டாக்டர் மீனா ரமேஷ்
( very useful to read )
குழந்தைகளுக்கு வரும் கண் குறைபாடுகள் சிலவற்றை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி டாக்டர் மீனா ரமேஷ் இங்கே விளக்குகிறார்.
பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றோர் எப்படி கண்டுபிடிப்பது?
தன் குழந்தை பார்வை குறைபாட்டுடன் இருக்கிறது என்று தெரிந்தால், அவர்கள் மனதுபடும் வேதனைக்கு அளவே இருக்காது. ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து தக்க சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்துவிடவேண்டும்.
முதல் கட்டமாக, குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும். டி.வி. பார்க்கும்போது அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தையும், தூரத்தையும் கண்காணிக்க வேண்டும். படிக்கும்போது புத்தகத்தைப் பிடித்திருக்கும் தூரத்தைப் பார்க்க வேண்டும். தூரத்தில் இருக்கும் பொருளைப் பார்க்கும்போது கண்ணைச் சுருக்கிச் சுருக்கிப் பார்க்கிறார்களா? இயல்பாகப் பார்க்கிறார்களா என்பதை முக்கியமாகக் கண்டறிய வேண்டும்.
சிலருக்கு மனது தூரத்தில் இருக்கும் பொருளைப் பார்க்கச் சொன்னாலும், தூங்கும் இமைபோல் கண் அதற்கு இசைவு கொடுக்காது. கண்ணைச் சுருக்கிச் சுருக்கி சிரமப்பட்டே அந்தப் பொருளைப் பார்க்க முடியும்.
பெற்றோரோ, பள்ளி ஆசிரியரோ இவற்றைக் கவனிக்காமல் போனால் அந்த பிள்ளைகளின் படிப்பும், எதிர்காலமும் வீணாகிவிடும். பார்வையில், நடவடிக்கைகளில் இயல்பாக குழந்தைகள் இல்லாததைக் கண்டவுடன் உடனே மருத்துவரிடம் கண் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும்.
சோம்பேறி கண்கள் என்றால் என்ன?
இந்தக் குறைபாடு, ஒன்று முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளையே பாதிக்கும். இதில் மூளைக்கும் பங்கு உண்டு.
கண்களில் இருந்து மூளைக்கு சில நரம்புகள் செல்கின்றன. இந்த நரம்புகள் இயல்பாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. மூளைதான் கண் பார்வையின் வீரியத்தைத் தீர்மானிக்கிறது. சிலசமயம் ஒரு கண்ணில் மட்டும் பார்வைத்திறன் அதிகமாக இருக்கும். மற்றொரு கண்ணில் அது குறைவாக இருக்கும். இந்த வீரியம் போகப் போக குறையும். குழந்தையும் அந்தக் கண்ணை அதிகம் பயன்படுத்தாது. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட கண்ணில் பார்வை தெரியாமலேயே போய்விடும். மூளையும் இதைக் கண்டுகொள்ளாமலே விட்டுவிடும். காரணம்?
குறிப்பிட்ட அந்தக் கண்ணில் இருந்து சமிஞ்கைகள் போகாததுதான். இப்படித் தொடர்ந்து சமிஞ்கைகள் போகாமலிருப்பதால் பார்வை மீதான தனது வேலையை மூளை நிறுத்திவிடும்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு கண்ணிலும் பார்வை இருப்பது போலவே தெரியும். ஆனால் குழந்தைக்கு ஒரு கண்ணில் இருந்து மட்டுமே பார்வை தெரியும். இந்த பாதிப்பு குழந்தைகளுக்குத் தெரியாது. பார்வைதான் தெரிகிறதே என்று குழந்தையும் சொல்லாது. பெற்றோராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்தப் பாதிப்புகள் சிலருக்கு பிறவியிலேயே கூட இருந்திருக்கும்.
சோம்பேறி கண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
பெற்றோர்தான் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடும்போதே, குழந்தையை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
குழந்தையின் ஒரு கண்ணை மறைத்து மற்றொரு கண்ணில் பார்வை தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த பாதிப்பு சிலருக்கு இரண்டு கண்ணில்கூட வரலாம். மாறுகண் உள்ள குழந்தைகளுக்கும்கூட இந்த பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு.
