நீடூர் A.M.சயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே விதமான உரிமை இயல் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று குதர்க்க வாதம் பேசுவோர், ஷரீ அத் சட்டத்தின் காரண காரியங்களையும், பலன்களையும் சீர்தூக்கிப் பார்த்து சிந்திப்பார்களேயானால், இந்தக் காட்டுக் கூச்சலை விட்டுவிடுவார்கள். அத்தோடு குழப்பங்கள் நீங்கி நாடு நலமுறும் ; சமுதாயம் செழுமையுறும். இறைச்சட்டங்களை மாற்றுவது முஸ்லிம்களுக்கு மட்டும் இழப்பு அல்ல; உலக மக்களுக்கே அது பேரழிவை ஏற்படுத்திவிடும்,
ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், பார்ஸிகள் எனப் பல்வேறு சமயக் கருத்துக்களை உடையவர்கள் அவரவர்களுக்கேற்ற வேதவழிப்பாட்டில் ஈடுபடுவதற்கு உரிமைகள் வேண்டுவது போல, சமய சட்டங்களையும் பின்பற்ற விரும்புகின்றனர். திருமணச்சடங்குகள், வாரிசுரிமைகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள் ஆகியன வெவ்வேறானவைகளாகவே இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் ஒருமைப்பாடு, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, சகிப்புத் தன்மையோடும் தோழமை உணர்வோடும் வாழ்வதுதான் மனித நேயம்.
“மறுமணம்” தந்த புரட்சி மார்க்கம்
கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த நிலா
மிகக் கொடியதென்று பட்டதண்ணே குளிர்கின்ற வட்டநிலா
புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் மனக்குமுறலுடன் பாடிய கவிதை இது. பெண்கள் இளம் வயதிலேயே விதவைகளானாலும் மறுமணம் செய்து கொள்ள இந்து சட்டத்தில் அனுமதியில்லாத நேரத்தில் பாடிய வரிகள். பிறகு இந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதி கிடைத்தது. இருந்தாலும் மிக அபூர்வமாகவே இந்து சமயத்தில் மறுமணம் நடைபெறுகிறது.
இஸ்லாத்தில் விதவைகள் திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு என்பது மட்டுமல்ல; விதவைகளுக்கு மறுவாழ்வு வழங்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இறுதித் தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தம்மை விட வயதில் மூத்தவரும் விதவையுமான அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்து வழிகாட்டினார்கள்.
இஸ்லாத்தில் ஒரு பெண் கணவனை இழந்த விதவையானாலும், அல்லது கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவளானாலும் மறுமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. இது வெறுமனே ஏட்டளவில் இல்லாமல், முஸ்லிம் சமூகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டம் வருகிறது.
தன்னால் விவாகரத்துச் செய்யப்பட்டு முடிந்து போன அதே பெண்ணை மீண்டும் மணந்து கொள்ள பழைய கணவனே விரும்பலாம். நன்றாக சிந்தித்து, பொறுமையுடன் பிரச்சனைகளை அணுகாமல் அவசரப்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்து விடுவதால் இது போன்ற நெருக்கடி ஏற்படுவதுண்டு. இச்சமயத்தில் உடனடியாக அப்பெண்ணை அவன் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஐந்து நிபந்தனைகளை அவள் பூர்த்தி செய்த பிறகே, அவன் விவாகரத்துச் செய்த அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்ய முடியும். 1. அனைத்து வகை விதவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள இத்தா என்றும் எதிர்பார்த்தலை அந்த முதல் மனைவி மேற்கொள்ள வேண்டும்.
