்ட போது, அவன் தான் திரு.முகமது அலி ஜின்னாவின் சகோதரன் அகமது அலி என்று சொல்லப்பட்டது. நான் நீண்ட நேரம் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ரம்மை மிக மெதுவாகக் குடித்தபின் பணம் கொடுத்தான் – அது ஒரு ரூபாய்க்கும் குறைவானதுதான் என்றாலும், ஏதோ பெரிய தொகையைக் கொடுப்பது போல் ஆடம்பரமாகக் கொடுத்தான். அவன் அங்கு உட்கார்ந்திருந்த விதம் மூன்றாம் தர பம்பாய் மதுக்கடையில் தான் என்பது போல் அல்லாமல், தாஜ் மஹால் ஹோட்டலிலேயே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி – ஜின்னா பேச்சுவார்த்தைக்கு முன்னர் அதே அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற பம்பாய் முசல்மான்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் என்னுடைய நண்பன் ஒருவனும் கலந்து கொண்டான். காயிதே அஸாம் அவருக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய சகோதாரன் அகமத் அலி கூட்டத்திற்குப் பின்னால் ஒற்றைக்கண் கண்ணாடி அணிந்து கொண்டு நின்றபடியே, ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததாக என்னிடம் தெரிவித்தான்.
வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுகளில் காயிதே அசாமுக்கு பிடித்தது பில்லியாட்ஸ் மட்டுமே. விளையாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றும் போதெல்லாம் பில்லியர்ட்ஸ் அறையைத் திறக்கச் சொல்லி உத்தரவிடுவார். ஒவ்வொரு நாளும் அந்த அறை தூசுகள் தட்டப்பட்டு மிகச் சுத்தமாகத் தான் இருக்கும் என்றாலும், பணியாளர்கள் அத்தகைய நாட்களில் மேலும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள். அந்த விளையாட்டில் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால், பில்லியர்ட்ஸ் அறையில் நுழைவதற்கு நான் அனுமதிக்கப்படுவேன். பன்னிரெண்டு பந்துகள் சாகிப் முன்பே வைக்கப்பட, அதில் மிகக் கவனமாக மூன்றைத் தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்குவார். பல சமயங்களில் மிஸ். ஜின்னாவும் அங்கிருப்பார். சாகிப் தன் உதடுகளுக்கிடையே சிகாரை வைத்துக்கொண்டு, அவர் தாக்கப்போகும் பந்தின் நிலையை உள்வாங்கிக் கொள்வார். பல கோணங்களில் இருந்து அதை ஆராய வேண்டியிருப்பதால் அதற்குப் பல நிமிடங்கள் ஆகும். அவர் கையில் பிடித்திருக்கும் கோலின் கனத்தைப் பரிசோதிப்பது போலவும், ஏதோ தந்தி வாத்தியத்தை வாசிக்க வில்லைப் பிடித்திருப்பது போலும், அவருடைய மெலிந்த நீளமான விரல்களுக்கு இடையே அதை மேலும் கீழும் நகர்த்திக் குறிபார்த்து அடிக்கப்போகும் அந்தத் தருணத்தில் அதை விட மேலும் சிறப்பான கோணம் ஏதோ ஒன்று தோன்றியதால் ஆட்டத்தை நிறுத்திவிடுவார். அவருடைய ஆட்டம் மிகச் சரியானது தான் என்று முழுமையான திருப்தி ஏற்பட்ட பிறகே விளையாடுவார். அவர் திட்டமிட்டது போல் ஆட்டம் நிகழ்ந்து விட்டால், அவருடைய சகோதரியைப் பார்த்து பெருமிதத்தோடு புன்னகைப்பார்.
அரசியலிலும், காயிதே அஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார். அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே அறிந்து தான் இருந்தார்.
அசாத் சொன்னதில் அடிப்படையில், காயிதே அஸாம் வீண் பேச்சுகள் பேசுவதை வெறுத்தவர் என்பதால், வெறுமனே அவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை முற்றிலுமாக தவிர்த்தார். சுருக்கமான தேவையான உரையாடல்களுக்கு மட்டுமே அவருடைய காதுகள் இருந்தன. அவரைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும் அந்தப் பிரத்தியேக அறையில், ஒரே ஒரு சிறிய சோபாவும் அதற்கு அருகில் ஒரு சிறிய மோடா மட்டுமே இருந்தன. அந்த மோடாவில் இருந்த சாம்பல் கிண்ணத்தில், அவருடைய சிகார் சாம்பலைத் தட்டிவிடுவார். எதிரே இருந்த சுவருக்கு முன் கண்ணாடிக் கதவுகள் கொண்ட இரண்டு அலமாரிகளில் அவருடைய ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்ட புனித குரான் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்களும் அங்குதான் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய பெரும்பாலான நேரம் அந்த அறையில் தான் செலவழிக்கப்பட்டது. எங்களில் யாரேனும் ஒருவர் கூப்பிட்டு அனுப்பப்பட்டால், கதவருகே நின்று கொண்டுதான், அவருடைய உத்தரவுகளைக் கேட்க வேண்டும். பிறகு அங்கிருந்து நகர்ந்து விடவேண்டும். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்கள், சோபாவில் தாறுமாறாய் இறைந்துக் கிடக்கும். ஏதேனும் கடிதம் எழுதவேண்டியிருந்தால் மட்லுப் அல்லது சுருக்கெழுத்து எழுதக்கூடியவருக்கு அவர் சொல்லி அனுப்பி, தீர்மானமான குரலில், அதிகாரத்தோடு அவர் சொல்ல வேண்டியதைச் சொல்வார். என்னுடைய ஆங்கில அறிவு மிகக் குறைவானது தான் என்றாலும் அழுத்தம் தேவைப்படாத வார்த்தைகளுக்கு எல்லாம் அவர் அழுத்தம் கொடுத்ததாகவே நான் எப்போதும் நினைப்பது உண்டு.’’
