டாக்டர். ஏ.எம். ஜான்,
அக்குபஞ்சரில் தலைவலி நிவாரணம்!
“தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்” என்பது இன்றுவரை புழக்கத்தில் இருக்கும் சொற்பிரயோகம். இதுபோன்றே தோள் வலி, கழுத்து வலி, முதுகு – இடுப்பு – கை – கால் வலி, உளைச்சல் தடுப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எதிரிக்குக் கூட இந்த வலி வரக்கூடாது என்று புலம்புவார்கள் காரணம் மேற்படி வலிகளால் ஏற்படும் உடல் – மன பாதிப்புகள் கடுமையாக இருக்கும்.
குறிப்பாக தலைவலியை எடுத்துக்கொண்டால், இக்காலங்களில் எதற்குத்தான் தலைவலி வருவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. எடுத்ததற்கெல்லாம் தலைவலி என்பதே நம்முடைய நவீன நாகரிக வாழ்க்கை முறை நமக்களித்த பரிசு. என்னுடைய பதினெட்டு வயதில் வீட்டில் பெரியவர்கள் யாராவது தலைவலி என்று கூறினால், தலை எப்படி வலிக்கும்? அடிபட்டால் அல்லவா வலிகள் தோன்றும்? என பலவாறாகத் துருவித்துருவி கேள்விகள் கேட்டதுண்டு. காரணம் பெரும்பாலானோருக்கு தலைவலிகள் இல்லை, அதைப்பற்றித் தெரியவும் தெரியாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதுச் சிறுவர் முதல் முதிர்ந்த வயதினர் வரை அனைவரும் ஏதாவது ஒரு தலைவலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள்.
பரபரப்பும் வேகமும் கொண்ட தற்கால வாழ்க்கை முறை தலைவலிக்கான காரணிகளையும் அதன் தளங்களையும் விசாலமாக்கி வைத்துள்ளது.
டென்ஷன் தலைவலி, தேர்வு நேர தலைவலி, ரிசல்ட் தலைவலி, இன்டர்வியூ தலைவலி, பிரயாண தலைவலி, மாதவிடாய் தலைவலி, அஜீரண தலைவலி, சீதோஷ்ண மாற்றங்களால் தலைவலி, முன்பக்க வலி, பின்பக்க வலி, உச்சி வலி என்று இன்னும் அநேகம் உள்ளது. இவை எல்லாவற்றையும் விட மிகுந்த துன்பம் தரக்கூடியது ஒற்றைத் தலைவலி.
தலைவலிகள் தோன்றி மறைந்துவிட்டாலும், எப்பொழுதாவது ஒருமுறை தோன்றினாலும் கவலை கொள்ள ஏதுமில்லை. ஆனால் அடிக்கடி தலைவலி வருவதும் எந்நேரமும் தலைவலியுடனேயே வாழ்க்கையை நடத்துவதும் மிகுந்த ஆபத்தில்தான் முடியும்.
அக்குபஞ்சர் தத்துவப்படி, தலைவலி என்பது தலையில் உள்ள பிரச்சினைகளால் மட்டும் தோன்றுவது அல்ல. அதாவது மூளையில் கட்டி, மூளையில் ரத்தம் உரைதல், தலையில் அடிபடுதல், கபால நீர், சில கண் – காது நோய்கள் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர, மற்ற எல்லா தலைவலிகளும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் மற்றும் பாதிப்புகளின் பிரதிபலிப்பே ஆகும். முக்கிய உள்ளுறுப்புகளின் கோளாறுகள் பெரும்பாலும் தலையில் வலியாகவும் மற்றவை கால்வலி, கால்சோர்வு என்றுதான் முதலில் பிரதிபலிக்கும். இதை அலட்சியம் செய்து தலைவலிக்கு மாத்திரம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது பிரச்சினைகள் மேலும் தீவிரமாகிறது. பலருக்கு நிரந்தரத் தலைவலியாகவும் மாறி விடுகிறது.
தலைவலி தோன்றிய உடன் அருகிலிருக்கும் மருந்துக்கடைகளுக்குச் சென்று தாமாகவே மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்கள், அம் மருந்துக்கே அடிமையாகி விடுகிறார்கள். எப்பொழுதும் அம் மருந்தைக் கையிலேயே வைத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு பின்னர் அதிகமாக எடுத்துக்கொண்ட மருந்துகளின் தீய பக்க விளைவுகளுக்கு ஆள்பட்டு வாழ்வில் ருசி இழந்து விடுகிறார்கள். இவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகித் தங்கள் தலைவலியை தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்.
டென்ஷன் மற்றும் மன இறுக்கத்தால் ஏற்படும் தலைவலியை எளிய உடற்பயிற்சி, தியானம், இயற்கையை ரசித்தபடி சிறு நடை போன்றவற்றின் மூலம் எளிதாக வெல்லலாம். குழந்தைகள், செல்லப்பிராணிகளைக் கொஞ்சி விளையாடுவோருக்கு டென்ஷன் தலைவலியே வராது என்பது ஆராய்ச்சி முடிவு.
தேர்வு நேர தலைவலி, ரிசல்ட் தலைவலி, இன்டர்வியூ தலைவலிகள் அடிக்கடி தொடருமானால் மனநல ஆலோசனைகளும் மருத்துவமும் கண்டிப்பாகத் தேவை. காரணம் இக்காலத்தில் வாழ்நாள் முழுவதும் தேர்வுகளும் இன்டர்வியூக்களும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆகவே இந்தத் தலைவலிகளைத் தொடரவிட்டால் தேர்வுகளிலும் நேர்காணல்களிலும் தோல்வி ஏற்பட்டு எதிர்காலம் சிறப்பாக அமையாமல் போகலாம். ஆகவே மிகுந்த கவனம் தேவை.
மாதவிடாய் தலைவலி பெரும்பாலும் அப்போதைய ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும். இருப்பினும் வலி கடுமையாக இருந்தாலும், எல்லா மாதங்களிலும் தொடர்ந்து வந்தாலும், மாதவிடாய் காலம் முடிந்த பிறகும் நீண்ட நாள்களுக்குத் தலைவலி இருந்தாலும் அக்குபஞ்சர் சிறப்பாக உதவும். வலி விரைவாகவும் நிரந்தரமாகவும் குணமடையத் தேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவரிடம் சிகிச்சை பெறுங்கள். அவரிடமே அக்குபிரஷர் என்னும் தொட்டு அழுத்தும் முறையை கற்றுக் கேளுங்கள். பக்க விளைவுகள் ஏதுமின்றி நிவாரணம் பெறவும், தேவையான எந்த இடத்திலும், சூழ்நிலையிலும் சுலபமாக, சுயமாக எந்தச் செலவுமின்றி இதைப் பயன்படுத்திக் குணம் அடையவும் முடியும்.
தலைவலிகளுக்கெல்லாம் அரசனான ஒற்றைத் தலைவலி:
முக்கியமானது பிரசித்தி பெற்ற தலைவலிகளுக்கெல்லாம் அரசனான ஒற்றைத் தலைவலி. இது மிகக் கடுமையான வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்தக் கூடியது. வலியானது தலையின் ஒரு பக்கத்தில் ஆரம்பமாகி வீணை நரம்புகளைச் சுண்டி மீட்டுவது போல, தலையின் நரம்புகளைச் சுண்டி கடுமையான வேதனையைக் கொடுக்கும். பலருக்கு வலி கழுத்து வலியாகத் தோளில் இறங்கி கை வரை நீளும். சிலருக்குக் கண்கள் மங்கலாகும். வாந்தி வரும். எந்த வேலையும் செய்ய இயலாது. பலர் உடனே படுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு படுத்தும் விடுவார்கள்.
பெரும்பாலும் இத் தலைவலி குறிப்பிட்ட ஒரே நேரத்தில் தினமும் வரலாம். மொத்தத்தில் ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் அன்றாட வாழ்வில் அதிகப்படியான துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் சாலையில் வண்டி ஓட்டிச் செல்லும்போது திடீரென்று ஒற்றைத் தலைவலி வந்துவிடும். அந்நேரத்தில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் வண்டியை அப்படியே சாலையில் போட்டுவிட்டு அருகிலிருக்கும் கடைத் தாழ்வாரங்களில் படுத்துவிடுவார். வலியால் துடித்து உணர்வு குறைந்து காணப்படுவார். வாந்தியும் எடுப்பார்.
