அபூ ஆஷிக்
[ இந்தக் கட்டுரையின் நோக்கம் வஹாபிகளுக்கு வக்கலாத்து வாங்குவது அல்ல. அதற்கான அவசியமும் இல்லை. நம்மைநாமே சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும் முயற்சிதான்.
ஊர் நிர்வாகிகளுக்கும் சரி உலமாக்களுக்கும் சரி, மறுமையில் இது குறித்து அல்லாஹ் கேள்வி எழுப்பினால் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்? சிந்திக்க வேண்டாமா?
ஆகவே, இஸ்லாமிய சமுதாயமே! ஒருவரை ஒருவர் எதிர்ப்பதில் காட்டும் தீவிரத்தை, எல்லாவகையிலும் பின்தங்கிப் போய் கிடக்கின்ற நம் சமுதாயத்தை தூக்கி நிறுத்துவதில் காட்டுங்கள்.
வறட்டு கவுரவம், முன்னோர் மீது கொண்ட முரட்டு பக்தி இதையெல்லாம் கொஞ்சம் உரசிப்பார்த்து, அலசிப்பார்த்து ஒற்றுமையுடன் வாழும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.]
உலகில் தீண்டாமையை வேரோடு மாய்த்திட சொல்லாலும் செயலாலும் அருந்தொண்டாற்றிய மார்க்கம் இஸ்லாம் என்பதில் ஐயமில்லை. ஆனால் தற்போது அந்த இஸ்லாத்தில் பரவி வரும் தீண்டாமையைப் பற்றி நாம் கொஞ்சம் கவலைப்படும் கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே அதைக் கொஞ்சம் அலசலாம்.
பெரிய ஜிப்பா, அழகான தாடி, தொப்பி சகிதமாக ஒரு பெரியவர் வந்து கொண்டிருக்கிறார். பார்த்த உடனே சொல்லிவிடலாம் அவர் தப்லீக்கில் ஈடுபாடுள்ள ஆள் என்று. எதிரே ஒரு இளைஞன் வருகிறான். இவருக்கு பக்கத்திலே வந்ததும் சலாம் சொல்கிறான். அந்தப் பெரியவரோ பதில் சொல்லாமல் அவனை ஒரு மாதிரியாக முறைத்துக் கொண்டு செல்கிறார்.
‘என்னங்க, அந்தப் பையன் சலாம் சொன்னானே, பதில் சொல்லாமல் போகிறீர்களே?’ என்று கேட்டதற்கு ‘அவன் ஒரு வஹாபி! அவனுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!’ என்கிறார் அந்தப் பெரியவர்.
ஆனால் வல்லோன் அல்லாஹ் குர்ஆனிலே எவ்வளவு அழகாகச் சொல்கிறான் பாருங்கள்.
‘மேலும் உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால், நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது குறைந்தபட்சம் அதைப்போன்றாவது பதில் சலாம் கூறுங்கள். திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாக இருக்கின்றான்’ குர்ஆன் (4:86)
இங்கே ‘சொன்னவர் யார் என்பதைப் பற்றிய கவலை உனக்குத் தேவையில்லை. சலாம் சொல்லப்பட்டால்பதில் சொல்!’ இதுதானே இறைக் கட்டளை. அதை விடுத்து அவன் வஹாபி, இவன் நஜாத்தீ என்று சொன்னால் என்ன நியாயம்? இதைத்தான் ‘தீண்டாமை’ என்று இங்கே குறிப்பிட்டோம்.
சில நேரங்களில் பள்ளிக்கு தொழுகைக்கு லேட்டாக வருபவர்கள் தங்களில் ஒருவரை இமாமாகக் கொண்டு ஜமாஅத்தாக தொழுவது எல்லா இடங்களிலும் நடக்கின்ற ஒரு காரியம். அதற்கு மார்க்கத்திலும் அனுமதி இருக்கிறது. சில பேர் இருக்கிறார்கள். இப்படி ‘லேட் ஜமாஅத்’ நடந்து கொண்டிருக்கும் போதே தனியாக நின்று தொழுவார்கள்.
