இருதயம் என்பது நமது உடலுக்கு ஒரு நிமிடத்தில் சராசரியாக 72 முறை ரத்தத்தை செலுத்தும் தசைநார்களால் உருவான உறுப்பு. இருதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் போஷாக்குகளை அளிக்கும் பொறுப்பு கரோனரி ரத்தக் குழாய்களுக்கு உள்ளது.
ரத்த வினியோகம் தற்காலிகமாக சிறிதளவு குறைந்தாலும், இருதய தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது குறைந்து விடும். இதன் காரணமாக, நெஞ்சில் அசவுகரியம் அல்லது ஆஞ்சினா ஏற்படும். ரத்த வினியோகம் முற்றிலுமாக நீண்ட நேரத்துக்கு தடைபடுமேயானால், இருதய தசைகள் சரிப்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்படும். மாரடைப்பு உருவாகும்.
ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகள் (பிளாக்) ரத்தக் குழாயை கிழிக்கும்போது அல்லது விரிசல் ஏற்படுத்தும்போது பெரும்பாலும் மாரடைப்புகள் ஏற்படுகின்றன.
பாதிக்கப்பட்ட தசை உயிரிழந்து வடுவாக மாறி விடுகிறது. இருதய தசைக்கு உள்ள சுருங்கி விரியும் (பம்ப்) தன்மையை, இந்த வடு இழந்து விடுகிறது.
இருதய தசையின் ஒரு பகுதி இறுக்கம் அடைந்து விடுவதால், இருதயத்தின் (இடது வெண்ட்ரிக்கிள், உடலுக்கு ரத்தம் செலுத்தும் முக்கிய அறை) ரத்த வினியோக திறமை குறைந்து விடுகிறது. நுரையீரல் கோளாறுக்கும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.
ஒரு சிலருக்கு இரண்டு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி ஏற்படலாம். தாடையில் வலி அல்லது முதுகில் தோள்பட்டைக்கு நடுவே வலி ஏற்படலாம். இவைகள் நெஞ்சுவலிக்கான எச்சரிக்கையாக இருக்கும் பட்சத்தில், ஓய்வு எடுத்த ஒரு சில நிமிடத்தில் இந்த அறிகுறிகள் மறைந்து விடும்.
கரோனரி ரத்தக் குழாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரும். இருதயத்தில் வலி கடுமையாக இருக்கும். தொடர்ந்து நீடிக்கும்.
நெஞ்சுவலியுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், படபடப்பு அதிகரிக்கும். பலகீனம், சோர்வு ஏற்படும், வேர்த்துக் கொட்டும், முகம் வெளிறிப் போகும். இருதயத்துடிப்பு சீராக இல்லாதது போல் தோன்றும்.
ஒரு சில சமயங்களில் வழக்கமான அறிகுறிகள் தோன்றாமல், வெறுமனே மூச்சு விடுவதில் சிரமம், வேர்த்துக் கொட்டுதல் அல்லது திடீரென சோர்வு ஏற்படுதல் மட்டும் தோன்றலாம்.
உடல் உழைப்பின் போது ஒருவருக்கு நெஞ்சில் அசவுகரியம் ஏற்பட்டால், உடனடியாக அவரது உடல் உழைப்பை நிறுத்தி விட்டு அப்படியே படுத்து ஓய்வெடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.
நைட்ரோ கிளிசரின் மாத்திரைகள் ஏற்கனவே அவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தால், உடனடியாக ஒரு மாத்திரையை அவரது நாக்குக்கு அடியில் வைத்து மெல்ல கரைய செய்ய வேண்டும். வலி தொடர்ந்தால், ஐந்து நிமிட இடைவெளியில் தொடர்ந்து இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை மாத்திரை கொடுக்கலாம்.
ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவு அடைப்பு இருக்கும். பாதிக்கப்பட்ட குழாயில் ரத்த ஓட்டமும் குறைவாகவே இருக்கும். ஆனால், ஸ்டென்ட் வைத்தோ அல்லது வைக்காமலோ பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்து கொண்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு ரத்த ஓட்டம் துடிப்பாக இருப்பதுடன், அடைப்பு கிட்டத்தட்ட முழுமையாக அகற்றப்பட்டிருக்கிறது.
ரத்தக் கட்டி கரைதல் சிகிச்சையுடன் ஒப்பிடும் போது, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் இறப்பு விகிதம் 60 சதவீதம் குறைவு.
இந்த சிகிச்சையில் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைவு.
ரத்தக் கட்டி கரைதல் சிகிச்சை முறையில் மட்டும் ஆறு மாத காலத்தில் ரத்தக் குழாயில் அடைப்பு போவதற்கான வாய்ப்புகள் 59 சதவீதம் மட்டுமே. ஆனால், பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் மூன்று முதல் ஆறு மாத காலத்தில் ரத்தக் குழாய் அடைப்பு நீங்குவதற்கான வாய்ப்புகள் 87 முதல் 91 சதவீதமாகும்.
ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்களிடம் ஆறு மாதத்துக்குள் ஆய்வு நடத்தியதில், 30 சதவீதத்தினருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அல்லது பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர்களில் ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே சர்ஜரி தேவைப்படுவது தெரிய வந்துள்ளது.
ஸ்டென்ட்டிரி வைத்து செய்யப்படும் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறையில் 95 சதவீத வெற்றி காணப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருக்கும் காலத்தில், மூன்று சதவீதத்துக்கும் குறைவாகவே இறப்பு நேரிட்டுள்ளது.
பிரைமரி ஆஞ்சியோ யாருக்கு தேவை?
இந்தியாவில் கிடைக்கக்கூடிய குறைவான ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எல்லா நோயாளிகளுக்கும் இந்த பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை கிடைப்பது கடினம்.
பின்வரும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மிக முக்கியம்.
* மோசமான மாரடைப்பு (ஆண்டிரியர் வால் இன்பார்க்ட், இன்பீரியர் வால் இன்பார்க்ட், ஆர்வி இன்பார்க்ட், ஈசிஜியில் எட்டு லீடுகளுக்கும் மேற்பட்ட மாற்றங்கள்).
* குறைவான ரத்த அழுத்தம் அல்லது நுரையீரல் பாதிப்பு (பல்மோனரி எடிமா போன்ற ஹ-மோடைனமிக் இன்ஸ்டபிளிட்டி மற்றும் கார்டியோ ஜெனிக் ஷாக்)
* ரத்தக் கட்டி கரைக்கும் மருந்துகள் எதிர் விளைவுகள் ஏற்படுத்தும் போது
* ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை பலன் அளிக்காத போது
Thanks: koodal.com