Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தவிக்கும் நீதி!

Posted on March 16, 2009 by admin

[நீதியின் தவிப்பு முடிவுக்கு வருமா? நீதிமன்றம், வழக்கறிஞர் சமுதாயம், இவற்றின் மாண்புகள் மீட்கப்படுமா? ஜனநாயக சக்திகள் இவற்றுக்கு ஆவலுடன் விடை தேடி நிற்கின்றன.]

தமிழக வரலாற்றில் 19-2-2009 ஒரு கறுப்பு தினமாகப் பதிவு பெற்றுவிட்டது. அன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசின் காவல்துறை, கலவரத் தடுப்புக் காவலர்களை வைத்து நடத்தியுள்ள வரம்பு கடந்த வெறியாட்டம் ஒரு கறைபடிந்த அத்தியாயம். அன்றைய நிகழ்வுகளை வழக்கறிஞர்கள் – காவல்துறையினருக்கிடையிலான மோதல் என்று சித்திரிப்பது பொருத்தமற்றது.

தலைக்கவசங்களையும், தடுப்புக் கேடயங்களையும், தடிகளையும் தாங்கி நின்ற காவல் படையினரை எதிர்நின்று மோதலில் ஈடுபடுகிற “தயார் நிலை’யில் வழக்கறிஞர்கள் இருந்தார்கள் என்பது கற்பனைகூடச் செய்ய முடியாத விஷயம். எனவே அன்று காவல்துறை நடத்திய தடியடி அராஜகம் எள்ளளவும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை.



இதில் இன்றளவும் பதில் கிடைக்காத மர்மமாகவே ஒரு கேள்வி நிற்கிறது. “19-2-2009-ல் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையினர் யாருடைய உத்தரவின்பேரில் நுழைந்தார்கள்? தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?’ என்பதே அந்தக் கேள்வி.

அன்றைய சம்பவங்களுக்கு இரண்டு நாள்கள் முன்பாக ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமென்று மனு தாக்கல் செய்ய வந்தபோது, நீதிபதிகள் முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். இதை அந்த நீதிபதிகளே எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து, அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று உத்தரவிட்டனர். சுப்பிரமணியன் சுவாமியின் நடவடிக்கைகளோ, அவர் தலையிட்ட வழக்கில் அவரது நிலைப்பாடோ, பலருக்கும் ஏற்புடையதல்ல. எனினும் நீதிமன்றத்தை அணுக ஒரு குடிமகன் என்ற முறையில் அவருக்குள்ள உரிமை மறுக்கப்படுவது ஜனநாயகமாகாது.

இது தொடர்பாக 18-2-2009 அன்று உயர் நீதிமன்றத் தாற்காலிகத் தலைமை நீதிபதி முகோபாத்யாயவை, தமிழக அரசின் காவல்துறைத் தலைவரும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது என்ன பேசப்பட்டது என்பது இருதரப்பாலும் வெளியிடப்படாத ரகசியமாகவே உள்ளது.

ஆனால் 19-2-2009 அன்று தாற்காலிகத் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சு பிறப்பித்த உத்தரவில், அவர் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரையும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும் தானே தொலைபேசியில் தொடர்புகொண்டு, “காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதி பெறாமல் நுழைந்துள்ளனர். எனவே அவர்களை நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று கோரியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் 20-2-2009 அன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை, “”19-2-2009 அன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் நுழையத் தாற்காலிகத் தலைமை நீதிபதியோ, தலைமைப் பதிவாளரோ அல்லது உயர் நீதிமன்ற அதிகாரி வேறு எவருமோ அனுமதி அளிக்கவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கூடவே, “இதற்கு மாறாகக் காவல்துறையினர் உள்ளிட்ட வேறு யாரும் வெளியிட்டுள்ள அறிக்கைகளைப் பொருள்படுத்தக்கூடாது” என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, இந்தியத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் “தலைக் கவசம் அணிந்த காவலர்கள் குண்டாந்தடியோடு நீதிமன்ற அரங்கங்களில் நுழைய உத்தரவிட்ட அதிகாரிகள் யார்?’ என்று எழுப்பிய கேள்விக்குத் தமிழக அரசு பதிலளித்துவிட்டது என்று முதலமைச்சர் அறிக்கையொன்றியல் தெரிவித்துள்ளபோதிலும், அந்த பதில் என்ன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அவரும் சென்னைக்கு வந்து, தனது பூர்வாங்க விசாரணையை நடத்திவிட்டு சமர்ப்பித்த அறிக்கையில் வழக்கறிஞர்களைக் குற்றஞ்சாட்டியதோடு, காவல் துறையினர் எவருக்கும் எதிரான நடவடிக்கை எதையும் தற்போது பரிந்துரைக்க இயலாது என்று கைவிரித்து விட்டார். விசாரணையைத் தொடர அவர் விரும்பாத நிலையில், பிரச்னை சென்னை உயர் நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ள நிலையில் உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை மிக “நிதானமாகவே’ மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் சகஜ நிலைமைக்குத் திரும்புமா என்பது கேள்வியாக நிற்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் 9 நாள்கள் மட்டுமே இயங்கி உள்ளன. இந்த நீடித்த புறக்கணிப்பால் நீதிமன்றத்தின் தலையீட்டை நாடி நிற்க வேண்டிய நிலையிலுள்ள பொதுமக்களுக்கு விளைந்துள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை.