‘ஏன் இப்படி?’ என்று கேட்டால் ‘அங்கே இமாமத் செய்பவர் ஒரு ‘வஹாபி’ அவர் பின்னால் நின்று தொழுதால் தொழுகை கூடுமாங்க?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள்.யானைக்கு ஃபாத்திஹா ஓதுவது, பேர் ராசி, பொருத்தம், ஜோதிடம் போன்ற வெளிப்படையான ஆகாத காரியங்களை செய்யும் நபர்களுக்கு பின்னால் நின்று தொழுவது தப்பில்லையாம். இவர்களுக்கு ‘வஹாபி’ பின்னால் நின்று தொழுவது மட்டும் ஹராம். இதாவது பரவாயில்லை. காயல்பட்டினத்தைச் சார்ந்த ஒரு பிரபல பேச்சாளர் மக்காவிலே கூட எந்த வக்தையும் ஜமா அத்தாக தொழுவதில்லை. ஏனென்றால் ‘அங்கே இமாமத் செய்பவர் வஹாபியாம்! தீண்டாமையின் தீவிரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு ஏழை நண்பர். அவருக்கு திருமண வயதில் ஒரு பெண். அவளுக்கு நிறைய இடங்களில் மாப்பிள்ளை பார்த்தார். நிறைய மாப்பிள்ளைகள் வந்தார்கள். நிறைய கேட்டார்கள். நொந்து போய் விட்டார். அவருடைய நண்பர் ஒருவர் அருமையான ஒரு மாப்பிள்ளையை பார்த்துக் கொடுத்தார். பையனுக்கு ரொக்கம், நகை எதுவும் வேண்டாம். மஹர் தந்து கல்யாணம் முடிக்க தயாராக இருப்பதாகச் சொன்னார். இவருக்கு ஏக சந்தோஷம். ஆனால் இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால் இரண்டு பேருக்கும் பயங்கர சண்டை. இவர் அந்த நண்பரை தாறுமாறாக ஏசிக் கொண்டிருந்தார்.
‘பாவி, நான் ஏழைங்கிறதுக்காக என் பிள்ளையைக் கொண்டு நரகத்திலே தள்ளப்பார்த்தியே! நீ உருப்பிடுவியா? என்றெல்லாம் பேசினார். விஷயம் என்னவென்று விசாரித்தால் அந்த நண்பர் பார்த்த மாப்பிள்ளை வஹாபியாம். தன் மகளுக்கு கல்யாணம் ஆகாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு தீண்டாமை தீயை வளர்த்துவிட்டிருக்கிறார்கள்.
வஹாபிகளுக்கு மட்டுமல்ல புதிதாக இஸ்லாத்தில் இணைகின்ற ‘நவ் முஸ்லிம்கள்’ என்றழைக்கப்படுபவர்களுக்கும் இதுதான் கதி. ஒரு இன்ஜினியர் மாப்பிள்ளை அவருடைய அப்பா இருபத்தைந்து வருடத்தி;ற்கு முன்னால் இஸ்லாத்தில் இணைந்தவர். அந்த காரணத்துக்காகவே, அவரது மகனுக்கு பெண் கொடுக்க நிறைய பேர் தயாராக இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒருவர் மௌலிது ஓதுவது, தர்காவுக்கு போவது, சுன்னத், காதுகுத்து, சடங்கு இவைகளையெல்லாம் பெரிதாக செய்வது, கையிலே, கழுத்திலே தாயத்து கட்டுவது, இறந்து போனவர்களுக்கு 3ம்நாள், 4ம்நாள் பாத்திஹா ஓதுவது இதையெல்லாம் செய்தால் அவர் சுன்னத் ஜமாஅத். எவர் இதையெல்லாம் செய்யவில்லையோ அவர் வஹாபி! அப்படியா! இன்றைக்கு இதெல்லாம் செய்பவர்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள் என்பதற்காக இதுதான் மார்க்கம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களா? தெரிந்து கொள்ளுங்கள்! இஸ்லாத்தில் என்றைக்குமே மெஜாரிட்டிக்கு மதிப்பில்லை. இதோ அல்லாஹ் குர்ஆனிலே சொல்வதைப் பாருங்கள்.
