[இசை ஹராம் என்ற பெருவாரியான மார்க்கத் தீர்ப்புகளுக்கு மத்தியில் ‘அவசரப்பட்டு அத்தகைய முடிவுக்கு வருவது சரியல்ல அதை ஹராம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை‘ என்ற எதிர் தரப்பு வாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன.]
உலகெங்கும் வியாபித்துள்ள காற்றைப் போல இசையும் ஆகிவிட்டது. இசையின்றி பாடலில்லை என்ற நிலைமாறி இசையின்றி செய்தியுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கும் இசை, எதிலும் இசை என்று எல்லாவற்றிலும் இசை திணிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அது குறித்த ஆய்வுகளும் சர்ச்சைகளும் பல வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கின்றன.
இசை ஹராம் என்ற பெருவாரியான மார்க்கத் தீர்ப்புகளுக்கு மத்தியில் ‘அவசரப்பட்டு அத்தகைய முடிவுக்கு வருவது சரியல்ல அதை ஹராம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை’ என்ற எதிர் தரப்பு வாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இசை ஹராம் என்பதற்கு ஒரு சாராரால் குர்ஆனிலிருந்து மூன்று வசனங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அந்த மூன்று வசனங்களும் இசையை ஹராமாக்குகிறதா என்பதை முதலில் பார்ப்போம்.
முதல் ஆதாரம்:
அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய். உன்னுடைய குதிரைப்படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு. (அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள். இன்னும் (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு. ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்றும் (இறைவனாகிய) அவன் கூறினான் (அல் குர்ஆன் 17:64).
தாபியீன்களின் காலத்திற்குப் பின் வந்த குர்ஆன் விரிவுரையாளர்களாகிய முஜாஹித் என்பவரும், அத்தஹாக் என்பவரும் மேற்கண்ட வசனம் பற்றிக் கூறும் பொழுது, ஷைத்தானானவன் தன்னுடைய குரலைக் கொண்டு இசையாலும், பாடல்களாலும் மற்றும் வேடிக்கை விநோதங்களாலும் மனிதர்களை குதூகலிக்கச் செய்கின்றான் என விரிவுரை தந்துள்ளனர். (தஃப்ஸீர் இப்னு கதீர்)
எந்த ஒரு சப்தம் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதலை விட்டும் அவனைத் தடுக்கின்றதோ அத்தகைய சப்த ஒலிகளைப் பற்றித் தான் மேற்கொண்ட வசனம் குறிப்பிடுகின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (இப்னு கதீர்)
இந்த வசனம், அது எந்த வகையான, எத்தகைய சப்தம், எத்தகைய கூப்பாடு எனக் குறிப்பிட்டுக் கூறவில்லையாயினும், எந்த சப்தம் இறை அழைப்பாக இல்லையோ, எந்த சப்தம் இறைவனுக்கு கீழ்ப்படிய அழைப்பு விடுக்கும்படி இல்லையோ அத்தகைய சப்தத்தைத் தான் மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது என்று அத்தபரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தஃப்ஸீர் தப்ரி)
பதில்:
இந்த வசனத்தில் இசைப் பற்றி நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த வசனத்தின் கருத்தோட்டங்களை ஊன்றி கவனிக்கும் போது பொதுவாக எந்தக் காரியங்களெல்லாம் இறைச் சிந்தனையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்புகிறதோ அந்தக் காரியங்கள் அனைத்திலும் ஷெய்த்தானின் பங்கு தீவிரமாக இடம் பெறும் வாய்ப்புள்ளது என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. பிள்ளைகளும் செல்வங்களும் கூட இந்த வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதை எடுத்துக் காட்டி பிள்ளைகளும் செல்வங்களும் ஹராம் என்று யாரும் வாதிப்பதில்லை. அதே சமயம் அவைகளில் மூழ்கி இறைச் சிந்தனையை மறந்து விடக் கூடாது என்றே நாம் விளங்குவோம் பிறருக்கு விளக்குவோம்.
இதே அடிப்படையில் இசையையும் இங்கு சுட்டிக் காட்டப்படலாமே தவிர இந்த வசனம் இசையைத் தான் குறிக்கிறது என்று கூற முடியாது.
