எம்.ஏ.முஹம்மது அலீ
[ வரதட்சணை வாங்குவது ஹலாலா, ஹராமா, மக்ரூஹா, மக்ரூஹ் தஹ்ரீமா…?
ஹலாலாக இருந்தால் இந்த கட்டுரையே தேவையில்லை, ஒதுக்கித்தள்ளி விடுங்கள்.
ஹராமாக இருந்தால், ‘அதை’ ஒட்டு மொத்தமாக, இது ஹராம்தான் என்று தெள்ளத்தெளிவாக அறுதியிட்டுக் கூற தயக்கம் ஏன்?
ஹராமென்று முடிவெடுக்கும் பட்சத்தில் எந்த அடிப்படையில்; மார்க்க அறிஞர்களால் இதுபோன்ற திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன? ]
வரதட்சணைப்பற்றி கவலைப்படாத பெற்றோர்களில்லை, பேசாத தலைர்களில்லை, எழுதாத பத்திரிகைகளில்லை. ஆனால் ஏதோ கடலில் பெருங்காயத்தை கரைத்தது போன்று மிகவும் குறைந்த அளவுக்குத்தான் தடுக்க முடிந்ததே தவிர அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை. எப்போதுமே வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகின்ற சமுதாயம்தானே நாம்!
சொல்வதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது! அனைத்திற்கும் அல்லாஹ்வின் அருட்கொடையாக, மானிட சமுதாயம் அத்தனைக்கும் வழிகாட்டியாக, எல்லாவற்றிர்க்கும் முன்னுதாரணமாக விளங்கும் எம்பெருமானார் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனையை பின்பற்ற வேண்டிய சமுதாயம், நமது நாட்டில் கடந்த சில தலைமுறைகளாக வரதட்சணையின் கோரப்பிடியில் சிக்கி இருப்பதைப் பார்க்கும்போது வரதட்சணைப்பற்றி இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு தெளிவான பார்வை நமது சமூக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.
ஏன் மக்கள் உள்ளங்களில் அழுத்தமாகப் பதியவில்லை?!
சமீபத்தில் ஒரு இஸ்லாமிய பத்திரிகையில் மார்க்க அறிஞர் ஒருவரின் கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் அவர் சொல்கிறார். ‘ஒரு முறை ஜும்ஆ பயானில் வரதட்சணை வாங்குவது ஹராம் என்று எடுத்துக்கூறி பயான் செய்தேன். தொழுகை முடித்து வெளிவரும்போது பலர் என்னிடம் ‘ஹஜ்ரத்! இவ்வளவு நாட்களாக வரதட்சணை வாங்குவது ஹராம் என்று எங்களுக்கு தெரியவே இல்லை ஹஜ்ரத். நாட்டு வழக்கில் வரதட்சணை வாங்குவது தவறு என்று தான் நினைத்தோம். இப்போதுதான் முதன் முதலாக மார்க்க ரீதியாகவே அது ஹராம் என்று கேள்விப்படுகின்றோம், இனிமேல் வாங்காமல் எச்சரிக்கையாக இருப்போம் ஹஜ்ரத்’ என்றார்கள்.’
பொது மக்கள் அதை ஹராம் என்று நினைக்காமல்; போனதற்கு என்ன காரணம்? ‘இதுபோன்ற திருமணங்களை மார்க்க அறிஞர்கள் தானே நடத்தி வைக்கின்றார்கள்…! பிறகு அது எப்படி ஹராமாக இருக்க முடியும்?’ என்று பாமரன் நினைத்தால் அது அவன் மீது குற்றமா அல்லது அதை நடத்தி வைத்த மார்க்க அறிஞர் மீது குற்றமா?
இவர்களும் கூடவா குற்றவாளிகள்?