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆயினும் (அவனோடு மற்றவர்களையும்) இணையாக்குகிறார்கள்’. குர்ஆன் (12: 106)’மேலும் (நபியே) உலகில் வாழும் மக்களின் பெரும்பான்மைக்கு நீர் கீழ்படிவீராயின் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறழச்செய்து விடுவார்கள். அவர்களோ வெறும் யூகங்களையே பின்பற்றுகிறார்கள். மேலும் கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றார்கள்’ குர்ஆன் (6:16)
அல்லாஹ்வின் நபிக்கே பெரும்பான்மை குறித்து அல்லாஹ் எச்சரிக்கை விடும் போது, நாமெல்லாம் எம்மாத்திரம்?
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மஹர்தந்து மணமுடிக்க முன்வருவது கூட எதிர்விளைவை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் வர ஆரம்பித்துவிட்டது. இவையெல்லாம் விட பெரிய கொடுமை, அல்லாஹ்வை தொழவரும் பள்ளிகளில் நடக்கின்றது. நிறைய பள்ளிகளில் வைக்கப்பட்டு இருக்கும் போர்டுகளைப் பார்க்கலாம்.’தலையில் தொப்பியில்லாமலும், விரலை அசைத்துக் கொண்டும், நான்கு மத்ஹபுகளை பின்பற்றாதவர்களும் இப்பள்ளியில் தொழ அனுமதியில்லை’ என்பதே அந்த போர்டு.
ஹராமான வட்டியை தொழிலாகக் கொண்டவன், வாரத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை தொழுபவன், பைனான்ஸ் செய்பவன், பிராந்தி கடை நடத்துபவன்… இவர்களையெல்லாம் பள்ளிக்கு வரலாம். ஆனால் இதையெல்லாம் வெளிப்படையாக எதிர்ப்பவன் பள்ளிக்கு வரக்கூடாது. மீறி வந்தால் ‘சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எழுதிவைத்து உள்ளார்கள். எந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். மார்க்கச் சட்டப்படியா ? அல்லது இ.பீ.கோ சட்டப்படியா ? மார்க்கப்படி முடியுமா?
அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்.’மேலும் மஸ்ஜித்களில் அல்லாஹ்வின் பெயர் நினைவு கூறப்படுவதை எவன் தடுக்கின்றானோ, மேலும் பாழாக்க முயற்சிக்கின்றானோ அவனைவிட கொடிய அக்கிரமக்காரன் யார்? அத்தகையவர்கள்தான் அந்த இறை இல்லங்களுக்குள் நுழையவே அருகதையற்றவர்களாவர்……’ குர்ஆன் (2:114)’
வஹாபிகள் அவர்கள் பாணியில் தொழுதுவிட்டுப் போவதில் குழப்பம் எங்கே வந்தது?’ என்று கேட்டால், ஒரு பள்ளியில் எல்லோரும் ஒரே மாதிரி தொழுது கொண்டிருக்கும் போது இவர்கள் மட்டும் வேறு மாதிரி தொழுதால் குழப்பமாகத் தெரியாதா? என்று கேட்கிறார்கள்.
சரி வஹாபிகளை விடுங்கள். முழுக்க முழுக்க சுன்னத் ஜமாஅத்தார்கள் மட்டுமே தொழக்கூடிய பள்ளிகளில் எல்லோரும் ஒரே மாதிரிதான் தொழுகிறார்களா? ஒருவர் வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடுவே தக்பீர் கட்டுகிறார். இன்னொருவர் தொப்புளுக்கு கீழே கட்டுகிறார். இமாம் ஃபாத்திஹா சூரா ஓதி முடிந்ததும் ஒருவர் சப்தமாக ‘ஆமீன்’ சொல்கிறார். மற்றொருவர் மவுனமாக நிற்கிறார். ‘சமியல்லாஹுலிமன் ஹமிதா’ என்று இரண்டு பேர் கையைத் தூக்க, இரண்டு பேர் தூக்காமல் இருக்கிறார்கள்.