இதுபோன்று பலர் பல்லாண்டுகளாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவார்கள். பெரும்பாலும் வைத்தியம் செய்தும் கொள்வார்கள். ஆனால் நிரந்தர குணம் என்பது எட்டாத கனியாகவே இருக்கும். இவர்களிடம் உங்களுக்கு ஏதாவது ஆசை உண்டா என்று கேட்டால், தயக்கமே இல்லாமல் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுதலை வேண்டும் என்பார்கள். அந்த அளவுக்கு உடல் மன உபாதைகளைக் கொடுக்கக் கூடியது. இவர்களுக்கு இதில் இருந்து விடுதலை உண்டா என்று கேட்டால் நிச்சயமாக உண்டு என்பதுதான் கைதேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவரின் பதிலாக இருக்கும். சித்த, ஆயுர்வேத முறைகளில் நிவாரணம் உண்டு என்றாலும், அக்குபஞ்சரில் உடனடியாகவும் நிரந்தரமாகவும் குணமாகும் நோய்களின் பட்டியலில் ஒற்றைத் தலைவலிக்கு முதல் இடம்.
இறைவனின் அற்புதங்களில் முதலிடம் பெறும் மனிதன், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று (உலோகம்), மரம் ஆகியவற்றின் பிரதிநிதியாக உள்ளான். இவ்வைந்தும் சமநிலையில் இருக்கும்போது நோய்கள் தோன்றாது. நமது சித்த, ஆயுர்வேதத்தின் வாத, பித்த, கபம் போன்றவை சமநிலையில் இருக்கும்போது நோய்கள் தோன்றாது என்பன போன்றதுதான் அக்குபஞ்சரின் ஐம்பூதத் தத்துவம்.
சமநிலையற்றுப்போகும் ஐம்பூதங்களில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்டதையோ சரிசெய்யும்போது நோய்களிலிருந்து மீளலாம். தேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் கைநாடி பரிசோதனை, நாக்கு, கண்கள், நகம், பற்கள் ஆகியவற்றின் மூலம் குறைபாடுகளைக் கண்டறிந்து மிக மெல்லிய ஊசிகளை குறிப்பிட்ட சக்தி ஓட்டப்பாதைகளில் செருகும் போது உடனடியாக அவ்வுறுப்புகளுக்குப் புதிய சக்தி சென்றடைந்து குணம் கிடைக்கிறது. அது நிரந்தர குணமாகவும் நிலைத்து விடுகிறது.
ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடிகளுக்கேற்ப ஊசி செலுத்தும் இடங்கள் வேறுபடலாம். சிலருக்கு ஒரே நாளிலும் சிலருக்கு ஒரு வாரத்திலும் குணம் கிடைக்கும். நல்ல, நீடித்த, நிரந்தர குணம் கிடைக்க ஏழு நாள்கள் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது. அக்குபஞ்சர் சிகிச்சையுடன் அக்குபிரஷர் என்னும் கை, கால்களில் மெல்ல தொட்டு அழுத்தும் சிகிச்சை முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். இவ்விரண்டையும் முறையாக கடைப்பிடிப்பவர்கள் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம்.
அவரவர் வசதிக்கேற்ப, நம்பிக்கைகளுக்கு ஏற்ப எந்த வைத்திய முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் கூடுதலாக அக்குபஞ்சர் சிகிச்சையும் மேற்கொண்டால் பக்க விளைவுகளற்ற விரைவான நிரந்தர குணம் அடைவது நிச்சயம் என உறுதிபடக் கூறலாம். மருத்துவம் என்பது பாதிப்படைந்த உடலை நல்ல நிலைக்குக் கொண்டுவரும் ஒரு உத்திதான். மீண்டும் உடலில் நோய்கள் அணுகாத வண்ணம் காப்பது அவரவர் கடமையாகும். கண்டதைச் சாப்பிடுவதும் பழைய நோய்க்கு முந்தைய வாழ்க்கை முறையில் நீடிப்பதும், வீண் பிரச்சினைகளை தலையில் போட்டுக் கொள்வதும், ஒழுக்கம் தவறி நடப்பதும், உடற்பயிற்சி இன்றி இருப்பதும், பொறாமையும் மீண்டும் நோய்களுக்கு நாமே அழைப்பு விடும் செயல்களாகும். இதையே, தலைவலி போய் திருகுவலி வந்த கதை என்றும் சொல்லலாம். ஆகவே, நோய் நிவாரணம் பெற்றவுடன் எளிய நல்ல பழக்கங்களை மேற்கொண்டு நிச்சயமாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழலாம்.
தலைவலியைப்பற்றி மேலும் விளக்கங்களுக்கு :