நமது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடுகளின் சாலைகளிலும் இந்த அளவுக்கு வாகன இரைச்சலும், காற்றொலிப்பான் அலறலும் இல்லை.
ஆப்பிரிக்காவில் பின்தங்கிய நாடாகக் கருதப்படும் உகாண்டாவில்கூட இந்தியாவின் இந்த அவல நிலை கிடையாது.
இன்னொரு விநோதமும் இந்தியாவில்தான் காணப்படுகிறது. அதாவது, பஸ்நிலையம், ரயில்நிலையம், விமானநிலையம், நெடுஞ்சாலை அருகில் உள்ள நிலம், கட்டடங்களுக்கு விலை அதிகம். இந்த இடங்களை வாங்க விரும்புவோரும், இந்தப் பகுதிகளில் வாழ விரும்புவோரும் அதிகம். ஆனால், அயல்நாடுகளில் நிலைமை தலைகீழ். இத்தகைய இடங்களை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். அத்துடன், இந்த இடங்களுக்கு விலை மிகமிகக் குறைவாக இருக்கும். அவர்களுக்கு இல்லம் என்பது அமைதியின் உறைவிடம்.
வாகனங்களில் காற்றொலிப்பான் பொருத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்று எழுத்தில் உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. முன்செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாரும் காற்றொலிப்பானை அலற விடுகிறார்கள். இது ஏதோ மாநகரின் சிக்னல் பகுதியில் மட்டுமே நடக்கும் நிகழ்வு அல்ல. நெடுஞ்சாலையில் வாகனங்களை முந்திச் செல்லும்போதும், பயணிகளின் அடிவயிற்றை கலக்கும்படியாக, காற்றொலிப்பானைத் தொடர்ச்சியாக அலற விடுவது சர்வ சாதாரணமாகக் காணும் காட்சி.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, நூற்பாலைகள் உள்ளிட்ட சில தொழிற்சாலைகளில் மட்டுமே மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் சோதனைகள் நடைபெறுவதும், தொழிலாளர்களுக்கு காது கேட்புத் திறன் குறையாமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ள வலியுறுத்துவதும் நடைமுறையில் இருந்தது.
ஆனால் இப்போது ஒலி மாசு என்பது தொழிற்சாலையின் பிரச்னையாக மட்டும் இல்லை. இது சாலை, கடைவீதி, கலைஅரங்கம் என எல்லாவற்றையும் கடந்து வீடு வரை வந்துவிட்டது. வீட்டில் “ஹோம் தியேட்டரில்’ படம் பார்ப்பதும், இசை கேட்பதும் அளவு கடந்த ஓசையுடன்தான் நடைபெறுகிறது. சில தனியார் சேனல்களில் விளம்பரம் மட்டும் அதிக சப்தத்தில் வெளிப்படும்படியாக ஒளிபரப்புகிறார்கள்.
பேருந்துப் பயணம், கார் பயணங்களிலும்கூட, பாட்டுச் சப்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சில பேருந்துகளில் மற்ற பயணிகளுக்கும் கேட்கும்படியாக உரக்கச் சொன்னால்தான் உரிய இடத்துக்கு டிக்கெட் கிடைக்கும்.
இருக்கிற இரைச்சல்கள் போதாதென்று இப்போது கைபேசிகளும் தங்கள் பங்குக்கு நம் காதுகளை செவிடாக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இதில் வெளிப்படும் ஒலிஅலைகளின் தன்மை. இவை உள்காது நரம்புகளைப் பாதிக்கச் செய்கின்றன. எப்போதும் “ஹியர் போன்’ வைத்துக்கொண்டிருந்தால், நிச்சயம் “ஹியரிங் எய்டு’ தேவைப்படும்.
90 டெசிபல் அளவுக்கான ஒலியைத் தொடர்ந்து 6 மணி நேரம் கேட்டால் காதில் உள்ள ஒலிநரம்புகள் பாதிக்கப்படுகின்றன. காது கேட்புத்திறன் குறைந்துவிடும் அல்லது காது இரைச்சல் போன்ற வேறு பல தொல்லைகள் ஏற்படும். அத்துடன் உயர் ரத்த அழுத்தம், மனஇறுக்கம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கும் இந்த இரைச்சல் இட்டுச்செல்லும். அத்தோடு நிற்பதில்லை. முதுமையில் இயல்பாகவே தோன்றக்கூடிய நோய்களைத் தீவிரப்படுத்தவும் செய்கிறது இந்த ஒலி மாசு.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் இரைச்சல் பகலில் 55 டெசிபல், இரவில் 45 டெசிபல் அளவுக்கு மட்டுமே. மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இந்த ஒலி மாசுக் கட்டுப்பாடு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்தெந்த விஷயங்களில் தலையிட்டு ஒலி மாசுவைக் கட்டுப்படுத்தும் என்பது நமக்குத் தெரியவில்லை.
அரசு ஒரு பொது ஒழுங்கை சட்டத்தின் மூலம் ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், நம் வாழ்க்கை முறையை நாம் தகவமைத்துக் கொள்ளும் பண்பாடுதான் ஒரு சமூகத்தைக் காக்கும். தேவையற்ற ஓசையைத் தவிர்க்க முயல்வோம்.
சொன்னால் கேளுங்கள்… இல்லாவிட்டால், பிறகு யார் சொன்னாலும் கேட்காது!