‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்‘. (அல்குர்ஆன் 73:4-5)
உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது சில மகத்தான அடையாளங்கள் ஏற்படவுள்ளன.
புகை மூட்டம்,
தஜ்ஜால்,
(அதிசயப்) பிராணி,
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது,
ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி வருவது,
யஃஜுஜ் மஃஜுஜ்,
கிழக்கே ஒன்று மேற்கே ஒன்று அரபு தீபகற்பத்தில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது,
இவற்றில் இறுதியாக ‘எமனி‘ லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்,
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
இந்த பத்து அடையாளங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டவுடன் உலகம் அழிந்துவிடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் மூலம் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். இவற்றில் மூன்று அடையாளங்கள் மிகவும் முக்கியமானவை.இறைவனை மறுத்தவர்கள், இணைவைத்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தினால், இறைவன் மீது நம்பிக்கை கொண்டால் அதை இறைவன் ஏற்றுக் கொள்கிறான். அவர்களை மன்னிக்கிறான். ஆனால் அந்த மூன்று அடையாளங்களும் ஏற்பட்டு விடுமானால் அதன் பின் பாவமன்னிப்பு என்பது கிடையாது. அதன் பின்னர் ஈமான் கொண்டால் அந்த ஈமானுக்கு இறைவனிடம் மதிப்பேதும் இராது. இதிலிருந்து அந்த மூன்று அடையாளங்களும் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் அழிவு எந்த அளவு அண்மித்து விட்டது என்பதையும் அறியலாம்.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், (அதிசயப்) பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமானால் அவற்றுக்கு முன்பே ஈமான் கொண்டிருந்தால் தவிர எவருக்கும் அவரது ஈமான் பயனளிக்காது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், இப்னுமாஜா)
சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அந்த நாள் வராது அவ்வாறு உதிப்பதை மக்கள் காணும் போது ஈமான் கொள்வார்கள். ஆனால் அது எவருக்கும் ஈமான் பயனளிக்காத நேரமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)
மகத்தான இம்மூன்று அடையாளங்களில் பயங்கரமான அடையாளம் தஜ்ஜாலின் வருகைதான். அவனது வருகையினால் உண்மை முஸ்லிம்கள் கூட ஈமானை இழந்து விடும் அபாயம் உள்ளது. தன்னைக் கடவுள் என்று பிரகடனம் செய்யும் அவனது மாயவலையில் முஸ்லிம்கள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் அவனைப் பற்றி முழுமையாக எச்சரித்துள்ளனர். அவனது ஆற்றல், அங்க அமைப்பு, அவனது செயல்பாடுகள் உட்பட அனைத்தையும் நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அபூஉபைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)
ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
அந்தப் பத்து அடையாளங்களையும் விரிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் முக்கியத்துவம் கருதி தஜ்ஜால் பற்றி நபியவர்கள் செய்த முன்னறிவிப்புக்களை முதலில் அறிந்து கொள்வோம்.
முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றி பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தஜ்ஜால் என்பது ஒரு தீயசக்தியைப் பற்றியது என்று சிலர் கூறுகின்றனர்.
பிரிட்டனின் கையில் பாதி உலகம் இருந்த போது வாழ்ந்த ‘மார்டன்‘ மவ்லவிகள் பிரிட்டன் தான் தஜ்ஜால் என்றனர். இஸ்ரேலின் பிரதமர் மோஷே தயானையும் சிலர் தஜ்ஜால் என்றனர். ஜார்ஜ் புஷ் என்ற அமெரிக்க அரக்கனின் ஆட்சியை சந்தித்த நவீன கால அறிஞர்கள் தஜ்ஜால் என்பது ‘ஜார்ஜ் புஷ்‘ தான் என்று அடித்துக் கூறியதும் உண்டு.
தஜ்ஜாலின் சில குணாதிசயங்கள் இவர்களிடம் இருந்திருக்கலாம், அவனைப் பற்றி எல்லா அறிவிப்புக்களையும் ஆராய்ந்தால் அவர்களின் கூற்று பொய்யென உணரலாம். தஜ்ஜால் பற்றிக் கூறப்படும் முன்னறிவிப்புக்களில் சில அறிவுக்குப் பொருத்தமாக இல்லாததால் அவர்களின் அறிவுக்கு ஏற்ற வகையில் தஜ்ஜாலுக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.
மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை வானத்துக்கும் கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில் மீனைப்பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான். என்றெல்லாம் ‘கடோத்கஜன்‘ கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா முன்னறிவிப்புக்களையும் விரிவாக எடுத்து வைப்போம்.
தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்
ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் அமைந்திருப்பான். அது எந்தக் கண் என்பதில் இரு விதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
‘நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சை போன்று ஊனமுற்றிருக்கும்‘ – நபிமொழி. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன் – நபிமொழி. (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
தஜ்ஜால் என்பவன் இடது கண் ஊனமானவன் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப்பற்றி இன்னும் பல அடையாளங்களும் உள்ளன. அவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.
– “Jazaakallaahu khairan” ADIRAI THAMEEM