Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உறவினர்கள் உருப்பட…..!

Posted on March 3, 2009 by admin

உறவினர்கள் உருப்பட…..!

     அபூஃபெளஸிமா    

“நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” (அல்-குர்ஆன் 26:214)

“என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி(வசனம்) கிடைத்தாலும் அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி)

அல்லாஹ், தான் மனிதவினத்திற்காக அனுப்பிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மேற்கூறிய வசனத்தை அருளியதிலிருந்து அவன் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினர்கள் மீது விசேடமான அன்பை வைத்திருந்தான் என்று சிலருக்கு எண்ணத் தோன்றும்.

அனைத்துப் படைப்பின் மீதும் ஆளுமையுள்ள அல்லாஹ் அப்படி ஏன் விசேடப்படுத்தினான் என்பதை முதலில் சிறிது அறிதல் நல்லதென்று எண்ணுகிறேன். அந்தக் காலத்தில் அரபியர் மத்தியிலேயிருந்த குலப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகிய விதிமுறைகள் அதியுன்னதமாகப் பேணப்பட்டு அரபகம் முழுக்க வேரூன்றி இருந்தன. தத்தமது குடும்பங்களின், உறவினர்களின் ஒட்டுமொத்தமான கௌரவத்தைக் கொண்டு முழு அரபகத்திலும் அவர்களின் தனித்தன்மையைப் பறைசாற்றி தாம் மற்றவர்களை விடச் சிறந்தவர்கள் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

அந்த கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு அரபியும் விதிவிலக்கின்றி முற்பட்ட அந்தக் காலத்தில்தான் கஃபாவின் பரிபாலனத்தை தன்னகத்தே வைத்திருந்த அப்துல் முத்தலிபின் குடும்பத்திலே பிறந்த முஹம்மத் என்ற பெயர் பெற்றவரை அல்லாஹ் தனது இறுதித் தூதராகத் தேர்ந்தெடுத்தான்.

உறவினர் ஒருவர் கௌரவிக்கப்பட்டால் முழுக் குடும்பமும், அவர்தம் குலமும் கோத்திரமும் கௌரவிக்கப் பட்டதாகக் கருதினார்கள். உறவினர் ஒருவர் அகௌரவத்துக்கு ஆளானால் அப்போதும் அவர்கள் பார்வையில் அதே அளவுகோள்தான்.

அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தான் அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னபோது அந்தக் குறைஷிகளில் பலர் எதிர்த்தார்கள். சிலர் அவரின் அந்தப் பிரகடனத்தை ஏற்று அவரின் வழிகாட்டலின்படி நடந்தார்கள். மற்றும் சிலர் அவரின் கொள்கைகளை ஏற்காவிட்டாலும் அவருக்கு எதிர்ப்பாளர்கள் மூலம் ஆபத்தேற்படாமல் பார்த்துக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நம்பகத்தன்மையும் அவர்கள் சிறுவயது முதலே வாழ்ந்த அந்த மக்காவில் அவர்கள் காட்டிய முன்மாதிரியான வாழ்க்கையும் அதிகமான உறவினர்கள் மத்தியிலே நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏகத்துவப் பிரசாரம் செய்தபோது கொதித்தெழுந்தவர்கள் ஆரம்பத்தில் சிறுசிறு உபத்திரவங்களோடு நிறுத்திக் கொண்டதற்குக் காரணம் அவர்கள் அப்துல் முத்தலிபின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் தான்.

பிற்காலத்தில் ஏகத்துவப் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டு இஸ்லாத்தின் பால் அதிகமான மக்கள் ஈர்க்கப்பட்டார்கள். இதைப் பார்த்துப் பொறுக்காத ஏகத்துவ விரோதிகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தில் உள்ள தலைவர்கள் சிலரின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர்தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்யவும் திட்டம் தீட்டினார்கள்.

