மனநோயாளிக்கு சிகிச்சை செய்வது எவ்வாறு?
அதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா?
நிய்யத் வாயால் சொல்ல வேண்டுமா?
எந்தச் சொத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டும்?
மனநோயாளிக்கு சிகிச்சை செய்வது எவ்வாறு?
கேள்வி : ஒரு முஃமின் மனநோய்க்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறதா? அவ்வாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வது எவ்வாறு?
ஃபத்வா: ஒரு மனிதன் கடந்த காலத்தை எண்ணிக் கைசேதப்படுவதானாலும் எதிர்காலம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதானாலும் மனநோய்க்கு உள்ளாகிறான்.
உடலில் ஏற்படுகின்ற நோய்களை விட உள நோய் அதிகம் பாதிப்பை உண்ணுபண்ணுகிறது.
இதற்கு பௌதீக ரீதியான சிகிச்சைகளை விட ஆன்மீக ரீதியான சிகிச்சையே அதிகம வெற்றியளிக்கக் கூடியது.
கவலை, துக்கம், கைசேதம் போன்றவற்றிற்கு உள்ளாகும் ஒரு முஃமின் பின்வரும் துஆவை ஒதினால் அவையனைத்தும் அகன்று விடும் என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)
அல்லாஹும்ம இன்னீ அப்துக்க, வப்னு அப்திக்க, வப்னு அமதிக்க, நாஸியத்தீ பிஎதிக்க, மாலின் பிய்ய ஹுக்முக்க, அதுலுன் பிய்ய கலாவுக்க, அஸ்அலுக்க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, சம்மைத்த பிஹி நப்ஸக்க, அவ் அன்சல்தஹு பீ கிதாபிக அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவ் இஸ்தஃதர்த்த பிஹி பீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அலீம ரபீஅ கல்பீ, வநூர சதுரீ, வஜலாஅ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ.
(பொருள்: யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண் – ஒரு பெண்ணின் மகனாவேன். எனது குடும்பி உனது கையில் இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய். அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய். அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய். அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.) அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும் எனது கவலையை மறைக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!)
இது மனநோய்க்கான ஓர் ஆன்மீக மருந்தாகும்.
இது போன்ற இன்னும் பல துஆக்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்திருக்கிறாhகள். அவற்றை ஸஹீஹான துஆ புத்தகங்களில் காணலாம்.
எனினும் இன்று ஆன்மீக மருத்துவத்தை மக்கள் அலட்சியப்படுத்துவதற்கு ஈமான் பலவீனமடைந்ததே காரணமாகும். இதனால் பௌதீக மருத்துவத்தில் அதிகம் தங்கியிருக்க ஆரம்பித்து விட்டனர்.
ஈமான் உறுதியாக இருந்தால் ஆன்மீக ரீதியான மருத்துவம் அதிகம் தாக்கம் கொடுக்கக் கூடியதாகவும் விரைவில் சுகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
ஒரு முறை நபி صلى الله عليه وسلم அவர்கள் சில தோழர்களை ஒரு பயணம் அனுப்பி வைத்தார்கள். அத்தோழர்கள் செல்கிற வழியில் ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வேளை அந்த ஊர் மக்கள் இவர்களிடம் வந்து தமது தலைவருக்கு ஏதோ விஷஜந்து தீண்டி விட்டதாகவும் அதற்கு மந்திரிக்குமாறும் வேண்டிக் கொண்டனர். ஸஹாபாக்களில் ஒருவர் முன்வந்து சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி மந்திரித்தார். அவருக்கு உடனே குணம் கிடைத்தது. (ஹதீஸின் சுருக்கம் – புகாரி)
சூரத்துல் ஃபாதிஹாவை ஓதியவர் நிறைவான ஈமானிய உணர்வுடன் ஓதினார். பயன் கிடைத்தது.
ஆனால் இன்று முஸ்லிம்களின் உள்ளங்களில் மார்க்கமும் ஈமானும் பலவீனமடைந்து விட்டது. மக்கள் வெளிப்படையான விஷயங்களில் மாத்திரம் தங்கியிருக்கிற நிலை தோன்றியுள்ளது. இதனால்தான் இத்தனை சோதனைகள்!
