கூட்டாக சாப்பிடுதலின் சுன்னத்துகள்
ஆலிம்,அ.ஹம்ஸா முபாரக் ஹெளஸி எம்.பில்,
நன்மைகளை அறுவடை செய்ய…
[ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவைக் குறைவாக சாப்பிமாறு கூறும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். மேலும், வயிற்றில்
மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும்,
இன்னொரு பகுதியை தண்ணீருக்காகவும்,
இன்னொரு பகுதியை காலியாக விட்டு விட வேண்டும்
என்று கூறும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். மேலும், அவர்கள் பசித்தால் மட்டுமே உண்பார்கள். போதுமானவரை மட்டுமே சாப்பிடுவார்கள்.]
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே பாத்திரத்தில் சேர்ந்து சாப்பிடும்போது தங்களுக்கு மிக அருகில் உள்ள உணவையே எடுத்துச் சாப்பிட வேண்டும். அதே வேளை நடுவில் உள்ள உணவையோ அல்லது மற்றவரின் (கைக்கு) அருகில் உள்ள உணவை எடுத்துச் சாப்பிடுவது முறையல்ல. (ஆதாரம் : திர்மிதி)
பலர் சேர்ந்து சாப்பிடும்போது பேரீத்தம் பழங்களை அல்லது திராட்சை போன்ற சிறு பழங்களைச் சாப்பிடும் போது இரண்டு இரண்டாகவோ அல்லது அதனை விட அதிக எண்ணிக்கையிளோ எடுத்துச் சாப்பிடக் கூடாது. ஆனால் நண்பர்களின் அனுமதி பெற்றுச் சாப்பிடலாம். (ஆதாரம் : புகாரீ)
பலர் சேர்ந்து சாப்பிடும்போது மிகவும் பயபக்தி உள்ளவர் அல்லது வயதில் மூத்தவர் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். (நூல் : முஸ்லிம்)
சேர்ந்து சாப்பிடும் போது முடிந்தவரை இறுதியாக சாப்பிடுபவர் சாப்பிட்டு முடிக்கும் வரை சேர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் மெதுவாக சாப்பிடும் வழக்கமுள்ளவரின் துணையோடு சாப்பிட வேண்டும். எனினும் இது நம்மால் முடியவில்லையானால் அவரிடம் கேட்டுக் கொண்டு நாம் சாப்பிடுவதை முடித்துக்கொள்ளலாம். (ஆதாரம் : இப்னுமாஜா)
பணியாளர் உணவு சமைத்திருந்தால் அவரையும் சேர்ந்து சாப்டிடச் சொல்ல வேண்டும் அல்லது தனியாக சாப்பிடக் கொடுக்க வேண்டும் (ஆதாரம் : இப்னுமாஜா).
சாப்பாட்டில் கறி..(கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கவனிக்க)
தினமும் கறி திண்பதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அதாவது கறியை, கறி புசிப்பதைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் நிச்சயமாக அதனை வழக்கமாக (தினமும்) உண்பது மதுபானம் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்வதைப் போன்றதாகும். நிச்சயமாக வழக்கமாக கறி புசிப்பவர் குடும்பத்தார் மீது இறைவன் கோபம் அடைகிறான். (நூல் : முஅத்தா).
பெரிய கறித்துண்டு பரிமாறப்பட்டால். கத்தியால் சிறுசிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது (ஆதாரம், திர்மிதி).
சிறு சிறு கறித்துண்டுகளாகப் பரிமாறப்பட்டால் கத்தியால் வெட்டக்கூடாது. ஆனால் பற்களால் சிறு துண்டாக்கி (மென்று) சாப்பிட வேண்டும். இது செறிமானத்திற்கு உதவுகிறது. (ஆதாரம் : திர்மிதி).