குடிப்பது பாவம், விபச்சாரம் புரிவது பாவம், வட்டி வாங்குவது பாவம், பொய் சொல்வது பாவம் என்று பாவங்களை பட்டியலிடும் மார்க்க அறிஞர்கள், தலைவர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் அனைவருமே வரதட்சணை ஒரு பாவமான காரியம் என்பதை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்க தவறிவிட்டனர். குடிப்பவனுக்கும், விபச்சாரம் செய்பவனுக்கும், ஏன்-பொய் சொல்கின்றவனுக்கும்கூட தான் செய்வது தப்பு என்கின்ற மனஉளைச்சல் ஒரு மூளையிலாவது இருக்கத்தான் செய்யும். ஆனால் வரதட்சனை வாங்குவோருக்கு அந்த குற்ற உணர்வு உண்டா என்று கேட்டால், இல்லை என்பதுதானே பதில்! செய்த தவறைப்பற்றிய மனஉளைச்சல் அவர்களுக்கு இல்லை என்பதிலிருந்தே சமுதாய வழிகாட்டிகளான மூன்று இனத்தவரும் (மார்க்க அறிஞர்கள், தலைவர்கள், சிந்தனையாளர்கள்) அது ஒரு குற்றம் என்கின்ற உணர்வை அழுத்தமாக மக்களின் உள்ளங்களில் பதியவைக்க தவறிவிட்டனர் என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஏன் இந்த மூவரை முக்கியமாக குறிப்பிடுகிறோம் என்றால், வரதட்சணை பற்றி பேசுகின்ற மேடைகளில்; ஏன்-சில சமயம் திருமண விழாக்களிலேயேகூட பேசுகின்ற இவர்கள் வரதட்சணை வாங்கப்படுகின்ற அந்த திருமணத்தை நடத்தி வைப்பவர்களாகவும், வாழ்த்தக் கூடியவர்களாகவும், திருமண விருந்தில் கலந்து கொள்பவர்களாகவும் தானே இருக்கின்றார்கள்! அவர்களுக்கே கூட அது பாவமான காரியம் என்று மனதில் அழுத்தமாக பதியவில்லையோ என்னவோ! தவறு செய்பவர் மட்டும் குற்றவாளி அல்ல, அந்த தவறுக்கு உடந்தையாக இருப்பவர்களும் குற்றவாளிகள்தான். இது உலக சொல் வழக்காக இருந்தாலும் இஸ்லாம் அதை இன்னும் அழுத்தமாகவே எடுத்துச்சொல்கிறது. உதாரணமாக வட்டி வாங்குவது, கொடுப்பது ஹராம் என்று சொன்ன நமது மார்க்கம் வட்டிக்கணக்கை எழுதுபவன், அதற்கு உதவி செய்பவன் என்று வரிசையாக அதற்கு உடந்தையாக இருக்கும் அத்தனை பேரையும் குற்றவாளி என்றே சொல்கிறது. அது போல் மதுபானத்தைப்பற்றி சொல்லும்போது, அதை குடிப்பவன், உற்பத்தி செய்பவன், பரிமாறுபவன் என்று ஒரு நீண்ட குற்றவாளிப் பட்டியலையே சமர்ப்பிக்கிறது.
ஒரு விஷயத்தை சிந்தித்துப் பாருங்கள்…
‘மஹர்’ கொடுத்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்திச் சொன்ன மார்க்கத்தில் ‘மஹரை’ (ஒரு சில இடங்களில்) கடனாக ஆக்கி வரதட்சனையை ரெடிகேஷாக வாங்கி விழுங்குவது நியாயமா? நபி ஸுஐபு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகளை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு திருமணம் முடிக்க போடும் வரையறை (contition), ஆறு வருடமாவது எட்டு வருடமாவது தங்களுக்கு ஊழியம் புரிய வேண்டும் என்பது திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் வரலாற்று உண்மை. ஆறு வருட உழைப்பில் எவ்வளவு பெரிய தொகையை ஈட்ட முடியும் என்று எவருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எ(அ)வ்வளவு பெரிய தொகையை (உழைப்பை) ‘மஹராக’ அங்கு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?
ஏன்! இப்படி சிந்தித்துப்பாருங்களேன்: ஜகாத் கொடுப்பது கட்டாயமாக இருக்கும்போது ஒருவன் ஜகாத்தே கொடுக்காமல் திருடவும் செய்கின்றான் என்றால் அவன் குற்றவாளி இல்லையா? இங்கே நாங்கள் எங்கே திருடுகின்றோம், அவர்களாகத்தானே கொடுக்கின்றார்கள் என்று சில வேஷதாரிகள் வாய்ப்ந்தல் போடக்கூடும். எந்த பெண்வீட்டார்கள் ‘இந்தா பிடியுங்கள்!’ என்று மனமுவந்து ‘அதை’ கொடுக்கின்றனர்! தங்களது மகளை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்ற கவலையில் வேறு வழியே இல்லாமல்தானே வரதட்சணையை கொடுக்கின்றனர்!
