ஷரீஅத் பேணவில்லை, ஹஜ் செய்யவில்லை, ஏராளமான மனைவிகள், சொகுசு பேர்வழிகள் என்றெல்லாம் காரணம் கூறி நம்மில் பலர் முகலாய மன்னர்களை அலட்சியப் படுத்துவது தெரிந்த விஷயம் தான். முகலாயர்களுக்கும், அல்லாஹ்விற்கும் இடையேயுள்ள விஷயங்களாக கருதி, இவைகளை விட்டுவிட்டு, அவர்களின் மற்ற நற்செயல்களுக்கு நமது வாழ்த்தை தெரிவிக்கலாமே.
முகலாய மன்னர்கள், ஷரீஅத் கோட்டையாகத் திகழும் பள்ளிவாசல்களை ஏராளமாய் நிர்மானித்துள்ளனர். அதில் குர்ஆன் வாசகங்களை ஆர்வத்துடன் அவற்றில் பக்தி சிரத்தனையுடன் எழுதியுள்ளதைப் பார்ப்போர் முலாயர்களின் இஸ்லாமியப் பற்றை உணரலாம்.
இறை அருளால் அரபி எழுத்துக்களை அலங்கரமாக வரைந்து தரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் என்னிடம் ‘தாஜ்மஹாலில் உள்ள அரபி எழுத்துக்களை பார்த்தீர்களா?’ என பலர் கெட்பதுண்டு. ‘இல்லை இனிமேல் தான் பார்க்க வேண்டும்’ என்ற பதிலையே சொல்லிக் கொண்டிருந்த எனக்கு ஒரு கல்யாணத்திற்கு டெல்லிக்கு சென்றிருந்த போது அதைப் பார்ப்பதற்காக ஐந்து மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து ஆக்ரா கோட்டை தவிர டெல்லியுள்ள ஜும்மா மஸ்ஜித், ஹுமாயூன் சமாதி, செங்கோட்டை, குத்ப்மினார், போன்றவைகளிலும், இஸ்லாமிய கலைநுட்பத்துடன் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
உலகிலேயே அதிக குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட கட்டிடம் தாஜ்மஹால் என்பதால்தான் இது உலக அதிசயம் ஆகியிருக்கலாம். ஆம்! மக்கா, மதீனா, உள்பட உலகின் வேறெந்த பள்ளியிலும் இந்த அளவிற்கு குர்ஆன் வாசகம் பொறிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உலக அளவில் புகழ்பெற்ற இஸ்லாமிய நினைவுச் சின்னம் கட்டிடம், பள்ளிவாசல் பற்றிய முழு புகைப்பட புத்தகம் பார்த்து விட்டே இதை எழுதுகிறோம்.
தாஜ்மஹல் வெளித் தோற்றம் நாலுபுறமும் ஒரே மாதிரி உள்ளது. அதில் யாசீன் சூராவை நான்காகப் பிரித்து நாலுபுறமும் எழுதியுள்ளார்கள். தவிர உள்ளே நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன.
ஈரான் நாட்டு அமானத்கான் என்கிற கலைஞர் தான் குர்ஆன் எழுத்துக்களை அலங்காரமாய் செதுக்கியவர். ஷாஜஹான் அழைத்தவுடன் ஓவியர் போட்ட ஒரே கண்டிஷன் எழுத்துக்கு கீழே தனது கையெழுத்தை போட அனுமதிக்க வேண்டும் என்பதுதான். அனுமதி வழங்கப்பட்டது! இன்றைக்கும் தாஜ்மஹாலில் செதுக்கப்பட்ட ஒரே தனி நபர் பெயர் அவருடையது தான். (நாம் அரபி எழுத்து வரைந்தபின், நமது பெயரை கீழே போடுவதில்லை. பெயரும், உருவமுமற்றவனின் திருப்பெயருக்கு அருகில் அழியக் கூடிய நமது பெயர் எதற்கு? சரிதானே)
தினமும் பார்வையாளர்கள் ஈசல்கள் போல் அலை அலையாக வந்து தாஜ்மஹலை கண்டு பிரமித்து வியந்து திரும்புகிறார்கள். கட்டிடத்தின் கலைநயம், பழமை, மண்ணின் வரலாறு மட்டுமே அங்குள்ள வழிகாட்டிகளால் சொல்லப்படுகிறது. அதிலுள்ள குர்ஆன் ஆயத் பற்றி அதிகம் கண்டு கொள்வாரில்லை ‘அது சாதாரண வார்த்தையல்ல, கவிதையல்ல அகில உலக இரட்சகனின் வார்த்தை” உணர்த்தும் முயற்சி வேண்டும். குறைந்தபட்சம் தாஜ்மஹாலில் இடம் பெற்ற குர்ஆன் வசனங்களின் மொழி பெயர்ப்புகளை பலமொழிகளில் அச்சிட்டு, வருவோருக்கு வினியோகிக்க தொண்டுள்ளம் கொண்டவர்கள் முயற்சிக்கலாம்.
நன்றி: கு.அப்துல் அஜீஸ். ‘ஜமாஅத்துல் உலமா’ மாத இதழ்,