o மனிதனில் ஜின் நுழையும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறதா?
o குறிப்பிட்ட ஒரு மஸ்அலாவில் உலமாக்கள் வேறுபட்ட பல கருத்துக்களை முன் வைக்கும் போது பொதுமக்களாகிய நாங்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகிறோம். இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
o அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? அப்படி பார்க்க அனுமதி இல்லையெனில் யார் யாரை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றது? இது பற்றி நமது மார்க்கம் என்ன கூறுகின்றது?
o நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில் சேட்டிங் செய்யலாமா? தபால் எழுதலாமா? டெலபோனில் பேசலாமா?
o மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா?
o காயிப் ஜனாஸா தொழுகை நடத்த மார்க்கத்தில் அனுமதியுண்டா?
கேள்வி : மனிதனில் ஜின் நுழையும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறதா?
ஃபத்வா: மனிதனில் ஜின் நுழைய முடியும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறது.
‘வட்டியை உண்போர் (மறுமையில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்’ (அல்குர்ஆன் அல்பகரா 2:275)
இவ்வசனத்திற்கு விரிவரை எழுதும் போது பிரபல தஃப்ஸீர் ஆசிரியர் இமாம் இப்னு கதீர் ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்கள் ‘வட்டி சாப்பிடுவோர் (இவ்வுலகில்) ஜின் பிடித்தவன் எழுவது போன்றே மறுமையில் கப்ரிலிருந்து எழுவார்கள்’ என்று கூறுகிறார்கள்.’ஆதமுடைய மகனின் நாடி நாளங்களிலெல்லாம் ஷைத்தான் ஓடுகிறான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஜின் மனிதனில் நுழைய முடியுமென்பதே அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினினரின் நிலைப்பாடாகும் என்று இமாம் அல் அஷ்அரீ தனது மகாலாது அஹ்லிஸ் ஸுன்னா வல்ஜமாஆ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு ஆதாரமாக 2:275 வசனத்தை முன் வைக்கிறார்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களது மகன் அப்துல்லாஹ் இமாம் அவர்களிடம் தந்தையே! சிலர் மனிதனில் ஜின் நுழைய முடியாது என்று கூறுகின்றனரே? என்று வினவினார். அதற்கு இமாம் அவர்கள் மகனே! அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று கூறினார்கள்.
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!’ என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது. (அஹ்மது, ஹாகிம், பைஹகீ)
ஆக, மனிதனில் ஜின் நுழைய முடியும் என்பதற்கு குர்ஆனிலிருந்து ஒரு ஆதாரமும் சுன்னாவிலிருந்து இரண்டு ஆதாரங்களும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதுவே அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரதும் ஸலஃபிய அறிஞர்களதும் நம்பிக்கையாகும். அத்துடன் பல நிகழ்வுகளும் இதற்குச் சான்றாக இருக்கிறது.
அதேவேளை பைத்தியம் ஏற்படுவதற்கு மூளைக்கோளாறு நரம்புத் தளர்ச்சி போன்றவையும் காரணமாக அமையும் என்பதை நாம் மறுக்கவில்லை.
கேள்வி : குறிப்பிட்ட ஒரு மஸ்அலாவில் உலமாக்கள் வேறுபட்ட பல கருத்துக்களை முன் வைக்கும் போது பொதுமக்களாகிய நாங்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகிறோம். இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
ஃபத்வா: ஒரு விஷயத்தில் உலமாக்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கும் போது அவற்றில் எதைப் பின்பற்றுவது என்பதில் மக்கள் மத்தியில் தடுமாற்றம் ஏற்படுவதைக் காண முடிகிறது. ஆனால் இது தடுமாற்றத்திற்கும் தயக்கத்திற்கும் உரிய ஒரு பிரச்சினையே இல்லை. அதாவது ஒரு மஸ்அலாவில் உலமாக்கள் கருத்து வேறுபட்டால் அதில் யாருடைய கருத்து சத்தியத்திற்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருடைய கருத்தையே எடுக்க வேண்டும். அதனைத் தீர்மானிக்க அவரது அறிவாற்றல் உறுதியான ஈமான் என்பவற்றைத் துணையாகக் கொள்ளலாம்.
ஒரு நோயாளி விஷயத்தில் இரண்டு மருத்துவர்கள் வேறுபட்ட கருத்துக்களைச் சொல்லும் போது அந்த நோயாளி நம்பகமான ஒருவரின் கருத்தை எடுத்துக் கொள்வார். அவ்வாறுதான் மார்க்க விஷயத்தில் (பொது மக்கள்) செய்ய வேண்டும்.