அவர்கள் மத்தியிலே இருந்த வரட்டு கௌரவம் அவர்களின் கண்களை மூடிவிட்டிருந்தது. எந்தச் சமூகமும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை முன்னிறுத்தி அவனைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிப்பதற்கு ஒரு தூதர் அனுப்பப்படாமல் அழிக்கப்படவில்லை என்று அல்லாஹ் அல்-குர்ஆனிலே பலவிடங்களில் சொல்லிக் காட்டியிருக்கிறான்.

பொதுவாகவே, மனித குலத்திற்கு அவனுடைய தனித்தன்மையைப் பற்றி சொல்லப்பட்டு அவனுக்கே கீழ்ப்படியும்படி அச்சமூட்டி எச்சரிக்கை செய்த எல்லா தூதர்களுக்கும் அவரவர் குடும்பத்திற்கு அந்த நற்செய்தியைச் சொல்லும்படி அல்லாஹ் கட்டளையிடாமலில்லை என்பதில் தர்க்கம் செய்ய முடியாது. அந்த அடிப்படையிலே அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினர்களுக்கும் அந்த நற்செய்தியை ஏற்று நடக்கும்படி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாறு அல்லாஹ் பணிக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மனிதன் தானே. ஆகவே, அல்லாஹ்வே அவர்களின் உறவினர்களையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி அவர்களை ஏவுகிறான். பின்னால் ஒருநாள் அந்த உறவினர்கள் மனிதவினத்திற்கு ஒரு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குற்றம் சாட்டக்கூடாதே என்பதற்காகக் கூட இருக்கலாம். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இந்தக் கட்டளையை எவ்வளவு அழகாக அந்த அகிலத்திற்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உறவினர்களுக்கு வைக்கிறார்கள்!

தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் பின் அவ்வாமின் தாயாரே! முஹம்மதின் மகளான பாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித்தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.) (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி)

அவர்கள் கோத்திரத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத் தலைவர்களின் பெயர்களைச் சொல்லியே அவர்களுக்கு அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

இப்படித் தம் உறவினர்களை அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்று அவனது கட்டளைகளை அமல் நடத்தும்படி ஏவினார்கள். அப்படி அவன் கட்டளைகளை ஏற்று நடப்பதற்காக அவன் அவனுடைய அருட்கொடைகளை அதற்குப் பகரமாகத் தருவான் என்பதை ‘விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்’ என்ற பதப் பிரயோகத்தின் மூலம் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

அது மட்டுமா? இந்த உறவினர்களுக்கான அறைகூவல் மூலம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றுமொரு விடயத்தை மிகத் தெளிவாகவும் உருக்கமாகவும் சொல்லிக் காட்டுகிற அழகைச் சிந்தித்துப் பார்க்க ஒவ்வொரு முஸ்லிமும் கடமைப் பட்டிருக்கிறான்.

அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்வதன் மூலமே நீங்கள் அல்லாஹ்விடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ளத் தகுதியடைவீர்கள் என்பதை, ‘நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித்தர முடியாது,’ என்று திட்டவட்டமாக, பகிரங்கமாகச் சொல்லிக் காட்டுகிறார்கள். ‘என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்,’ என்ற செய்தியை அவர்களுடைய அத்தையான ஸுபைர் பின் அவ்வாமின் தாயாருக்கும் அவர்களின் மகளான பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

அதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் அவன் யாருக்கு உறவுக்காரனாக இருந்தாலும் தனது ஈருலக வெற்றியை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் அவன் அல்லாஹ்விடம் மட்டுமே தன்னைப் பரிபூரணமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை ஆணித்தரமாகவும் உறுதிப்பாட்டுடனும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்த அறவுரையின் உள்ளார்ந்த தத்துவமானது, அல்லாஹ்விடம் வாங்கிக் கொள்ளக் கூடியதே பெரும் பாக்கியமுள்ளதாகவிருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதை அந்த மக்கள் உணர்ந்தார்கள்,; இல்லாமலில்லை. காலப்போக்கில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உறவினராக இருந்து விடுத்த அந்த அழைப்பை ஏற்றார்கள்.