இரண்டாம் ஆதாரம்:
இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (இதனைப் பொருட்படுத்தாது) நீங்கள் சிரிக்கிறீர்கள்;. நீங்கள் அழுவதுமில்லை. (இதனைப் பற்றி) நீங்கள் அலட்சியமுடையோராகவும் இருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் இறைவனுக்கு சிரம்பணியுங்கள். (அவனையே) வணங்குங்கள். (அல் குர்ஆன் 53:59-60-61-62)
இங்கே நமது ஆதாரத்துக்குத் தேவையான வசனம் 61 ம் அதில் வரக் கூடிய ‘வஅன்தும் சாமிதூன்’ என்ற சொல் மட்டுமே. இதில் வந்துள்ள சொல்லாகிய (சாமிதூன்) என்ற சொல் மட்டுமே நமது ஆய்வுக்குரியது. இங்கு சாமிதூன் என்ற சொல்லுக்கு மூலச் சொல்லான சமதா என்பதற்கு, அரபி மொழி இலக்கண மற்றும் மொழியியலாளர்கள் பல்வேறு பொருள்களைத் தந்துள்ளார்கள். அதை வைத்துத் தான் குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்கள், வெவ்வேறான பல மொழி பெயர்ப்புக்களை, தமது மொழி பெயர்ப்புக் குர்ஆன் – களிலே பயன்படுத்தி இருக்கின்றார்கள்.
இங்கே, இமாம் அல் குர்தூபி அவர்கள் மொழி வழக்கிலே பல்வேறு விதமாகக் கையாளப்படும் பொருள்களைக் கீழே தருகின்றார்கள் :-
சாமிதூன் என்பதன் மூலச் சொல்லாகிய சமதா என்பது, ஒருவன் பெருமை கொண்டு தன் தலையை உயர்த்துதல் என்ற பொருளைத் தரக் கூடியது.
வினைச் சொல்லாக இருக்கும் பொழுது, பெயர்ச்சி சொல்லாகிய சமூத் என்ற சொல், ஓய்வாக இருத்தல் அல்லது பொழுதை வீணாகக் கழித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் அந்த வினையைப் புரிபவருக்கு (சாமித்) என்றாகி, யார் தன் பொழுதை வீணான முறையில் இசை இசைப்பதிலும் அல்லது இது போன்ற செயல்களிலும் விளையாட்டுத்தனமாத் திரிகின்றார்களோ அவர்களைக் குறிக்கும். அதே போல பெண்பாலில் இச் செயலைப் புரிபவளுக்கு அஸ்மிதினா (உனது பாடலைக் கொண்டு எங்களை உற்சாகப்படுத்து) என்ற பொருளைத் தரக் கூடியது.
இருப்பினும், சாமித் என்பது, ஒருவன் தற்பெருமை கொண்டு, கர்வம் கொண்டு தலையை உயர்த்தித் திரிதில் என்று மிகப் பழைய அரபி அகராதியாகிய அஸ்-ஸிஹாஹ் – ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமதா எனும் சொல்லுக்கு அசைவற்று இருத்தல், வீணாக சோம்பி இருத்தல் என்ற பொருளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அல் ஜமாயிலி அஹ்காமில் குர்ஆனில் அல்-மஹ்தவி என்பவரால், சமதா என்ற சொல்லுக்கு கீழ்க்காணும் முறையிலும் பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது, ஒருவனைக் கேலி மற்றும் வீணானவற்றைக் கொண்டு வழிபிறழச் செய்தல் ஆகும்.
இறுதியாக முப்ரித் என்பவர், சாமிதூன் என்பதற்கு , சாமிதூன் என்றால் காமிதூன் அதாவது அசைவற்றிருத்தல் அமைதி ஆகிய பொருளைக் குறிக்கும் என்கிறார்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது, சாமிதூன் என்பது எங்கெல்லாம் திருமறை ஓதப்படுகின்றதோ, அப்படி ஓதப்படும் திருமறை வசனங்களை பிறர் செவியேற்காத வண்ணம் ஆடியும், பாடியும் கூச்சலிட்டு விளையாடியும் கெடுதல் செய்வார்களே முஷ்ரிக்குகள், அவர்களது இந்தப் பழக்கத்தைத் தான் குறிக்கும் என்கிறார்கள். (தப்ஸீர் குர்தூபி)
மேற்கண்ட அர்த்தம் தான் எமன் மக்களாலும் கையாளப்படுகின்றது.