2. இத்தா முடிந்த பிறகு அப்பெண் வேறொரு ஆணை மணந்து கொள்ள வேண்டும்.3. அந்தக் கணவனுடன் தாம்பத்திய உறவு ஏற்பட வேண்டும்.4. பின்னர் அந்த இரண்டாவது கணவன் அவளை விவாகரத்துச் செய்ய வேண்டும்.5. மறுபடியும் அவள் இத்தா இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை முறையாக செய்து முடித்து பிறகே மறுமணம் நடைபெற முடியும். முதலில் இழந்த பெண்ணை அவன் மீண்டும் மனைவியாக்க முடியும். இந்த நெருக்கடி வந்து விடக்கூடாது என்பதற்காகவே, விவாகரத்து வியத்தில் அவசரம் கூடாது என்றும், கணவன், மனைவி இடையே பொறுமை, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, எல்லாவற்றையும் விட இறையச்சம் அவசியம் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
இத்தா – ஓர் அற்புதம்
”இத்தா” என்பது இஸ்லாத்தில் மட்டுமே இருக்கும் ஓர் அற்புதமான பழக்கமாகும். கணவன் இறந்துவிட்டாலோ, கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டாலோ மனைவி கர்ப்பமா இருக்கிறாளா, இல்லையா என்பதை அறிய “இத்தா” காலம் பயன்படுகிறது. இத்தா இல்லாமல் மறுமணம் செய்து கொண்டால், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்குத் தகப்பன் யார் என்ற குழப்பம் ஏற்படும். இத்தாவில் இருக்கும் போது அவள் கருவுற்றிருப்பது தெரியவந்தால், குழந்தை பெறும்வரை மறுமணம் செய்து கொள்ள கூடாது.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண் ”மூன்று மாதவிடாய்க் காலம்” இத்தா இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண்ணாக இருந்தால் நான்கு மாதம் பத்துநாள்கள் இத்தா இருக்க வேண்டும். கணவன் இழந்த கவலையை மறக்க இவளுக்கு கூடுதல் நாள் விதிக்கப்பட்டிருக்கலாம். ”இத்தா”வில் இருக்கும் பெண்ணிடம் உரையாடுவதும், உறவாடுவதும் விலக்கப்பட்டுள்ளது. அப்போது தான் ”இத்தா”வின் நோக்கம் நிறைவேறும். இதைப்பற்றிய விளக்கம் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
”(இத்தாவில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை நீங்கள் மறைமுகமாக எடுத்துரைப்பதிலோ, அல்லது (அதனை) உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை (பெண்பேச) நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். (இருப்பினும்) முறையான வார்த்தைகளை (ச்சாடையாக)க் கூறுவதைத் தவிர, இரகசியமாக அவர்களுக்கு வாக்கு கொடுத்து விடாதீர்கள். மேலும் குறித்த தவணை முடிகின்ற வரை மண ஒப்பந்தத்தை நீங்கள் இறுதியாக்கி விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் இதயங்களில் உள்ளவற்றை நன்கு அறிகிறான் என்பதை நீங்கள் அறிந்து, அவனை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிதானமானவனும் ஆவான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.” (2:235)
இஸ்லாத்தில் பெண்களுக்கு பலவிதமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மறுமணம் செய்து கொள்ளும் உரிமை அவற்றில் புரட்சிகரமானது. பெண்களைக் கண்களெனப் போற்றுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். காழ்ப்புணர்ச்சியின்றி, திருக்குர் ஆன் ஒரு வழி காட்டும் வேதநூல் என்ற நம்பிக்கையோடும் இறையச்சத்தோடும் திருக்குர்ஆனை ஆழ்ந்து படித்தால் அற்புதமான உண்மைகள் புலப்படும்.
நம்பிக்கையாளர்களுக்குத்தான் மருத்துவர்களின் சிகிச்சை கூடப் பலனளிக்கும். திருக்குர்ஆனை நம்பியவர்களுக்குத்தான் அது வழிகாட்டி என்பது புரியும். ஆனால் மருத்துவத் துறையில் பட்டம் பெற்று முப்பது வயதைக் கடந்து எழுத்தாளராகவும் தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் வங்காள தேசப்பெண் தஸ்லீமா நஸ்ரீனுக்கு இந்த உண்மை தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.
வெட்கமும் நாணமும் பெண்களின் மேலாடை. பரிதாபத்துக்குரிய அந்தப்பெண் தஸ்லீமா வெட்கம் என்ற தலைப்பில் ஒரு நவீனம் எழுதினாள். வெட்கக் கேடாக இந்த நூல் அமைந்ததுதான் வேடிக்கையாகும். முஸ்லிமான அப்பெண்ணே முஸ்லீம்களின் மன உணர்வுகளை புண்ணாக்கிவிட்டாள். இதனால் உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தின் சாபத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகிவிட்டாள்.