அசாத் குறிப்பிட்ட ‘அதிகாரத்தோடு’ என்பது ஒருவேளை அவருடைய வலுவற்ற உடலைத் தற்காத்துக்கொள்ளும் உள்மன வெளிப்பாடாக இருக்கலாம் அவருடைய வாழ்க்கை ஓடும் தண்ணீரில் குமிழிப்போல் இருந்தாலும், இந்த உலகத்திற்கு பெரும் நீர் சுழற்சி போல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அந்த உடலில் வலு இல்லாதது தான் அத்தனை காலங்களுக்கும் அவரை உயிரோடு வைத்திருக்கிறது. எவ்வித சம்பிரதாயங்களும் இல்லாமல் காயிதே உறவு வைத்திருந்தது அவருடைய மிகச்சிறந்த நண்பரான நவாப் பஹதூர் யார்த் ஜங்குடன் மட்டும் தான் என்று அசாத் சொன்னான். “அவர் அடிக்கடி சாகிப்பைச் சந்திக்க வருவார். இருவரும் அரசியல் மற்றும் முக்கியமான தேசிய விசயங்களை மணிக்கணக்காயப் பேசிக்கொண்டிருப்பார்கள். நவாப்போடு இருக்கும் போது மட்டும் காயிதே முற்றிலும் வேறுபட்ட மனிதராக இருந்தார். மிக அந்நியோனியமான நண்பர் ஒருவரிடம் பேசுவது போல, அவரோடு மட்டுமே பேசுவார். அவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்து நண்பர்கள் போலவே தோன்றினார்கள். இருவரும் அறையில் ஒன்றாக இருக்கும் போது அவர்களின் உரக்கச் சிரிக்கும் சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மக்மூத்பாத் ராஜா சாகிப், ஐ.ஐ.சுந்த்ரிகர், மௌலானா ஸாஹித் ஹ§சைன், நவாப் ஸாதா, லியாகத் அலிகான், நவாப் சர் முகமது இஸ்மாயில், மற்றும் அலி இமாம் போன்றவர்கள் உட்பட மற்றவர்களும் அவரைச் சந்திக்க வருவார்கள். ஆனால் சாகிப் அவர்களை எல்லாம் ஒருவித சம்பிரதாயத்தோடுதான் கையாண்டார். பஹதூர் யார்த் ஜங்கின் வருகையோடு சம்பந்தப்பட்டிருந்த அந்தச் சம்பிரதாயங்கள் அற்ற சுலபமான தன்மை எல்லாம் மற்றவர்கள் வருகையின் போது காணாமல் போய்விடும்’’ லியாகத் அவரைப் பார்க்க அடிக்கடி வருவாரா என்று அசாத்திடம் கேட்டேன்.
“ஆமாம்’’ என்று அசாத் பதில் தந்தான். “மிகவும் திறமை பெற்ற அவருடைய மாணவனைப் போல்தான் காயிதே அவரை நடத்தினார். லியாகத் அவர் மீது பெரும் அளவு மரியாதை வைத்து, அவரது கட்டளைகளின் கடைசி வரிகளைக்கூட நிறைவேற்றினார். சில சமயங்களில் அவர் அழைக்கப்படும் போது, உள்ளே போவதற்கு முன் சாகிப் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். நான் எப்போதும் அவருக்குப் பதில் சொல்ல முடிந்ததற்குக் காரணம் காயிதே மோசமான மனநிலையில் இருந்தால் அது எல்லோருக்கும், ஏன் மௌண்ட் பிளசன்ட் சுவர்களுக்குச் கூட தெரிந்திருக்கும். காயிதே அஸாம் அவருக்காக வேலை பார்ப்பவர்கள் மற்றும் பணியாட்களின் நடத்தையிலும், தோற்றத்திலும் ரொம்பவும் குறியாக இருந்தார். சுத்தம் இல்லாத எல்லாவற்றையும் அவர் வெறுத்தார் – மனிதர்களின் நடத்தை உட்பட அவருக்கு மட்லூப்பை ரொம்வும் பிடித்திருந்தது என்றாலும், முஸ்லீம் லீக் பெண் தொண்டரோடு அவர் உறவு வைத்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன், இது போன்ற முறையற்ற நடத்தைகளை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாதவராக அவர் மிகவும் எரிச்சலடைந்தார். மட்லூப் வரவழைக்கப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் காயிதே பிறகு அவரை எப்போது சந்தித்தாலும், பழைய நண்பர் போலவே அவரை நடத்தினார்.
ஒரு முறை நான் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தேன். நகரத்திற்குள் சென்று பாரில் பல மணிநேரங்கள் செலவு செய்துவிட்டு திரும்பி வந்தேன். நான் எவ்வளவு தாமதமாக வந்தேன் என்று சாகிப்புக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு. அடுத்த நாள் என்னை அழைத்து நான் என் நடத்தையைப் பாழ்படுத்திக் கொள்வதாக ஆங்கிலத்தில் தெரிவித்தார். பிறகு அரைகுறை உருதுவில், “இப்போது உனக்குத் திருமணம் செய்து வைத்தாக வேண்டும்’’ என்று சொன்னார். நான்கு மாதங்கள் கழித்து முஸ்லீம் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் பம்பாயில் இருந்து டெல்லிக்கு வந்த போது அவர் விருப்பப்பட்டது போலவே உரிய காலத்தில் நான் திருமணம் செய்து கொண்டேன். அவரோடு எனக்குத் தொடர்பு இருந்ததினால் மட்டுமே, சையத் குடும்பத்தில் இருந்து வந்தவள் எனக்கு மனைவியாக முடிந்தது. நான் ஷேக் ஜாதியைச் சேர்ந்தவன் என்றாலும் சையது குடும்பத்தினர் என்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளக் காரணம் நான் காயிதே அஸாமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்ததனால்தான்…’’
காயிதே அஸாம் எப்போதாவது ‘என்னை மன்னித்துக்கொள்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறானா என்று அசாத்திடம் கேட்டேன். அசாத் தலையை ஆட்டினான், “இல்லை. அவரது உதடுகளில் இருந்து தப்பித் தவறியேனும் அந்த வார்த்தைகள் மட்டும் வெளியேறியிருக்கும் பட்சத்தில், அதை அகராதியில் இருந்தே வெட்டியெறிந்திருப்பார் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்’’ என்றான். இந்த ஓர் குறிப்பு ஒன்றே காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் இயல்பின், திறவுகோலைக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
முகமது ஹனீஃப் அசாத் உயிரோடுதான் இருக்கிறான், அவனுடைய காயிதே அஸாம் பரிசாகக் கொடுத்த பாகிஸ்தானில். அந்த நாடு மிகவும் திறமை பெற்ற மாணவரான கான் லியாகத் அலிகானின் தலைமையில் இந்த முரட்டுத்தனமான உலகத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரமான இந்த துண்டு நிலத்தில் தான், பஞ்சாப் ஆர்ட்ஸ் பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு வெளியே, வெற்றிலை விற்கும் கடைக்கு அருகாமையில் உடைந்து கிடக்கும் கட்டிலில் அமர்ந்து கொண்டு, அவனுடைய சாகிப்புக்காக காத்திருப்பதோடு, குறித்த நேரத்தில் அவனுக்கான ஊதியம் கொடுக்கப்பட போகும் அந்த நாளுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் காயிதே அஸாம் அவனுக்கு அறிவுரை தந்தது போல சற்றே இந்துவாக மாறுவதற்கும் தாயாராக இருந்தான்.
சென்ற முறை நான் அவனிடம் காயிதே பற்றி பேசிய போது, மிகவும் மனம் உடைந்து இருந்தான். வெற்றிலை வாங்குவதற்குக் கூட அவனிடம் ஏதும் இல்லாத நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். அவனிடம் ஏதேதோ பேசி எப்படியோ அவனுடைய மண்டைக்குள் இருந்த பிரச்சனைகளிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்தேன்.
அவன் பெருமூச்சு விட்டான். “என்னுடைய சாகிப் இறந்து விட்டார். அவருடைய கடைசி பயணத்தின் போது கூரை அகற்றப்பட்ட அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியை ஓட்டிக்கொண்டு நான் உடனிருந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு ஏங்கினேன். அவர் இறுதியாய் அடைய வேண்டிய இடத்திற்கு எவ்வளவு மென்மையாய் வண்டியை நான் ஓட்டியிருக்க வேண்டும் என்று ஏங்கினேன். எளிதில் புண்படக்கூடிய அவரது சுபாவத்திற்கு கரடுமுரடான, தூக்கிப்போடும் பள்ளங்கள் ஏற்றதில்லை. நான் இதைக் கேள்விப்பட்டேன் – அது உண்மைதானா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவருடைய கடைசிப் பயணமாக இருந்திருக்க வேண்டியதில் விமானம் மூலம் கராச்சிக்கு அவர் கொண்டுவரப்பட்டுப் பிறகு கவர்னர் ஜெனரல் வீட்டிற்கு அவரை எடுத்துச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வண்டி சிறிது தூரம் கடந்த உடனே இஞ்சின் ஏதோ மக்கர் செய்து நின்று போனதாம். என்னுடைய சாகிப் இதனால் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என்று எனக்குத் தெரியும்.’’
அசாத்தின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
நன்றி: கீற்று