சொல்லப்போனால், பெண்வீட்டாரிடமிருந்து மாப்பிள்ளை வீட்டார்களால் அடாவடியாகப் பிடுங்கப்படும் பிச்சைதான் வரதட்சணை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளயடிப்பவனுக்கும் வரதட்சணை வாங்குவபவருக்கும் அதிக வித்தியாசமில்லை. அங்கும் மிரட்டித்தான் கொள்ளையடிக்கப்படுகிறது, இங்கும் (தங்களது மகளுக்கு திருமணம் நடக்க வேண்டுமே என்ற) மிரட்சியில்தான் பெருந்தொகை கொள்ளை போகிறது. இந்த பாவமான காரியத்துக்கு ஊர் மக்களும் சாட்சியாக திருமணத்தில் கலந்து கொண்டு, தங்களையும் குற்றவாளிப் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டிய அவலநிலை! ஏன் இந்த அவல நிலை? காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒரு சொத்தையான வாதம்
வரதட்சணை வாங்குகின்ற ஆண்கள் ஒரு சொத்தையான வாதத்தை தங்கள் சார்பாக எடுத்து வைப்பதன் மூலம் குற்றத்திலிருந்து தப்பிக்க முயல்வார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் இதைத்தான்: ‘பெற்றோர்களின் வற்புறுத்தலின் காரணமாகவே வரதட்சணை வாங்குகின்றோம், பெற்றோர்களகு;கு கட்டுப்பட வேண்டும் என்று தானே நமது மார்க்கமும் சொல்கிறது?’ சகோதரர்களே! அறை கிணறு தாண்டுவது எப்போதுமே ஆபத்துதான். பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிடுவது நல்ல காரியங்களுக்குத்தான். கெட்ட காரியங்களுக்கு துணை போகும்படி எங்கும் சொல்லப்படவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் பெற்றோர்கள் தவறான கருத்தை சொல்லும்போது அதை நளினமாக எடுத்துச்சொல்லி அவர்களை திருத்த வேண்டியது பிள்ளைகளின் கடமையும்கூட! தனது பெற்றோர்கள் மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்பாக குற்றவாளிக்கூண்டில் நிற்க பெற்ற பிள்ளைகளே காரணமாக இருக்கலாமா? அல்லது தனது பிள்ளைகள் மறுமையில் குற்றவாளியாக தலை கவிழ்ந்து நிற்பதற்கு பெற்றோர்களே காரணமாகலாமா?
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வு நமக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கவில்லையா? இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை சிலை செய்து விற்கும் தொழிலை செய்பவராக இருந்தபோது, தனது தந்தை செய்தது என்பதற்காக அச்செயலை சரி என்று அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்ன! மாறாக தனது தந்தைக்கே, அவர் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி புறக்கனிக்கத்தானே செய்தார்கள்! உண்மையான இறைவிசுவாசியின் பண்பு இப்படித்தானே இருக்க வேண்டும்? அப்படியிருக்கும்போது இங்கே மட்டும், பெற்றோர்கள் சொல்கேட்டு வரதட்சணை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம் என்று சொல்லி தப்பிக் நினைப்பது எப்படி சரியாகும்?
‘எந்த மனிதரின் பொருளும் அவரது மன திருப்தியின்றி பெறப்பட்டால் அது ஹலாலாகாது’ என்று நமது நாயகம் ரசூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை நினைவுக்கு கொண்டு வாருங்கள். எந்த பெண் வீட்டாரும் மனமுவந்து வரதட்சணையை கொடுப்பதில்லை. சில இடங்களில் பிச்சை எடுத்துத்தான் இந்த வரதட்சணையை கொடுக்கிறார்கள். மேலும் வரதட்சணை வாங்குவது ஒரு வகையில் லஞ்சம் வாங்குவது போலத்தான். ‘லஞ்சம் கொடுப்பவரையும் வாங்குபவரையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள். (நூல்: அபூதாவூத்) புதுமனத்தம்பதிகளின் மணவாழ்க்கை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்த்துடன் (துஆவுடன்) ஆரம்பமாக வேண்டுமா அல்லது அவர்களின் சாபத்துடன் ஆரம்பமாக வேண்டுமா என்று சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.
மறுபடியும் கட்டுரையின் முதல் பாராவை படித்துவிட்டு தொடருங்கள்….
என்னதான் வழி….?