மேலும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இதற்கு இரண்டாவதாக ஒரு பொருளையும் தருகின்றார்கள் :-
அதாவது, தமது வேலையை (பிரச்னைகளை) எளிதாக்கிக் கொள்வதற்காக விளையாட்டிலும், பொழுது போக்கிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களைக் குறிக்கும் என்று கூறியுள்ளார்கள். இதே கருத்தை தாபியீன்களாகிய இக்ரிமா அவர்களும் மற்றும் அத்தஹாக் அவர்களும் ஆமோதித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மூன்றாவதாக இந்த கீழ்க்காணும் விளக்கத்தையும் தந்துள்ளார்கள். ஆதாவது, ஒருவன் தற்பெருமை கொண்டு தலையைத் தூக்கித் திரிவதைக் குறிக்கும்.
கதாதா அவர்கள், சாமிதூன் என்பது கவனமின்மையைக் குறிக்கும் என்றும், இது முஷ்ரிக்கீன்களின் பழக்கமாகும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், முஜாஹித் என்பவர் கடுமையான கோபம் அல்லது ஆத்திரம் என்றும் பொருள்படும் எனக் கூறியுள்ளார்.
ஆக, சாமிதூன் என்ற சொல்லானது இரைந்து பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், தமது நேரங்களை வீணான வகையில் கழித்துத், தற்பெருமை கொண்டு தலையை உயர்த்திக் கொண்டு திரிபவர்களையும், அல்லது இறைமறையையும் அதன் வசனங்களையும் பிறர் காதில் விழா வண்ணம் இறை அழைப்பைத் தடை செய்யும் நோக்குடன் மூர்க்கத்தனமாக, கோபங் கொண்டு, ஆவேசத்துடன் திரிபவர்களையும் குறிக்கக் கூடிய பொருளைத் தெளிவான முறையில் தந்து நிற்கிறது. மேற்கண்ட செயல்முறையானது இஸ்லாத்திற்கு விரோதமான, மாறுபாடான அதன் மேல் அவர்களது கவனமின்மையையும் குறிக்கக் கூடிய ஒரு கருத்துச் செறிவைத் தந்து நிற்கிறது.
பதில்:
சாமிதூன் என்ற சொல்லுக்கு, கருத்து வழக்கில் பலவாறான பொருள்கள் கூறப்பட்டாலும், இசையைத் தடை செய்தவற்குண்டான நேரடியான பொருளைத் தந்து விடவில்லை. எனவே, இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்து நாம் இசைக்கு எதிரான தடைக்கான ஆதாரமாக முன் வைக்க முடியாது.
மொழி செரிவு மிக்கவர்கள் சில பதங்களுக்கு பற்பல அர்த்தங்கள் கொடுத்தாலும் ஒரு வசனத்துடைய மேல் – கீழ் தொடர்ச்சி அந்த வசனம் எந்த அர்த்தத்தில் வந்துள்ளது என்பதை புரிந்துக் கொள்வதற்கு பெரும் பங்காற்றும். எனவே இந்த வசனத் தொடர்களைப் பார்ப்போம்.
வரவேண்டிய நேரம் நெருங்கி விட்டது (57) அல்லாஹ்வையன்றி அதை வெளிபடுத்துபவர் எவருமில்லை (58) இந்த செய்திப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் (59) உங்களுக்கு அழுகை வருவதில்லை சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள் (60) அலட்சியப்படுத்துகிறீர்கள் (61) இறைவனுக்கே சிரம் பணிந்து வணங்குங்கள் (62)
இந்த வசனத் தொடர்கள் பளிச் சென்று மறுமை நிகழ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கின்றன. மறுமை உண்டா என்று கேலியாக ஆச்சரியப்பட்டு, அது குறித்து சிந்தித்து உள்ளங்களைப் பக்குவப்படுத்தாமல் சிரித்து கும்மாலமடித்துக் கொண்டு, மறுமை சிந்தனையையே அலட்சியப்படுத்தி விட்டு வாழும் மக்களை சுட்டிக்காட்டி, இறைவனை மறவாதீர்கள் அவனையே வணங்குங்கள் என்ற கருத்தை முன் வைக்கிறது. இதில் இசைக்கு எதிரான தடை எங்கும் தென்படவில்லை.
