நவாஸ் இப்னு ஸம்ஆன் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கின்றார்கள்:
”ஒரு நாள் காலை தஜ்ஜால் பற்றி நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். பேரீத்தம் மரத்தின் கீற்றில் அவன் ஒளிந்து இருக்கலாம் என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவனைப்பற்றி நபி صلى الله عليه وسلم அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்.
அவர்களிடம் நாங்கள் மாலை நேரத்தில் சென்ற போது, எங்களைப்பற்றி அவர்கள் புரிந்து கொண்டு, ”உங்கள் விஷயம் என்ன?” என்று கேட்டார்கள் ”இறைத்தூதர் அவர்களே! காலையில் தஜ்ஜாலைப் பற்றி நீங்கள் கூறினீர்கள். அவன் பேரீத்தம் மரக் கீற்றில் மறைந்து இருப்பானோ என அவனை நாங்கள் எண்ணும் அளவுக்கு நீங்கள் தெளிவாகக் கூறினீர்கள்” என்று கூறினோம்.
அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், ”தஜ்ஜாலை விட மற்ற விஷயங்களே, உங்களிடம் என்னை மிகவும் பயப்படச் செய்கிறது. உங்களிடையே நான் இருக்கும் போது, அவன் வெளியேறினாhல் நான் உங்களுக்காக அவனிடம் போரிடுவேன். உங்களிடையே நான் இல்லாத போது அவன் வந்தால் ஒவ்வொருவரும் அவனுக்கு எதிரியே. அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனக்குப் பின் பாதுகாப்பாளனாக உள்ளான்.
நிச்சயமாக அவன் குட்டை முடி உள்ள வாலிபன். அவனது கண் பிதுங்கி நிற்கும். அப்துல் உஸ்ஸா இப்னு கதன் என்பவர் போல் அவன் இருப்பான் எனக் கருதுகிறேன். உங்களில் ஒருவர் அவனைச் சந்தித்தால் ”கஹ்பு” அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை அவர் ஓதட்டும்!
அவன் சிரியா, மற்றும் ஈராக்கிடையே உள்ள பகுதியிலிருந்து வெளியேறுவான். வலது புறத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவான். இடது புறத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் அப்போது உறுதியாக இருங்கள்” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்.
”இறைத்தூதர் அவர்களே! பூமியில் அவன் தங்கி இருக்கும் காலம் எவ்வளவு?” என்று கேட்டோம். ”நாற்பது நாள். ஒரு நாள் ஒரு வருடம் போல் இருக்கும். மற்றொரு நாள் ஒரு மாதம் போல் இருக்கும். மற்றொரு நாள் ஒரு வாரம் போல் இருக்கும மற்றவை, உங்களின் சாதாரண நாட்கள் போல்தான்” என்று கூறினார்கள்.
”இறைத்தூதர் அவர்களே! ஒரு வருடம் போல் உள்ள அந்த நாளில், ஒரு நாளுக்குரிய தொழுகை (தொழுதால்) நமக்கு போதுமா?” என்று கேட்டோம். ”இல்லை. அந்த நாளில் அதன் நேரத்தை நீங்கள் கணக்கிட்டு (தொழுது) கொள்ளுங்கள்” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்.
”இறைத்தூதர் அவர்களே! பூமியில் அவனின் வேகம் எவ்வளவு?” என்று கேட்டோம். ”காற்றுத் தள்ளிச் செல்லும் மேகம் போல் (வேகம்) இருக்கும்” என்று கூறிய நபி(ஸல்)அவர்கள், அவன் மக்களிடம் வருவான், அவர்களை (அவன் வழிக்கு) அழைப்பான். அவனை நம்புவார்கள். அவன் கூறுவதை ஏற்பார்கள். வானத்திற்கு அவன் கட்டளையிடுவான். அது மழை பொழியும். பூமிக்கு கட்டளையிடுவான். அது தாவரங்களை முளைக்கச் செய்யும். அவர்களின் கால் நடைகள் நீண்ட கொம்புகளுடன் பால் மடு கனத்து, வயிறு நிறைந்து மாலையில் அவர்களிடம் திரும்பும்.
பின்பு மற்றொரு கூட்டத்தாரிடம் வருவான். அவர்களை (தன் வழிக்கு) அழைப்பான். அவனது கருத்தை ஏற்க மாட்டார்கள். அவர்களை விட்டும் அவன் சென்று விடுவான். அவர்கள் தங்கள் சொத்துக்கள் எதுவும் தங்கள் கையில் இல்லாத அளவுக்கு பஞ்சம் பீடிக்கப்பட்டவர்களாக ஆகி விடுவார்கள்.
பின்பு வறண்ட காட்டுக்குச் செல்வான். அதனிடம் ”உன் புதையல்களை நீ வெளிப்படுத்து” என்று கூறுவான். பெரிய தேனீயை சிறிய தேனீக்கள் சூழ்வது போல் புதையல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளும். பின்பு ஒரு வலிமையான வாலிபனை அவன் அழைப்பான். அவனை தன் வாளால் வெட்டுவான். ஒரே வெட்டில் இரண்டு கூறாக அவனனை பிளப்பான். பின்பு (இறந்த) இளைஞனை அழைப்பான். உடனே அவன் சிரித்த முகத்துடன் எழுந்து வருவான்.
இது போன்ற நிலையில்தான் அல்லாஹ் மஸீஹ் இப்னு மர்யம் (எனும் ஈஸா அலைஹிஸ்ஸலாம்) நபியை அனுப்புவான். திமிஷ்க் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாராவில் வண்ண ஆடை அணிந்தவர்களாக, இரண்டு வானவர்களின் இறக்கைகளில் தங்கள் கைகளை வைத்தவர்களாக இறங்குவார்கள். தன் தலையை அவர்கள் சாய்த்தால், வேர்வை கொட்டும். அதை அவர்கள் உயர்த்தினால், முத்துக்கள் போல் அந்த வேர்வை பிரகாசிக்கும். அவர்களின் மூச்சுக் காற்றை நுகரும் எந்த இறை மறுப்பாளரும் இறக்காமல் இருப்பதில்லை. அவர்களின் மூச்சுக்காற்று, அவர்களின் பார்வை படும் தூர அளவுக்கு சென்றடையும்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம், தஜ்ஜாலைத் தேடுவார்கள். இறுதியில் பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள ” லூத்” என்ற இடத்தில் பிடித்து, அவனை கொல்வார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன் 1808 )