வரதட்சணையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு வழியிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இருக்கிறது. பரிபூரண மார்க்கமான இஸ்லாத்திலா அதற்கு வழியிருக்காது? இருக்கிறது-நிச்சயமாக இருக்கிறது! ஆனால் அதை நடைமுறைப்படுத்த ஏதோ ஒரு பலவீனம் தடுக்கிறது. இதுகுறித்து அழுத்தமான ‘ஃபத்வாவை’ வழங்க ‘ஜமாஅத்துல் உலமா’ தயங்குவது மிக முக்கியமான காரணம். ஆம்! வரதட்சணை வாங்குவதற்கு மணமகன் வீட்டார் காரணமென்றால், அதுபோன்ற திருமணங்களை மார்க்க அறிஞர்களே நடத்தி வைப்பதுதான் கொடுமை. தனிப்பட்ட முறையில் சில ஊர்களில் இதுகுறித்து ஃபத்வா கேட்கப்படும் போது ‘வரதட்சணை வாங்குவது ஹராம்தான்’ என்று பதிலளிக்கும் ஆலிம்கள், அதை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான ஃபத்வாவாக பகிரங்கப்படுத்துவதற்கு என்ன தயக்கம்?
கொடுமையான உண்மைச் சம்பவம்:
இரண்டு ஆண்டு தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள சில ஊர்களில் ‘முபல்லிகா’ பட்டம் பெற்ற சில பெண்கள் வரதட்சணை கொடுக்க இயலாமல் தங்களது மூதாதையர்களின் இறைமறுப்பு கொள்கையில் வாழும் ஆண்களை திருமணம் முடித்த கொடுமையின கண்டு உள்ளம் குமுறிய மூத்த மார்க்க அறிஞர்; ஒருவர், அந்த மாவட்டத்திலுள்ள மார்க்க அறிஞர்கள் இனி வரதட்சனை வாங்கப்படும் திருமணங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், அப்படியே கலந்து கொண்டாலும், அந்த திருமண விருந்தை உண்ண வேண்டாம் என்றும் பகிரங்கமாகவே அறிக்கை விட்டார்கள். அந்த நேரத்திலாவது ஜமாஅத்துல் உலமா சபை சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டாவது ‘அந்த கொடுமையை தடுக்க வரதட்சணை வாங்குவது ஹராம்தான் என்று பகிரங்கமாக ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும்? அப்படி எச்சரிக்கை செய்திருந்தால் அதையும் மீறி நடைபெறும் திருமணங்களை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்காது. இப்போதுள்ள சூழ்நிலையில் சமுதாயத்துக்குள் ஏன் புதிதாக குழப்பத்தை ஏற்படுத்துவானேன் என்று ஒருசிலர் எண்ணக்கூடும். இதே போன்று அன்றைக்கு அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நினைத்து வாளாயிருந்திருந்தால் இன்றைக்கு ஜகாத் கொடுப்பவர்கள் ஒருவர்கூட இல்லாமலல்லவா போயிருப்பார்கள்!
எப்படி வந்தது இந்தத் துணிவு?
இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், வரதட்சணை வாங்குவது ஹராம் என்று எல்லா மார்க்க அறிஞர்களுக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தும் திருமணத்தை எப்படி அவ்வளவு துணிச்சலோடு நடத்தி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் அந்த திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டுள்ளதா என்று விசாரிக்கக்கூட அவர்களுக்கு அக்கரை இருப்பதாகத் தெரியவில்லையே! அது ரகசியமாக வாங்கப்பட்டால் நாங்கள் எப்படி அதை அறிந்து கொள்ள முடியும்? என்ற பதில் பொறுப்பற்ற பதிலாகத்தான் இருக்கும். ஏனென்றால் இஸ்லாத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் தீர்வு இல்லாமலில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், விபச்சாரம் புரிந்த இருவரும் தங்கள் குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுக்கும்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த ஆண் பெண் இருவரையும் ‘நாங்கள் அந்த குற்றத்தை செய்யவில்லை என்றும், அப்படி செய்திருந்தால் அல்லாஹ்வின் சாபம் எங்கள்மீது உண்டாகட்டும்’ என்று சத்தியபிரமாணம் செய்யச் சொன்னார்களல்லவா! அதுபோன்ற சத்திய பிரமாணத்தை ஒவ்வொரு திருமணத்தின்போதும் இருவீட்டாரிடமும் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்!