இசைக் கலக்காத அலட்சியங்கள், சிரிப்பு கும்மாலங்கள் இவைகளை இந்த வசனம் அங்கீகரிக்கவில்லை. இசைக்கும் போதோ அல்லது இசையாலோ ஏற்படும் உல்லாச உணர்வுகள் இசை இல்லாத பற்பல நேரங்களிலும் – நிகழ்வுகளிலும் ஏற்படத்தான் செய்யும். மறுமை சிந்தனையை மறக்கடிக்கும் அல்லது நினைவூட்டப்பட்டாலும் அலட்சியப்படுத்தும் ஒரு மனஇயலைத் தான் இந்த வசனம் சுட்டிக் காட்டிக் கண்டிக்கிறதே தவிர இசையை ஹராம் என்று சொல்லவில்லை. ‘அன்தும் சாமிதூன்’ ‘நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறீர்கள்’ என்பதில் ‘சாமிதூன்’ என்ற பதம் மறுமையை அலட்சியப்படுத்தும் எந்த நபரையும், அவர் செய்யும் எத்தகைய காரியத்தையும் சுட்டிக் காட்டக் கூடிய ஒரு பதமாகும்.
மறுமை சிந்தனையுள்ளவர்கள் சிரிக்கவேக் கூடாது. அழுதுக் கொண்டே இருக்க வேண்டும். உலகப் பற்றிலிருந்து விடுபட்டு மௌனிகளாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆசாபாசங்கள் மனக் கிளர்ச்சிகள் அறவேக் கூடாது என்றெல்லாம் இந்த வசனம் சொல்வதாக புரிந்துக் கொள்ளக் கூடாது. மனித இயல்பிலிருந்து மாறுபடாமல் அனுமதிக்கப்பட்ட விதத்தில் உலகை அனுபவிப்பதற்கான எந்த தடையும் இந்த வசனத்தில் இல்லை. நாம் செய்யும் எந்தக் காரியமும் மறுமைப் பற்றிய சிந்தனையையும் அச்சத்தையும் நம் மனதிலிருந்து எடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையையே முன் வைக்கிறது. எனவே இசை தடைசெய்யப்பட்டது தான் என்பதற்கு இந்த வசனத்தைப் போதிய ஆதாரமாக முன் வைக்க முடியாது.
மூன்றாம் ஆதாரம்:
இறைவனின் பாதையை கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை திசை திருப்புவதற்காக அறிவின்றி வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோரும் மனிதர்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இழிவு படுத்தும் வேதனையுண்டு (அல் குர்ஆன் 31:6)
மூலத்திலுள்ள சொற்றொடர் ‘லஹ்வல் ஹதீஸ்’ ஆகும். இது மனிதனை முழுக்க முழுக்க தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு பிறவற்றை மறக்கச் செய்து விடும் விஷயம் எனப் பொருள்படும். குறைஷிகளின் அனைத்து எதிர் முயற்சிகளின் இடையேயும் நபி (ஸல்) அவர்களுடைய அழைப்புப் பணி தடைபடாமல் அதன் விளைவுகள் தொடர்ந்த போது, குறைஷிகள் ஈரானிலிருந்தும் மற்றும் இஸ்ஃபந்தியாரின் கதைகளை வரவழைத்து கதை சொல்லும் படலத்தைத் தொடங்கினார்கள். பாட்டுப்பாடும் அடிமைப் பெண்களையும் ஏற்பாடு செய்தார்கள். மக்கள் இவற்றில் மூழ்கி நபியவர்களின் பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டும் என்பதற்காக! (இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட், குர்ஆன் தமிழாக்கம், விளக்கவுரை பழைய பதிப்பு குறிப்பு 2. சூரா லுக்மான:06 வது வசனம்)
மேற்கண்ட வசனமானது, யார் ஏக இறையோனாகிய அல்லாஹ்வின் தூதைச் செவிமடுக்காமல், தங்களை வீண் கேளிக்கைகளில் மன மயக்கத்தை ஏற்படுத்துபவைகளில் ஈடுபடுத்திக் கொண்டும், நேரான பாதையினின்றும் விலகி தூரமான தீய வழிகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார்களே அவர்களைப் பற்றித் தான் இறைவன் மேற்கண்ட வசனம் மூலம் விளக்குகின்றான்.
