மவ்லவீ ஹாபிழ், M.S.S.மஹ்மூது மிஸ்பாஹி
[பந்தா – பதவி – பணம் – பவுசுக்காக – மனிதாபிமானத்தை அடகு வைத்துவிட்டு ஆளாய் பறக்கிற மக்களை பகல் இரவென்று பாராமல் பம்பரமாய் பணத்திற்காக பரிதவித்து சுற்றிவரும் மக்களை கண்டு அல்லாஹ் சிரிக்கிறான். ஆனாலும் அன்பு செலுத்துகிறான்.]
அர்ரஹீம் – இவ்வுலகில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் ஒன்று போல அன்பு செலுத்தக் கூடியவன் அல்லாஹ்.
அடியார்கள் மீது என்றென்றும் அருள்பாலித்து வரும் அல்லாஹ் வின் அன்பு அன்னையின் அன்பைவிட நூறு மடங்கு அதிகமானது. அதனால்தான் இன்னும் இன்னும் அடியார்களை மன்னித்துக் கொண்டேயிருக்கிறான்.
பந்தா – பதவி – பணம் – பவுசுக்காக – மனிதாபிமானத்தை அடகு வைத்துவிட்டு ஆளாய் பறக்கிற ஜனங்களை பகல் இரவென்று பாராமல் பம்பரமாய் பணத்திற்காக பரிதவித்து சுற்றிவரும் மக்களை கண்டு அல்லாஹ் சிரிக்கிறான். ஆனாலும் அன்பு செலுத்துகிறான்.
உடலில் ஏற்படும் உபாதைகளை நீக்கிட மருந்துண்டு – சுற்று சூழலினால் ஆடைகளில் ஏற்படும் அழுக்கை நீக்கிட சோப்புண்டு.
மனிதர்களால் ஏற்படும் துன்பங்களை கசப்புணர்வுகளை நீக்கிட அன்பை தவிர வேறு மருந்தில்லை.
தன் மீது குப்பைகளை கொட்டிக் கொண்டேயிருந்த மூதாட்டியை அவள் நோயுற்ற போது அன்பு கொண்டு சென்று அவளிடம் நலம் விசாரித்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மூதாட்டி தீனில் சேருகிற வகையில் நடந்து கொண்டார்கள்.
வாழும் போது தன்னுடைய இதயத்தை அல்லாஹ் ரசூலின் மீது கொண்டுள்ள அன்பைக் கொண்டு நிரப்பிட வேண்டும்.
‘பூமியின் மீதுள்ளவற்றில் அன்பு செலுத்தாதவனுக்கு வானிலுள்ளவனின் அன்பு கிடைக்காது’. -அல்ஹதீஸ்
அன்பின் அடையாளமாக ரோஜா இதழைக் கொடுப்பதை விட ‘அஸ்லாமு அலைக்கும்……….’ என்று புன்முறுவலுடன் கூறுவதே சிறந்தது. ஏனெனில்இ ரோஜா இதழ் வாடிவிடும்;. ஸலாம் வாடாத வார்த்தையாக வாழ்ந்து கொண்டிருக்கும்: வாழ்த்திக் கொண்டேயிருக்கும்.
‘ஏய் மாடு அறிவிருக்கா?’ என்பது பெரும்பாலான பெற்றோர்களின் வாயிலிருந்து வாடிக்கையாக வந்துவிழும் வசனம். அது மலரின் மீது எச்சில் உமிழுவது போல-
‘என் தங்கமே! அறிவுப் பெட்டகமே! நீ இப்படி செய்யலாமா?’ என்று அன்புடன் பிள்ளையை அரவணைத்துச் சொன்னால் அதுமலரின் மீது பன்னீர் தெளிப்பது போல-
அனுபவசாலிகளே சில நேரம் அடிசறுக்கிடும் போது அள்ளி எடுக்கிற பருவமுள்ள சின்னப் பிள்ளைகள் என்ன செய்யும்! அன்பெனும் அரவணைப்பே அதற்கு நல்ல வழி காட்டும்.
‘நாயின் மீது அன்புகாட்டி தாகம் தீர்த்திட்ட நரகத்திற்கான நங்கை சுவனம் சேர்ந்திட்டாள். பூனையை கட்டிப் போட்டு பசியோடு இறக்கச் செய்த அன்பு நேசமற்ற மூதாட்டி நரகிற்கு சென்றாள்’ என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அன்பாய் இருங்கள்: அது ஒற்றுமையை தரும்! ஒற்றுமையாய் இருங்கள் அது வெற்றியைத் தரும்.
அன்பிற்கு எதிர்ப்பதம் பொறாமை! அந்த பொறாமையை போக்கிவிட்டாலே போதும் – மேகம் மறைத்த வெண்ணிலா வெளியாவது போல அன்பு வெளியாகும்.
ஊரில் யாரோ ஒருவருக்கு பதவி உயர்வு கிடைத்தால் நமக்கு ஒன்றும் தோன்றது. அதுவே நம் எதிர் வீட்டுக்காரனுக்கு வந்து விட்டால்….
ஊர் முழுக்க மின்சாரம் ‘கட்’ ஆனால் நமக்கு ஒன்றும் தோன்றாது. நம் வீட்டில் மட்டும் கரண்ட் இல்லை. மற்ற வீடுகளில் குறிப்பாக பக்கத்து வீட்டில் கரண்ட் இருக்கிறது என்றால் இங்கே பொறாமை தலை தூக்கும் அதனை நாம் நசுக்கிட வேண்டும்.
அன்பை உருவாக்கம் செய்வது எளிமை! செல்வமும் அதிகாரமும் அன்பை தடை செய்து விடும்.
ஏழ்மையுடன் வாழும் போதும்இ வலிமை மிக்க அரசராய் ஆளும் போதும் எளிமை என்ற அணிகலனுடன் அன்பு என்ற அரவணைப்புடனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்தார்கள்.
அலங்காரம் என்பது அகங்காரத்தின் தூண். ஆடம்பரம் என்பது ஆணவத்தின் அடையாளம் அன்பு மட்டும் எதையும் வென்றிடும் வேகமிக்கது!
மலருக்கு மணமும் பொருளுக்கு தரமும் அடியார்களுக்கு அன்பும் காட்டாயமானதாகும்.
படித்து முடித்து புத்தகங்கள் ஒருவண்டி நிறைய… எழுதிய புத்தகங்கள் அட்டங்கள் நிறைய… ஆனால் அவரிடம் அன்பின் தழுவல் இல்லை என்றால் அவன் கற்பூரம் சுமந்த கழுதை போலத்தானே?
அன்பைப் பற்றி எழுதுகிற போது அருகில் வந்த குழந்தையை அடித்து விரட்டுகிறவனின் எழுத்தில் என்ன உயிரிருக்கும்?
தன்னை பெற்றெடுத்த அன்னையைஇ தான் பெற்ற பிள்ளையை திருக்குர்ஆன் ஷரீபை திரு கஃபாவை அன்பு கொண்ட கண்களோடு கலந்து காண்பது இபாதத் என்றார்கள் ஈருலக நாதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!
அன்பு என்பது அரிதாய் வரும்;; வம்பு என்பது வாசலில் நிற்கும். வாசலில் நிற்பதை விரட்டியடிப்போம் – அரிதாய் வருவதை அரவணைத்துக் கொள்வோம்.
“Jazaakallaahu khairan” குர்ஆனின் குரல்