பொம்மை ஒன்றை குறிப்பிட்ட தூரத்தில் வைத்து, ஒரு கண்ணை மூடி, மறு கண்ணில் பொம்மை தெரிகிறதா என்று கேட்கலாம். இதைபோல் மற்றொரு கண்ணிலும் சோதனை செய்யலாம்.
இந்தியாவில் 24 சதவிகிதம் குழந்தைகளுக்கு இந்த சோம்பேறி கண் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதற்கு சிகிச்சைகள் என்ன?
நன்றாகப் பார்வை தெரியும் கண்ணை மூடிவிட்டு சோம்பல் கண்ணை மட்டும் பயன்படுத்துவது ஒன்றுதான் இதற்கு வழி. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்ய பேட்ச்கள் உள்ளன. அதாவது பார்வை தெரியும் நல்ல கண்ணின் மேல் இந்த பேட்சை வைத்து ஒட்டி கண்ணை மூடி விடவேண்டும்.
தொடர்ந்து பல மாதங்கள் வரை இந்தப் பயிற்சி தேவை. இந்தப் பயிற்சியின் மூலம் சோம்பேறி கண்ணை மட்டுமே மீண்டும் மீண்டும் கட்டாயமாகப் பயன்படுத்துவதன் மூலமாக இழந்த பார்வை மீண்டும் கிடைக்கும்.
எந்த மாதிரி குழந்தைகளுக்கு சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சமச்சீரற்ற பார்வை ஆகியவற்றை உணராமல் சிறு குழந்தைகளிலேயே இந்த குறைபாடுகளைக் கண்டுபிடிக்காமல் கால தாமதமாக கண் பரிசோதனை செய்து கண்ணாடி போட்டால் இந்த சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு.
சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே கண்புரை நோய் இருந்தால் இதற்கு வாய்ப்பு உண்டு.
விழி நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்கிற குழந்தைகளுக்கு சோம்பேறி கண் ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கு ஏற்படும் தூரப்பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சத்தான உணவைக் கொடுத்துச் சரிப்படுத்த முடியுமா டாக்டர்?
தூரப்பார்வை கோளாறு என்பது கண்ணின் உருவ வளர்ச்சி அதிகமாக இருக்கும்போது ஏற்படக்கூடிய ஒரு கோளாறு. ஒரு குழந்தையின் வளர்ச்சியை எப்படி நம்மால் தடுக்க முடியாதோ அதேபோல்தான் கண்ணினுடைய வளர்ச்சி என்பது தாயின் கருவில் இருக்கும்போது ஜ”னுக்குள் அணுக்கள் உருவாவதாகும்.
கண்ணுக்குத் தேவையான சத்தான உணவுகளைச் சாப்பிடாமல், குப்புறப்படுத்துக்கொண்டு படிப்பதும், இருட்டறையில் உட்கார்ந்து படிப்பதும், கண்ணினுடைய உருவ வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. அதனால், ஓடுகிற வண்டியில் உட்கார்ந்து படிக்கக்கூடாது. நாம் படிக்கும்போது நம் கண்ணுக்கும் புத்தகத்திற்கும் 35 செ.மீ. இடைவெளி வேண்டும். நல்ல சத்தான உணவான காய், கீரை, பால், முட்டை, பப்பாளி, பேரீச்சம்பழம் போன்றவற்றை உண்ண வேண்டும். இதனால் இந்தக் குறைபாடு மேலும் அதிகரிக்காமல் இருக்க உதவ முடியும்.
குழந்தைகள் அணிகிற கண்ணாடிகளில் ஏதாவது நவீன முறைகள் வந்திருக்கிறதா?
சில குழந்தைகள் கண்ணாடி அணிய விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களின் தோற்றம் மாறிவிடும் அல்லது மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்பதற்காகவே அவர்கள் தயங்குகிறார்கள். இப்பொழுது சிறு பிள்ளைகள் விரும்பும் வண்ணம் அழகான வடிவில் பிளாஸ்டிக் பிரேம் பொருத்திய உடையாத, எடை இல்லாத கண்ணாடி வந்திருக்கிறது. அதை அவர்கள் விரும்பிய வண்ணங்களில் வாங்கி அணிந்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்கு கண்ணாடிக்குப் பதிலாக காண்டாக்ட் லென்ஸ் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை முறைகள் உண்டா?
பெரும்பாலான பெற்றோருக்கு தங்களுடைய குழந்தை சிறிய வயதிலேயே கண்ணாடி அணிவது வருத்தத்தை கொடுக்கிறது. அதை மாற்றியமைக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். ஆனால், 17-18 வயது முடிந்தவர்களுக்கு மட்டுமே கண்ணாடி இல்லாமல் காண்டாக்ட் லென்ஸ் வைக்கலாம். அதனால், வருத்தப்படாமல் குழந்தைகளை கண்ணாடி அணிய ஊக்கப்படுத்தி பார்வைத்திறன் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும்.
பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கண் மறு பரிசோதனை பற்றிய விவரங்களையும் சொல்லுங்கள் டாக்டர்?
கண்ணாடி போட்டபின் ஒரு 3-4 மாதம் கழித்து முழுமையான கண் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தக் குழந்தை கண்ணாடி அணிந்தபிறகு அதன் ஆளுமையில் மாற்றம் உண்டா? படிப்பில் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கிறதா, அந்தக் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
வருடம் ஒரு முறை 18-21 வயது முடியும் மட்டும் கண் பரிசோதனை அவசியம். ஏனென்றால் குழந்தையின் வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் கண்ணோடு உருவ வளர்ச்சியும் மாற வாய்ப்புகள் உண்டு. அதனால், குழந்தை படிப்பு அதன் மனநிலை, குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டு பெற்றோர் குழந்தையை கண் பரிசோதனைக்கு அழைத்து வரவேண்டும்.
கிட்டப்பார்வைக்கு பவர் நார்மலான பிறகு கண்ணாடி கழற்ற வாய்ப்புண்டா?
இது ரொம்ப தவறான கருத்து. கண்ணாடி தொடர்ந்து போடுவதால் பார்வை நரம்புகள் நல்ல வளர்ச்சியடைய வாய்ப்பு உண்டு. கண் உருவ வளர்ச்சி அதிக அளவில் இருக்கும். அதை நாம் சுருக்கி திரும்ப நார்மல் அளவில் சுருக்க முடியாது. ஆனால், உரிய காலத்தில் பார்வைத் திறன் வளர்ச்சி, நல்ல பார்வை, நரம்பு வளர்ச்சி ஆகியவை இருக்கும்.
இயற்கையான பார்வை பெற நாம் எடுக்கும் முயற்சிகள் வெகு நாளாகும். அதற்கு இருக்கும் பார்வையைத் தக்க வைத்துக்கொள்ள நாம் டாக்டரின் ஆலோசனையை நாடுவோம்.
தூரப்பார்வை கோளாறு குறித்து கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்?
தூரத்தில் இருக்கும் பொருள் ஓரளவு தெளிவாகத் தெரியும். ஆனால், கிட்டத்தில் இருப்பது தெளிவாகத் தெரியாது. குறிப்பாக குழந்தைகள் புத்தகம் வாசிக்கும் போதும், எழுதும்போதும் ரொம்பக் கஷ்டப்படும்.
இந்தக் குழந்தைகளுக்கு கண் வலி, தலைவலி, கண்ணில் தண்ணிர் வருதல், குறிப்பாக குழந்தைகள் ஏதாவது பார்க்கத் தொடங்கும் போது மாறுகண் போல ஆகும்.
தூரப்பார்வைக்கு தகுந்த சிகிச்சை என்ன?
இந்த தூரப்பார்வை கோளாறுக்கு குழந்தைகளுக்கு கண்ணாடிதான் போட வேண்டிவரும். தூரப்பார்வைக்கு போடக்கூடிய கண்ணாடி கிட்டப்பார்வைக்கு போடுவதைவிட தடிப்பாக இருக்கும். இதனால், படிக்கும்போதும், எழுதும்போதும் சிரமம் கணிசமாக குறைந்துவிடும்.
இதைத்தவிர குழந்தைகளுக்கு கண்ணில் ஏற்படும் கோளாறுகள் என்ன?
கோணல் பார்வை. இதை சமச்žரற்ற பார்வை என்றும் சொல்லலாம். பார்வை கோளாறைவிட இவர்களின் பிரச்னை ”Only Glare” அதாவது டி.வி. பார்த்தால் நிழல் விழும். போர்டு பார்த்தால் கிளார் அடிக்கும். இதை கண்டுபிடிக்க உதவும் முக்கிய அறிகுறி அடிக்கடி குழந்தைகளுக்கு தலைவலி இருக்கும். இந்த குறைபாடு தெரிந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: கூடல்.காம்