இந்தப் பாதிப்புகளின் இரண்டு வெளிப்பாடுகளை அண்மையில் காண முடிந்தது. குற்றவியல் வழக்குகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் குற்றவியல் நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்த வேண்டிய காவல்துறையினர் நீதிமன்றத்துக்குச் செல்லத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

நீதிமன்றத்துக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் வீடுகளுக்கு மாலை நேரங்களில் கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் சென்று காவல் கைது உத்தரவுகளைப் பெற்று வர அவர்கள் முற்பட்டுள்ளனர். இது பாதுகாப்பு அபாயத்தை உள்ளடக்கிய ஒரு நடைமுறை. மறுபக்கம் குற்றவியல் நீதிமன்றங்களில் காவல் கைதுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாமல் தவிப்பதும் நீடிக்கிறது.

இந்த 2009-ம் ஆண்டில் மட்டும் வழக்கறிஞர்கள் சிலருக்கு எதிராக 19 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன (பிப்ரவரி – 19 சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் இதில் அடங்கா!). இவற்றில் 11 வழக்குகள் காவல்துறையினர் தாக்கப்பட்டது தொடர்பானவை; 2 வழக்குகள் ஒரு நீதிபதி (மாஜிஸ்திரேட்) மற்றும் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் தாக்கப்பட்டது தொடர்பானவை; பாங்க் ஆப் சிலோன் மீது தாக்குதல், சென்னை பிராட்வேயில் பந்த் அறிவிக்கப்பட்ட நாளில் திறந்திருந்த சைக்கிள் கடை சூறையாடல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பானவை மற்ற 6 வழக்குகள். 

இவற்றில் ஒரு வழக்கில் “கைது’ செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் குற்றவியல் நீதிபதி என். ரவி முன்பாக “ரிமாண்ட்’ உத்தரவுக்காகக் காவல்துறையினரால் கொண்டு நிறுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களின் பெயர்களைக் கேட்டபோது, எல்லாமே “பிரபாகரன்’ என்று எழுதிக் கொள்ளுங்கள் என்று ஒட்டுமொத்தமாகச் சொன்னார்கள். மாலையிலிருந்து 6 மணி நேரத்திற்கும் அதிகமாக இந்தக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக்கூடிய சில வழக்கறிஞர்கள், காவல்துறை வாகனத்தின் கண்ணாடியை உடைத்தார்கள். நீதிபதியையும், காவல்துறையினரையும் வசைபாடினார்கள். வெறுத்து, சலித்த நீதிபதி ரவி அடுத்தநாள் விடிகாலை நேரத்தில்தான் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல நேரிட்டது.

4-2-09 அன்று நடைபெற்ற இந்தச் சம்பவம் அடுத்த நாள் உயர் நீதிமன்றத் தாற்காலிகத் தலைமை நீதிபதி முகோபாத்யாய முன்னர் எடுத்துச் சொல்லப்பட, அவரும், அவரோடு பெஞ்சில் இருந்த நீதிபதி தனபாலனும் வழக்கறிஞர்களின் இந்தக் கட்டுக்கடங்காத நடத்தை குறித்துக் கவலை தெரிவித்தார்கள் என்ற செய்தி நாளேடுகளில் இடம்பெற்றது.

ஒரு மாவட்டத்தில் ஒரு வழக்கறிஞர் மீது நீதி ஒழுங்கீனம் என்ற குற்றத்தைக் காட்டி அவர் சார்ந்த ஒரு ஜனநாயக அமைப்பு நடவடிக்கை எடுத்தது. அவர் அந்த அமைப்புக்கு எதிராக மானநஷ்ட வழக்குத் தொடுத்தார். இது அந்த வழக்கறிஞருக்கும், அவர் மீது நடவடிக்கை எடுத்த அமைப்புக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம். ஆனால் அந்த மாவட்டத்தின் வழக்கறிஞர்கள் அமைப்பு இதில் தலையிட்டு, எந்த வழக்கறிஞரும் அந்த வழக்கறிஞர் தொடுத்த மானநஷ்ட வழக்கில் அந்த அமைப்புக்காக ஆஜராகக் கூடாது என்று தீர்மானம் இயற்றிக் கட்டுப்பாடு விதித்தது. இதனால் அந்த அமைப்பு வழக்கையே வேறு மாவட்டத்துக்கு எடுத்துச்செல்ல மனுபோட நேரிட்டது.

வழக்கறிஞர்கள் “வேலைநிறுத்தம்’ அல்லது “புறக்கணிப்பு’ நடைபெற்ற சுமார் ஒரு மாதகாலத்திலும்கூட உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கம்போல, தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாதி – பிரதிவாதி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையிலும்கூட, நீதிபதிகள் தங்கள் முன்வந்த வழக்குகளில் தீர்ப்புகளைப் பிறப்பித்து வந்தனர். இது எல்லா நீதிபதிகளும், எல்லா நாள்களிலும் மேற்கொண்ட நடைமுறையாக அமையவில்லை என்பது மட்டுமே ஆறுதல் அளித்த அம்சம். ஆனால் இப்படித் தீர்ப்பளித்து “முடிக்கப்பெற்றுவிட்ட’ வழக்குகளைச் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடுதல் பொருள்செலவையும் மேற்கொள்ள வேண்டும்; கால தாமதத்தையும் சந்திக்க வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில், பாதிப்புகளை எதிர்கொள்ளும் குடிமக்கள் நீதி கோருவதற்கான கடைசிப் புகலிடம் நீதிமன்றங்கள்தாம். அந்த நீதிமன்றத்தின் நீண்ட தாழ்வாரங்கள் வழக்கறிஞர்களின் நடமாட்டமின்றி ஓய்ந்து கிடப்பது, அந்தக் குடிமக்களுக்கு நீதி மறுக்கப்படும் மனித உரிமை மீறலேயாகும். இது காலவரையற்றுத் தொடர்வதால் தமிழ்நாட்டில் “நீதி கிடந்து தவிக்குது!’

தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் முடக்கப்பட்டு நின்றுள்ள இந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நிர்வாகமும் இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசும் பிப் – 19க்கு முன்பும், பின்பும் எந்த முன்முயற்சியிலும் இறங்கவில்லை. மாநில சட்டத்துறை அமைச்சர் 19-2-2009 சம்பவங்களுக்குப் பின்னர் கூட்டிய ஒரு கூட்டத்தையும் வழக்கறிஞர்கள் அமைப்புகள் புறக்கணித்தன. உச்ச நீதிமன்றமும் வேண்டுகோள் மட்டுமே விடுத்து, நிற்கிறது!

காவல்துறையின் அத்துமீறல்களைத் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் ஒருமித்துக் கண்டித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் இந்த நீதிமன்ற முடக்கம் நீடிப்பது குறித்த கவலையையும் அவை அழுத்தமாகத் தெரிவிக்கின்றன. வழக்கறிஞர் சமுதாயத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் ஒரு சில வழக்கறிஞர்களும், நீதிமன்ற வளாகத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் சிலரும் விரும்பத்தகாத நிகழ்வுகளை நடத்தியுள்ளனர் என்பதையும் தமிழக மக்கள் வேதனையுடன் கண்டு முகம் சுளித்து நிற்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக அரிதாகவே நடந்திருக்கலாம். எனினும் இவை வழக்கறிஞர் சமுதாயத்துக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லையே! இதன் காரணமாகவே வழக்கறிஞர்கள் தாங்களாகவே ஒரு நடத்தை நெறிமுறைகளை உருவாக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் பரிந்துரைக்க நேரிட்டது.

நீதியின் தவிப்பு முடிவுக்கு வருமா? நீதிமன்றம், வழக்கறிஞர் சமுதாயம், இவற்றின் மாண்புகள் மீட்கப்படுமா? ஜனநாயக சக்திகள் இவற்றுக்கு ஆவலுடன் விடை தேடி நிற்கின்றன.

நன்றி: உ .ரா. வரதராசன், தினமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb