“நெருப்பின் நரம்புகள்”
A.K.A. அப்துஸ் ஸமது (ரஹ்)
“இடியும் அவன் புகழ்பாடுகிறது” (அல்குர்ஆன்)
இறைவனுடைய ஆற்றல் அளப்பரியது. அவன் படைப்பு இனங்களைப் பற்றி அறிய அறிய மனிதனுடைய அறியாமையும் இயலாமையும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இறைவன் மனிதனுக்குத் தன்னுடைய ஆற்றலைப் புலப்படுத்தும் முறையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை உண்டாக்கிக் காட்டுகிறான். இயற்கையில் உள்ள பரிணாமங்களைச் சுட்டியும் காட்டுகிறான்.
இந்த உண்மையின் ஒளி மனிதனுக்கு அவ்வப்போது பளிச்சிடவே செய்கிறது ஆனால் அந்த ஒளியின் வழியிலே தன்விழியைச் செலுத்துவதற்கு பதிலாக அவனுடைய அகந்தயால் கண்ணை மூடிக்கொள்கிறான்.
ஏற்றிவைக்கப்பட்டுள்ள தீபத்திலிருந்து உமிழும் வெளிச்சம் அவனுக்கு விளக்கம் தந்திருக்க வேண்டும். ஆனால் அவனிடத்தில் ஏற்பட்டுள்ள ஆணவத்தால் அந்த வெளிச்சமே அவன் பார்வையைப் போக்கிவிடக்கூடிய தன்மையில் அமைந்து விட்ட பரிதாபமான வரலாற்றைத் திருக்குர்ஆன் அழகுபட சுட்டிக் காட்டிக் இருக்கிறது.
‘இவர்களுடைய உதாரணம் ஒருவ(ரைச் சூழ்ந்திருந்தோ)ரின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. (அதாவது: அபாயகரமான காட்டில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழி அறிவிக்கும் பொருட்டு) அவர் தீயை மூட்டி, (அதனால்) அவரைச் சூழவும் பிரகாசம் ஏற்பட்ட சமயத்தில், அவர்களுடைய தீயச் செயலின் காரணமாக (அல்லாஹ்) அவர்களுடைய பார்வைப் பிரகாசத்தைப் போக்கி, பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (அத்துடன் இவர்கள்) nசிவடர்களாகவும் ஊமையர்களாகவும் ஆகிவிட்டார்கள். ஆதலால் இவர்கள் (அபாயகரமான நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள்’ (அல்குர்ஆன் – 2:17,18).
ஒளி, பிரகாசம் தரகக் கூடியது. ஆனால் அந்தப் பிரகாசமே கண்ணின் பிரகாசத்தைப் போக்கடிக்கிறது என்றால் அது எவ்வளவு தேவனை தரத்தக்க செய்தி.
அறிவு, உலகின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உரிய வெளிச்சத்தை – விளக்கத்தை தரக்கூடியது. என்றாலும், அறிவின் முன்னே ஆணவம் தலை தூக்கும் போது அந்த அறிவே இருள் அறிந்து விடக்கூடிய உண்மையைத்தான் திருக்குர்ஆன் அழகிய உவமானத்துடன் சொல்லிக் காட்டுகிறது.
அறிவும் இறைவனுடைய அருட்கொட்டை தான் என்ற உள்ளுணர்வு மனிதனுக்கு எப்போதும் இருக்க வேண்டியது அவசியம் இந்த உள்ளுணர்வை தக்வா (இறையச்சம்) என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆகவே தான் இறைவனுக்கு அஞ்சுவது என்பது அறிவு ஞானத்தின் ஆரம்பபென சமயத்துறையிலே வற்புறுத்தப்பட்டிருக்கிறது.
மனிதன் இறைவனுடைய இயற்கை நிகழ்ச்சிகளைக் கொண்டு நல்லறிவு பெறத்தக்க முறையில் அந்த நிகழ்ச்சிகளை ஒரு தனி அழகுடன் அவன் சொல்லிக் காட்டும் வசனங்கள் திருக்குர்ஆன் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.
அவன் சொல்கிறான்: ‘(உங்களுக்கு) பயத்தையும், நயத்தையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையைச் சுமந்த) பளுவான மேகங்களையும் அவன் கிளப்புகிறான். இடியும் அவன் புகழ் பாடுகிறது. (அவ்வாறே) அவனுக்குப் பயந்து மற்ற மலக்குகளும் அவனைத் துதிசெய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச் செய்து அதைக் கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகின்றான்.’ (13:12,13).