குர்ஆன் இக்காலத்துக்குப் பொருந்தாது என்று நம் தமிழகத்தில் சொன்ன சீர்திருத்தவாதிகளெல்லாம் மன்னிப்புக் கேட்டு மனம் திருந்திய வரலாறு உண்டு. பொதுவுடமை நாட்டிலும் பேதமைக் காரணமாகத் திருக்குர்ஆனை உதாசீனப்படுத்தியவர்கள் உண்மை உணர்ந்து திருந்தினர்.
சிரியா நாட்டு மார்க்க அறிஞரும் அரசியல் தலைவருமான அமீர்கீப் அரிஸ்லான் (1871Š1946) அவர்கள் திருக்குர்ஆனின் ர´ய மொழி பெயர்ப்பை, ர´யர்களின் வாழ்க்கையோடு இணைத்து விட முயன்றார். இதற்காக மாஸ்கோவில் லெலின் உடைய விருந்தினராகத் தங்கியிருந்தார். ஆனால் பன்றி மாமிசத்தடை மதுவிலக்கு, விபசாரத்தடை, ஆகிய மூன்றும் திருக்குர்ஆனிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று லெனின் வற்புறுத்தினார். இதனால் அறிஞர் அரிஸ்லான் லெனினை விட்டு விலகினார் என்பது வரலாறு.
எனினும் அன்று ர´யாவில் தூவப்பட்ட குர்ஆனின் விதை நன்கு வளர்ந்தது. இன்று சோவியத் யூனியிலிருந்து பிரிந்த நாடுகள் பல முஸ்லீம் குடியரசுகள். இந்த வளர்ச்சிக்கு மெளலானா உபைதுல்லாஹ் சிந்தி அவர்களின் அழைப்புப் பணியும் காரணமாகும்.
தஸ்லிமா போன்றவர்களுக்கு வங்காளத்தில் இஸ்லாம் வளர்ந்த வரலாறும், ரீஅத் சட்டத்தின் அருமைப் பெருமைகளும், அதன் ஆழமான கருத்துக்கள் மற்றும் எல்லைகளும் தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால்தான் புனிதத் திருமுறையையே விமர்சிக்கும் தரம் தாழ்ந்து விட்டார். இஸ்லாத்தின் விரோதிகள் தஸ்லீமாவிற்கு விளம்பரம் தந்து அவரை இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியே இழுத்துப் போடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.
வங்காளத்தில் இஸ்லாமியப் பிரசாரம் செய்தவர்களில் ஷைகு ஜலாலுத்தீன் தப்ரீஸீ முக்கியமானவர். அவரையும் அவரது ஆன்மீகத் தந்தை அபூ ஹப்ஸ் ஹாபுத்தீன் ஸூஹ்ரவர்தீ என்ற மகானையும் வங்காள முஸ்லிம்கள் மறக்க முடியாது. இந்தப் பெரியார்களின் உழைப்பால் பலர் இஸ்லாத்தை ஏற்றனர். வங்காளம், பீகார் இரண்டிலும் ஆட்சி செய்த ஜத்மல் என்ற மன்னர் முஸ்லிமாகி ஜலாலுத்தீன் முஹம்மது ஷா என்று அழைக்கப்பட்டார்.
உயிருடன் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண் சிசுக்களுக்கு உயிர் தந்தது இஸ்லாம். உலகில் எந்தச் சமயத்திலும் தரப்பட்டிராத சொத்துரிமை, சமூகப் பாதுகாப்பு, விவாகரத்து உரிமை, விதவைத் திருமணம் போன்ற உரிமைகளைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிற்று. பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்பதால் அவர்களிடம் கண்ணியத்தோடும் மனிதாபிமானத்தோடும் நடந்துக் கொள்ள வேண்டும். என்றும், அவர்களின் உரிமையாக முறையாக வழங்குவது ஆண்களின் கடமை என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதையயல்லாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
விவாகரத்துக்குப் பின்னால் …
முதல் திருமணமாக இருந்தாலும், மறுமணமாக இருந்தாலும் அது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமேயாகும் என்பதே இஸ்லாமிய சட்டவியல். ஆற்றிலோ, கடலிலோ படகில் ஒருவன் பயணம் செய்கிறான். படகில் ஓட்டை ஏற்பட்டு விடுகிறது. ஓட்டையை பழுது பார்த்து சரிசெய்தால் தான் இனி பயணத்தை தொடர முடியும். பழுதே பார்க்கமுடியாத அளவுக்குப் படகு பாதிக்கப்பட்டிருந்தால், அதை விட்டு விட்டு வேறு படகில் ஏறினால்தான் அவன் உயிர் பிழைப்பான். பயணமும் வெற்றி காணும்.
