ஆண்கள் பெண்களால் கொடுமைக்குள்ளாகின்றனர் – ஆய்வு
பெண்ணடிமை, பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்ணியம், ஆணாதிக்கம் என்ற பதங்களை பாவிப்பதும் பேசுவதும் புரட்சிகரமானவை என்றிருந்த காலம் போய் பெண்களால் ஆண்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவது குறித்துப் பேசும் நிலை உலகில் தோன்றி இருக்கிறது.
இது இன்று நேற்றல்ல பல காலமாகவே நாலு சுவருக்குள் நடந்து வந்த சமாச்சாரம் தான். ஆனால் அது ஆணாதிக்கம் என்ற பதப்பிரயோகம் கொண்டு மலினப்படுத்தப்பட்டு பெண்கள் மீதான கரிசணையின் பால் புறக்கணிக்கப்படும் நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது.
இங்கிலாந்தில் சமீபத்தில் பெறப்பட்ட கருத்துக்கணிப்புப் படி 20 – 24 வயதெல்லையில் இருக்கும் பல ஆண்கள் அவர்களின் பெண் துணைகளால் கொடுமைப்படுத்தப்படும் விஷயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. பெளதீக அளவில் அன்றி வார்த்தைகளால் அவர்கள் அதிகம் கொடுமைக்குள்ளாக்கப்படுவதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வயதெல்லையில் 6.4 % ஆண்கள் பெண்களால் கொடுமைப்படுத்தப்படும் அதேவேளை பெண்களில் 5.4 % வீதத்தினரே கொடுமைகளுக்கு இலக்காகின்றனர்.
இருப்பினும் மொத்தமாக எல்லா வயதெல்லையினரையும் உள்ளடக்கி நோக்கும் போது, பெண்களே இன்னும் அதிக அளவில் கொடுமைகளை அனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறது மேற்படி ஆய்வு. பெண்கள் மீண்டும் மீண்டும் வன்முறைத்தனமான கொடுமைகளை அனுபவிக்கின்றனர் என்று கூறும் ஆய்வாளர்கள் ஆண்களும் பெண்களால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் அது புறக்கணிக்கப்பட்டக் கூடிய ஒன்றாக இல்லை என்றும் கூறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக 6 இல் 1 ஆண் பெண்களால் கொடுமைப்படுத்தப்படும் அதேவேளை 4 இல் 1 பெண்ணும் கொடுமைக்கு இலக்காவதாகக் கூறுகிறது இவ்வாய்வு.
இது ஆண் – பெண் சம உரிமை கொண்டதாகக் கருதப்படும் பிரித்தானிய சமூகத்தில் இருந்து பெறப்பட்ட ஆய்வின் பிரகாரம் அமைந்த முடிவாகும். ஆனால் இதை விட மோசமாக ஆண்கள் கொடுமைப்படுத்தப்படும் நிலை பிற சமூகங்களில் ஆய்வுக்கு இலக்காகாமல் கூட இருக்கலாம்.
எனவே எதிர்காலத்தில் ஆண்களின் சம உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் உலகெங்கும் அவர்கள் மீதான சமூகக் குற்றமிழைப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு பெண்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் இறுக்கமாக்கப்படும் அதேவேளை பெண்களால் கொடுமைக்கு இலக்காகும் ஆண்களுக்கு நிவாரணமும் பிற ஆலோசனைகளும் உதவிகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியதும் காட்டாயமாகி இருக்கிறது.
நட்சத்திரங்களும் ஒலி எழுப்புகின்றன!
பூமியில் உள்ள பல்வேறு கூறுகளும் தமக்கென பிரேத்தியேகமான ஒலி எழுப்பும் இயல்பைக் கொண்டிருப்பது போல விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களும் தமக்கெனப் பிரேத்தியேகமான(நமது சூரியன் உட்பட) ஒலிகளை எழுப்புகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நட்சத்திரங்கள் எழுப்பும் ஒலிகள் நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் அவற்றின் வயது, பருமன் மற்றும் இரசாயனக்கட்டமைப்புக்கள் குறித்து வேறுபடுகின்ற அதே நேரம்.. அவ்வொலிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சீரான சந்த ஒழுங்கைக் காண்பிப்பனவாகவும் இருக்கின்றன.