மேற்கண்ட நமது ஆய்வுக்கு உட்பட்ட சொல்லாகிய ‘லஹ்வல் ஹதீஸ்’ பற்றி இப்னு ஜரீன் அத்தபரி அவர்கள் தனது ஜாமிஉல் பயானில் குறிப்பிடும் போது, மேற்கண்ட சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளார்கள். அந்த சொல் பற்றிய அவர்களது விளக்கம் மூன்று வித பிரிவுகளில் நின்று அறிவுரை பகர்கின்றது.
பாடுவதும் அதைக் கேட்பதும்
பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஆண், பெண்ணை விலைக்கு வாங்குதல்
வீணாகப் பொழுதைப் போக்குவதற்காக (இசை)க் கருவிகளை வாங்குதல்.
மேற்கண்ட மூன்று விளக்கங்களும் குறிப்பில் எதை உணர்த்துகின்றதென்றால், வீணாக, வெறுக்கத்தக்கவைகளானவற்றையும், அதற்கான சாதனங்களையும் விலைக்கு வாங்கி, தங்களது பொருளையும், நேரத்தையும் அதில் வீணடித்தல்| குறிப்பாக இசையிலும், பாடலிலும் ஈடுபடுதலைத் தான் குறிக்கின்றது.
மேற்கண்ட விளக்கத்தை ஒட்டியே நபித் தோழர்களாகிய, இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர்களது கருத்தும் அமைந்திருந்தது. மேற்கண்ட சொல்பற்றி இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட பொழுது, எவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது பாடுவதையே குறிக்கும் என்றார்கள். மேலும், மேற்கண்ட தன்னுடைய நிலையை உறுதிப்படுத்துவதற்காக மூன்று முறை அதன் மேல் உறுதியிட்டுக் கூறி இருக்கின்றார்கள். (பைஹகி – இப்னு முன்திர்)இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் கூறியதாவது, பாடுவதும் மற்றும் அதைப் போன்றதையும் குறிக்கும் என்றார்கள். (ஜாமிவுல் பயான்)
மேற்கண்ட வசனங்களிலிருந்து பாடுவதையும் இசைப்பதையும் தான் அந்த வசனம் சுட்டிக் காட்டுகின்றன என்பது விளங்குகிறது.
மேலும் இரண்டாது நிலை விளக்கமாக கீழ்க்கண்ட விளக்கவுரை அமைந்துள்ளது :
ஏந்த ஒரு உரையாடல் அல்லது பேச்சு இறை நிராகரிப்பின் பக்கம் மக்களை அழைக்கின்றதோ அல்லது இறை நிராகரிப்புக் கொள்கையைப் பெற்றிருக்கிறதோ அவற்றைக் குறிக்கக் கூடியது ‘லஹ்வல் ஹதீஸ்’ என்ற சொல் என நபித் தோழர்களுக்கு அடுத்த திருமறை விரிவுரையாளர்களான, அத்தஹாக் அப்துர் ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லம் ஆகியோர் கூறி இருக்கின்றார்கள். (இப்னு கதீர் – தப்ரி)
மூன்றாவது நிலை விளக்கம் :
யார் தங்களது கெட்ட பேச்சுக்கள் அல்லது தவறான பேச்சுக்கள் மற்றும் செயல் மூலம் மக்களை அல்லாஹ்வின் வழியினின்றும் அவனை வணங்குவதனின்றும், அவனை நினைவு கூர்வதிலிருந்தும் மக்களை வழி பிறழச் செய்து கொண்டிருக்கின்றார்களோ, அத்தகைய இயல்புகளைப் பெற்றிருப்பவரை இந்த ‘லஹ்வல் ஹதீஸ்’ எனும் சொல் குறிக்கும்.
உதாரணமாக ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவதாக, இமாம் ஆலாஸி அவர்கள் கீழ்க்கண்ட கூற்றைக் கூறுகின்றார்கள். யார் தங்களது இரவு நேரங்களை வீண் பேச்சுக்களிலும், கேளிக்கைகளிலும், சிரிப்பு மூட்டும் செயல்களிலும், கற்பனைக் கதை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும் இன்னும் இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு ஒருவனை அல்லாஹ்வை வணங்குவதினின்றும் அவனை நினைவு கூர்வதிலும் இருந்து மேற்கண்ட மற்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடுமாறு செய்கின்றானோ அத்தகைய அனைத்து செயல்களையும் அந்தச் சொல் குறிப்பிடுகின்றது. (ரூஹூல் மஆனி)
இமாம் இப்னு ஜைத் அவர்கள் மேற்கண்ட வசனத்தைக் குறிப்பிட்டு, இந்த வசனம் இறை நிராகரிப்பாளர்களையே, அவர்களின் தன்மைகளையே நோக்கி உரையாடுகின்றது என்பதை நீங்கள் அறியவில்லையா!? எனக் கூறி அதைக் கீழ்க்காணும் வசனம் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.
சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகின்றார்கள் : இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்|இதன் மூலம் நீங்கள் வென்று விடலாம். (41:26)
மேற்கண்ட வசனம், குர்ஆனிய வசனம் ஓதப்படும் போது, அதை செவியேற்கா வண்ணம் தங்களது கூச்சல், கூப்பாடுகள் மூலம், குர்ஆனைச் செவியுறுவதனின்றும் பிறரை வழி கெடுக்கும் இணை வைப்பாளர்களைத் தான் குறிக்கிறது. ஏனவே, இந்த வசனம் முஸ்லிம்களைக் குறிப்பதல்ல என்கிறார் இமாம் ஜைத் என்பவர். (தப்ரி – குர்தூபி)
அத்தபரி அவர்கள் இது பற்றிக் குறிப்பிடும் போது, மேற்கண்ட ‘லஹ்வல் ஹதீஸ்’ சொல்லின் சரியான அர்த்தம் எது எனில், எந்த ஒரு பேச்சு அல்லாஹ்வின் நினைவினின்றும் ஒருவனைத் தடுக்கின்றதோ, அத்தகைய பேச்சு இறைவனாலும், அவனது தூதர் முஹம்மது (ஸல்)அவர்களாலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இதில் சில பேச்சுக்களுக்கு விதி விலக்கு உண்டு.
மேற்கண்ட அத்தபரி அவர்களின் கருத்துக்களிலிருந்து ஒரு சரியான தடைக்கு ஆதாரமான இல்லாமல், பாடலையும், இணை வைப்பையும் பொதுவான குறிப்பில் உணர்த்தி நிற்கின்றது.
மேற்கண்ட வசனம் இசைக்கும், பாடலுக்கும் எதிரான, பல்வேறு மொழிபெயர்ப்புக்களினுடனே, தற்செயல் விளக்கமாகத் தான் அதற்கான தடையைப் பெற்றுள்ளத தவிர, ஈமானிய நெஞ்சம் முழுமையான ஆதாரத்தைக் குர்ஆனின் ஒளியில் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. ஏனெனில், நாம் இன்னும் நேரடியான தடையைக் கண்டு பிடிக்கவில்லை. ஒரு மறைமுக தற்செயல் விளக்கத்தைத் தான் பெற்றுள்ளோம்.எனவே, மேலும் நாம் தெளிவு பெற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளை நாட வேண்டிய அவசிய அவசரத்தில் உள்ளோம்.
பதில்:
‘சாமிதூன்’ என்றப் பதத்தை எப்படி இசைக்கான நேரடித் தடையாக எடுத்துக் காட்ட முடியவில்லையோ அதே போன்று தான் ‘லஹ்வல் ஹதீஸ்’ என்ற பதமும். இதையும் இசைக்கான நேரடித் தடையாக எடுத்துக் காட்ட முடியாது. ஏனெனில் இசைக்கு எதிரான கருத்தில் உள்ள அனேக பெரும் அறிஞர்கள் கூட இந்த பதம் நேரடியாக இசையைத் தான் குறிக்கிறது என்று எங்கும் குறிப்பிடவில்லை. பற்பல அர்த்தங்களை முன் வைக்கும் போது இசையின் தாக்கமும் அதில் அடங்குவதால் அதையும் இணைத்துக் கூறியுள்ளார்களேத் தவிர இசையைத் தடைசெய்வதுதான் இந்த வசனத்தின் நோக்கம் என்ற கருத்தை யாரும் முன் வைக்கவில்லை என்பதை மேற்கண்ட அறிஞர்களின் கருத்துக்களை மீண்டும் ஒரு முறை படிக்கும் போது புரிந்துக் கொள்ளலாம்.
வீணாணவற்றை விட்டு விலகி இருப்பது இறை நம்பிக்கையாளர்களின் பண்பாக குர்ஆனின் பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ‘வீணாணவை என்பது இசையாகவோ – பாடலாகவோ – கதையாகவோ – விளையாட்டாகவோ – குடும்பமாகவோ – நண்பர்களாகவோ – செல்வமாகவோ – தொழிலாகவோ – இன்னப் பிற காரியங்களாகவோ இருக்கலாம்.
இறைவனை நினைவுக் கூறும் விதத்தில் இசைக் கலந்திருந்தால் அது ஹராமா, அல்லது இறை நம்பிக்கையும் மறுமை சிந்தனையும் நிறைந்த ஒருவன் இசைக் கேட்டால் அவன் ஹராத்தில் விழுந்தவனாகி விடுவானா என்பது பற்றியெல்லாம் எந்த அறிஞரும் கருத்தை மேற்கண்ட வசனங்களை விளக்கும் போது முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இசைக்கு எதிரான கருத்துள்ள அனைவருமே ‘அது இறைவனை மறக்க செய்து விடும்’ என்ற அச்சத்தையே முன்னிலைப் படுத்தியுள்ளார்கள். எல்லாவித இசைக்கும் இது பொருந்துமா என்ற சிந்தனைக்குள் யாரும் நுழையவில்லை.
உதாரணமாக, (உதாரணத்திற்காகத்தான்)
‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை.’
‘அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும் அந்த வல்லோனை நினைத்திருந்தால்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்.’
‘அருள் மழைப் பொழிவாய் ரஹ்மானே… ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே.. ‘
போன்ற பாடல்களில் இசைக் கலந்துள்ளது. இதை கேட்பதால் கேட்கும் இறை நம்பிக்கையாளன் இறைவனை மறந்து அல்லது இறைவனை கேலி கூத்தாக எடுத்துக் கொண்டு உலகியலில் மூழ்கி விடுவானா..?
தொலைக் காட்சியில் – வானொலியில் செய்தி கேட்கும் – பார்க்கும் ஒருவனுக்கு இசை என்பதை தவிர்க்கவே முடியாது என்பதை ஆரம்பக் கால அறிஞர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் போயிருந்தாலும் இன்றைக்கு அனைவரும் அறிவர். இந் நிலையில் செய்தியை கேட்கும் – பார்க்கும் ஒருவன் அத்தகைய இசையால் மதியிழந்து – இறைவனை மறந்து போய்விட வாய்ப்புள்ளது என்று மேற்கண்ட வசனங்களை ஆதாரம் காட்டி கருத்துக்களை யாராவது வெளியிட முடியுமா..? போன்ற கேள்விகள் இங்கு பிறக்கத்தான் செய்கின்றன.
இறைவனை மறக்கடிக்கும் எல்லாக் காரியங்களுக்கும் அந்த வசனங்களைப் பொதுவாக பொருத்திக் காட்டாமல் இசைக்கு மட்டும் பொருத்திக் காட்டுவத சரியாகப்படவில்லை. ஏனெனில் அந்த வசனங்களில் நேரடியாக அந்த கருத்துக்கள் இடம் பெற்றிருக்கவில்லை.
-ansar email: hssnansar@yahoo.com Location: srilanka
http://www.idhuthanislam.com
இதன் இரண்டாம் பகுதியையும் பார்க்கவும்