நமக்கு கிடைக்கின்ற உணவை எல்லா சூழ்நிலைகளிலும் பொறுத்தத்தோடும், திருப்தியோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த உணவின் எடை, வகை ஆகியவைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஆகாது. உணவு கிடைக்கும் எல்லா நேரங்களிலும் மகிழ்வுடன் இருக்க வேண்டும். இது இறைவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற ரஹ்மத் (அருள்) என எண்ண வேண்டும். (ஆதாரம் : மாலிக்)
வயிறு நிரம்ப சாப்பிடலாமா?
“உலகில் வயிறு நிரம்ப சாப்பிடுபவர்கள் மறுமை நாளில் பசியுடையவர்களாக இருப்பார்கள்” என்று நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். (அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : மிஷ்காத்)
நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவைக் குறைவாக சாப்பிமாறு கூறும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். மேலும்,
வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும்,
இன்னொரு பகுதியை தண்ணீருக்காகவும்,
இன்னொரு பகுதியை காலியாக விட்டு விட வேண்டும்
என்று கூறும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள்.
மேலும், அவர்கள் பசித்தால் மட்டுமே உண்பார்கள்.
போதுமானவரை மட்டுமே சாப்பிடுவார்கள். அதாவது வயிறு நிறைய சாப்பிடமாட்டார்கள்.
பல்வேறு பட்ட உணவு பரிமாறப்பட்டால் தனக்கு விருப்பமான எந்த பங்கையும் (உணவையும்) எடுத்துச் சாப்பிட அனுமதியுண்டு. தனக்கு விருப்பமில்லாத (உணவு பதார்தத்தையும்) சாப்பிடாமல் (சாப்பிடாத குறிப்பு இல்லா) விட்டு விடலாம்.
நின்று சாப்பிடலாமா?
நின்று கொண்டோ, நடந்து கொண்டோ சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. அமர்ந்துதான் சாப்பிட, குடிக்க வேண்டும்.
உணவு பதார்த்தங்களை முகர்வதை நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.
இரவில் பட்டினி…
நீங்கள் “இரவில் பட்டினியாக இருக்காதீர்கள், பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டி விடும்” என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : ஆபூ நயீம்).
இனி சாப்பிட்டபின் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
சாப்பிட்ட பின் வாயைக் கொப்பளிப்பதும், கையைக் கழுவுவதும் (இறைவனின் அருளில் மூலகாரணமாக இருக்க வேண்டும்) (ஆதாரம்:இப்னுமாஜா)
சாப்பிட்ட பின் தட்டை வழித்துச் சாப்பிட வேண்டும்
விரல்களை நன்றாக சூப்பி சாப்பிட வேண்டும். ஏனெனில், இறைவன் தனது ரஹ்மத்தையும் பரக்கத்தையும் அவற்றில் விட்டு வைத்திருக்க வேண்டும்.
முதலில் நடுவிரல்டகளையும்
அடுத்து ஆள்காட்டி விரல்களையும்
இறுதியாக சூப்ப வேண்டும்.
மூன்று விரல்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தால் இவ்விதம் செய்ய வேண்டும்.
உணவு உண்ண இம்மூன்று விரல்களுக்கு மேல் பயன்படுத்தியிருந்தால் முதலில் நடுவிரல், அடுத்து ஆள்காட்டி விரல் அடுத்து பெருவிரல் (கட்டை விரல்) அடுத்து விறுவிரல், இறுதியாக மோதிர விரல் என சூப்ப வேண்டும். இதுவே சுன்னத்தான முறையாகும் (ஆதாரம் : தப்ரானி).
துஆ
சாப்பிட்டு முடித்த பின் கீழ்க்கண்ட துஆ வை ஓத வேண்டும்.