சமுதாயத்தின் நலன் கருதி இதை செய்தாலொழிய வரதட்சனையை ஒழிக்க முடியாது. ஊர் ஜமாஅத்தார்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக முதவல்லியாக இருப்பவர்கள் இஸ்லாத்திற்காக துணிவுடன் ‘இதை’ களைவதற்காக களமிறங்க வேண்டும். ஏனென்றால் தலைமைப்பதவியில் இருப்பவர்கள்தான் மிகப்பெரிய பொறுப்புதாரி. வரதட்சணை வாங்கி செய்யப்படும் திருமணம் ஹராம் என்று பல பேச்சாளர்கள் மேடையிலும் தொலைக்காட்சியிலும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இக்கருத்துக்கு இதுவரை ஒரு மார்க்க அறிஞரும் மறுப்பு சொன்னதில்லை.
சமுதாய மக்களிடம் ஒரு கேள்வி…
அருமைச் சழுதாய மக்களே! உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி இதுதான்; வரதட்சணை திருமணம் ஹராமாக இருக்கும்போது அந்த திருமண வைபவத்தில பரிமாறப்படும் உணவும்கூட ஹராமானதுதானே! ஏனென்றால் வரதட்சணையாக பெறப்பட்ட ஒரு தொகைதானே அதற்கும் பயன்படுத்தப்படுகிறது! ஸாலிஹான மனிதர்கள்கூட அந்த ஹராமான உணவை உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்களே! தொழுகையாளிகளும் அதில் அடக்கம் அல்லவா? ஒரு விஷயத்தை எப்படி மறக்க முடியும்! நமது இபாதத்துகள், துஆக்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட வேண்டுhனால் உண்ணுகின்ற உணவு ஹலாலானதாக இருக்க வேண்டுமே! இன்னும் கொஞ்சம் மேலே சிந்தித்துப் பாருங்கள்; ‘அல்ஹம்து’ என்பது ஒரு ‘துஆ’ தானே! அந்த ‘துஆ’ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் வயிற்றுக்குள் இறங்குகின்ற உணவு ஹலாலானதாக இருந்தால்தானே சாத்தியம். ‘அல்ஹம்து’ இல்லாமல் தொழுகையே இல்லையே…! பிறகு நாம் தொழுகின்ற தொழுகை அல்லாஹ்விடம் எப்படி அங்கீகாரம் பெறும்? தொழுகையே அங்கீகரிகப்படாமல் போவதற்குக்கூட இந்த வரதட்சணை காரணமாக இருக்கிறதே…! இதை களைவதற்கு ஏனோ தானோவென்று வாயப்பந்தல் மட்டும் போதுமா? செயல்பட வேண்டாமா? புதிதாக எதையும் எடுத்துச்சொல்ல வேண்டிய மார்க்கமல்லவே நமது இஸ்லாம்! அத்தனைக்கும் தெளிவான பதிலை வைத்திருக்கும் மார்க்கமல்லவா நமது மார்க்கம்! பின் எதற்காக இந்த அவல நிலை?!
ஒருகை மட்டும் தட்டினால் ஓசை எழும்பாது, பல கரங்கள் ஒன்று சேர வேண்டும். அப்பொழுதுதான் வரதட்சணையை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியும். மார்க்க அறிஞர்கள் மட்டுமே இதற்குக் காரணம் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் இதை களைவதற்கான (துண்டிப்பதற்கான) ”சுவிட்ச்” அவர்களிடம்தான் இருக்கிறது. ஆம்! அவர்களிடம் தான் அதன் சுவிட்ச் கண்ட்ரோல் இருக்கிறது. அந்த சுவிட்ச் கேட்பாரற்று கிடப்பதால் ஆளுக்கால் அதை தன்னிஷ்டத்துக்கு தவறாகப்பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
மார்க்க அறிஞர் பெருமக்களிடம் நாம் வைக்கும் கேள்வி இதுதான்:
1. வரதட்சணை வாங்குவது ஹலாலா, ஹராமா, மக்ரூஹா, மக்ரூஹ் தஹ்ரீமா…?
2. ஹலாலாக இருந்தால் இந்த கட்டுரையே தேவையில்லை, ஒதுக்கித்தள்ளி விடுங்கள். ஹராமாக இருந்தால், அதை ஏன் ஒட்டு மொத்தமாக, இது ஹராம்தான் என்று தெள்ளத்தெளிவாக அறுதியிட்டுக் கூற தயக்கம் ஏன்?
3. ஹராமென்று முடிவெடுக்கும் பட்சத்தில் எந்த அடிப்படையில்; மார்க்க அறிஞர்களால் இதுபோன்ற திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன?
