நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் தன் அருளை அதிகமாக்குகிறான்
[ இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். – ஸூரா நஹ்ல்:18 ]
ஓவ்வொரு மனிதனும் அவனது வாழ்வின் ஒவ்வொரு அசைவிற்கும் இறைவனை சார்ந்தே இருக்கிறான். அவன் சுவாசிக்கும் காற்றிலிருந்து அவன் உண்ணும் உணவு வரையும் – பேசும் பொழுது அவன் உபயோகிக்கும் கை அசைவுகள் முதல் – ஆனதந்தமான நேரங்களிலும் இறைவன் அவனுக்காக படைத்து கொடுப்பவற்றிலும் சார்ந்தே இருக்கிறான்.
இருப்பினும் பெரும்பாலனவர்கள் அவனது குறைகளை உணராமலும் அவர்கள் இறைவனிடத்தில் தேவையுள்ளவர்களாக இருப்பதையும் உணராமலும் இருக்கின்றான். எதேச்சையான நிகழ்வுகள் அல்லது அவனது கடின உழைப்பால் அனைத்தையும் பெற்று கொண்டதாக நினைக்கிறான். இது ஒரு பெரிய தவறாகும். மேலும் இவை இறைவனுக்கு எதிரான நன்றி கெட்ட தனமாக கருதப்படுகிறது.
ஒரு முக்கியமில்லாத சிறு பரிசு பொருளுக்காக மனிதர்கள் நன்றி செலுத்துகிறார்கள். ஆனால் இறைவன் அவனுக்கு கொடுத்த எண்ண முடியாத அருள்களுக்கு நன்றி செலுத்தாமல் அவனது வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கிறான். இறைவனது அருள்களை எண்ணி முடிக்க முடியாது.
இதை பற்றி இறைவன் கூறும்பொழுது,
‘இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (ஸூரா நஹ்ல்:18)
இருப்பினும் மனிதர்கள் அவர்களுக்கு கிடைத்துள்ள அருள்களுக்கு நன்றி செலுத்துவதில்லை. இதற்கான காரணத்தை குர்ஆன் கூறுகிறது : இறைவனது பாதையிலிருந்து மனிதர்களை வழிக்கெடுப்பதை குறிக்கோளாக கொண்ட ஷைத்தான்- அவனது முக்கிய குறிக்கோள் மக்களை நன்றி கெட்டவர்களாக மாற்றுவது தான் என்று கூறினான். ஷைத்தானின் இந்த கூற்றானது இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
‘பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்¢ ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்). அதற்கு இறைவன், ‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு – அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான் (ஸூரா அல்-ஆரப்: 17-18)
மறுபுறத்தில் ஏக இறைவனை விசுவாசிப்பவர்கள் தங்களது குறைபாடுகளை அறிந்து இறைவனுக்கு முன்னால் பணிந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு அருளுக்கும் நன்றி செலுத்துகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட சொத்து சுகங்களுக்காக மாத்திரம் விசுவாசிகள் நன்றி செலுத்துவதில்லை. அனைத்து பொருட்களினதும் படைப்பாளனும் சொந்தக்காரனும் இறைவன் என்பதை உணர்ந்த விசுவாசி அவனது நல்ல ஆரோக்கியம் – அழகு – அறிவு விசுவாசத்தின் மீதான அன்பு – நிராகரிப்பு மீதான வெறுப்பு – சிந்திக்கும் ஆற்றல் மற்றும் அதிகாரம் அனைத்திற்கும் நன்றி செலுத்துகின்றான். அவன் சரியான பாதையில் இருப்பதனாலும் விசுவாசிளுடன் சேர்த்து வைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். ஒரு அழகான இடம் – அவர்களது காரியங்கள் இலகுவாக முடிவடைவது – அவர்களது ஆசைகள் நிறைவேறுவது – இன்பகரமான செய்திகளை அறிவது – மரியாதையான செயல்கள் அல்லது மற்ற அருட்கொடைகளானது விசுவாசியை உடனே இறைவன் பக்கம் திருப்புவதோடு அவனுக்கு நன்றி செலுத்தி அவனது கருணைக்காக காத்திருக்கிறான்.
