மனநிலை பாதிப்பால் வயிற்றுப்போக்கு!
எஸ்.எம். பதூர் முஹ்யித்தீன்
[ ஒரு இன்பத்தை அனுபவித்து கொண்டு, அந்த இன்பம் கிடைக்காவிட்டால் அதையே நினைத்து நினைத்து மூழ்குகிற போது எதிர்மறையான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.]
சில நாட்களுக்கு முன்பு 20 வயதுள்ள ஆண்மகனை அழைத்துக் கொண்டு அவனுடைய அம்மா என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார். நல்ல திடமான தேகம், கல்லூரியில் படிப்பு, விளையாட்டு வீரர்.
பையனுக்கு என்னம்மா? 15 நாளா இவனுக்கு வயிற்றுப் போக்கு இருக்குது. எல்லா வைத்தியமும் செய்தாச்சு. வயிற்றுப் போக்கு நிக்கமாட்டேங்குது டாக்டர்.
வயிற்றுப் போக்கு போகக்கூடாது ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறணும். குளுக்கோஸ் ஏத்தனும். ஒரு சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணுமேம்மா!
“இந்தாங்க டாக்டர், ஒரு பெரிய மருத்துவமனைக்கு போய் அட்மிட் பண்ணி குளுக்கோஸ் ஏத்தி எல்லா டெஸ்ட்டும் செய்தாச்சு, விவரம் எல்லாம் இந்த பைலில் இருக்குது வாங்கிப் பார்த்தேன், அனைத்தும் இருந்தன.”
“இப்ப ஒரு நாளைக்கு எத்தனை தடவை போறாறு?”
“மூணு அல்லது நாலு தடவை”
“உடம்பு இதனால வீக்கா இருக்கா?”
“அதான் இல்ல டாக்டர் நல்லா சாப்பிடுறான், நல்லா விளையாடுறான், டி.வி.பார்க்கிறான், ஆனால் வயிற்றுப் போக்கு மட்டும் நிக்க மாட்டேங்குது”.
“வீட்டுல யார் யார் இருக்கா?”
“நான் என் புருஷன் இவன், என் தங்கச்சி பொண்ணு ஒன்று இங்கேயே தங்கி படிக்குது”
“தங்கச்சி பொண்ணை நல்ல பார்த்துக்குவானா?”
“ஐயோ ஏன் டாக்டர் அவள் இவனுக்கு உசிரு, கண்ணும் கருத்துமா தங்கத்துல வைச்சு தாங்குவான் டாக்டர்”
மற்ற விசாரிப்புகள் எல்லாம் விசாரித்து விட்டு,
“பையன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும், நீங்க கொஞ்சம் வெளியில் உட்காறீங்களா?”
“டாக்டர் அவனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது, கண்ணும் கருத்துமா நாங்க பார்த்துக்கிறோம்”
“ஒரு பத்து நிமிஷம் மட்டும் விசாரித்து விட்டு உங்களை கூப்பிடுகிறேன், கொஞ்சம் வெளியில போங்க”
தாய் ஏதோ ஒரு அச்சத்தோடுதான் அவனை பலமுறை பார்த்து பின் சென்றார்கள்.
“தம்பி பயப்படாதீங்க. ஒரு சில கேள்வி கேட்கணும், அம்மா கூட இருந்தா நல்லா இருக்காது, அதனால்தான் வெளியில போகச் சொன்னேன், உங்கக்கிட்ட என்ன நல்ல பழக்கம், கெட்டப்பழக்கம் இருக்கும்னு எல்லாத்தையும் சொல்லுங்க, அம்மாக்கிட்ட எதுவும் சொல்லமாட்டேன்”
“சார் என்கிட்ட எந்த ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாது சார், நான் அது மாதிரி பையன் இல்லை, ரொம்ப நல்லவன் சார்”
“உன்னை யாரு இப்ப கெட்டப் பையனு சொன்னா, சரி நீ யாரையாவது லவ் பண்றீயா, தயங்காம சொல்லு, அம்மாக்கிட்ட சொல்லமாட்டேன்?”
“ஐயோ அது மாதிரி எதுவும் கிடையாது சார் அதுக்கு நேரமும் கிடையாது சார்”
“சரி உன்னுடைய பொழுது போக்கு என்ன?”
“காலையில நடைப்பயிற்சி, அப்புறம் கல்லூரி, மாலையில் தங்கைக்கூட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருப்பேன், ஏதாவது டவுட் கேட்டா சொல்லிக் கொடுப்பேன், அப்புறம் டி.வி. இரவு 11 மணிக்கு தூங்கப் போய்யிடுவேன்”
“பொண்ணு இப்ப உங்க வீட்டுல இருக்காங்களா?”
“இல்லை டாக்டர், அவங்க அம்மா வந்து ஊருக்கே அழைச்சுகிட்டு போய்ட்டாங்க, இனிமேல் அங்கதான் படிக்கப் போறாளாம்” விடை கிடைத்து விட்டது போல!
“நீ அந்த பொண்ணுகூட ஜாலியா சில்மிஷம் பண்ணியிருக்குறாயா” “இல்ல இல்ல பண்ணியிருக்கிறேனு நான் அடிச்சு சொல்லுறேன். நீ என்ன சொல்லுறே?”
“ஐயோ டாக்டர் அதெல்லாம் ஒன்னும் கிடையாது என்று அழுத அவனை 15 நிமிடங்கள் தொடர்ந்து பேசியதில் கடைசியில் ஒப்புக் கொண்டான்.”
எங்க அம்மாவுக்கு இந்த விஷயத்தை சொல்லிடாதீங்க டாக்டர் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டான்.
அவனிடம் அன்பாக பேசி தவற்றை உணர்ந்து கொண்டதால் புத்திமதி சொல்லி தாயுடன் அனுப்பிவைத்தேன்.
இது ஒரு வகையான வயிற்றுப்போக்கு, இதனை மனநல மருத்துவத்தில்தான் குணமாக்க முடியும்.
அதாவது ஒரு இன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறான், அந்த இன்பம் அவனுக்கு கிடைக்காவிட்டால் அதையே நினைத்து நினைத்து மூழ்குகிற போது எதிர்மறையான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
அதன் விளைவுதான் வயிற்றுப் போக்கு, இதற்கு சரியான மனநலமும், மருந்தும் கலந்து கொடுத்தால் ஒரிரு வாரங்களிலேயே சரியாகிவிடும்.