‘முன்னோர்களில் ஒருவர், பாதையொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். திடீரென ஓரிடத்தில் நடுவழியில் ஒரு முள்மரம் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். இது மக்களுக்கு இடையூறு செய்யுமல்லவா? இதை நான் அகற்றிவிட்டுத் தான் மேலே செல்வேன் என்று கூறியவராக அந்த முள் மரத்தை வெட்டி ஓரத்தில் வீசினார்.
அவரது இந்த நற்செயலால் மகிழ்ந்த வல்ல ரஹ்மான் அவரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தான்.
சுவர்க்கத்தில் அவர் ஆனந்தமாக சுற்றி விளையாடுவதை நான் கண்டேன் என்று கூறிய இந்நிகழ்ச்சி, உண்மையின் உறைவிடமாம் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் உரைக்கப்பட்டு ஹஜ்ரத் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஸஹீஹுல் புகாரீ 652) (ஸஹீஹ் முஸ்லிம் 1914)
அன்புச் சகோதரர்களே! ஆண்டவனின் அளவற்ற கரணையை என்னவென்று புகழ்வது! ஒரு மனிதனின் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பதற்கும் அவனைத் தன் சுவர்க்க மாளிகைக்குள் புகச் செய்வதற்கும் அவன் எதிர்பார்க்கும் நற்செயல்கள் மலையைப் புரட்டி கயிறாக திரிக்க வேண்டும் என்பதோ மணலையெல்லாம் அள்ளி மலையாக மாற்றவேண்டம் என்பதோ அல்ல.
ஒரு சின்னஞ்சிறு செயல் ஆம்! அது சாதாரணமாக எல்லோரும் செய்ய முடிந்த அற்பமான ஓர் அமலாக இருந்தாலும் அதைத் தூய்மையான எண்ணத்துடனும் அல்லாஹ்வின் குடும்பமாகிய அடியார்கள் பயன்பெறும் வகையிலும் அமைந்து விட்டால் போதும். அந்த ஒரேயொரு செயலுக்காக அவனது ஆயுள் முழுவதும் செய்த எல்லாப்பாவங்களையும் மன்னித்து விடுகிறான் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
நாய்க்கு நீர்புகட்டிய விபச்சாரி சுவனம் செல்வதும், பூனையை பட்டினிபோட்ட பக்தை நரகம் செல்வதும் இதன் அடிப்படையிலே தான். அதன் வரிசையில் இந்த வரலாற்றின் நாயகர் வேறு எந்த நற்செயல்களையும் செய்தாரோ அல்லவோ? ஆனால் இந்த ஒரு நற்செயலுக்காக அவரை மன்னித்து சுவர்க்கம் புகச் செய்துவிட்டான்.
‘இறை நம்பிக்கைக்கு எழுபதுக்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன. அவற்றில் மிக உயர்ந்தது லா இலாஹ இல்லல்லாஹு எனும் ஏகத்துவக் கொள்கையாகும். அவற்றில் மிகவும் குறைந்தது, வழியில் காணப்படும் கல், முள் போன்ற மக்களுக்குத் துன்பம் விளைவிக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது வெட்கம் அதன் ஒரு கிளை தான் என்ற நபி மொழி பிரபலமானதாகும்.
விசுவாசத்தின் கிளைகளில் மிகத் தாழ்ந்த கிளையாகிய இந்த அறச்செயல் அந்த மனிதரின் ஈடேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்றால் நாமும் தான் நடக்கின்றோம். தெருவில் சாலையில் சாணப்படும் எதையாவது குனிந்து எடுத்து வீசியிருக்கிறோமா? இல்லையெனில் ஈமானின் குறைந்தபட்ச அம்சம் கூட நம்மிடம் இல்லை என்றுதான் பொருள்.
பாதைக்குரிய கடமைகளைப் பேணிக்கொள்ளுங்கள் என்ற கூறிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற்றில் முக்கியமான கடமையாக வழியில் கிடக்கும் துன்பங்களi அகற்றுவது என்று குறிப்பிட்டிருப்பது நாம் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான சுன்னத்தாகும்.
மவ்லானா, எஸ்.லியாகத் அலீ மன்பஈ