அல்லாஹூடைய தூதர் சொன்னார்கள் ‘பொறாமை கொள்ளாதீர்கள், போட்டிப் போடாதீர்கள், விலையேற்றம் செய்யாதீர்கள், ஒருவர் ஒரு பொருளை வாங்கும் பொழுது அதை கேட்டு வாங்கதீர்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்க மாட்டான், அவனுக்கு கொடுமை செய்யமாட்டான், அவனை கேவலமானவனாக கருத மாட்டான். ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிமை கேலவமானவனாக கருதுவது கொடுமையிலும் கொடுமையாகும். இதுதான் இறையச்சமாகும் என தன் நெஞ்சத்தில் கை வைத்து மூன்று முறை கூறினார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் உயிரும், பொருளும் அவரது மானம் உள்பட மூன்று விஷயங்கள் ஹாராமாகும். (இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸாகும்)
மமக–வை டெப்பாசிட் இழக்க வைக்க ஒவ்வொறு தவ்ஹீத்வாதியும் உயிரை கொடுத்து போரட வெண்டும் என்று பீஜே தன் தொண்டர்களுக்கு கட்டளையிட்டார். (கோவையில்)
ஏன்? ஏன்? இந்த கொலைவெறி? சகோதர முஸ்லிம் இயக்கத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?
மக்களவைத் தேர்தல்தேதி அறிவிப்பிற்குமுன்பே மத்திய மாநில அரசியலில் கட்சிகளிடையே கூட்டணி பேரங்களும் திரைமறைவு பரிவர்த்தனைகளும் நடந்து முடிந்துவிட்டன. சென்ற தேர்தலில் ஓரணியிலிருந்தவர்கள் இந்த தேர்தலில் எதிரணியில் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் பேரங்களும் திரைமறைவுப் பரிவர்த்தனைகளும் நடந்து காட்சிகள் மாறக்கூடும்.அரசியலில் நிரந்தர நண்பருமில்லை; நிரந்தரப் பகைவரும் இல்லை என்று பொதுமொழி அனைத்துக் கட்சியினராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இவ்வுலகமே கதியென்று கட்சிநடத்து தொழில்முறை அரசியல்வாதிகள் எப்படியும் போகட்டும். அவர்களின் கூட்டணி அடுத்த தேர்தல்வரை மட்டுமே. தேவையெனில் கைகொடுப்பதும் தேவையில்லாவிட்டால் காலை வாரிகொள்வதும் அரசியலில் சகஜம். ஆனால் முஸ்லிம் தலைவர்களும் இம்மனநிலைக்கு சமீபகாலங்களில் வந்துள்ளதை எண்ணி வேதனைப் படாமலிருக்க முடியவில்லை. இந்தியளவில் நடக்கும் அவலங்களைவிடவும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் இடையே நடக்கும் உள்குத்துகள்,காலைவாருதல்,பேரங்கள் சகிக்கமுடியவில்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமுமுக-ததஜ இடையே நடக்கும் பனிப்போர் தமிழக முஸ்லிம்களை எங்குபோய் விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
1994ல் தமிழக முஸ்லிம்களை மார்க்கம் மற்றும் அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்து கொடிபிடிக்கும் சமுதாயம் மட்டுமல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் தமுமுகவின் பங்களிப்பு மகத்தானது.வாழ்வுரிமை மாநாடு,எழுச்சி மாநாடு என தமிழக முஸ்லிம்களை ஓரணியில் கொண்டுவந்து சகலதரப்பையும் மலைக்க வைத்தனர்.இதுவரை இருந்த முஸ்லிம் இயக்கங்கள் மார்க்கத்தையோ அல்லது அரசியலையோ மட்டுமே முன்னிலைப் படுத்தி வந்ததால் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி முஸ்லிம்கள் தனித்தனி பாதையில் பிரிந்து கிடந்தனர்.தமுமுக இவ்விருவரையும் சரியான பாதையில் ஒருங்கிணைத்ததால் அழைத்த போதெல்லாம் முஸ்லிம்கள் குடும்பத்துடன் வந்து ஆதரவைத் தெரிவித்தனர்.
