“விஞ்ஞான விபரீதங்கள்”
ரஹ்மத் ராஜகுமாரன்
“உனக்கு ஏதாவது தீங்கு வந்தால் அது உன்னால் தான் வந்தது.” குர்ஆன் (4:79)
விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராது. ஆனால் பொறுப்பில்லாத விஞ்ஞான வளர்ச்சி நிச்சயம் பேரழிவைத் தரும். மனிதன் இன்று தன் சமுதாயத்தையே அழித்துவிடும் அளவுக்கு அணு ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான். அணுசக்தி விஞ்ஞானம் என்பது குடிசைத் தொழில் போல ஆகிவிட்டது. அணு ஆயுதங்களின் உள்ளே உள்ள ரேடியோ ஆக்டிவ் கதிர் வீச்சு சமாச்சாரங்களை உடனடியாகக் கொல்வது கஷ்டம்.
அவற்றை வெடிக்க விடாமல் வைத்திருக்கலாம். ஆனால் அவற்றின் கதிர் வீச்சை அணைக்க ஆணிரக்கணக்கான வருஷங்கள் ஆகும். அணுசக்தி உற்பத்தி செய்த பின் அந்த யுரேனியத்தின் சாம்பலை என்ன செய்தாலும் எங்கு புதைத்தாலும் அங்கு கதிர்வீச்சு நிச்சயம் கசியும் ஆபத்து உண்டு. நிறைய தேள்களை மடியில் கட்டிக் கொண்டு பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டும் நவீன உலகத்தில் பிரவேசிக்கிறோம்.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ததைப் போன்று பொறுப்பற்ற செயல் மனித சரித்திரத்தில் இல்லை.
“தீமை செய்தவர்களையே தீமை சூழ்ந்து கொள்ளும் குர்ஆன்” (35:43)
அல்லாஹ்வின் வேதத்தை – இந்த வரியை யார் அவர்களுக்கு ஓதிக்காட்டுவது? அடுத்த வசனத்தை கொஞ்சம் பாருங்கள் விஞ்ஞானத்தின் அகங்காரங்கள் தெரியவரும்.
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களின் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது.” (குர்ஆன் 30:41).
கடலிலும், சமுத்திரங்களிலும் உள்ள உயிரினங்கள் இன்னும் 30 வருஷங்களில் செத்துப்போகும் என்று கடல்வாழ்வின் உயிரியலாளர்கள் சொல்கிறார்கள். சென்ற 60 வருஷங்களில் நாம் கடலில் கொட்டிய குப்பைகள் அளவில்லாதவை பிரிட்டன் மட்டுமே ஐரிஷ் கடலில் வருஷத்துக்கு ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் டன் தொழிற்சாலைக் குப்பையையும், வீட்டுக் குப்பையையும் கொட்டுகிறது. இங்கிலீஷ் கால்வாயில் மட்டும் 80 ஆயிரம் டன் கொட்டுகிறது. மொத்தம் தன்னைச் சுற்றியுள்ள கடல்களில் பிரிட்டன் 2.5 கோடி டன் குப்பையை கொட்டியிருக்கிறது.
கடலில் கொட்டும் குப்பை மீன்களை உடனே கொல்லுவதில்லை. அதில் பொதிந்திருக்கும் ரசாயன விஷங்கள் மெல்ல மெல்லத்தான் கடலின் உயிரினங்களின் உயிரை குடிக்கும். இதனால் சில் மீன்களின் வம்சங்களே நசிந்து போய் எதிர்காலத்தில் மீன் சாப்பிடும் பழக்கத்தைவிட வேண்டியது வரும். இதனால் நம் (Food Cycle) உணவுச் சக்கரம் பாதிப்புக்குள்ளாகும்.அமெரிக்க தேசத்து அலங்கார பொருட்களில் ஒன்றான ‘ஏரோஸல்’ என்ற மருந்தும் செண்டுமாக ‘புஸ்’ அடித்துக் கொள்கிறார்களே அதிலுள்ள ஹலோ கார்பன்கள் அதிக நாள் நம்மைச்சுற்றி விலகாமல் இருந்துவிட்டு பின் நமக்கு ஹலோ சொல்லிவிட்டு பூமியின் மேற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் ‘ஓஸோன்’ வாயுவைத் தின்றுவிடுகிறது. நம் பிரிட்ஜில் பயன்படுத்தும் ‘பிரியான்’ என்கிற வாயும் ஒஸோனை ஓட்டையாக்கிவிடுகிறது.
அந்த ஓஸோன் வாயுபடலம் நம் பூமிக்கு வரும் சூரிய வெளிச்சத்திற்கு பில்டர் போய்விடுகிறது விளைவு? அல்ட்ரா வயலட் வெளிச்சம் நம் மேல் அதிகம் பட ஒரு வகையான தோல் கான்சர் அதிகரிக்கிறது. இதுமட்டுமல்ல சூரிய வெளிச்சத்தில் அல்ட்ராவயலட் அதிகரித் தால் பற்பல சின்னச் சின்ன நன்மை செய்யும் பாக்டீரியாக்களெல்லாம் செத்துப் போய் நம்முடைய உணவுச்சக்கரம் இங்கேயும் பாதிக்கப்பட்டு என்ன விளைவு ஏற்படும் என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட உதாரணங்களைத் தவிர இன்னும் எத்தனையோ விஞ்ஞானத்தின் விபரீதங்கள் கடலையும், தரையையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இப்போது (30:41) வசனத்தை திரும்ப படியுங்கள்.
ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் நோபல் தற்செயலாக ‘டைனமைட்’ கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிஸரினைத் திரவ ரூபத்தில் இடம் மாற்றும் போது அது வெடித்துவிடும் அசௌகரியம் இருப்பதால். ஒரு நாள் நைட்ரோ கிளிஸரினைப் பக்கத்தில் வைத்திருந்த எரிமலை மண்ணை ‘கிளல்கர்’ என்னும் மண்ணுடன் கலக்க அது சட்டென கட்டி, தட்டிப்போக அதை எடுத்துப் போவது சுலபமாயிற்று. அப்போது ஆரம்பித்த ரத்தகளறி இன்று வரையிலும் அனத்தம். ஜப்பான் நாஹஸாகி, ஹிரோ~pமாவின் வடுவும் மறையவில்லை புண்ணும் ஆற வில்லை.
மக்களின் நன்னைக்காக கண்டுபிடிக்கப்பட்ட அணுசக்தி மக்களை சாவுக்கு அழைத்துப் போனது.
“மனிதர்கள் தீமையைக் கொண்டும் சோதிக்கப்படுவார்கள்.” குர்ஆன் (7:168)”நன்மையுடன் தீமையைக் கலக்கிறார்கள்” (9:102).
போபால் விஷ வாயு விபத்தில் ஆதாரமான ஒரு செய்தியை நாம் எல்லோரும் மறந்து போகிறோம். போபால் போன்ற அத்தனை பெரிய நகருக்கு அருகே அந்த பாக்டரி அமைக்க அனுமதி தந்தவர்கள் யார்? அவர்கள் எங்கே? அவர்களுக்கு யாராவது தண்டனை கொடுத்தார்களா? எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டது. இது மாதிரி ரஷியா-சொர்னாபில் அணு உலை பாதிப்பில் பறிபோன மனித உயிர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது.
“தீமை செய்தோர் அதற்கான கூலியைப் பெறுவர்.” (28:84) அல்லாஹ்வின் அரசாட்சியில்.
நியூக்ளியர் ஃபியூயல் ப்ளாண்டில் அணுசக்திக்கும் அணு ஆராய்ச்சிக்குமு; தேவையான என்ரிச்மெண்ட் போன்ற காரியங்கள் செய்கிறார்கள். அதில் வேலை செய்பவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் தான் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே கருவிகளின் அருகில் வேலை செய்கிறார்கள். இவர்களும் ஆபத்தின் நிழலில் தான் இருக்கிறார்கள். ரேடார் கருகவிகளை பயன்படுத்துபவர்களின் கதியும் அஃதே இவர்களுக்கெல்லாம் ரத்த கான்ஸர் வர சாத்தியக்கூறு அதிகம் சிலருக்கு இதய நோய் பலருக்கு கண்களில் காட்டராக்ட்.
மைக்ரோவேவ் ஓவன் என்று மிக எளிதாக அடுப்பில்லாமல் நெருப்பில்லமால் சமைக்கும் சாதனம் வந்திருக்கிறது. அதிலும் காட்டராக்ட் ஆபத்து அதிகம் என்று சொன்ன டாக்டரின் வாயை அடைத்து வைத்திருக்க காரணம் வியாபாரம் பெப்சி, கோலா பற்றி அதிகம் சொன்ன பூச்சிக்கொல்லி எதர்ப்பாளர்களுக்கு மைக்ரோவேவ் ஓவன் எப்படி தெரியாமல் போனது? தெரியவில்லை.
“தீமைகள் அவர்களுக்கு அழகாகத் தோன்றுகின்றன. (குர்ஆன் 9:37) பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஒரு பெரிய பணசாம்ராஜ்யம் வருஷத்துக்கு சுமார் 200 கோடி டன் பூச்சி மருந்து அடிக்கிறோம். அமெரிக்கா மட்டும் 600 கோடி டாலர் வருஷத்திற்கு சம்பாதிக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்து உலகெங்கும் பரவியுள்ளது. அன்டார்ட்டிக் பெங்குவின் பறவையில் அத்துடன் மழையில் பாலில், எல்லோர் உடலிலும் நாம் உலகெங்கும் தெளித்த நூற்றுக்கணக்கான பூச்சி மருந்துகள் வந்து சேரந்து விட்டன. நம்மை நாமே விஷம் வைத்துக் கொன்று கொண்டிருக்கிறோம்.
தொழிற்சாலையில் நிலக்கரி எண்ணெய் இவைகளை எரிப்பதால் வெளிப்படும் கந்தக ஆக்ஸைடு நைட்ரஜன் ஆக்சைடு போன்றவை காற்றுடன் கலந்து பிரயாணம் செய்து மழைத்துளிகளாக மாறி சல்ப்யூரிக், நைட்ரிக் அமில மழை பெய்வது இந்த நாட்களில் சாதாரணமாக நிகழ்கிறது. இதனால் பயிர்களுக்கும், உயிர்களுக்கும் ஏற்படும் சேதம் கணக்கிலடங்காது. இது போன்ற பிரச்சனையால் தான் பளிங்குக்கல் தாஜ்மஹால் கூட பழுப்பு நிறமாக மாறியிருக்கிறது. இந்த அமில மழையால் ஏற்படும் நஷ்டம் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை பொல்லோருக்கும் பெய்யும் மழை நல்லோருக்கும்.
காடுகளிலுள்ள மரங்களை வெட்டி காகிதம் செய்து நடிகைகளின் கிசுகிசுவை அதில் பதித்து காசு சம்பாதிக்கிறது உலகம். இந்த மரங்கள் வெட்டப்படுவதால் மழை குறைந்து குடிநீர் கஷ்டம் வந்து உலகின் வெப்பம் கூடி, பனி ஆறுகள் உறுகி உலகத்திற்கு இன்னுமொரு ‘தூபான்’ வெள்ளம். (சரிசரி காடுமரம் இருக்கட்டும் அந்த நடிகையின் கிசுகிசு எப்போ பாதிப்பாகும்..? கவலை)
“மன இச்சை தீமையைத் தூண்டக் கூடியது.” (12:53)
க்ருவென்தால் (Gruenthal) என்கிற ஜெர்மன் கம்பெனி கண்டுபிடித்த ‘தாலிடோமைடு (Thalidomide) என்கிற மருந்தைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஒருகால கட்டத்தில் ரொம்ப பத்திரமான ஆறுதல் மருந்து என்று 46 தேசங்களில் சுலபமாக விற்கப்பட்ட இம்மருந்ததை கர்ப்பிணிகள் உட்கொண்டு விகாரமான குழந்தைகள் பிறக்கவே இந்த மருந்து உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டது. இப்போது நம்மிடம் ‘வேலியம்’ (Valium) போன்ற தூக்க மருந்துகள் சாதாரணமாக கிடைக்கின்றன. யாவுமே பத்திரமான மருந்துகள் என்று தான் இப்போதும் சொல்லிக் கொண்டும் விழுங்கிக் கொண்டும் எதிர்காலத்தில் யாராவது இந்த மருந்துகளின் மறைமுக துஷ்டத்தனத்தை கண்டுபிடிக்கும் வரை “அறியாமையால் தீமை செய்தவர்களுக்கு தவ்பா செய்தால் மன்னிப்பு உண்டு. (4:17)
ஒரு நல்லது இருந்தால் ஒரு கெடுதலம் இருக்கிறது. இதில் ஏதோ ஒரு நீதி இருக்கிறது.
விஞ்ஞானத்தின் மிகப்பெரிய குறை அதன் விபரீதங்கள் நிச்சயம் விஞ்ஞானம் உண்மையைத் தேடுகிறது. ஆனால் அந்தத் தேடலின் போது கிடைத்த விஷயத்தை விசமத்தனமாய் மறைத்து விடுவதும் சொல்லாமல் விட்டு விடுவதும் தான் நவீன விஞ்ஞானத்தின் மகத்தான மாபெரும் குற்றம்.
“எதையாவது இழந்து
பெற வேண்டும்:
எதையாவது பெற்று
இழக்க வேண்டும்:
வாழ்க்கையின்
அர்த்தமே பெறுவதும்
இழப்பதும் தானே!”
“தீமையை நன்மையாக மாற்றிக் கொண்டால் இறைவன் மன்னிப்பான்.” குர்ஆன் (27:11).