மின்னல்-மழை பொழியும் மேகம் – அதிர்ச்சி தரும் இடி இந்த மூன்று நிகழ்ச்சிகளை அவன் சுட்டிக் காட்டும்போது நம்மைச் சுற்றிச் சூழ அன்றாடம் நிகழும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள நம்முடைய அறிவாசை தூண்டிவிடப்படுகிறது.
மின்வெட்டுகிறது. அது நம் கண்ணைப் பறிப்பது போல் அச்ச உணர்ச்சி ஏற்படுகிறது. அதே நேரத்தில் மின் வெட்டுவது, பெய்ய இருக்கும் மழைக்கு முகமன் கூறுவது போல் அமைந்திருக்கிறது.
‘ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மினனல் சூழ மின்னுதே’ என்பது தமிழ்ப்பாடல். ‘மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை’ என்பது பழைய தமிழ் மொழி.
மழை எப்பொழுதுமே உயிர்ப்பின் சின்னமாக கருதப்படுகிறது வரண்டு மாண்டு இருக்கும் நிலத்தையும் மழை நீர் உயிர்ப்பிப்பததைப் பார்க்கிறோம் அல்லவா? ஆகவேதான் மின்னல் நமக்கு பயமும் தருகிறது நயமும் தருகிறது என இறைவன் நயம்படக் கூறுகிறான்.
இடியும், மின்னலும் இரண்டாகப் பிரிக்கமுடியாத அளவு நிகழ்பவை. மின்வெட்டுவது கண நேரம். அதாவது ஒரு வினாடியில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி நேரம் ஆனால் அதனோடு எழும் இடி முழக்கம் நம்மமை அதிரச் செய்து விடுகிறது.
மனிதன் இந்த இடி முழுக்கத்திற்கு எவ்வாறு அஞ்சுகிறான் என்பதை மனிதனைப் படைத்த இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.
‘அடர்ந்த இருளும் இடியும் மின்னலும் உடைய மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கிறது அவ்வாறு அகப்பட்டுக் கொண்ட)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்துக்கு பயந்து தங்களுடைய விரல்களைத் தங்களுடைய காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். ஆனால் அல்லாஹ் நிராகரிக்கும் இவர்களை (எப்பொழுதும்) சூழ்ந்து கொண்டே இருக்கிறான்’.(அல்குர்ஆன்)
இறைவனால் உண்டாக்கப்படும் இடி முழக்கத்திற்கு மனிதன் அஞ்சுகிறான். ஆனால், அந்த இடிமுழக்கத்திற்கு சொந்தக்காரனான அல்லாஹ்வுக்கு அஞ்சமறுக்கிறான் – மறக்கிறான் என்னதான் காதிலே விரலை அடைத்துக் கொண்டு அவன் உயிரைப் பாதுகாக்க மனிதன் முயற்சித்தாலும் இறைவன் அவனை சூழ்ந்துக்கொண்டே இருக்கிறான் என்று திருக்குர்ஆன் சொல்லும் போது மனிதனுடைய பாதுகாப்பற்ற தன்மை தெரிகிறது அல்லவா?
இதிலே இன்னொரு நகைச்சுவை, இறைவனைப் புகழ்ந்து பாட வேண்டிய மனிதன் தன் செயல்களால் இகழ்ந்து நிற்கிறான்.
இயற்கை இறைவனின் துதிபாடுகிறது ‘இடியும் அவன் புகழ்பாடுகிறது (அவ்வாறே) அவனுக்கு பயந்து மற்ற மலக்குகளும் அவனைத் துதி செய்து புகழ்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் கூறுகிறது ஆக அவனுக்கு எந்நேரமும் ஏவல் பரிந்தே நிற்கும் அமரர்களும் அவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். இடியும் அவன் புகழ் படி நிற்கிறது இடி முழக்கம் மனித இதயத்திலே அச்சத்தை விளைவிக்கிறது.
அந்த இடியும் இறைவனை அஞ்சுகிறது. ஆனால் இடியைக் கேட்டுத் துடிக்கும் மனிதன் இறைவனை அஞ்ச வேண்டிய முறையிலே அஞ்ச மறக்கிறான் – மறுக்கிறான்.
மின்னல், இடி, மின்னொளி, இடி முழக்கம் என்றெல்லாம் கூறுகிறோமே-இது எப்படித்தான் உண்டாகிறது?
அமெரிக்காவில் அள்ள அரியோனா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் E. ஃபிலிப் கிரிதர் (Philip Krider)அவர்களுக்கும் அவருடைய சக விஞ்ஞானிகளும் இதுபற்றி பல்லாண்டுகளாக விரிவாக ஆராய்ந்து சில உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
‘இடி முழக்கங்களோடு கூடிய புயலைப் பொதிந்த மேகங்களில் ஏற்படும் மாற்றங்களால் விளையும் மின்சார சக்தியினால் உண்டாகும் மின்னொளியே மின்னல் என அறியப்படுகிறது’ என்பது அவர் தரும் விளக்கம் மனித தோற்றத்திற்கு முன்னிருந்தே இந்த மின்னொளியின் தோற்றமும் இருந்திருக்கிறது மனித வாழ்வோடு அதன் வாழ்வும் ஒட்டியே வந்திருக்கிறது.இன்னும் சொல்வதானால், மனித வாழ்வுக்கு இன்றியமையாத நெருப்பை – மின்சக்தியை தூண்டிவிட்டதே மின்னல்தான் என்பது அவர்கள் ஆராய்ச்சியின் விளைவு.
உலகிலே ஒவ்வொரு நொடியும் 1.800 இடி முழக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது, மேற்கண்ட வசனத்தை நீங்கள் படித்து முடிக்க மூன்று வினாடிகள் ஆகின்றன. இதே நேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் 300 மின்னொளிகள் – இடி முழக்கங்கள் தோன்றி மறைகின்றன. இதை மேலும் விளக்கிச் சொல்வதனால், நாள் ஒன்றுக்கு 80 லட்சம் மின்னல் கீற்றுகள் ஒளி சிந்துகின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் ‘ஃபிளோரிடா’ மாநிலத்தில் அதிகமாக மின்னல் வீச்சு இருக்கிறது. ஆனால் அதைவிட அதிகமாக தட்பவெட்பம் மிகுந்த பூமத்தியரேகைப் பகுதியான – இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் வருடத்தில் 300 மின்னொளி வீசிக் கொண்டே இருக்கிறது.கருக்கொண்ட – சூல்கொண்ட-மேகத் திரளை வானத்திலே காண்கிறோம். கருமையாகத் தோன்றும் அந்த மேகக் கூட்டங்களுக்குள்ளே உலகையே திடுக்கிடச் செய்த அழிக்கும் அத்தனை பயங்கரங்களும் பொதிந்து இருக்கின்றன.
பொதுவாகவே பாசிடிவ் சக்தி மேல்பகுதியில் இருக்கிறது நெகடிவ் சக்தி அடிப்பகுதியில் காணப்படுகிறது. இத்தகைய சக்திகள் ஒரே மேக மண்டலத்திற்குள்ளே தான் இருக்கும் என்பதில்லை. பலசந்தர்பங்களில் அடுத்துள்ள மேக மண்டலத்தைத் தழுவியும் இந்த சக்திகள் அமைவதுண்டு.
பாஸிடிவ் நெகடிவ் ஆகிய இருவேறு சக்திகள் பங்குகொண்டு ஒன்றை மற்றொன்று தழுவ முற்படும் போது இடையே உள்ள காற்று மண்டலத்திலுள்ள பௌதீகப் பொருள்கள் வெடித்து மிகப் பெரிய அளவில் தோன்றும் மின்சாரமே மின்னொளியாகத் தன் ஒளிக் கீற்றுகளை நீட்டுகிறது.
அப்போது தான் மின் வெட்டுகிறது என நாம் கூறுகிறோம். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இக்காட்சி நிகழ்வதால், மின்வெட்டுகிறது என நாம் குறிப்பிடுகிறோம்.
ஒருவிநாடியில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதிக்கு ‘மைக்ரோ செகன்ட்’ (Microsecond) எனச் சொல்வதுண்டு இந்த மைக்ரோ செகன்டிலும் பத்தில் ஒரு பகுதி நேரத்திற்கு மின் வெட்டு நிகழ்ந்து வருவதாக பேராசிரியர் கிரிதார் குழுவினர் கூறுகிறார்கள்.
மின்னலின் ஒளிரேகைகள் படருவதிலே பல நூற்றுக்கணக்கான வகைகள் உண்டு வானத்திலே ஒளியால் கீறியது போல் தோன்றுவதும் உண்டு. ஒரு ரேகையிலிருந்து பல பிரிவுகள் ஏற்பட்ட ஒவ்வொரு ரேகையும் வரைபடம் எழுதுவது போல் பரவதும் உண்டு.
ஒரே வரி வட்டத்தில் விட்டு விட்டு மின்னொளி பாய்ச்சுவது போன்ற தோற்றம் ஏற்படுவதும் உண்டு. நெருப்பாலான பந்து போல் பந்து செல்லும் மின்னலும் உண்டு.
வானத்திலே தோன்றி, பூமியில் தொடும் வகையில் உள்ள மின்னல்களே பெரும்பாலானவை. ஒரு சில சந்தர்ப்பங்களில் பூமியிலிருந்து வானை நோக்கி மின்னொளி பாய்ந்து செல்வதும் உண்டு.
மின்னல் தன் ஒளி ரேகைகள் எனும் ஏணிகளின் வழியாக படிப்படியாக பூமியை நோக்கி வரும் போது, ப+மியிலிருந்து வானோக்கி எழும் பாஸிடிவ் சக்தி அமைச் சந்திக்க விரைந்து எழுந்து செல்கிறது. அம்மாதிரியான நேரங்களில் அந்த மின்னல்களின் மோதலால் சிந்தப்படும் ஒளிச்சிதறல்களையும் நாம் காணமுடிகிறது. வேறு சில சந்தர்ப்பங்களில் ப+மியிலிருந்து அடுத்தடுத்து எழுந்து வானை நோக்கிச் செல்லும் மின்னல் ஒளிகளை நாம் கணக்கிட முடியா அளவு விரைந்து செல்வது உண்டு.
மின் வெட்டு நேரம் என நாம் துரிதமாகக் கருதும் நேரத்தைக் குறிப்பிடுகிறோம். அந்த நேரத்தைக் கூட இப்போது கணக்கிட்டு விட்டார்கள்.
சுமார் ஒரு அங்குலமே அகலமுள்ள மின்னல் அமைத்துக் கொள்ளும் விண்ணின் வாயு மண்டல ஏணி வழியாக ஒரு விநாடிக்கு 96,000 கி.மைல் மின்னல் பிரயாணம் செய்கிறது. அதாவது வெளிச்சம் செல்லும் வேகத்தில் மூன்றில் ஒரு பங்கு வேகம். பழைய மைல் கணக்கில் சொல்வதானால் ஒரு வினாடிக்கு 60 ஆயிரம் மைல் பிரயாணம் செய்கிறது மின்னொளி.
ஒளியின் வேகத்தை அறிந்தோம். அந்த உஷ்ணத்தின் அளவையும் தெரிய வேண்டுமல்லவா? மின்னலின் உச்ச கட்டத்தில் அதன் உஷ்ண அளவு 33,000 சென்டிகிரேட் ஆகும் சூரியனின் மேல் மட்டத்தில் உள்ள உஷ்ண அளவு 6,600 சென்டிகிரேட் ஆகும். அதைவிட ஐந்து மடங்கு உஷ்ணம் மின்னலின் ஒளிக்கீற்றில் இருக்கிறது.
அதாவது, பெரிய அளவிலான மின்சார உற்பத்தி நிலையங்கள் – 10 நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின் அளவைவிட அதிகமான மின்சக்தி ஒரு மின்னல் கீற்றில் இருக்கிறது.
சாதாரணமாக 100 சென்டிகிரேட் உஷ்ணத்தை நம்மால் தாளமுடியவில்லை. 33,000 சென்டிகிரேட் மின்னலின் உஷ்ணம் என்றால் நிதானித்துக் கொள்ளுங்கள்.
எனவே, இந்த மின்னல் தாக்குண்டு, அமெரிக்கா நாட்டில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100 பேர் இறந்து போகிறார்கள். பல ஆயிரக்கணக்கானோர் காயமுறுகிறார்கள்.
காடுகளில் 10,000 தடவைகளுக்கு மேல் தீ பற்றி எரிகிறது இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் பொருள் சேதம் நேரிடுகிறது.
மின்வெட்டும் நேரத்தில் சாதாரணமாக அந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?
பொதுவாக வெட்ட வெளியில் இல்லாமல் ஒரு வீட்டுக்குள்ளே, காரைப்போன்ற மறைவான வாகனத்திற்கு உள்ளோ இருப்பது அவசியம் நீண்டு வளர்ந்த மரங்கள், நடப்பட்டுள்ள கம்பங்களுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக வீட்டிலுள்ள மின்சார சாதனங்களைக் கையாள்வது கூடாது. அந்த நேரத்தில் டெலிபோனை உபயோகிக்கவே கூடாது. இவ்வாறு இன்றைய விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
பாவம்! பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து கொண்டிருந்து அந்த மக்கள் என்ன அறிவார்கள்?
திருக்குர்ஆன் சொல்வது போல், தங்கள் விரல்களை தங்கள் காதுகளில் அடைத்து – இடி முழக்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினார்கள். எனினும் அல்லாஹ் அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளத் தவரிவிட்டார்கள்.
ஸாலிஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஸமூது மக்கள் வரம்புமீறிய குற்றங்களை இழைத்தார்கள். இறைவனின் வலிமைக்கு எதிராக அறைகூவல் விட்டார்கள். இறைவனின் வேதனை கடுமையானது என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்தார்கள். இறைவன் அவர்களைத் தண்டிக்க இடி முழக்கத்தைப் பயன்படுத்தினான் முடிவு? திருக்குர் ஆன் கூறுகிறது.
‘வரம்பு மீறிய அவர்களை இடி முழக்கம் பீடித்துக் கொண்டது அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து கிடக்க, பொழுது விடிந்தது- (அல்குர்ஆன் 11:67).
அக்கிரமக்காரர்கள் அழிந்து விட்ட வரலாறு எவ்வளவு சுருக்கமாக – ஆனால் விளக்கமாக இந்த வசனத்திலே சொல்லப்பட்டிருக்கிறது.
‘அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து கிடக்க பொழுது விடிந்தது’
புலர்ந்த பொழுதுக்குப் பின்னரும் உலகம் வாழ்ந்தது: வாழ்ந்து வருகிறது! ஆனால் அழிந்த மக்களின் வாழ்க்கையிலிருந்து பெற வேண்டிய படிப்பினையை உலகம் பெற வேண்டாமா? அதைத்தான் திருக்குர் ஆன் கேட்கிறது!
இடி முழக்கம் – மின்னொளி பற்றிய 1984 மார்ச் மாத ஸ்பான் (span) என்ற ஆங்கில இதழில், பேராசிரியர் கிரிதர் குழுவினரின் ஆராய்ச்சித் தொகுப்பு ஒரு கட்டுரையாக வெளிவந்திருக்கிறது. அதில் மின்னல், இடி முழக்கத்தின் போது மனிதர்கள் தங்களைக் காப்பாற்ற எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென ஒரு குறிப்பு காணப்படுகிறது அது இதுதான்:
The safest posture to assure out in the open is a position in which you have got your knees and toes tucked together and are hunched over a relatively small amount of yourself in contact with the ground.
இதை வரிக்கு வரி மொழி பெயர்ப்பதை விட ஸ{ஜூது செய்யுங்கள் என எழுதினால் முஸ்லிம்களுக்கு முழுப் பொருளும் புரியும் என நம்புகிறேன்.
இதைப் படித்த போது நான் ஆரம்பத்திலே குறிப்பிட்டுள்ள ‘இடியும் அவன் புகழ்பாடுகிறது’ என்ற திருக்குர்ஆன் வசனம் தான் என் நினைவுக்கு வருகிறது.
ஆமாம் இடியும் அல்லாஹ்வுக்கு அஞ்சி அவன் புகழ் பாடத் தலைப்படும் போது, அதைக் கண்டு அஞ்சும் மனிதன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அல்லாஹ்வுக்கு அஞ்சி அவன் புகழ்பாடும் விதத்தில், ஸஜ்தா செய்வதை விட மேலான மார்க்கம் எது, அதைத் தனே, பேராசிரியர் E.ஃபிலிப் கிரிதரும் அவரைச் சார்ந்த விஞ்ஞானிகளும் இன்று சொல்கிறார்கள். ‘நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடுங்குவோர்கள் எல்லாம் அறிவுள்ள மக்கள் தாம்’ (அல்குர்ஆன்)
“Jazaakallaahu khairan” ஈமான் வெள்ளி விழா மலர் குழு.