பத்தாண்டுகளில் எல்லாமே தலைகீழாக மாறியது! வழக்கமான அரசியல் கட்சிகளைவிடத் தரம் தாழ்ந்து ஒருவரை குற்றஞ்சாட்டிக் கொண்டு பிரிந்து நின்றதோடு, குழிபறிக்கவும் செய்தனர். தமுமுகவில் தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்லி சகோதர். பி.ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் சிலர் பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்று செயல்பட்டு வந்தனர். ஒருசில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் சமுதாயப் பணிகளோடு அரசியலிலும் ஈடுபட்டுவந்த தமுமுக திமுகவை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.
தமுமுகவின் அரசியல் அணுகுமுறைகளாலும் சமரசங்களாலும் தவ்ஹீதுப் பிரச்சாரத்தை முழுமையாகச் செய்யமுடியவில்லை என்று பிரிந்தவந்த ததஜ,தமுமுகவுக்கு எதிராக அதிமுக ஆதரவுப் பிரச்சாரம் செய்து தவ்ஹீது+அரசியல் என்று நிலை தடுமாறியதிலிருந்து தமிழக முஸ்லிம்கள் பரிதாப நிலையை நோக்கி மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர்.
சகோ.பி,ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் எழுச்சியான, வசீகரமான மார்க்கப் பிரச்சாரங்கள் தமிழக முஸ்லிம்களை வெகுவாகக் கவர்ந்தன. இதுவே மார்க்கம் என்று சொன்னதையும் கண்டதையும் கேட்டதையும் செயல்படுத்தியவர்கள் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராயத் தொடங்குமளவுக்கு வீரியமான தர்க்க ரீதியிலான பேச்சுக்கள் அமைந்தன. இவர் சொல்வதும் நியாயமாகத்தானே இருக்கிறது என்று சிலரை நிரந்தர ஆதரவாளர்களாகவும் மாற்றியது.1430 வருடங்களுக்கு முன்பே இறுதிப்படுத்தப்பட்ட இஸ்லாத்தில் இருந்த/இல்லாத விசயங்களை தர்க்கத்திற்கு உள்ளாக்கியது விழிப்புணர்வா அல்லது வீழ்ச்சியா என்பதை அல்லாஹ் நன்கறிவான்.
இமாம்கள் சொல்லியதெல்லாம் மார்க்கமல்ல என்றவர்கள் பிஜே சொல்வதே மார்க்கம் என்று பேசாமடந்தைகளாகினர். அல்லாஹ்வும் ரஸூலும் சொல்லாததைச் செய்பவன் வழிகேடர்கள் என்று சொல்லத் தொடங்கி பீஜெ சொல்வதை எதிர்ப்பவரெல்லாம் வழிகேடர் என்று நிலைபிறழ்தனர்.நேருக்குநேர் விவாதம் செய்ய வேண்டும் அல்லது சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதியசித்தாந்தம் போதிக்கப்பட்டது.
மார்க்க விஷயத்தில் பிஜே சற்று அதிகமாகவே கற்றறிந்தவர் என்பதால் சொல்பவை தவறாக இருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதில் நியாயமிருக்கிறது. மார்க்கமே பிரதானமென்று போர்க் கொடியேந்தி வெளியேறி, இன்று அரசியலிலும் குழம்பிப்போய் குழப்புவதையும் சகோதரர்கள் நியாயப்படுத்துவதை என்னவென்று சொல்வது?
தவ்ஹீதுப் பிரச்சாரத்திற்கு அரசியல் பின்னணி அவசியம் என்றால் அதை தமுமுகவிலிருந்து தனிக்கொடியுடன் பிரியாமலேயே செய்திருக்கலாமே? ஏப்ரல்-5 கோவையில் நடந்த ததஜ செயற்குழுத் தீர்மானத்தின்படி திமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்திருப்பது சரி அல்லது தவறாக இருக்கலாம். (தவ்ஹீதுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்?) ஆனால், தனிக்கட்சியாக அரசியல் களம்கண்டுள்ள முன்னாள் சகாக்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்து மண்ணைக் கவ்வ வைப்பதாகத் தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியமென்ன?தவ்ஹீது மட்டும் என்றுப் பிரிந்து வந்ததிலாவது ஓரளவு நியாயமிருந்தது. தமுமுகவை வீழ்த்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதற்கு எதற்கு தவ்ஹீது ஜமாத்?
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே;ஆகவே,உங்கள் இருசகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள்மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.”(49:10) என்ற வேதவரிகளையும்,வெற்றி தோல்விகளைத் தருபவன் அல்லாஹ்வே அவன் நாடியோருக்கு ஆட்சியதிகாரங்களை வழங்குவான் என்பதையும் மறந்து
‘மனிதநேயமக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.” என்று தீர்மானம் இயற்றுமளவுக்கு சகமுஸ்லிம் ஓரிருவருடங்கள் முன்புவரை ஒரே தட்டில் உணவருந்தி சுக/துக்கங்களில் பங்கேற்ற முன்னாள் சகாக்களை வீழ்த்தியே தீருவோம் / தீருவேன் என்பதற்கு எந்த ஹதீஸில் முன்மாதிரி உள்ளது என்று யாராவது கேட்டீர்களா? உலகளவில் இருதுருவங்களாகப் பிரிந்துள்ள ஷியாளுக்கும் சுன்னத்திக்களுக்கும்கூட இந்தளவுக்கு கொலைவெறியுடன் மோதவில்லையே!
ஒரு முஸ்லிம் வேட்பாளர் இல்லாத தி.மு.க.வுக்கு ஆதரவு நிற்கிற முஸ்லிம் வேட்பாளரை தோற்கடிப்போம் இதுவே த.த.ஜ.வின் இன்றைய தவ்ஹீத் நிலைப்பாடு.
‘தமுமுக–வை அழிப்பது லட்சியம், ம ம க தோற்பது நிச்சயம்” – என்ற வீர முழக்கத்தோடு ததஜ இந்த தேர்தலை சந்த்திக்க உள்ளது.
மமக–வை டெப்பாசிட் இழக்க வைக்க ஒவ்வொறு தவ்ஹீத்வாதியும் உயிரை கொடுத்து
போரட வெண்டும் என்று பீஜே தன் தொண்டர்களுக்கு கட்டளையிட்டார். (கோவையில்)
ஏன்? ஏன்? இந்த கொலைவெறி? சகோதர முஸ்லிம் இயக்கத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா?
முஸ்லிம்களை கொலை செய்யக்காத்திருக்கும் காவிக்கூட்டம் அங்கே. சகோதர முஸ்லிம்களின் காலை வாரிவிட காத்திருக்கும் கூட்டம் இங்கே! இன்னுமா ஈகோ தீரவில்லை? அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அல்லாஹ்வின் தீர்மானங்கள் மட்டுமே மாற்றமுடியாதவை. அல்லாஹ்வும் ரஸூலும் ஒன்றைத் தீர்மானித்துவிட்டால் மட்டுமே மாற்றுக் கருத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியானவர்களாக இருப்பின் தயவுசெய்து செயற்குழுத் தீர்மானம் #8ஐ மாற்றங்கள்.மாற்ற மறுத்தால் அல்லாஹ்வின் கட்டளையை மதிக்கத் தவறியவர்களை அல்லாஹ்வுக்காக வெருத்து ஒதுக்க/ஒதுங்க வேண்டிய தருணம் இதுதான் என்பதை உணர வேண்டும்.
சகோதரர்களே!
இறையச்சத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் இந்த ஹதீஸை மேடைத் தோறும் சொல்வதற்காக அல்லது நடைமுறைப்படுத்துவதற்காக என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.