அதே வேளை இந்தக் கூட்டத்திற்கு நேர் எதிராக ஒரு கூட்டம் உருவாகி மந்திரம் வைத்தியம் என்ற பெயரில் மனித மனங்களோடும் அவர்களது பொருளாதாரத்தோடும் விளையாடுவதைக் காண முடிகிறது. இவர்கள் உண்மையான மருத்துவர்களோ நபிவழியில் மந்திரிக்கக்கூடியவர்களோ அல்லர். மாறாக இவர்கள் மக்களின் பணத்தை அனியாயமாகச் சாப்பிடுபவர்கள்.
ஆக, ஆன்மீக மருத்துவத்தை ஒரு கூட்டம் ஒதுக்கித் தள்ள இன்னுமொரு கூட்டம் அதைவைத்து தொழில் செய்யவும் ஏமாற்றவும் செய்கிறது. இந்த இரண்டு நிலைக்கும் நடுவே இருக்கக் கூடியவர்களே உண்மை முஸ்லிம்கள்.
அதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா?
கேள்வி : மக்களுள் பெரும்பாலோர் தொழும் போது தேவையில்லாத அசைவுகளை அதிகப்படுத்துகின்றனர். ஒரு செயலை மூன்று தடவைக்கு மேல் செய்தால் தொழுகை பயனற்றதாகி விடும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமுண்டா? தொழுகையின் உயிரோட்டத்தைப் பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடக்கூடிய சகோதரர்களுக்கு நீங்கள் வழங்கக் கூடிய உபதேசம் என்ன?
ஃபத்வா: தொழுகையில் அமைதியைப் பேணுவது முஃமின்கள் மீது கடமையாகும். ஏனெனில், ‘துமஃனீனத்’ எனும் அமைதியைப் பேணுவது தொழுகையின் கடமைகளில் உள்ளதாகும். தொழுகையில் நிதானம் இல்லாமல் அவசர அவசரமாகத் தொழுத ஒருவரை நபி (ஸல்) அவர்கள் மீண்டும் தொழுமாறு ஏவினார்கள். (நூல்கள் : புஹாரி, முஸ்லிம்)
தொழுகையில் இறையச்சத்துடன் அமைதியாக இருப்பதை ஈமானுக்கு இலக்கணமாக இறைமறை கூறுகிறது:
‘முஃமின்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பயபக்தியுடன் இருப்பார்கள்’. (அல்குர்ஆன் அல்முஃமினூன் 23:1,2)
எனவே தொழுது கொண்டிருக்கும் போது ஆடையை ஒழுங்கு படுத்துதல், தாடியைத் தடவுதல், (கைக் கடிகாரத்தைச் சரி செய்தல்) போன்ற செயல்களில் ஈடுபடுவது வெறுக்கத் தக்கது. தொடர்ந்து இவ்வாறு செய்வது – நமது அறிவுக்கு எட்டியவரை – தொழுகையைப் பயனற்றதாக்கி விடும்.
இத்தனை தடவை ஒரு செயலைத் தொடர்ந்து செய்தால் தான் தொழுகை பயனற்றதாகி விடும் என்று வரையறை செய்ய முடியாது. இவ்வாறு கூறுவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. தொழுபவருடைய எண்ணத்தில், தான் மேற்கொண்ட வீணான செயல் தொழுகையின் உயிரோட்டத்தைப் பாதித்து விட்டதைப் போன்ற உணர்வு தோன்றி, அத்தொழுகை கடமையானதாகவும் இருந்தால், அத்தொழுகையைத் திருப்பித் தொழுவதோடு, தவ்பாவும் செய்து கொள்ள வேண்டும்.
நிய்யத் வாயால் சொல்ல வேண்டுமா?