எந்தவொரு உறவினரும் பின்னால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறை கூற முடியாமல் மிகத் தெளிவாகவும் பகிரங்கமாகவும் அல்லாஹ்வின் பக்கம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள். கண்ணை இமை காப்பதுபோலத் தன்னை சிறுவயது முதலே சிறப்புற வளர்த்து தனது கஷ்ட துன்பங்களில் பங்கேற்ற தனது சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு அவருடைய உயிர் பிரியும் தறுவாயில் கூட அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்ட உருக்கமான உணர்ச்சிகரமான சம்பவம் யாவரும் அறிந்ததே!

இந்த அழைப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு அழகிய முன்மாதிரியாகும். இன்று முஸ்லிம்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளிலும் அந்நிய மதத்தவர்களின் பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பவர்கள் ஏராளம். இணை வைப்பில் பகிரங்கமாக ஈடுபட்டிருப்பவர்களைக் காண்கிறோம். மறைமுகமான இணை வைப்பில் அறிந்து கொண்டே மூழ்கியிருப்பவர்களைப் பார்க்கிறோம். அறியாமை காரணமாக அல்லாஹ்வின் ஏகத்துவத்தைப் புறக்கணித்து செம்மறி ஆடுகளாக இழுத்த பக்கம் இழுபட்டுச் செல்லும் கூட்டம் நம்மத்தியிலே இருப்பதையும் மறுக்க முடியாத அளவிற்கு அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதையும் அவதானிக்கிறோம்.

எந்த அந்தஸ்தில் இருக்கக்கூடிய மனிதனும் முக்கியமாக இப்படிப்பட்ட விடயங்களிலே தம் உறவினர்களை நோக்கி அவ்விடயங்களைச் சொல்வதிலிருந்து தவறிவிடுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

மிகச் சிலாகித்துப் பேசப்படுகிற கல்விமான்கள், சமூகத் தொண்டர்கள், நற்பணியாளர்கள் ஆகியோரும் தத்தம் களத்திலே தமது உறவினர்களை மறந்துவிடுவதைக் காணக் கூடியதாக உள்ளது, அல்லது உறவினர்கள்தானே அவர்களுக்கு மெதுவாகச் சொல்லிக் கொள்ளலாம், அல்லது அவர்கள் தம்மீது வைத்திருக்கக் கூடிய நல்லபிப்பிராயம் அவர்களைத் சொல்லாமலேயே அக்கொள்கையின் பால் ஆக்கிவிடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

இங்கு நான் கோடிட்டுக் காட்ட விரும்பும் மற்றுமொரு விடயம்தான், வழிகேட்டிலிருந்து மீண்டு ஏகத்துவக் கொள்கையை அல்லும் பகலும் சொல்லிக் கொண்டிருக்கும் நம் சகோதரர்கள் கூட இந்த விடயத்தில் சிறிது கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். அவர்களும் இதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டுமென்பதை மிக உருக்கமாகக் கூறி வைக்க விரும்புகிறேன்.

மிகக் கருணையாளனான அல்லாஹ் மற்றுமோர் இடத்திலே இப்படிக் கூறுகிறான்:

விசுவாசிகளே! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் (நரக) நெருப்பைவிட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்,; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமாகும், அதில் (குணத்தால்) கடின சித்தமுடைய (தோற்றத்தாலும், அமைப்பாலும்) பலசாலிகளான மலக்குகள் உள்ளனர், அல்லாஹ்விற்கு – அவன் அவர்களை ஏவியவற்றில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், (இரட்சகனிடமிருந்து) அவர்களுக்குக் கட்டளையிடப்படுவதைச் செய்வார்கள்.

எவ்வளவு அழகாக அல்லாஹ் தனது விருப்பத்திற்குரிய விசுவாசிகளைப் பார்த்து அறிவுறை கூறுகிறான் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? ஒவ்வொரு விசுவாசியும் தன்னை மட்டுமல்ல தனது குடும்பத்தவர்களையும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும்படி கட்டளையிடுகிறான். கட்டளை மட்டுமா அதன் பின்னால் எவ்வளவு திடமான ஒரு எச்சரிக்கையையும் வைத்துள்ளான்.