சில வேளைகளில் இரண்டு அறிஞர்கள் ஒரே பிரச்சினையில் இருவிதமான கருத்துக்களைக் கூறுவர். அவ்விருவருமே மக்களிடத்தில் நம்பகமானவராகவும் இருப்பர். இப்படியான சந்தர்ப்பத்தில் யாருடைய கருத்தை எடுத்துக் கொள்வது என்பதில் அறிஞர்கள் மத்தியில் பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன:
அ) அக்கருத்துக்களில் மிகக் கடுமையானதை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதுவே பேணுதலாகும்.
ஆ) அவற்றில் மிக இலகுவானதை எடுக்க வேண்டும். அதுவே ஷரீஅத்தின் அடிப்படையாக உள்ளது.
இ) அவற்றில் விரும்பிய ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.
இம்மூன்று கருத்துக்களில் இரண்டாவதே மிகச் சரியானதாகும். அதாவது ஒரு விஷயத்தில் நம்பிக்கைக்குரிய அறிஞர்கள் பல கருத்துக்களைக் கூறினால், அவற்றில் மிக இலகுவானதையே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதுவே இஸ்லாமிய மார்க்கத்தின் இலகுத் தன்மையோடு ஒத்துச் செல்லக் கூடியதாகும். ‘அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகிறான். அவன் உங்களுக்குக் கடிடத்தை விரும்புவதில்லை’ (அல்குர்ஆன் அல்பகரா 2:185)
‘இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை’ (அல்குர்ஆன் அல்ஹஜ் :78) என்று குர்ஆன் கூறுகிறது
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இலகு படுத்துங்கள். கஷ்டப்படுத்தாதீர்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி)
உள்ள கருத்துக்களில் இலகுவானதை எடுத்துக் கொள்ளாமல் நம்பகமான அறிஞர்களின் முடிவை ஏற்றுக் கொள்ளல் என்று நாம் கூறுவதையே ஒரு பொது விதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக, இவ்விதி யாருக்கெல்லாம் ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு முடிவை எடுக்கும் ஆற்றல் இல்லையோ அவர்களுக்கு மட்டும் உரிய ஒன்றாகும்.
கேள்வி : அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா?
பெண்மையை, இளமையை, பண்பாட்டுப் பெருமையைக் கூறுபோடும் விதமாக காதலர் தினம் என்ற பெயரில் கன்றாவி தினத்தை மேற்கத்திய கலாச்சார சீரழிவை நம்நாட்டிலும் சில வேலையற்றது இறக்குமதி செய்து தொலைத்துள்ளனர். விற்பனைக் கண்காட்சிகளை நடத்துவதைப் போல வாழ்த்து அட்டைகளும், காதல் ஈமெயில்களும் தடபுடலாய் பரிமாறிக் கொள்கின்றனர். கலாச்சார சீரழிவின் மொத்த குத்தகைதாரர்களான தொலைக்காட்சி சேனல்கள் காதலர் தினத்தை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி கணிசமாய் காசு பண்ணி விடுகின்றன.
இளசுகள் கூடும் இடங்களில் பச்சை வண்ண உடை அணிந்து சென்றால் நான் ரெடி (இன்னும் எனக்கு காதலர் (அ) காதலி இல்லை) என்பதை உணர்த்தும் சிக்னலாம். இதை வைத்து புதிதாக தங்கள் காதல் ஜோடியை தேடிக் கண்டுபிடிக்கின்றனர். ரோஜாக்களின் மவுசு கூடுகிறது. மணக்கும் ரோஜா, மயக்கும் மல்லிகை, கசங்கும் காகிதப் பூ வரை விலை ஏற்றத்தில் இறக்கை கட்டி பறக்கும். இளைய தலைமுறை யினரின் சிந்தனையில் சிதிலங்களை ஏற்படுத்திவரும் இத்தகைய கொண்டாட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
கல்வி கற்க வேண்டிய வயதில், தனது எதிர்கால வாழ்க்கைப் பாதையை தெரிந் தெடுத்துக் கொள்ள வேண்டிய சரியான பருவத்தில் நற்குணங்களுடன், நன்னடத்தையுடன் தனது தாய் தந்தையரையும் சுற்றத்தாரை யும் பெருமைப்படுத்த வேண்டிய பருவத்தில், சில்லறைத்தனமான இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மனதை இளைய தலைமுறையினர் பறிகொடுத்து விடக்கூடாது.
