கத்திரிக்கோல்
வேண்டாமே!
கீதா சிகாமணி
உங்களால் கத்தரிக்கப்பட்டவர்கள் உங்களைப் பற்றி அவதூறாக தமக்குள் மட்டுமல்ல, உறவினர், நண்பர்களிடமும் பிரச்சாரம் செய்வார்கள். மொத்தத்தில் அதனால் உங்கள் குடும்பத்தினரும் மரியாதை இழக்க நேரிடும்.
ஆயக்கலைகள் 64 பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். கற்றிருந்தாலும் கைவிடப்பட வேண்டிய கலை ஒன்று இருக்கிறது தெரியுமா? …. கத்தரிக்கோல் கலை.
இயல்பாகவே சிலருக்கு இது கைவந்த கலையாக இருக்கும். இக்கலை வல்லுனர்களை எளிதில் இனம் காணலாம். காரியம் ஆகும்வரை வளைந்து நெளிந்து குழைந்து பேசுதல்;, அடிக்கடி போன் செய்து நலம் விசாரித்தல், நம்மைப் பாராட்டி நம்மிடமே அளத்தல், காரியம் ஆனதும் “டக்” என கத்தரித்துக் கொள்ளுதல்க வலியப்போய் பேசினாலும் “வேலை இருக்கு, நாளைக்கு பேசவா?” என்று நழுவுதல் …. இப்படியாக கத்திரிக்கோல் கலைஞர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இவர்களை இப்படிப்பட்ட கலைஞர்களாக மாற காரணம் என்ன? மனசுதான்!
“ஏதோ … ஒரு உதவி செய்துட்டார்னு, திரும்பத் திரும்ப நாம அவருக்கு ஏதாவது செய்யணும்னு எப்படி எதிர்பார்க்கலாம்?”
“அன்னிக்கு …. ஒரு உதவி செய்துட்டார்னு, திரும்பத் திரும்ப நாம அவருக்கு ஏதாவது செய்யணும்னு எப்படி எதிர்பார்க்கலாம்?” அதுக்காக இப்ப என்னோட அந்தஸ்துக்கு இவனோடெல்லாம் சகவாசம் வச்சுக்க முடியுமா?”
இப்படி எண்ணி எண்ணி அத்தகைய நட்பும் உறவும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
நீங்களும் இந்த வகை கலைஞருள் ஒருவரா? உங்களுக்கு சில வார்த்தைகள்:
யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். இவரால் நமக்கு இனி ஆக வேண்டியது ஒன்றுமில்லை என யாரையும் எடைபோட வேண்டாம். யார் உதவி எப்போது தேவைப்படும் என்பது இப்போது தெரியாது.
சிறு உதவி செய்ததற்கே நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கும் பட்சத்தில் மேலும் பெரிய உதவிகளை அவராக முன்வந்து செய்யக்கூடும்தானே. அவருக்கு பெரிய மனசு இருந்ததால்தானே உங்கள் காரியத்தை அவர் மூலம் சாதித்திருக்கிறீர்கள்.
நீங்கள் கத்தரிக்க நினைப்பதை புரிந்துகொண்டால், அவர் முந்திக்கொள்வதுடன் நன்றி கெட்டவர் என்கிற பட்டத்தையும் உங்களுக்குத் தருவார். அப்புறம் நீங்கள் வலியப் போனாலும் அவர் மனதில் நீங்கள் செல்லாக்காசாகி விடுவீர்கள்தானே.
சின்னஞ்சிறு உதவி செய்தவரைக்கூட மறக்காதீர்கள். எதையும் சிறிது என மதிப்பிடாதீர்கள். சமயங்களில் சின்னச்சின்ன உதவிகள்தான் நமக்கு தேவையாக இருக்கும்.
பணக்காரர் இல்லையே என ஏளனமாக நினைக்க வேண்டாம். ஆபத்து காலத்தில் உதவி செய்யாத கோடீஸ்வர அண்ணனைக் காட்டிலும் கையிலிருந்ததை அப்படியே கொடுத்து உதவிய ஏழை நண்பனே மேல்.
சிறு துரும்புதான் பல் குத்த உதவும். பெரிய துடுப்பு இருக்கிறதே என்று அதை எடுத்து பல் குத்த முடியுமா?
கத்தரிக்கோல் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளன்பான நண்பர்களோ உறவினர்களோ இருக்க மாட்டார்கள்.
“இவரைத் தெரியாதா? காரியம் ஆகும்வரை காலைச் சுத்தி வருவார். காரியம் ஆனதும் காலை வாருவார்” என்று நிச்சயம் உங்களைப் பற்றி அவர்கள் மத்தியில் ஒரு பேச்சிருக்கும்.
உங்களால் கத்தரிக்கப்பட்டவர்கள் உங்களைப் பற்றி அவதூறாக தமக்குள் மட்டுமல்ல, உறவினர், நண்பர்களிடமும் பிரச்சாரம் செய்வார்கள். மொத்தத்தில் அதனால் உங்கள் குடும்பத்தினரும் மரியாதை இழக்க நேரிடும்.
எனவே யாரையும் எந்தக் காலத்திலும் எக்காரணம் கொண்டும் கத்தரித்துவிடாதீர்கள்.