அங்கே எந்த மலக்கையும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் அநுதாபத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களின் வேலையெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் என்பதை மிக ஆணித்தரமாகச் சொல்லிக் காட்டுகிறான்.

ஆகவே, இஸ்லாமிய சகோதரர்களே!

மிகக் கவனமாக இந்த வசனத்தைத் திரும்பத் திரும்ப ஓதுங்கள். அதன் அர்த்தம் விரிந்து கொண்டு செல்வதைக் காண்பீர்கள். தன்னை மட்டுமல்ல, தன் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக உழைப்பவனே உண்மையான விசுவாசியாக இருப்பான் என்பதை அந்த வசனத்தின் ஆரம்பத்திலேயே விசுவாசிகளே!” என்று விழிப்பதன் மூலம் தெளிவு படுத்துகிறான். ஆகவே, இது விசுவாசியின் ஒரு மிகப் பெரிய கடமை என்பதை உணர வேண்டும்.

அப்படி உணர்ந்து உறவினர்கள் மத்தியிலே ஏகத்துவத்திற்குப் பங்கமில்லாமல் அந்தந்த கடமைகளை உணர்த்தியதன் பின் அவற்றை ஏற்பதும் ஏற்காததுமான பொறுப்பு அவ் உறவினர்களையே சாரும். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருணை மிக்க ரஹ்மானே! உனது கட்டளைக்கிணங்க உன்னுடைய விசுவாசிகள் உனக்காகவே செய்யக் கூடிய நல்லமல்களுக்கு உன்னுடைய விடத்திலுள்ள மிகப் பெரிய பலனை அளிப்பாயாக.

இனி, ஒரு பெரிய இணைவைப்பிலே இருப்பவர்களைப் பற்றிச் சுட்டிக்காட்டாமல் விடுவது இக்கட்டுரையின் மூலம் எடுத்துவைக்கப்படும் ஒரு முக்கியமான வழிகாட்டலை குறைத்து மதிப்பிட்டதாக அமைந்துவிடும். அப்படி ஆகிவிடக் கூடாது என்றஞ்சி அவற்றைப் பற்றி சிறிதளவாவது எடுத்து வைப்பது சிந்தனை செய்வோருக்கு ஒரு சிறிய ஒளிக்கீற்றாக இருக்குமென்று நம்புகிறேன்.

ஊர், பெயர் தெரியாத பெரியார்களையெல்லாம் கண்ணியத்திற்குரியவர்களாக்கி அவர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி அல்-குர்ஆனும் அல்-ஹதீஸும் காட்டிய வழியல்லாத மாற்றுவழி நடப்பவர்கள் தமது வெளித் தோற்றத்தால் மகான்களாக உலா வரும் இக்காலக் கட்டத்தில் நம் உறவினர்களை உஷார் படுத்த இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இன்றியமையாதது.

நம்மத்தியிலே பலர் இருக்கிறார்கள், அவர்கள்தான் படித்தவர்கள், வழிகாட்ட வேண்டியவர்கள், உண்மைகளைத் தெளிவு படுத்தத் தகுதி பெற்றவர்கள். ஆனால், இவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்றால் கற்றிருந்தும் அறியாமைக் காலத்தை ஞாபகமூட்டுகிறார்கள்.

நம் முன்னோர்கள் செய்தவற்றை எப்படி நாங்கள் விடுவது? இவர்களுடைய முதலாவது கேள்வி இது!

நம் ஆலிம்கள் சொல்வது பிழையா? இரண்டாவது கேள்வியைத் தொடுக்கிறார்கள்!

ஊரோடில் ஒத்தோடு, ஒருவனோடில் கேட்டோடு – இவர்கள் மேற்கோள் காட்டும் ஒரு நாட்டுப் பழமொழி. முதலிரண்டு கேள்விகளுக்கும் நியாயமான காரணங்களைக் காட்டிவிட்டால் இவர்களுக்கு கடைசியாகக் கைகொடுப்பது இந்தப் பொன்மொழிதான்!

