‘சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும், ஓர் அழைப்பாளர் (வானவர்), ”நிச்சயமாக உங்களுக்கு நிரந்தரமான வாழ்க்கை உண்டு. எக்காலமும் நீங்கள் இறந்து விட மாட்டீர்கள். நிச்சயமாக உடல் நலத்துடன் இருப்பது உண்டு. எக்காலமும் நீங்கள் நோயாளியாகி விட மாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் வாலிபர்களாக இருப்பதுண்டு. எக்காலமும் நீங்கள் முதுமையாகி விடமாட்டீர்கள். நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. எக்காலமும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள் என அறிவிப்பு செய்வார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.’ அறிவிப்பாளர்கள்: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1892)
‘சொர்க்கத்தில் உங்களில் ஒருவரின் தாழ்ந்த நிலை என்பது, அவரிடம் அல்லாஹ் ”நீ ஆசை கொள்” என்று கூறுவதுதான். உடனே அவர் ஆசை கொள்வார். மேலும் ஆசை கொள்வார். ”நீ ஆசை கொண்டாயா?”என்று அல்லாஹ் அவரிடம் கேட்பான். ”ஆம்” என்பார். உடனே அல்லாஹ் அவரிடம் ”நிச்சயமாக நீ நினைத்தது உனக்குண்டு. மேலும் அத்துடன் அது போன்றதும் உண்டு” என்று கூறுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.’ அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு (முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்:1893)
‘சொர்க்கவாசிகளைப் பார்த்து அல்லாஹ், ”சொர்க்கவாசிகளே!” என்று அழைப்பான். உடனே அவர்கள், ”எங்கள் இறைவா! உன்னிடம் ஆஜாரகி விட்டோம். உன்னிடம் வந்து விட்டோம். நன்மைகள் அனைத்தும் உன் வசமே உள்ளது” என்று கூறுவார்கள். ”நீங்கள் திருப்தி அடைந்தீர்களா?” என்று அல்லாஹ் கேட்பான். உடனே அவர்கள், ”எங்கள் இறைவா! நாங்கள் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம். உன் படைப்பினங்களில் எவருக்கும் நீ அளிக்காத ஒன்றை எங்களுக்குக் கொடுத்துள்ளாயே?” என்று கூறுவார்கள். ” இதைவிட மிகச் சிறந்ததை உங்களுக்கு நான் கொடுக்கட்டுமா?” என்று கேட்பான். ”இதையும் விட மிகச் சிறந்தது எது?” என்று அவர்கள் கேட்பார்கள். உடனே அவன் ”உங்களுக்கு என் திருப்தியை தந்து விட்டேன். இதன் பின் எப்போதும் உங்களிடம் நான் கோபம் கொள்ள மாட்டேன்” என்று கூறுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.’ அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு (புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1894 )
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் பவுர்ணமி இரவு நிலவைக் கண்டார்கள். ”இந்த நிலாவை நீங்கள் பார்ப்பது போல், நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனைக் கண்களால் மறுமையில் காண்பீர்கள். அவனைப் பார்க்கும் விஷயத்தில் இடைஞ்சல் – இடையூறு அளிக்கப்படமாட்டீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.’ அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லா ரளியல்லாஹு அன்ஹு (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1895 )
‘சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டால், அல்லாஹ் ”எதையேனும் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அதிகப்படுத்துகிறேன்”என்று கூறுவான். அதற்கு அவர்கள் ”எங்களின் முகங்களை நீ வெண்மையாக்கிவிடவில்லையா? சொர்க்கத்தில் எங்களை நுழையச் செய்து நரகை விட்டும் எங்களை நீ காப்பாற்றிவிடவில்லையா?” என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் (தனக்கும், அவர்களுக்குமிடையே உள்ள) திரையை திறப்பான். தங்களின் இறைவனை அவர்கள் பார்ப்பதை விட, அவர்களுக்கு விருப்பமான, வேறு எதையும் அவர்கள் வழங்கப்படவில்லை. (அவனைப் பார்ப்பதுதான் மிக விருப்பமானது)” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பாளர்: சுஹைப் ரளியல்லாஹு அன்ஹு (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1896 )