நன்னடத்தைகளுக்காக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அன்பளிப்பு காத்திருக்கிறது. குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரசியங்களில் இதுவும் ஒன்றாகும். நன்றி செலுத்துபவர்களுக்கு இறைவன் அவனது அருள்களை அதிகரிக்கிறான். உதாரணமாக எவர்கள் தங்களிடமுள்ள ஆரோக்கியத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் நன்றி செலுத்துகிறார்களோ இறைவன் அவர்களது ஆரோக்கியத்தையும் அதிகாரத்தையும் அதிகரிக்கிறான.; எவர்கள் தங்களிடமுள்ள அறிவிற்காகவும் சொத்துகளுக்காகவும் நன்றி செலுத்துகிறார்களோ இறைவன் அவர்களது அறிவையும் சொத்துகளையும் அதிகரிக்க செய்கிறான். இதற்கு காரணம் அவர்கள் இறைவன் கொடுத்தவற்றை திருப்தியடைவதோடு இறைவனது அருள்களை பொருந்தி இறைவனை அவர்களது நண்பனாக எடுத்து கொள்வதலாகும். இதை பற்றி குர்ஆனில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்¢ (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (ஸூரா இபுறாஹீம் : 7)
நன்றி செலுத்துவதானது இறைவனுக்கு நெருக்கமாகவும் அவனை நண்பனாக எடுத்த கொள்வதற்கான அறிகுறியாகும். நன்றி செலுத்துபவர்களிடம் இறைவன் படைத்துள்ள அருள்கள் மற்றும் அழகுகளை காணும் தன்மை காணப்படுகின்றது. இறைவனின் தூதர் இதை பற்றி கூறுகையில்
இறைவன் உங்களுக்கு சொத்துகளை கொடுக்கும் பொழுது இறைவனது அருள்கள் உங்கள் மீது பிரதிபளிக்கிறது.
மறுபுறத்தில் ஏக இறைவனை நிராகரிக்கும் அல்லது நன்றி கெட்ட மனிதன் எந்த ஒரு அழகான சூழலில் குறைகளை மட்டுமே தேடுவான். ஆகவே அவனிடம் துக்கமும் விரக்தியும் காணப்படும். உண்மையில் இறைவனது படைப்புகளின் காணப்படும் இறை நியதியின் காரணமாக அத்தகைய மக்கள் எப்பொழுதும் வெறுக்கத்தக்க நிகழ்வுகளை சந்திப்பார்கள். மறுபுறத்தில் எவர்களிடம் உண்மையான நோக்கமும் சிந்திக்கும் சக்தியும் இருக்கிறதோ அவர்களுக்கு இறைவன் அவனது அருட்கொடைகளை அதிகரிக்கிறான்.
நன்றியுள்ளவர்களுக்கு இறைவன் அருள்களை அதிகப்படுத்துவது குர்ஆனில் காணப்படும் இரசியமாகும். இருப்பினும் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு கபடமற்ற உண்மையான நிலை மிக முக்கியமாகும். இறைவனது எண்ணிலடங்காத அருள்களையும் இரக்கத்தையும் உண்மையாக மனதால் சிந்திக்காமல் நன்றி செலுத்துவதானது அது மக்கள் மனங்களை மட்டும் கவருமே தவிர உள்ளங்களை அறிந்த இறைவனை பொருத்தவரையில் இதுவும் நன்றிகெட்டதனமாகும்.
பொய்யான உள்நோக்களை கொண்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை மறைத்து கொள்ளலாம். ஆனால் இறைவனிடம் அது முடியாது. அத்தகயவர்கள் அவர்களது நன்றியை இலகுவான நேரங்களில் அழுத்தமாக தெரிவித்த போதும் அதில் எந்த பயனுமில்லை. ஏனெனில் கடினமான துன்பமான நேரங்களில் அவர்கள் மிக இலகுவாக நன்றிகெட்டவர்களாக மாறிவிடுவார்கள்.
உண்மையான விசுவாசிகள் கடினமான நேரங்களிலும் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். விசுவாசிகளிடம் இருந்து அருள்கள் குறைவடைவதை வெளியிலிருப்பவர்கள் காண்பார்கள். இருப்பினும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் நன்மையென கருதும் விசுவாசிகள் இதிலும் நன்மையையே காண்பார்கள். உதாரணமாக இறைவன் பயத்தையும் பசியையும் சொத்துகளை இழப்பதையும் அல்லது உயிர்பலிகளையும் கொண்டு மக்களை சோதிப்பதாக கூறுகிறான்.
அத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் நம்பிக்கையாளன் பொருந்தி கொண்டு நன்றிசெலுத்துகிறான். காரணம் இந்த பரீட்சையில் அவனது உறுதியின் காரணமாக இறைவன் தருவதாக வாக்களித்த சுவர்க்கத்தை பெற்று கொள்ளலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலாகும். இறைவன் எந்த ஒரு மனிதனையும் அவனது சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அத்தகைய உறுதியும் கீழ்படிதலும் ஒருவரை பொறுமை மற்றும் நன்றிசெலுத்துவதின் பால் கொண்டு செல்லுகிறது. அதனால் குறைவற்ற அர்பணிப்பும் கீழ்படிதலும் நம்பிக்கையாளின் பண்பாக இருப்பதால் இறைவன் அவனது நன்றியுள்ள அடிமையானுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் அவனது அருளையும் இரக்கத்தையும் அதிகரிப்பதாக வாக்களிக்கின்றான்.
– ஹாருன் யஹ்யா