(இவ்வாறே) அவர்கள் அல்லாஹுவையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். இன்னும், ஒரே இரட்சகனையே வணங்க வேண்டும் என்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை. (9: 31 வசனத்தின் ஒரு பகுதி)

மேற்கூறிய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அதீ இப்னு ஹாதிம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கேள்விக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த பதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஒரு படிப்பினையாகவும் வழிகாட்டியாகவும் அமைந்திருப்பதை ஏனோ இன்று பலர் கருத்தில் கொள்வதில்லை. மார்க்கத்தைக் கற்றவர்கள் என்று சொல்பவர்கள் எதை ஹலால் என்றும் எதை ஹராம் என்றும் கூறினார்களோ அதை அப்படியே பின்பற்றுவதுதான் அவர்களைக் கடவுள்களின் தரத்திற்கு ஆட்படுத்துவது என்ற விளக்கத்தை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தினார்கள். இந்த விபரம் அஹ்மத், திர்மிதி ஆகிய ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

அப்படியே, இன்று உலமாக்கள்(அறிஞர்கள்), புகஹாக்கள்(சட்ட வல்லுனர்கள்), முப்திகள்(மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்கள்) சொல்லக்கூடிய எந்த ஒரு விடயத்தையும் அல்-குர்ஆன், அல்-ஹதீஸில் இருக்கிறதா என்று பார்த்துத் தெளிவு பெறாமல் பின்பற்றக் கூடியவர்களும் அந்தப் பெரும் இணைவைப்பையே செய்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்களுக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றிப் பாதுகாவலர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (அல்-குர்ஆன் 7:3)

இப்புவியில் இருப்போரில் பெரும்பாலோருக்கு நீர்; கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் உம்மை அல்லாஹுவுடைய பாதையில் இருந்து வழிகெடுத்து விடுவார்கள். (அல்-குர்ஆன் 6:116)

நிச்சயமாகப் பெரும்பாலோர் அறிவின்றியே தங்கள் மனோ இச்சையின் படியெல்லாம் (மக்களை) உறுதியாகவே வழிகெடுத்து விடுகிறார்கள்.(அல்-குர்ஆன் 6:119)

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்கள் அல்லாஹ்வினால் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக மனிதவினத்திற்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் சொற்களே என்பதையும் இதை எவ்வளவு தெளிவாக அவன் மக்களுக்கு விளங்கக் கூடிய விதத்திலே குறிப்பிட்டிருக்கிறான் என்பதையும் எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணும் மறுக்க முடியாது.

அல்-குர்ஆனை விளங்க முடியாது என்று கூக்கூரலிடும் உலமாக்கள் சிலரை, ‘இந்த வசனங்களிலே எதை சாதாரண மக்கள் விளங்க முடியாது’ என்பதைச் சுட்டிக்காட்டும்படி கேட்கின்றோம்.

மேலே காணப்பட்ட வசனங்களில் இனம்காட்டப்பட்ட (வழிகேட்டிலிருந்த) முன்னோர்களையா நமது அறிவுமிக்க முன்னோர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று அவர்களைக் கேட்கின்றோம்.

முன்னோர்களை அவமதிக்கிறார்கள் என்று மக்களை உணர்வுகளுக்கு ஆளாக்கி உடல் வளர்க்கும் குருசந்நிதானங்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் தண்டிப்பதில் மிகவும் கடுமையாளன். அதேபோல, பிழையுணர்ந்து மன்னிப்புக் கேட்டு அப்பிழைகளை மீண்டும் செய்வதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்பவர்கள் மீது மகா கிருபையாளன். சந்தேகம் வேண்டாம். பின்பற்றத் தகுதியானவை அல்-குர்ஆனும் அல்-ஹதீஸும் மட்டுமே என்பதைத் தெளிவாகவே தெரிந்து கொள்ளுங்கள்.

