“நோய்” – அல்லாஹ்வின் ரஹ்மத்
AN EXCELLENT ARTICLE
மௌலவி முஹம்மத் நூஹ் மஹ்ழரி
”யா அல்லாஹ், என்மேல் கருணை காட்டக் கூடாதா?” என்று ஒரு நோயாளி கேட்பதே அறியாமையால்தான். ஏனெனில் அல்லாஹ் சொல்கிறான்: “என் அடியானுக்கு எதை ரஹ்மத்தாகத் தந்திருக்கிறேனோ அதிலேயே மீண்டும் எப்படி ரஹ்மத் செய்ய முடியும்?” (ஹதீஸ் குத்ஸி)
நமக்குத் தெரிந்தவர்களிடம் நலம் விசாரிக்கின்றபோது பலரும் பொதுவாகச் சொல்லும் பதில்…
“அத ஏன் கேட்கிறீங்க..? எப்ப பாத்தாலும் ஏதாவது நோய்… நிம்மதியே இல்லை.”
ஏதோ இவ்வுலகிலுள்ள ஒட்டு மொத்த மூஸீபத்துகளும் துன்பங்களும் தனக்கே வந்துவிட்டது போல் நொந்து போய்விடுகின்றார்.
உண்மையில் நோய் என்பது என்ன? சோதனையா? அருளா? அதனால் மனிதன் நிம்மதி பெற வேண்டுமா அல்லது துக்கமா?
“யா அல்லாஹ், என்மேல் கருணை காட்டக் கூடாதா?” என்று ஒரு நோயாளி கேட்பதே அறியாமையால்தான். ஏனெனில் அல்லாஹ் சொல்கிறான்: “என் அடியானுக்கு எதை ரஹ்மத்தாகத் தந்திருக்கிறேனோ அதிலேயே மீண்டும் எப்படி ரஹ்மத் செய்ய முடியும்?” (ஹதீஸ் குத்ஸி)
நோய் என்பது இறைவனின் ஒரு வகை ரஹ்மத்அருளாகும். ஒரு முஸ்லிம் நோயாளியானால் எப்படி இருக்க வேண்டும் என இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.
நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் கிடந்த ஒரு வாலிபனிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டார்கள். “எப்படி இருக்கிறீர்கள்?”
“இறைத்தூதர் அவர்களே, அல்லாஹ்வின் ரஹ்மத்தை நம்பிக்கை வைத்தவனாகவும் என் பாவங்களை நினைத்து பயந்தவனாகவும் இருக்கிறேன்.”
“இந்த இரண்டு சிந்தனையும் எந்த மனிதனின் உள்ளத்தில் இருந்தாலும் சரியே, அல்லாஹ் அவனுடைய நம்பிக்கைக்கு மோசம் செய்ய மாட்டான். அவன் பயப்படுவதிலிருந்து பாதுகாப்பும் கொடுப்பான்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
நோய் மூலம் உடலாலும் உள்ளத் தாலும் மனிதன் அடைகின்ற பலா பலன்கள் ஏராளம்.
1. தீமைகள் மன்னிக்கப்படுகின்றன
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு எந்த ஒரு சிறிய சோதனையோ கவலையோ துக்கமோ ஒரு முள் குத்துவதால் வரும் சிறிய வேதனையோ எது வந்தாலும் சரி அதன் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்காமல் விடுவதில்லை.
‘ஒரு மூமின் நம்பிக்கையாளன் தன் குடும்பம்,குழந்தைகள்,தன் செல்வம் இவற்றில் தொடர்ந்து சோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான் எனில் அல்லாஹ்வை மறு மையில் சந்திக்கும்போது அவனுடைய வினைப் பட்டியலில் எந்தத் தவறும் இருக்காது” என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு முஸ்லிம் பாவங்கள் செய்து அவை மன்னிக்கப்பட அவன் வேறு முயற்சிகள் செய்யாதபோது கவலை, நோய் போன்றவற்றால் அல்லாஹ் அவற்றை மன்னிக்கின்றான். எனவே தான் அரபியில் ஒரு பழமொழி கூறப்படுகிறது. “சோதனைகள் மட்டும் இல்லாவிட்டால் மறுமையில் நாம் நன்மைகள் இல்லாதவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்போம்.’