“அல்ஹம்து லில்லாஹில்லாதீ அத்அமனா வஸகானா வஜஅல்னா மினல் முஸ்லிமீன்”
பொருள் : எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். தாகம் தீர்த்து வைத்தான். எங்களை முஸ்லிமாகவும் ஆக்கிவைத்தான். (ஆதாரம் : தப்ரானி)
சாப்பிட்ட பின் ஒருவர் கீழ்கண்ட துஆவை ஓதினால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
“அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாஜுக்னீ மின் ஙப்ரீ ஹவ்லிம்மின்னீ வலா குவ்வத”. பொருள் : “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். மேலும், என்னிடமிருந்து எந்த ஆற்றலும், முயற்சியும் இன்றி அவனே என்னை உண்ணவைத்தான்”. (ஆதாரம் : அபூ தாவூது)
பிறர் வீட்டில் உணவு சாப்பிட்டால் கீழ்க் கண்ட “துஆ”வை ஓத வேண்டும்.
“அல்லாஹும்ம பாரிக்லஹும் ஃபீமா ரஜக்தஹும் வஃபிர் லஹும்”
பொருள் : இறைவனே! அவர்களுக்கு நீ அளித்தவற்றில் (உணவில்) பரக்கத்தை அளிப்பாயாக! இன்னும் அவர்களை மன்னித்து அவர்களுக்கு கிருபை செய்வாயாக!
தஸ்தரை (சுப்ரா, உணவு விரிப்பை) சாப்பிடுபவருக்கு அருகில் நகர்த்தப்பட வேண்டும். அதாவது, சாப்பிடுபவர்கள் அதனை சுத்தப்படுத்த வேண்டும். மேலும் சுப்ராவை மேல் நோக்கி தூக்கிய பின்னரே எழுந்திருக்க வேண்டும்.(ஆதாரம் : இப்னுமாஜா).
தஸ்தரை மடிக்கும் போது கீழ்கண்ட துஆவை ஓத வேண்டும்
அல்ஹம்து லில்லாஹில்லதீ ஹம்தன் கதீரன் தப்பியபின் முபாரகன் ஃபிஹி ஙய்ர மக்ஃபிய்யி வலா முவத்தயின் வலா முஸ்தஃனா அன்ஹு ரப்பனா.
சாப்பிடும் போது பேண வேண்டிய சில ஒழுக்கங்கள்:
சாப்பிடும் போது முன் பகுதியில் ஓரமாக சிறுசிறு பிடியாக சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் போது தண்ணீர் பருக நேர்ந்தால் இடது கையில் தாங்கி வலது கையினால் தண்ணீரைப் பருக வேண்டும்.
உணவு உட்கொள்ளும் போது இடையிலேயே விரல்களை சூப்புவதும், மேலும் கையில் ஊன்றிக் கொள்வதும் முறையல்ல.
உணவருந்தும் முன்பும் உணவருந்திய பின்பும் சிறிது உப்பை உட்கொள்வது சிறந்ததென்று சில பெரியார்களால் கூறப்பட்டுள்ளது.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்ட பாத்திரத்தைப் பார்த்தால் சாப்பிட்ட அடையாளமே தெரியாது. மேலும், அவர்கள் சாப்பிட்ட பிறகு விரல்கள் சிவக்கும் அளவுக்கு தங்களின் விரல்களை சூப்பும் பழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள்.
உணவருந்தும் பொழுது ஒவ்வொரு கவளத்தை வாயில் வைக்கும் பொழுதும், சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் பரிசுத்தமானவன் என்றும்,
ஒவ்டிவாரு கவளம் உணவை விழுங்கும்பொழுதும்
அல்ஹம்து லில்லாஹ் – எல்ல புகழும் இறைவனுக்கே என்றும்,
உணவருந்தும் சமயம் இடை இடையே “அல்லாஹும்ம லகல்ஹம்து வலகஷ்ஷுகூர்” – புகழும், புகழ்ச்சியும், நன்றியும் உனகே அல்லாஹ்.
இவ்வாறாக ஓதிவந்தால் ஒரு நஃபிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட நோன்பின் நன்மையுண்டு என்று தெரிய வருகிறது.
“Jazaakallaahu khairan” அஷ்ஷரீ அத்துல் இஸ்லாமியா” மாத இதழ்