விண்வெளியில் சஞ்சரிக்கும், பிரான்ஸ் நாட்டின் கரொட் விண்வெளி தொலைநோக்கியின் (Corot space telescope)உதவி கொண்டு விஞ்ஞானிகள் நட்சத்திரங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலிகள் குறித்த தகவல்களைப் பெற்றிருப்பதுடன் அவற்றை நாம் கேட்கக் கூடிய வகைக்கும் ஒலிப்பதிவு செய்து கீழ் வரும் இணைப்பில் தந்துள்ளனர்.(நீங்களும் அவற்றை கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி குறித்த இணையத்தளப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவுகளில் கேட்கலாம்.)
இவ்வாறு நட்சத்திரங்கள் தமக்கெனப் பிரேத்தியமாக எழுப்பும் ஒலியின் இயல்புகளைக் கொண்டு நட்சத்திரங்களில் நிகழும் செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்கள் பலவற்றை அறிவியல் ரீதியாக அணுகிக் கண்டறிய வாய்ப்பிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்” (57:1) என்கின்ற திருக் குர் ஆனின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
சுடச்சுட “டீ” யா? உஷார்!
லண்டன்: ஆவி பறக்கும் சூடான டீயை குடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமிருப்பதாக பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான தேநீர் அருந்துவதால் உணவுக் குழாய் மற்றும் வாய்க்கும், உணவுக் குழாய்க்கும் இடையே உள்ள பகுதியில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு எட்டு மடங்கு அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
ஈரானிலுள்ள டெக்ரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக முதன்மை ஆராய்ச்சியாளர் ரேஸô மலேக்ஸôதே இது குறித்து தெரிவிக்கையில், சூடான டீ பருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம், தொண்டைப் புற்றுநோயைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300 பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும், புற்றுநோயால் பாதிக்கப்படாத 571 பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும் ஆராய்ச்சி செய்து இந்த முடிவை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
கோப்பையில் தேநீர் ஊற்றப்பட்ட 4 நிமிஷத்திற்குள் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்குள் தேநீர் பருகுபவர்களைவிட, தேநீர் ஊற்றப்பட்ட 2 நிமிஷத்துக்குள், அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் பருகி முடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு 5 மடங்கு அதிகமாக உள்ளதாக அந்த ஆராய்ச்சி மேலும் கூறுகிறது.
இருப்பினும் தேநீர் குடிக்கும் அளவுக்கும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
குறந்தது 6 மணி நேர தூக்கம் தேவை – ஆய்வு
ஒரு வளர்ந்த மனிதன் குறைந்தது 6 மணி நேரம் (குழந்தைகள் சிறுவர்கள் 8 தொடக்கம் 10 மணி நேரம்) தினமும் தூங்க வேண்டுமாம். அதற்குக் குறைவாக தூங்குகின்றவர்களின் நாடிகள் தடிப்படைந்து பின்னர் இரத்த ஓட்டம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
போதிய தூக்கமின்றி வாழ்பவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் 3 இல் ஒருவருக்கு நாடி தடிப்படையும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போதிய நித்திரை செய்பவர்களில் 10 இல் ஒருவருக்கே அவதானிக்கப்பட்டுள்ளது.போதிய அளவு தூக்கம் இன்மைக்கு மன அழுத்தமும் அதனால் சுரக்கப்படும்
cortisol எனும் ஓமோனும் தூக்கத்தின் அளவைக் குறைத்து நாடிகளில் கால்சியம் படிவதை அதிகரித்து நாடியை தடிப்படையச் செய்வதாக சொல்லப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் இவ்வாய்வை மட்டும் வைத்துக் கொண்டு நாடிகளில், இதயத்தில் ஏற்படும் நீண்ட காலப் பாதிப்புக்களுக்கு விளங்கம் தரமுடியா விட்டாலும் போதிய தூக்கம் என்பது இரத்த ஓட்டம் மற்றும் இதயத்தொழிற்பாட்டை சீராக்க உதவுகின்றன என்பதை ஆணித்தரமாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.எனவே வேலை வேலை என்று தூக்கத்தை தொலைக்காது இரவில் போதியளவு (குறைந்தது 6 மணி) நேரம் தூங்குவதை வழங்கப்படுத்திக் கொள்வது நல்லது.