4. மணமகன் வீட்டார் வாங்குவது எங்களுக்குத் தெரியாது என்று சொல்லி பிரச்சனையை கைகழுவ நினைப்பது சரிதானா? வரதட்சணை வாங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய அவர்களிடம் சத்திய பிரமாணம் கேட்கலாம்தானே! தீமையை களைவதற்கு இதுபோன்று சத்தியபிரமாணம் வாங்குவதற்கு முன்னுதாரணமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விபச்சாரம் செய்தவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க ‘அதை நாங்கள் செய்யவில்லை’ என்று கடுமையான சாபத்தை முன்வைத்து அல்லாஹ்வின்மீது சத்தியமிடச்சொன்ன முன்மாதிரியை இந்த விஷயத்தில் ஏன் பின்பற்றக்கூடாது?
5. வரதட்சணை வாங்கப்படும் திருமணம் கூடும் என்றால், ஷரீஅத்தின் அடிப்படையில் அது எப்படி என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.
காரணம், கணவன் மனைவி, திருமணம் மூலம் ஒன்று சேர்வது சாதாரண விளையாட்டு விஷயமல்ல. அல்லாஹ் இந்த பூமியை படைத்ததே மனிதன் தன்னை வணங்குவதற்காகத்தான். அப்படி அவன் உண்மையான வணக்கசாலியாக வாழ வேண்டுமானால் அவனது பிறப்பே சிறப்பானதாக அமைய வேண்டும். கரு உருவாகும் அந்த நிகழ்வு நூற்றுக்கு நூறு ஹலாலானதாக இருக்க வேண்டும். வரதட்சணை வாங்கும்போது புதிதாக பிறக்கும் அந்த குழந்தை பிறப்பதற்கான ஆரம்பமான கருவுருதலே முழுமையாக, ஷரீஅத்திற்கு கட்டுப்பட்ட நிலையிலதான் என்று அறுதியிட்டுக்கூற முடியுமா? அப்படியிருக்கும்போது குழந்தை பிறந்து அது வளரும்போது எப்படி ஷரீஅத்தை பின்பற்றக்கூடிய நிலையில் வளரும்?
ஆகவே தயவு செய்து இது குறித்து தமிழக ஜமாஅத்துல் உலமா சபை விரைந்து செயல்பட்டு, வரதட்சணை குறித்து தெள்ளத்தெளிவான முடிவை பட்டி தொட்டி எங்கும் பகிரங்கமாக பறைசாற்ற வேண்டும். அதை விடுத்து மழுப்பலான பதிலை அளித்து தாங்கள் இதற்கு காரணமல்ல, திருமண வீட்டார்களும் ஊர் ஜமாஅத்தார்களும் தான் முக்கிய காரணம் என்று சொல்லி ஒதுங்கிப் போவார்களானால், பிச்சனையிலிருந்து அவர்கள் நழுவிக்கொள்ள முனைவதாகத்தான் பொதுமக்கள் முடிவுக்கு வரவேண்டியதிருக்கும். மறுமையில் அல்லாஹ்விடம் அவர்கள் தங்களது பொறுப்பை தட்டிக்கழித்தற்கான காரணத்தை சொல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் (அல்லாஹ் அப்படியொரு நிலைமை ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும்).
அறிஞர்களை குறை சொல்ல வேண்டுமென்பது நோக்கமல்ல
மார்க்க அறிஞர்களை குறை சொல்ல வேண்டும் என்பது நமது நோக்கமல்ல! அதே சமயம் வரதட்சணை விஷயத்தில் அவர்களின் மென்மையான போக்கைத்தான் கண்டிக்கிறோம். நாங்கள்தான் பல சொற்பொழிவுகளில் அதைப்பற்றி நிறையவே பேசுகிறோம் என்று சொல்லி பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. ”அது” கூடாது என்று சொல்லும்போது அதை எப்படி துணிந்து நடத்துகின்றீர்கள் என்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை. அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜகாத்துடைய விஷயத்தில் காட்டிய உறுதியினை மார்க்க அறிஞர்கள் வரதட்சணை விஷயத்தில் காட்டவேண்டியது மிக மிக அவசியம், காலத்தின் கட்டாயம்கூட! இல்லாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வரதட்சணை வாங்குவது கேவலத்திலும் மகாக் கேவலம் என்பதை அனைவரும் உணர வேண்டும். முயன்றால், இன்ஷா அல்லாஹ், முடியாதது எதுவுமில்லை. வரதட்சணை முற்றிலுமாக ஒழிய அல்லாஹ் துணைபுரிவானாக, ஆமீன்.
வஆகிரு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.