கேள்வி : நிய்யத்தை வாயால் மொழியக் கூடாது என்று சொல்கிறார்கள், ஹஜ் உம்ராவில் இஹ்ராமின் போது மட்டும் நிய்யத்தை வாயால் மொழிய வேண்டும் என்று சொல்கிறார்களே! நிய்யத்தை வாயால் மொழியக் கூடாது என்பதற்கு இது முரணாக உள்ளதே? விளக்கவும்.
‘செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொருத்ததே! அவரவருக்கு எண்ணியது தான் கிடைக்கும்’ இது நபிமொழி. அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்கள் : புஹாரி – 1, முஸ்லிம் – 4692, திர்மித் -1698)
எந்தச் செயலுக்கும் நிய்யத்தை மொழிவது அவசியமில்லை தான். எவரும் தான் நினைப்பதை தனக்குத் தானே சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.
உதாரணமாக ஒருவர் மதுரையிலிருந்து திருச்சிக்கு நாளை செல்ல நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அவர் நான் நாளை மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்ல நினைக்கிறேன் என்று தனக்குத் தானே வாயால் சொல்லிக் கொண்டிருப்பதில்லை.
அது போலவே தொழுகை நோன்பு ஜக்காத் இது போன்று இன்னபிற வணக்கங்களுக்கும் நிய்யத்தை வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நபி صلى الله عليه وسلم அவர்களும் நிய்யத்தை வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லித்தரவும் இல்லை.
ஆனால் ஹஜ் உம்ராவுக்கு மட்டும் நிய்யத்தை வாயால் மொழிய வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நிய்யத் என்றால் மனதால் நினைப்பது தானே! ஏன் இங்கே வாயால் மொழிய வேண்டும்? இதற்கு விடை சொல்லியாக வேண்டும்.
உண்மையென்னவென்றால் ஹஜ் உம்ராவின் போது கூட நாம் நிய்யத்தை மனதால் தான் நினைக்க வேண்டும். வாயால் சொல்லக் கூடாது தான். இதற்குறிய ஆதாரம் என்ன என்பதையும் நாம் காட்ட வேண்டும் இல்லையா?
தொழுகையில் நிய்யத்தை சொல்கிறேன் என்ற பெயரில் ‘நவைத்து அன்உ ஸல்லிய லில்லாஹி..’ என்று ஆரம்பிப்பதை ஓதுவார்கள். அதாவது ‘இந்தத் தொழுகையை அல்லாஹ்வுக்காக தொழுவதற்கு நிய்யத்து வைக்கிறேன்..’ என்பது அதன் பொருள்.
இது போலவே நோன்பு, ‘நவைத்து சவ்ம அதின்.. ‘ நோன்பு வைக்க நிய்யத்துச் செய்கிறேன்.. என்று ஆரம்பிக்கிறது.
ஆனால் ஹஜ் உம்ராவில் வாயால் சொல்லப்படும் நிய்யத்து இப்படி ஆரம்பிக்க வில்லை.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியதாவது:
‘நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களோடு ஹஜ்ஜுக்காக சென்றோம். அப்போது ‘லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்’ எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்த போது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நாங்கள் அவ்வாறே ஆக்கினோம்’. (நூல் : புஹாரி – 1570) அனஸ்
رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்:..பைதா என்னுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் – உம்ராவுக்காக நபி صلى الله عليه وسلم தல்பியா கூறினார்கள்… (நூல் : புஹாரி – 1714)
‘லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரத்தன்’ என்ற வாசகம் நிய்யத்தை வாயால் மொழிவதற்குறிய வாசகம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும்.
இது தல்பியாவின் ஒரு பகுதி என்பதை அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஹதீஸ்; தெளிவாகவே கூறுகிறது. அதோடு நபி
صلى الله عليه وسلم அவர்கள் ‘லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரத்தன்’ என்று சொல்வதை நிய்யத் என்று நாம் அறிந்த வரை எந்த இடத்திலும் சொல்ல வில்லை.
ஆக மனதால் நினைப்பது தான் நிய்யத், வாயால் சொல்லக் கூடாது என்பது தெள்ளத் தெளிவு.