அல்-குர்ஆனை விளங்குவதில் அல்-ஹதீஸைப் படிப்பதில் ஆர்வம் காட்டும் மக்களை கேவலப்படுத்தி அவர்களை அந்த நல்ல கைங்கரியங்களிலிருந்து விரட்டுவதற்கு நீங்கள் எடுக்கக் கூடிய எந்த ஒரு முயற்சியும் வெற்றியளிக்கும் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது உங்களுடைய கையாளாகாத் தன்மையைத் தான் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். ஒரு போதும் அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் வெற்றியாளர்களாக ஆக முடியாது. அல்லாஹ்வின் கட்டளையையும் அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டலையும் மறுத்தவர்கள் கூட்டத்திலாகி விடுவீர்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டுமாயின் அவனுக்கு அஞ்சி உடனடியாக அவன்பால் மீட்சி பெறுங்கள்.

கவலைக்குரிய விடயமென்னவென்றால், இவர்களின் முன்னோர்கள் யார் என்பதே இவர்களால் வரைமுறையிட்டுக் காட்ட முடியாமைதான். 1400 வருடங்களுக்கு முன்னிருந்த ஸஹாபாக்கள் அந்த முன்னோர்கள் வரிசையில் இல்லையா என்றால் அதற்குச் சரியான பதில் கொடுக்கவும் மாட்டார்கள், அப்படிக் கேட்பவர்களை மக்கள் மத்தியிலே ஒரு புதிய மார்க்கத்தைக் கொண்டு வருபவர்களாகவும் வழிகேட்டிலிருப்பவர்களாகவும் காட்டுவதற்கு எத்தனிப்பார்கள்.

இந்த நிலையிலேதான், ஒவ்வொரு முஸ்லிமும் இந்தக் காலக்கட்டத்திலே தமது குடும்பத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் இஸ்லாத்தை அதன் தூய வடிவிலே எடுத்துக் காட்டுவதற்கும் அதனுள் முழுமையாக நுழைந்து விடுவதன் மூலம்தான் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற முடியும் என்ற உண்மையை சொல்லிக் கொடுப்பதற்கும் முற்பட வேண்டும். அது கடமையாகிறது என்று சொன்னாலும் பிழையாக முடியாது.

அப்படி அவனுடைய திருப்தி கிடைத்துவிட்டால்தான் நரகத்திலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்பதையும் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால், ஏகத்துவத்தை அறிந்த ஒவ்வொருவரும் அதற்காகவும் அல்லாஹ்வின் கேள்விகளுக்கு ஆளாவார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

முக்கியமாக நாம் நமது குடும்பத்தவர்கள், உறவினர்கள் மத்தியிலே பின்வரும் பாவங்களையிட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளும்படி சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

மண்ணறைகளில் மண்டியிடுவது.

மண்ணறைக்குச் செல்லாவிட்டாலும் மகான்களின் பெயரால் பாதுகாப்புத் தேடுவது.

அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்வது.

நூல், தாயத்துக் கட்டுவது.

கட்டடங்கள் கட்டும் போது பாதுகாவலுக்கென்று மந்திரங்கள் ஓதப்பட்ட பெட்டிகளை அடித்தளத்தில் புதைப்பது.

சகுனம் பார்ப்பது.

சாஸ்திரம் பார்ப்பது.

பெருமைப் படுவது.

மனிதனை அளவுக்கதிகமாகப் புகழ்வது.

அடுக்கிக் கொண்டே போகலாம்.

முக்கியமானதொரு அம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்புகிறேன். ஏகத்துவத்தின் பால் உறவினர்களின் நிலைப்பாடு உறுதியானதன் பின்னர்தான் மற்றுமுண்டான உறவினர்களுக்கான கடமைகள், உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்.. இன்ஷா அல்லாஹ், அவை பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்திலே ஆய்வோம்.

“என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி(வசனம்) கிடைத்தாலும் அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி)

எனவே, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுக் காட்டிய அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கவும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேலே காணும் கட்டளைக்கிணங்கவும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது குடும்பத்தார்க்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவிலே எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான்.

அப்படிச் செய்வது, அல்லாஹ் நாடினால், அனல் கக்கும் அந்தப் பெருநெருப்பினாலான நரகத்திலிருந்து நாளை மறுமையில் விடுதலை பெற ஒரு காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

‘Jazaakallaahu khairan”  – Ithuthaan Islam.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

49 − = 48

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb