அபராதம்… அபராதம்…
[ போக்குவரத்து விதிமீறல்களுக்குக் கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் மாற்றங்கள் அமைய இருக்கின்றன. ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சிவப்பு விளக்கைச் சட்டைசெய்யாமல் ஓட்டுவது போன்ற தவறுகளுக்குக் குறைந்தபட்ச அபராதம் 500 ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது.
அவரவர் இஷ்டத்திற்கு நம்பர் பிளேட்டை வைத்துக் கொள்வது, சீட் பெல்ட் போடாமல் ஓட்டுவது போன்றவையும் இந்தப் பட்டியலில் சேரும்.
கைபேசியில் பேசியவண்ணம் வண்டி ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு 1,000 ரூபாய் அபராதமும்,
லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது போன்ற தவறுகளுக்கு 2000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.]
கடந்த 20 ஆண்டுகளாக எந்தவிதக் கட்டுப்பாடோ வரைமுறையோ இல்லாமல் மோட்டார் வாகன உற்பத்திக்கு அரசு அனுமதி வழங்கி வருவதன் விளைவுகளை இந்தியச் சாலைகள் அனுபவித்து வருகின்றன. போதாக்குறைக்கு வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு தவணை முறையில் கடன் வழங்கவும் தொடங்கியபோது சைக்கிள் வைத்திருப்பவர்கள் மொபெட் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கும், அதுவரை இருசக்கர வாகனம் வைத்திருந்தவர்கள் கார்களுக்கும் மாறியதில் ஆச்சரியமில்லை.
அதிகரித்த மோட்டார் வாகனங்கள் பொருளாதார வளர்ச்சியின் அறிகுறி என்று நமது ஆட்சியாளர்கள் கருதுவதில் தவறில்லை. ஆனால், அந்த அதிகரித்த மோட்டார் வாகனங்களுக்குத் தகுந்தபடி நமது சாலைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதிலும், அதிகரித்த பெட்ரோல், டீசல் விலைக்கும் செலுத்தப்படும் மாதத் தவணைகளுக்கும் ஏற்றபடி வேலைவாய்ப்புகளும் தனிநபர் வருமானமும் அதிகரிக்க வேண்டும் என்பதிலும் போதுமான கவனம் செலுத்தாததில்தான் தவறு. விளைவு? சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அன்றாட வேலைகளையும் வாழ்க்கையையும் பாதிக்கிறது.
நவீன லாரிகள் சரக்குப் போக்குவரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அதற்கேற்றாற்போல தங்க நாற்கரச் சாலைத் திட்டமும் முழுமூச்சில் முடுக்கிவிடப்பட்டதால் பெருநகரங்களுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்து துரிதப்படுத்தப்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது உண்மை. அதேகவனம் குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பதில் காட்டப்படவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.
இந்தநிலையில், 1988-ம் ஆண்டின் இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் புதிய பல மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது. அரசின் பதவிக்காலம் முடிய இருப்பதால் அடுத்தாற்போல பதவியேற்கும் அரசு நிறைவேற்ற இருக்கும் முக்கியமான சட்டத்திருத்தம் இதுவாகத்தான் இருக்கும்.
போக்குவரத்து விதிமீறல்களுக்குக் கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் அமைய இருக்கின்றன. ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சிவப்பு விளக்கைச் சட்டைசெய்யாமல் ஓட்டுவது போன்ற தவறுகளுக்குக் குறைந்தபட்ச அபராதம் 500 ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது. அவரவர் இஷ்டத்திற்கு நம்பர் பிளேட்டை வைத்துக் கொள்வது, சீட் பெல்ட் போடாமல் ஓட்டுவது போன்றவையும் இந்தப் பட்டியலில் சேரும்.
கைபேசியில் பேசியவண்ணம் வண்டி ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு 1,000 ரூபாய் அபராதமும், லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது போன்ற தவறுகளுக்கு 2000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்திய மோட்டார் வாகனச்சட்டத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு அபிப்பிராயம் இருக்க வழியில்லை. சட்டங்கள் அனைத்துமே காலத்திற்கும் மாறுபட்ட சமூக அமைப்பிற்கும் ஏற்றபடி அவ்வப்போது மாற்றப்பட வேண்டியவைதான். ஆனால், அந்த மாற்றங்கள் மேலெழுந்தவாரியாக அபராதத் தொகையில் மட்டும் செய்வதுடன் நின்றுவிடலாகாது.
உலகம் முழுவதும் அரசுத்துறை பொதுப் போக்குவரத்து நடத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும்தான் இவர்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உடன்படாதவர்களாக இருக்கிறார்கள். போக்குவரத்து விதிமீறல்களில் மிக அதிகமாக ஈடுபடுவது நமது அரசுப் போக்குவரத்துத்துறைதான். அதிகமான விபத்துகளுக்கும் அவர்கள்தான் காரணம்.
ஆனால் எந்தவிதச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை. அரசுத்துறை என்பதால் காவல்துறையும் அவர்களது தவறுகளைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது. முறையாக பஸ் நிறுத்தங்களில் தங்களது வாகனத்தை நிறுத்தும் அடிப்படைக் கடமையைக்கூட அவர்கள் செய்வதில்லை என்பதை அவர்களேகூட மறுக்க மாட்டார்கள்.
சாதாரண ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அனுதினமும் போக்குவரத்து போலீஸôரால் “ஓவர் லோடு’ என்று அபராதத்திற்கு உட்படுத்தப்படும்போது, அரசுப் போக்குவரத்துத் துறையினர் மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன் என்கிற கேள்வி எழத்தானே செய்கிறது?
உலகின் எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் பாதசாரிகள் நடந்து செல்லப் பாதை உண்டு என்பது மட்டுமல்ல, நடைபாதைக் கடைகளை அனுமதிப்பதும் கிடையாது. சைக்கிள்கள் செல்லவும் தனிப்பாதை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இங்கே முறையாக பாதசாரிகளுக்கோ சைக்கிள்களுக்கோ பாதையுமில்லை, அவர்கள் சாலையைக் கடக்க அடுத்தடுத்து வழியுமில்லை. சைக்கிள்களால் ஏற்படும் சிறு விபத்துகள்தான் நகரங்களில் மிக மிக அதிகம்.
சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்போது இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கருத்தில்கொண்டு அந்த மாற்றங்களை முழுமையாகச் செய்யாமல் அபராதத் தொகையை அதிகரிப்பது என்பது போக்குவரத்துக் காவல்துறையினரின் வருமானத்தை அதிகரிக்க மட்டும்தான் உதவும்!
நன்றி: தினமணி