சுபுஹு தொழுகையில் இமாம் ‘குனூத்’ ஒத பாதிபேர் கையை தூக்கி ஆமீன் சொல்ல, பாதிபேர் கையை கீழே போட்டபடி நிற்கிறார்கள். இப்படி நிறைய. இன்னும் சில பேர் இருக்கிறார்கள். சுபுஹு ஜமாஅத் ஆரம்பித்த பிறகு வந்து மின்னல் வேகத்தில் தனியாக தொழுது கொண்டிருப்பார்கள். என்ன தொழுகை என்று பார்த்தால், சுபுஹுடைய முந்தின சுன்னத் என்பார்கள்.
‘இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்த நேரத் தொழுகையைத் தவிர வேறு தொழுகை இல்லை’ என்று ஹதீஸ் இருப்பது இவர்களுக்கு தெரியாதா?ஒரு ஹனஃபி பள்ளியிலே சுபுஹ_ தொழக்கூழய ஷாஃபி மத்ஹபுக்காரர் குனூத் ஓதாதற்காக சலாம் வாங்குமுன் ‘மறதி சஜதா’ செய்வதை சகஜமாகப் பார்க்கலாம். அதாவது தொழுகையில் ஏதாவது மறந்து விட்டால் செய்வதுதான் ‘மறதி சஜதா’.
ஆனால் வேண்டுமென்றே விடப்பட்ட குனூத்துக்காக சஜதா செய்வது என்ன நியாயம்? ஹனஃபி பள்ளி ஒன்றில் சப்தமிட்டு ஆமீன் சொன்னதற்காக நண்பர் ஒருவரை ஜமாஅத் நிர்வாகிகள் கண்டித்த கதையும் உண்டு. இத்தனை இத்தனை முரண்பாடுகளும் காலகாலமாய் நடந்து கொண்டிருக்க, வஹாபிகளால் மட்டும் புதிதாக குழப்பம் வருகிறது என்று சொன்னால் எந்தவகையில் அது நியாயம்?
இது போன்ற தீண்டாமை நடவடிக்கைகளால் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால் வஹாபிகள் என்றழைக்கப்படுபவர்களின் வளர்ச்சி விகிதம் கணிசமான முறையில் வளர்ந்திருக்கிறது. ஊருக்கு ஊர் அடிதடியும், ரகளையும் வளர்ந்திருக்கிறது. தனிப்பள்ளி, தனி ஜமாஅத், தனிகபர்ஸ்தான் என்று பிளவுபட்டு போய்க்கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் வஹாபிகளுக்கு வக்கலாத்து வாங்குவது அல்ல. அதற்கான அவசியமும் இல்லை. நம்மைநாமே சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும் முயற்சிதான்.
ஊர் நிர்வாகிகளுக்கும் சரி உலமாக்களுக்கும் சரி, மறுமையில் இது குறித்து அல்லாஹ் கேள்வி எழுப்பினால் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்? சிந்திக்க வேண்டாமா?
ஆகவே, இஸ்லாமிய சமுதாயமே! ஒருவரை ஒருவர் எதிர்ப்பதில் காட்டும் தீவிரத்தை எல்லாவகையிலும் பின்தங்கிப் போய் கிடக்கின்ற நம் சமுதாயத்தை தூக்கி நிறுத்துவதில் காட்டுங்கள்.
வறட்டு கவுரவம், முன்னோர் மீது கொண்ட முரட்டு பக்தி இதையெல்லாம் கொஞ்சம் உரசிப்பார்த்து, அலசிப்பார்த்து ஒற்றுமையுடன் வாழும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக.