முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா? சற்று சிந்தனை செய்யுங்கள்!
நீங்கள் முஸ்லிம் என்று சொல்லுகின்ற சொல்லின் கருத்தென்ன? மனிதன் தன் தாய் வயிற்றுலிருந்தே இஸ்லாத்தை தன்னோடு கொண்டு வருகிறானா? முஸ்லிமுடைய மகன் முஸ்லிமுடைய பேரன் என்னும் அடிப்படையில் ஒரு மனிதன் முஸ்லிமாகிறானா?
ஆங்கில சமூகத்தில் பிறந்ததால் ஒருவன் ஆங்கிலேயனாகிறான். பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகிறான். ஹரிஜன் மகன் ஹரிஜனாகிறான்; இப்படி முஸ்லிமுக்கு பிறந்தவன் முஸ்லிமாகிறானா? பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா? இவற்றிற்கு நீங்கள் என்ன விடை கொடுப்பீர்கள்?
இல்லை நன்பரே! பிறப்பினால் ஒரு மனிதன் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான்; இஸ்லாத்தை கடைபிடிக்காவிட்டால் ஒருவன் முஸ்லிமாவதில்லை; என்றுதானே சொல்வீர்கள்.
ஒரு மனிதன் ராஜாவாக இருந்தாலும், ஆங்கிலேயனாக இருந்தலும், பிராமணனாக இருந்தாலும், கருப்பராக இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவனும் முஸ்லிமாக விளங்குவான். முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியே போய்விடுவான்! அவன் ஸையித் வம்சத்தில் வந்தவனாயிருந்தாலும் சரி.
ஏன் அன்பர்களே, என் கேள்விக்கு இப்படித்தானே பதில் கொடுப்பீர்கள்? அப்படியானால் உங்கள் பதிலிலிருந்தே ஓர் உண்மை தெளிவாகிறது. உங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த அருட்கொடை இறைவன் வளங்கியுள்ள கொடைகளிலேயே மிகப் பெரிய அறுட்கொடையாகும். இந்த அருட்கொடை உங்கள் தாய் தந்தையிடமிருந்து தானாக வந்த வாரிசு சொத்து அல்ல! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் ஓட்டிக்கொண்டிருக்கின்ற பிறப்புரிமையல்ல. அதை அடைவதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். முயற்சி எடுத்தால் அது உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் அலட்சியம் செய்தால் அது உங்களிடமிருந்து பறிக்கப்படும். (இறைவன் நம்மை காப்பாற்றுவானாக!)
முஸ்லிமுடைய வீட்டில் பிறந்து, முஸ்லிம்களுக்கு இருப்பது போன்ற பெயர்களைத் தமக்குச் சூட்டிக்கொண்டு, முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறவன் எவனும் உண்மையில் முஸ்லிம் அல்லன். ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு முஸ்லிமல்லாதவனுக்கும் இடையிலுள்ள அடிப்படை வேற்றுமை பெயர், உடை ரீதியானதல்ல!இவ்விருவருக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமை அறிவு ரீதியானதாகும்.
ஒரு முஸ்லிமுக்கு மிகப்பெரிய ஆபத்து என்றால் அது இஸ்லாத்தின் அறிவுரைகளை அவன் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்; திருக்குர்ஆன் எதைக் கற்று கொடுத்தது நபி صلى الله عليه وسلم அவர்கள் அறிவுரைகளை அவன் உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் இந்த அறியாமையின் காரணத்தால் அவன் தானே வழிகெட்டுப்போக முடியும்; அல்லது தஜ்ஜாலினாலும் வழி கெடுக்கப்படவும் முடியும்; என்றாலும் அறிவு என்ற விளக்கு இருந்தால் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அவனால் இஸ்லாத்தின் நேரிய பாதையைப் பார்த்துக் கொள்ள முடியும்.
வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும் இறைமறுப்பு, இணைவைத்தல், வழிகேடு, பாவம், கெடுதிகளை அறிவு பெற்ற மனிதனால் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும். வழிகெடுப்பவன் யார் என்று அவன் கூறுகின்ற ஒன்றிரண்டு விஷயங்களைக் கேட்டதும் அவன் வழிகெடுப்பவன் என்பதைத் தெரிந்து கொள்வான். தான் அவனை பின்பற்றக் கூடாது என்பதையும் உணர்ந்து கொள்வான்.
அப்படியானால் நீங்கள் முஸ்லிமாக இருப்பதற்கு மூல அறிவின் விஷயத்தின் ஏன் அலட்சியம் செய்கிறீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் மெளலவியாகி (அறிஞராகி) பெரிய பெரிய நூல்களை படிக்க வேண்டும் என்றோ பத்து ஆண்டுகளைக் கல்விக்காக செலவிட வேண்டுமென்றோ உங்களிடம் நான் சொல்லவில்லை. நீங்கள் முஸ்லிமாவதற்கு இவ்வளவு தூரம் படிக்க வேண்டிய தேவையில்லை.
ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது மார்க்க அறிவு பெருவதற்காக செலவிடுங்கள். திருக்குர்ஆன் எந்த நோகத்திற்காக என்ன அறிவுரையைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை தெளிவாகக் தெரிந்து கொள்ளுங்கள். ரசூல் صلى الله عليه وسلم அவர்கள் எதை அழித்து, அதன் இடத்தில் எதை நிலைப்படுத்தினார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். (அல்லாஹ் துணை செய்வானாக!)
‘Jazaakallaahu khairan” Islaam Thalam