மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது.
பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.
“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்
முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது
திட்டமிட்ட கருச்சிதைவு நகர்ப்புறங்களிலும் படித்த குடும்பங்களிலும் அதிகமாக உள்ளது. படித்த பெண்கள் உள்ள குடும்பங்களில் திட்டமிட்ட கருக்கலைப்பு அதிகமாக இருப்பதற்கான காரணம் அவர்களுக்கு இருக்கக்கூடிய பணவசதி மற்றும் எட்டும்தொலைவில் டாக்டர்கள் இருப்பது காரணமாக இருக்கலாம்.
1994 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி திட்டமிட்ட கருக்கலைப்பு குற்றமாகும்.
டாக்டர்கள் கட்டைவிரலை நிமிர்த்தியோ கவிழ்த்தோ காட்டுவது, மவுனத்தின் மூலம் பெண்சிசுவைக் குறிப்பிடுவது, மிட்டாய் கொடுப்பது போன்ற செயல்களினால் அல்ட்ராசவுண்ட் முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்
எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.
பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உடனடியாக செயல்படுத்த எல்லா வழிகளிளும் முன்னேற்றம் காட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனும் முன் வரவேண்டும்.இதற்கான முதல் படி வீட்டிலிருந்தே தொடங்கி நம் குடும்பத்திலும் அடுத்து நம் சமுதாயத்திலும் தொடர வேண்டும்.நான் இதை பாரதப் பிரதமராக இருந்து கொண்டு சொல்லவில்லை . மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து கொண்டு சொல்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.
என்னுடய பெண் குழந்தைகளுக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என நான் விருப்பப்படுகிறேனோ அவைகள் அனைத்தும் நம் நாட்டில் உள்ள எல்லா பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என பாரதப் பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் அவர்கள் சென்ற வருடம் டில்லியில் நடைபெற்ற “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்” கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
நன்றி: சே.வேங்கடசுப்ரமணியன்.