நமக்குத் தெரிந்த எத்தனையோ இளைஞர்கள், இளைஞிகள் இந்தக் காதல் கன்றாவியால் தங்கள் எதிர்காலத்தைத் தெளிவாக தெரிந்தெடுக்கும் வாய்ப்பினை இழந்து துயரப்படுகிறோம் என்றும் மற்றும் இளைஞர் இளைஞிகள் காதல் செய்யும்போது வசந்த மாகத் தெரிந்த வாழ்வு பின்னர் இருண்டு வறண்டு காட்சி யளிக்கிறது என்றும் மனம் வெறுத்து சொன்னதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம். இன்னும் சிலர் எனக்கு அருமையான வாழ்க்கையை அமைத்துத்தர என் பெற்றோர் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அவசரத் துடுக்கினால் அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டேனே எனக் கதறியவர்களும் உண்டு.
விபரம் அறியாது, விபரீதம் புரியாது காதல் கட்டுக் கதைகளை இளைஞர்கள் தங்களுக்குள் ஊக்குவிப்பதால் அந்தப் பகுதியிலுள்ள இளம்பெண்களின் இதயமும் நஞ்சாகிறது.
இளைஞன் ஒருவன் ஜம்பமாக, பந்தாவாக கல்லூரியில் தன்னை மஞ்சுளாவும், மரிக்கொழுந்தும் மாறி மாறி காதலிப்பதாக கதை விடுவதும், அதைக்கண்டு தானும் ஒரு மாரிமுத்துவையோ, மாயாண்டியையோ விரும்பினால் ஒன்றும் தவறல்ல எனும் விபரீத முடிவுக்கு அவனது சகோதரியோ அல்லது அடுத்த வீட்டு இளம் பெண்ணே வரும் அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும். அருமை அருமையாய் வளர்த்தெடுத்த மக்களால் அவமானம் சுமக்கும் அவல நிலைக்கு பெற்றோர்கள் ஆளாகலாம்.
இன்னும் சிலர் காதலித்த பெண்ணை முஸ்லிமாக மாற்றித்தானே திருமணம் செய்து கொள்கிறோம். இவருக்கு ஏன் பொறாமை, போய்யா பொத்திக்கிட்டு என்று கோபத்துடன் குமுறுகிறார்கள்.
எத்தனை சமாதானங்கள் கூறினாலும் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே என்பதை அடித்துக் கூற முடியும். சமுதாயத்தில் திருமணமாகாமல் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் தொகை விலைவாசி போல் உயர்ந்து வரும்போது குறைந்தபட்சம் தனக்கு ஏற்ற பெண்ணை இங்கே தேடி மணமுடிக்க வேண்டும். அதை விடுத்து இவனே இன்னும் சிலகாலம் கழித்து கறுப்பு வெள்ளைத் தாடியுடன் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருக்கும் தனது சகோதரிக்காக (அ) மகளுக்காக கவலைப்பட்டுக் கொண்டு ‘இந்த சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது’ என்று புலம்பும் நிலை அவனுக்கும் வரும்.
சமுதாயத்தின் சரிபாதியாகத் திகழும் பெண்களின் பல்வேறு நலன் நாடும் விஷயங்களில் இதை நாம் எவ்வாறு மறந்தோம்.
காதல், காதலர் தினம் போன்றவற்றை கழிவுகளாகக் கருதி, திருமண இணை தேடும் விஷயத்தில் தெளிவினைப் பெறுவோம்
கேள்வி : அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? அப்படி பார்க்க அனுமதி இல்லையெனில் யார் யாரை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றது? இது பற்றி நமது மார்க்கம் என்ன கூறுகின்றது?
நமக்கு உரிமையுள்ள மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.
இச்சையில்லாமல் பார்ப்பது என்பது பொதுவான அனுமதியாகும்.
அண்ணன், தம்பி மனைவிகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது அவசியம்.
ஏனெனில்
முகம் கை தவிர மற்றப் பாகங்கள் முழுதும் மறைந்துள்ள நிலையில் பெண்கள் இருந்தால் அவர்களை தேவைக்காக பார்க்கலாம் என்ற அனுமதி அடங்கியுள்ள வசனம் கீழே!
முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)
வீடுகளில் இருக்கும் போது பெண்கள் சாதாரண உடைகளுடன் இருப்பார்கள். அது அவர்களின் உடலில் முகம் முன் கைகளைத் தவிர மற்றப்பாகங்களை மறைக்காத நிலையில இருந்தால் அவர்கள் மற்ற ஆண்களுக்கு மத்தியில் வெளிவரக் கூடாது. வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டால் மறைத்த நிலையிலேயே வர வேண்டும். முகம், கைகளில் முற்பகுதி தெரியும் நிலையில் வெளிப்படலாம் என்பதிலிருந்தே ஆண்கள் அவசியத் தேவைக்காக பெண்களைப் பார்க்கலாம் என்பது விளங்குகின்றது.