2. மறுமையில் பன்மடங்கு நன்மைகள்
ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் திர்மிதியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது. “மறுமையில் ஒரு கூட்டத்தினர் இப்படி நினைப்பார்கள். உலகில் வாழ்கின்ற போது தங்களின் உடல்கள் வெந்நீரில் போட்டு கொதிக்க வைக்கப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? காரணம் உலகில் சோதிக்கப்பட்டவர்கள் மறுமையில் கிடைக்கும் நன்மைகளை கண்ணால் காணுகின்ற போது இப்படி நினைப்பார்கள். உலகின் சோதனைகள் மறு மையில் நன்மைகளே.
3. நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம்
சாதாரண நெருக்கமல்ல மிக அதிக நெருக்கம். மறுமையில் அல்லாஹ் கேட்பான். ஆதத்தின் மகனே, நான் உலகில் பசித்திருந் தேன்,தாகித்திருந்தேன், நீ ஏன் உண வளிக்கவில்லை; நீர் புகட்டவில்லை என்று தொடங்கும் ஹதீஸின் தொடரில் “நான் நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை நீ நலம் விசாரிக்க வர வில்லையே” என்று கேட்டு “இன்ன அடியான் நோயாளியாக இருந்தான். அவனை நோய் விசாரித்திருந்தால் என்னை அங்கு நீ கண்டிருப்பாய்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த ஹதீஸில் பசி தாகம் பற்றிக் கூறும்போது “எனக்கு உணவளித் திருப்பாய், எனக்கு நீர் புகட்டியிருப் பாய்’ என்று கூறும் இறைவன், நோய் நலம் விசாரிப்பதைப் பற்றிக் கூறும் போது “என்னையே கண்டிருப்பாய்’ என்கிறான். அந்த அளவுக்கு நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம் இருக்கிறது. “உள்ளங்கள் உடைந்து போன மனிதர்களுக்கருகில் நான் இருக்கிறேன்’ என்ற ஹதீஸ் குத்ஸியும் இதையே வலியுறுத்துகிறது.
4. பொறுமையின் அளவைத் தெரிந்து கொள்ள…
சோதனைகள் இல்லையெனில் பொறுமையின் சிறப்பு வெளியே தெரியாது. பொறுமை எல்லா நன்மையையும் கொண்டு வரும். “அதிக நற்கூலி அதிக சோதனைகளில் உள் ளது. எவரை அல்லாஹ் சோதிக்கின் றானோ அவர்களை அல்லாஹ் அதிகம் நேசிக்கின்றான்.யார் சோத னைகளைப் பொறுத்தாரோ அவரை அல்லாஹ்வும் பொருந்திக் கொள் கிறான். அவற்றைக் கண்டு கோபப் படுகின்றவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுகிறான்’ என்று நபி صلى الله عليه وسلم கூறுகிறார்கள்.
5. உள்ளத்தால் இறைவனைத் தேடுதல்..
அல்லாஹ்வை மறந்து அவனிடம் துஆ எதுவும் கேட்காமல் ஓர் அடியான் இருந்தால் அவனை சோதிக்க நோயை கொடுக்கின்றான் அல்லாஹ். நோய்வாய்ப்பட்டவன் இறைவனை அதிகமாக நினைப் பதை நாம் கண்கூடாகக் காண்பதுண்டு. தன்னிடம் கேட்பதை இறைவன் அதிகம் விரும்புகின்றான். “அவனை ஏதாவது ஒரு தீங்கு தொட் டாலோ நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத்தொடங்குகிறான்.” (குர்ஆன் 41:51)
“நீண்ட நெடிய இறைஞ்சுதல்கள்’ என்று அல்லாஹ்வே கூறுவதைக் கவனியுங்கள். ஏதோ படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அப்போதுதான் உணர்ந்தவன் போல் ஆகி விடுகின்றான். சோதனைகளின் போதுதான் “தான் அல்லாஹ்வின் அடிமை’ என்ற உணர்வு ஏற்படு கிறது. உலகில் பார்க்கிறோம். அல்லாஹ்வின் பக்கம் சிலர் அதிகம் நெருக்கமாக என்ன காரணம் என்று ஆராய்ந்தால் சோதனைகள்தான் காரணம். சில நோயாளிகள் குணமான பின்பு தொடர்ந்து தொழுவதையும் மார்க்கத்தைப் புரிய முயல்வதையும் நாம் கண்ணால் பார்க்கிறோம். நோய் தந்த நன்மைதான் இது.
6. பெருமை,கர்வம்,தலைக்கனம் தகர்க்கப்படுகின்றன
இவை ஒருவனிடம் குடிகொள் ளும்போதுதானே தலைகால் தெரியாமல் ஆடுகிறான். நோயை அவனுக்குக் கொடுக்கும் போது… பசித்திருக் கின்றான்; உடல் வேதனையை அனு பவிக்கின்றான். அதற்காக யாரிடமும் கோபப்பட முடிவதில்லை. உள்ளம் உடைந்துபோய்.. பெருமை, கர்வம் பறந்துபோய் விடுகிறது. “உள்ளங்கள் உடைந்து போனவர்களுடன் நான் இருக்கிறேன்’ எனும் அல்லாஹ்வின் வாக்கும் “அநீதி இழைக்கப்பட்டவன், பயணி, நோயாளி ஆகியோரின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக் கொள்ளப்படும்’ எனும் நபிமொழியும் ஒரே கருத்தையே வலியுறுத்து கிறது. இவர்களும் உள்ளம் உடைந்தவர்கள்தானே. பாதிப்பாலும் பசியா லும் பயணத்தாலும் நொந்து நூலாகிப் போனவர்கள்தானே. எனவே தான் இவர்களின் பிரார்த்தனையை இறைவன் உடனே ஏற்றுக் கொள்கிறான்.
7. நோயாளிக்கு அல்லாஹ் நன்மையை நாடுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் “எவருக்கு நன்மை செய்யவேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றானோ அவரை சோதிப்பான்.’ (புகாரி) எனவே எவருக்கு நன்மை செய்ய அல்லாஹ் நாடவில்லையோ அவருக்கு எந்தச் சோதனையும் இல்லை. நோயும் ஒரு சோதனைதானே. அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒரு நபிமொழியை அறிவிக்கிறார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒருநாள் உடல் ஆரோக்கியமுள்ள திடகாத்திரமான ஒரு கிராமவாசியை சந்திக்கிறார்கள். அவருடைய உடல் வலிமையை ஆச்சரியத்துடன் நோக்கியவர்களாய் அவரை அழைத்துக் கேட்டார்கள்.
“கடும் வேதனையுடன் கூடிய உடல் சூட்டை அடைந்திருக்கின்றாயா எப்போதாவது?”
“அப்படி என்றால் என்ன?”
“காய்ச்சல்'”
“காய்ச்சல் என்றால் என்ன?”
“தோலுக்கும் எலும்புக்கும் இடையே ஏற்படும் கடும் சூடு”
“என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவிக்கவில்லை'”
நபி صلى الله عليه وسلم அவர்கள் மீண்டும் கேட்டார்கள்.
“தலைவலி எப்போதாவது வந்த துண்டா?”
“தலைவலி என்றால் என்ன?”
“நெற்றியின் இரண்டு கீழ்பகுதிக்கும் தலைக்குமிடையே ஏற்படும் கடும் வலி.”
“என் வாழ்நாளில் அப்படி எதை யும் நான் அனுபவித்தது இல்லை.”
அந்தமனிதர் சென்ற பின் நபி صلى الله عليه وسلم தம் தோழர்களிடம் கூறினார்கள். “நரகவாசியைக் காண வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இவரைக் கண்டு கொள்ளட்டும்.” எனவே காய்ச்சலும் தலைவலியும் இறைவனின் கருணையே. ஓர் அடியான் நோயாளியாகிற போது சாதாரண வேளையில் எவ்வளவு நற்செயல்கள் செய்தானோ அதே கூலி இப்போதும் கிடைக்கும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ”ஒருவர் நோயாளியானதால் நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டால் வானவர்களிடம் அல்லாஹ், எனது அடியான் ஆரோக்கியமாக இருந்தபோது இரவும் பகலும் என் னென்ன நற்செயல்கள் செய்தாரோ அதையே இப்போதும் எழுதுங்கள்’ என்று கூறுவான்.”
ஆக, நோய் என்றாலே நன்மை தானா? உலகில் மனிதர்களுக்கு இறைவன் அருளும் எல்லா அருட் கொடைகளையும் விட நோய்தான் சிறந்ததா? அப்படியானால் “இறைவா, எனக்கு என்றென்றும் நோயைத் தா” என்று பிரார்த்திக்கலாமா? இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் மனத் தில் இப்படி ஒரு கேள்வி எழும்.
இல்லை; ஒருபோதும் அவ்வாறு பிரார்த்திக்கக் கூடாது. மாறாக நபியவர்கள் நமக்குக் கற்றுத்தந்த மிகச் சிறந்த பிரார்த்தனையே “”மன்னிப்பையும் உடல் நலத்தையும் அல்லாஹ்விடம் கேளுங்கள். ஈமான் இறைநம்பிக் கைக்குப் பின் ஆரோக்கியத்தைத் தவிர சிறந்த அருள் எதுவும் இல்லை” என்பதுதான்.