எந்தச் சொத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டும்?
கேள்வி : ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு ஒரு வருடம் மட்டுமே ஜகாத் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க தேவையில்லை என்று ஒருவர் கூறினார். உங்களது கேள்வி எண் 25 இல் ‘ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுப்பவர்’ என்ற வாசகத்திற்கு விளக்கம் தாருங்கள். அதே சொத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு சொத்திற்கா?
ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? அதாவது எனது சேமிப்பிற்காக ஒரு கிலோ தங்கம் வாங்கினேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து 2.5 சதவிகிதம் ஜக்காத்தை முதல் வருடம் மட்டும் கொடுத்து விட்டால் போதுமா? அல்லது அதற்கு ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தாருங்கள்.
‘நிஸாப்’ என்ற குறிப்பிட்ட அளவை நம்மிடமுள்ள நகையோ அல்லது பணமோ அடைந்து விட்டால் அதற்காக ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டுமென்பதே எல்லா இஸ்லாமிய அறிஞர்களதும் முடிவாகும்.
அதற்குச் சான்றாக பல ஹதீஸ்கள் காணப்பட்ட போதிலும் பின்வரும் ஹதீஸை உங்கள் கவனத்திற்கு தருகிறோம்.
‘மூன்று விஷயங்களைச் செய்யும் ஒருவர் ஈமானின் சுவையை அனுபவித்தவராவார். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை என்று நம்பிக்கை கொண்டு, தனது செல்வங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவர்…’ என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காழிரி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூது) இந்த ஹதீஸ் ஸஹீஹானது என அஷ்ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஸஹீஹ் சுனன் அபூதாவூது, ஹதீஸ் எண் 1580)
இதுதான் முன்பு கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான நமது பதிலும் ஆகும்.
1. வார்த்தைப் பிரயோகம்:ஸகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு திரும்பவும் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை என்றிருந்தால் அதை நபி صلى الله عليه وسلم அவர்கள் தெளிவான வார்த்தைகளில் சொல்லி இருப்பார்கள்.
‘ஸகாத் கொடுக்கப்படாத தனது செல்வங்களுக்கு தவறாமல் ஸகாத் கொடுப்பவர்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.
‘தனது செல்வங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவர்’ என்ற வாசகம் ஒரே செல்வத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவரைக் குறிக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
தனது செல்வம் என்றால் தனது செல்வம் முழுமைக்கும் என்பது பொருள். அவ்வாறு இல்லை என்றால் அது எந்த செல்வம் என்பது குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
2. ஸஹீஹான ஹதீஸ்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் நம்பகத்தன்மை அற்றது என்று சிலர் கூறி வருகிறார்கள். அதற்குரிய விளக்கத்தை தந்தால் தான் இந்த ஹதீஸை முழுமையாக விளக்கியதாக ஆகும்.
விமர்சனம்: 1
இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் அபூதாவூது அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பவரின் ஏட்டிலிருந்து பதிவு செய்ததாகவும், அந்த ஏட்டை அம்ரு பின் ஹாரிஸ் என்பவரது குடும்பத்தினரிடமிருந்து பெற்றதாகவும் கூறுகிறார்கள். அம்ரு பின் ஹாரிஸ் பற்றிய விபரம் கிடைக்கவில்லை. இவரது நேர்மை நிரூபணமாகவில்லை என்று தஹபீ அவர்கள் கூறுகிறார்கள்.
பதில்: அம்ரு பின் ஹாரிஸ் அவர்களின் ‘நேர்மை நிரூபணமாகவில்லை’ என்ற வாசகத்திற்கு பதிலாக ‘நேர்மை அறியப்படவில்லை’ என்ற வாசகத்தையே தஹபி அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி மீஸானுல் இஃதிலால் என்ற நூலில் காணப்படுகிறது.
தஹபி அவர்கள் எழுதிய அல்காஷிப் என்ற நூலில் அம்ரு பின் ஹாரிஸ் அவர்கள் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார் என்று எழுதி, முந்தைய தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அதனால் அவர் நம்பகமானவரே.
விமர்சனம்: 2
அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை.
ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாக வில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.
பதில்: இமாம் அபூதாவூது அவர்கள் இது அப்துல்லாஹ் பின் ஸாலிமின் ஏடுதான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு தான் அதை தனது நூலில் பதிவு செய்கிறார்கள்.. இந்த விமர்சனம் இமாம் அபூதாவூது அவர்கள் மீது களங்கம் ஏற்படுத்துவதாகும்.
இங்கே ஏடு ஒன்று கைமாறி இருக்கிறது அவ்வளவு தான். அம்ரு பின் ஹாரிஸ் அவர்களோ அவர்களின் குடும்பத்தினரோ இந்த ஹதீஸை அறிவிப்பதில் ஈடுபட வில்லை. அதனால் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. அறிவிப்பாளராக இல்லாதவர்கள் பற்றிய விமர்சனம் தேவையில்லை என்பதால் அது பதிவு செய்யப்பட்டிருக்காது. இந்த ஹதீஸை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இங்கே தெளிவாகத் தெரிகிறது.
மேலும் இந்த விமர்சனம் ஹதீஸ் துறையில் புதுமையான விமர்சனமாகும்.
விமர்சனம்: 3
அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காளிரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இந்த ஹதீஸை நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் என்று சில நூல்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபித்தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவு கோல் இவருக்குப் பொருந்த வில்லை.
நபித் தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித்தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை.
‘நான் நபியிடம் கேட்டேன்’ என்றிருப்பதற்கு பதிலாக ‘நபி சொன்னார்கள்’ என்றுதான் இருக்கிறது. இதுவும் இவர் ஸஹாபி என்பதை நிரூபிக்க வில்லை.
நபித்தோழரோ அல்லது தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்க வில்லை.
நபித்தோழரைத் தீர்மானிப்பதற்குரிய தத்ரீப் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாக வில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித்தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.
பதில்: இவர் நபித்தோழர் தான் என்று பலர் கூறியிருப்பதும் அவை பல நூல்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இவர் நபித்தோழர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்யுமே தவிர சந்தேகத்தை ஏற்படுத்தாது.
இவர் நபித்தோழர் தான் என்பதை கீழ்காணும் நூல்களில் பார்க்கலாம்..
1.தக்ரீப் அத்தஹ்ரீப் 3631, 2.அல்காசுஃப் 2995, 3.தஹ்தீப் அல்கமால் 3583, 4.அல்இஸாபா 4968, 5.தஹ்தீபுத் தஹ்தீப், 6.மீஸானுல் இஃதிலால் 7.தஹ்தீபுல் கமால் இவைபோன்ற இன்னும் ஏராளமான கிதாபுகளில் நபித்தோழர் என்பது கூறப்பட்டுள்ளது.
இதுவே இவர் நபித்தோழர் என்பதை சந்தேகமற நிரூபிக்கிறது. மற்ற துணை விமர்சனங்கள் அவ்வளவு வலுவானவை அல்ல.
விமர்சனம்: 4
இந்த ஹதீஸில் வரக்கூடிய யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் இடையே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். அதனால் இது அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்பது அவர்களின் விமர்சனம்.
பதில்: ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் சொல்கிறார்கள்: அபூதாவூதில் வரக்கூடிய ஹதீஸில் தான் ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். ஆனால் இப்னு ஹஜர் அவர்கள் அதே அறிவிப்பாளர் வரிசையை பதிவு செய்யும் போது யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் இடையே விடுபட்டுள்ள அப்துல்லாஹ் என்பவரை பதிவு செய்து, இது தொடர்பு அறுந்த ஹதீஸ் இல்லை என்கிறார்கள். இமாம் அபூதாவூது அவர்களின் மூலப் பிரதியில் அப்துல்லாஹ் என்பவர் விடுபடாமல் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும். அதனால் இதில் அறிவிப்பாளர் விடுபட வில்லை.
– “Jazaakaallaahu khairan” Athrai Thameem & muslim_guys