இதே போன்றுதான் வாழ்க்கைப் படகும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடும் விரிசலும் ஏற்படும் போது திருக்குர்ஆன் காண்பித்துள்ள வழிமுறைகளைக் கையாண்டு, சமரசம் ஏற்பட வழி காண வேண்டும். வேறு வழியே இல்லை என்கிறபோதுதான், இறுதிய ஆயுதமாகத் தலாக் மூலம் தம்பதியர் பிரிந்து, குறித்த காலத்திற்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மறுமணத்தின் மூலம் பெண்ணுக்கு மீண்டும் ஒருமுறை மஹர் தொகைக் கிடைப்பதோடு, அவளது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குப் புதிய கணவன் பொறுப்பேற்றுக் கொள்ளவும் செய்கிறான். இதனால் தான், கணவன் இறந்து போனால் விதவைகளுக்கு அவனது சொத்தில் உரிமையுண்டு என்று கூறும் இஸ்லாம், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு அவளது கடந்த கால கணவனின் சொத்தில் பங்கு கிடையாது என்று கூறுகிறது. தவிரவும் தலாக் மூலம் வாழ்க்கை ஒப்பந்தம் முறிந்து போன பிறகு, முன்னாள் கணவனின் சொத்தில் உரிமை கொண்டாடுவது அறிவாண்மையாகாது.
அதே நேரத்தில் மரண நோயில் உள்ள ஒருவர் தன் மனைவியை தலாகுல் பத்தா முறையில் விவாகரத்துச் செய்வதாக சொன்னால், “இத்தா”வில் அவள் இருக்கும் வரை கணவனின் சொத்தில் பங்கு பெற அவளுக்கு உரிமையுண்டு. ஆனால் அவளது ஒப்புதலுக்குப் பிறகே விவாகரத்து நடந்திருந்தால், அப்போது கணவன் சொத்தில் அவள் உரிமை கோர முடியாது. இதே போல, இத்தா காலம் முடிவதற்கு முன்பே மனைவி இறந்து விட்டால், அவளுடைய சொத்தில் பங்கு கேட்கும் உரிமை கணவனுக்குக் கிடையாது.
குழந்தைகளுக்கு யார் காப்பாளர் ?
விதவைப் பெண் மறுமணம் செய்து கொண்டாலும், செய்து கொள்ளாவிட்டாலும் முந்தைய கணவன் மூலம், அவள் பெற்ற குழந்தைகளுக்கு யார் காப்பாளர் என்பதை இஸ்லாமியச் சட்டம் தெளிவாக விளக்கியுள்ளது.
இஸ்லாமியச் சட்டப்படி ஒருவருக்கு 15 வயது நிறைவானால், அவர் உரிமை வயது பெற்றவர் (மேஜர்) ஆவார். ஆனால் இந்திய உரிமை வயது வந்தோர்ச் சட்டம் (ணூஐdஷ்ழிஐ னிழிளூலிrஷ்மிதீ புஉமி 1875) குறிப்பிட்டுள்ளபடி அனைத்து சமய மக்களிலும் 18 வயது நிரம்பியவர்களே உரிமை வயது அடைந்தவராகக் கருதப்படுவர். அனேகமாக அனைத்து நாடுகளிலும் இதே வயதுதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் 21 வயதை நிறைவு செய்தவர்களே உரிமை வயது அடைந்தோராகக் கருதப்பட்டு காப்பாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகின்றனர்.
ஆண் குழந்தை 7 வயது நிறைவு பெறும் வரையிலும், பெண் குழந்தை பருவம் எய்தப்பெறும் வரையிலும் தாய் தான் குழந்தைக்குப் பொறுப்பேற்க வேண்டும். தாய் இலலாத போது தாய் வழி உறவினர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். ஏழு வயது நிறைவு செய்த ஆணுக்கும், பருவம் எய்தப் பெற்றப் பெண்ணுக்கும் தந்தை காப்பாளராக இருப்பார். தந்தை இல்லாத போது, தந்தை வழி உறவினர்களையே நியமிக்க வேண்டம். இது ஹனபி பிரிவுச் சட்டமாகும்.
நூர் காதிர் Vவி. ஸூலைகா பீவி (11.01.64) என்றொரு வழக்கு. பருவம் அடையாத மனைவியைத் தன் தந்தை வீட்டில் விட்டு கணவன் வெளிநாடு சென்று விட்டான். மாமியார்-மருமகள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சச்சரவு ஏற்படுகிறது. இதை அறிந்த பெண் வீட்டார், தங்கள் வீட்டுக்குப் பெண்ணை அழைத்து வந்து விடுகின்றனர். இதை விரும்பாத கணவன் வீட்டார், இந்தியக் குற்றவியல் சட்டம் 363-வது பிரிவின்படி, மாமியார் பராமரிப்பில் இருந்த மருமகளை, அவள் தாய் கடத்திச் சென்று விட்டார் என வழக்குத் தொடர்ந்தனர்.
ஆனால், மனைவி பருவம் அடையாதவள் என்பதால், அவளுக்குக் காப்பாளராகச் செயல்படும் தகுதி தாய்க்கே உண்டு என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
மாலிக் பிரிவின் சட்டப்படி ஆண் குழந்தை உரிமை வயதை அடையும் தாயே காப்பாளராக இருக்கத் தகுதியுடையவராவார். ஷாபி மற்றும் ஹன்பலி பிரிவுகளின்படி ஆண் பிள்ளைகளுக்கு 7 வயது பூர்த்தியாகும் வரை தாய் காப்பாளராவார். தந்தையிடம் செல்ல, மகன் மறுத்துவிட்டால், தாயே காப்பாளராகச் செயல்படுவார்.
பெண் குழந்தைகளைப் பொருத்த வரையில், பருவம் எய்தப் பெறாவிட்டால், தாய் தான் காப்பாளர் என்பதில் எல்லாப் பிரிவுச் சட்டங்களும் ஒத்தக் கருத்துக் கொண்டுள்ளன.
´யா சட்டப்படி, ஆண் குழந்தைக்கு இரண்டு வயது தாயும், பிறகு தந்தையும் காப்பாளர், பெண் குழந்தையானால், ஏழு வயது வரை தாயின் பராமரிப்பிலும், பின்னர் தந்தையின் பொறுப்பிலும் வளர்ந்து பெற்றோர் இருவருமே காப்பாளர் பொறுப்பை வகிப்பர். தாய், தந்தை இருவரில் ஒருவர் இறந்து விட்டால், மற்றவர் காப்பாளராக இருப்பார்.
பெற்றோர் காப்பாளர்களாக இருந்தாலும், மைனர்களின் சொத்துக்களை விற்பதற்கு உரிமை கிடையாது. தந்தை தந்தையால் நியமிக்கப்பட்டவர், தந்தையின் தந்தை, அவரால் நியமிக்கப்பட்டவர் ஆகியோர் தான் மைனர்களின் சொத்துக்களுக்கு “சட்டநிலை”க் காப்பாளர்கள் ஆவர் மைனர்களின் சொத்துக்களை இவர்கள் தாம் நிர்வாகம் செய்ய வேண்டும். விற்க வேண்டிய அவசியம் ஏற்படின், நீதிமன்றத்தில் உரிய காரணங்களைக் கூறி அனுமதி பெற வேண்டும். நிகழ்வு நிலைக் காப்பாளர்களாக இருப்பவர்கள் மைனர்களின் சொத்துக்களைக் கண்காணித்து வரமட்டுமே முடியும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.