வீட்டில் சாதாரணமாக வீட்டு உடைகளுடன் இருக்கும் போது யார் யார் முன்னிலையில் அந்த உடையுடன் வரலாம் என்பதையும் வசனம் தொடர்ந்து விளக்குகின்றது.
(முஃமினானபெண்கள்) தம் கணவர்கள்,
தம் தந்தையர்கள், (பெற்றத் தந்தை – வாப்பா, அத்தா, பெரியத்தா, சின்னத்தா)
தம் கணவர்களின் தந்தையர்கள் (மாமனார்கள், சின்ன பெரிய மாமனார்கள்)
தம் புதல்வர்கள் (மகன்கள்)
தம் கணவர்களின் புதல்வர்கள், (கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குந்தைகள் இருந்தால் அவர்கள்)
தம் சகோதரர்கள் (அண்ணன் தம்பிகள்)
தம் சகோதரர்களின் புதல்வர்கள், (அண்ணன் தம்பிகளின் மகன்கள்)
தம் சகோதரிகளின் புதல்வர்கள், (அக்காள் தங்கைகளின் மகன்கள்)
ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) தளர்ந்து போன முதியவர்கள்.
பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. (அல்குர்ஆன் 24:31)
திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்கள் ஆண்களுக்கு முன் சாதாரண உடையில் காட்சியளிக்கலாம். அதாவது மாமி, சின்னம்மா போன்றவர்கள் (திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்பதை அல்குர்ஆன் 4:23 வசனத்தில் அறியலாம்.
சாதாரண உடையுடன் பார்வையில் படலாம் என்ற பட்டியலில் அண்ணிகள் (அண்ணன் – தம்பி மனைவிகள்) அடங்கவில்லை என்பதால் அவர்கள் முகம் முன்கைகள் தெரியும் நிலையில் மட்டுமே மச்சான்களிடம் (கணவரின் உடன் பிறந்த சகோதரர்களிடம்) இருக்க வேண்டும்.
பெண்களை சாதாரணமாக பார்க்க அனுமதியுள்ளது என்றால் முஃமினான ஆண்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருள் அல்குர்ஆன் 24:30 வசனத்தின் பொருள் என்ன?
இங்கு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது பெண்களை விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் மட்டும் வரவில்லை. பொதுவாகவே தவறான – பாவமான அனைத்தையும் விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் தான் வந்துள்ளது.
பார்வையில் பாவம் உருவாகும் நிலை இருந்தால் பெண்களை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.
கேள்வி : நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில் சேட்டிங் செய்யலாமா? தபால் எழுதலாமா? டெலபோனில் பேசலாமா?
இது பற்றி குறிப்பிடுவதற்கு முன் நம் சமூகத்தில் நிலவி வரும் பழக்க வழக்கங்களையும், ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்து நடைமுறையையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் தொடர்பாக நம்மிடையே
சிலர் குடும்பத்தில் குழந்தை பிறந்ததுமே உறவு (சொத்து) விட்டுப் போகக் கூடாதென கருதி இன்னாருக்கு இன்னார் என நிச்சயம் செய்து கொள்கின்றனர்.
சிலர் பெண், ஆண் மக்கள் உரிய தகுதியை அடைந்ததும் படிப்பு, தொழில் காரணமாக நிச்சயதார்த்தத்தை முதலிலும் பின்னர் இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் திருமணத்தை நடத்தவும் செய்கின்றனர்.
தாயகத்தை விட்டு வெளி இடங்களில் குறிப்பாக அரபு தேசங்களில் பணிபுரியும் சிலர், தனக்கோ தனது சகோதரிகளுக்கோ திருமண நிச்சயதார்த்தம் செய்து விட்டு கூடுதல் பொருளாதார தேவைக்காக திருமணத்தை இரண்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பின் நடத்துகின்றனர்.
வெகு சிலரே (அரபு தேசங்களிலிருந்து விடுமுறையில் செல்பவர் அல்லது வேறு காரணங்களுக்காக) நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து உடனேயே திருமணத்தை அல்லது நிச்சயதார்த்தம் என்ற சடங்கே இல்லாமல் திருமணத்தை நடத்துகின்றனர்.
இன்னும் சிலர் அவசரமாக திருமணத்தை முடித்துக் கொண்ட பின் (நல்ல நேரம் பார்த்துத் தான் கூட (உடலுறவு கொள்ள) வேண்டுமென்று – (மார்க்கத்திற்கு முரணாக) – எண்ணுவதால்) தனித்தனியே இருக்கின்றனர்.
முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நிச்சயதார்த்தம் என்ற ஒரு சடங்கே கிடையாது. இரு தரப்பினரின் சம்மதம் பெறுவதற்கும் திருமணம் நடைபெறுவதற்குமான கால இடைவெளி குறைவு. ஆனால் தற்சமயம் பலரும் புலம் பெயர்ந்து அல்லது தொழில், வாணிபம் காரணமாக தொடர்பின்றி வாழ்வதால் அவரவரின் குணநலன் பற்றி விசாரித்தறிய கால அளவு தேவைப்படுகிறது. என்றாலும், விசாரித்த பின் நிச்சயித்து உடனே மணம் செய்து கொள்வது தான் சிறப்பாகும். அவ்வாறு திருமணம் செய்த பின் கூடாமலும் (உடலுறவுக்கு முன்பே) புறப்பட்டு வெளி இடங்களுக்கு சென்று விட்டால் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது (சேட்டிங் செய்வது) ஆகுமானதாகும்.
அல்லாமல் வெறுமனே நிச்சயம் செய்து கொள்வதால் மாத்திரம் சேட்டிங் போன்ற வகைகளில் தனியாக ஒரு பெண்ணிடம் பேச அனுமதியில்லை. திருமண ஒப்பந்தம் முடியும் வரை பொறுத்திருப்பதே சிறந்தது.
இது குறித்து குறிப்பிடும் போது தற்கால மார்க்க அறிஞர் ஷேக் உதைமீன் அவர்கள் ‘திருமண ஒப்பந்தத்திற்கு பின்பே ஒரு பெண்ணுடன் தனித்துப் பெசுவது ஆகுமானதாகும். அவ்வாறு இல்லாமல் திருமண ஒப்பந்தத்திற்கு முன்பு – நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தாலும் சரி – பேசிக் கொள்வதற்கு அனுமதியில்லை. எனவே அது ஹராமாகும். ஏனெனில் திருமண ஒப்பந்தத்திற்கு முன் அப்பெண் மற்றவர்களைப் போலவே கருதப்படுவாள்’. எனக் கூறுகின்றார். (ஃபதாவா அல்மர்ஆ – பக்கம் 51)
எனவே சேட்டிங், தொலைபேசி உரையாடல் போன்றவற்றை தவிர்ந்து கொள்வதே நலம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா?
மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது தமது ‘அஹ்காமு அஹ்லித்திம்மா’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ‘மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் ‘குப்ர்’ என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்’
இப்னுல் கைய்யிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர் வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.
வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!
மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.
அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.
மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும் ஹராமாகும்.
‘எவர்பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)
அஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
கேள்வி : காயிப் ஜனாஸா தொழுகை நடத்த மார்க்கத்தில் அனுமதியுண்டா? ஆதாரத்துடன் விளக்குங்கள். (ஜஹபர் சாதிக் ஈடிஏ அஸ்கான் மெயில் மூலமாக)
அபீசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி (அஸ்ஹமா) அவர்கள் மரணித்த அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் அவருக்காக (காயிப்) ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். (ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம் 951, அபூதாவூது 3204, இப்னுமாஜா 1534, திர்மிதி 1022) இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு காயிப் ஜனாஸா தொடர்பாக மூன்று விதமான கருத்துக்கள் அறிஞர் பெருமக்களிடம் காணப்படுவதாக இமாம் இப்னுல் கையிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காயிப் ஜனாஸா தொழுகை பொதுவான ஒரு சுன்னா. முஸ்லிம்களில் யார் மரணித்தாலும் அவருக்காக தொழலாம்.
இது நஜ்ஜாஷிக்கு மட்டும் குறிப்பானது, ஏனையோருக்கு இது பொருந்தாது.
இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: யாராவது ஓர் ஊரில் மரணிக்கிறார். அவ்வூரில் அவருக்குத் தொழுகை நடத்தப்பட வில்லை என்று உறுதியானால் அவருக்காகத் தொழுகலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்ஜாஷிக்காக தொழுகை நடத்தினார்கள், ஏனென்றால் அவர் காபிர்களுக்கு மத்தியில் வாழ்ந்து மரணித்தார். அவருக்குத் தொழுகை நடத்தப்பட வில்லை. அவருக்குத் தொழுவிக்கப்பட்டிருப்பின் அவருக்காக உள்ள கடமை நீங்கி விடுகிறது.
(பார்க்க: ஸாதுல் மஆத் பாகம் 1, பக்கம் 519, தாரு ஆலமில் குதுப் பதிப்பு)
இவற்றில் மூன்றாவது கருத்தே ஆதாரத்திற்கு நெருக்கமானதாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
‘Jazaakallaahu Khairan’ – Athirai Thameem