Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தேவை நல்ல நட்பு!

Posted on January 31, 2009 by admin

தேவை நல்ல நட்பு!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள் :

“நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.” (அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்    அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.

சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர்.

எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.”

பெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றிய நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.

நபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரமும் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை – உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.

எனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.

இவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்பதியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ – பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.

நல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.

மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும்.

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். இப் பேருண்மையை நபி صلى الله عليه وسلم அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.

“ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும்.” (ஆதாரம் : அபூதாவூது).

எனவே, இவ்விடத்தில் நல்ல நட்பை தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல நட்பு என்பது சுவன பிரவேசத்திற்கு வழி வகுக்கின்றன. நரக விடுதலை பெற்றுத் தருகின்ற நட்பாகும். சடவாத ஜாஹிலிய்யா சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உலகில் நலன்களை இலக்காகக் கொண்ட நட்பு கெட்ட நட்பாகும். இத்தகைய நட்பு மனிதனது உயர் லட்சியத்தை விடுவதோடு, சேர்த்து அவனையும் நரகத்தில் எறிந்து எரித்து விடுகிறது. கெட்ட நட்பினால் வழி தவறி, நரகம் சேர்ந்து விட்ட மனிதனது கைசேதம் இவ்வாறு அமைகிறது.

“அந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா? என்று கூறுவான். அன்றி அய்யோ பாவம் செய்யும்படி தூண்டிய இன்ன மனிதனை என்னுடைய சிநேகிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டாமா? என்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தன் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஐஷத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்).”  (சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)

அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன.

புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் நட்புத் தேடல் விசயத்தில் நல்லதொரு வழிகாட்டலைத் தருகின்றார்கள்.

“இறைவிசுவாசிகளைத் தவிர்த்து வேறு யாருடனும் தோழமை கொள்ளாதே! இறையச்சமுள்ளவனைத் தவிர வேறு யாரும் உனது உணவை உண்ண வேண்டாம்.” (அபூதாவுது, திர்மிதி)

நட்பு அல்லாஹ்வுக்கு அமைகின்ற போது அது நல்ல நட்பாக மாறுகின்றது. நித்திய தன்மை பெற்று நிகழ்கிறது. அதுவல்லாத போது தற்காலிகமாக நீடித்து விரைவில் அது காலத்தால் அழிந்து விடுகிறது. மார்க்கத்தின் பெயரால் உருவாகும் நட்பு கூட உளத்தூய்மை இழந்து இஸ்லாமிய கருத்துக்கு பகரமாக நச்சுக் கருத்துக்களை வளர்க்கும் வகையில் உருமாறினால் அத்தகைய நட்பு விரைவில் அழிந்து விடும். இதுவும் கெட்ட நட்பே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

“மறுமை நாளில் அல்லாஹ{த்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான்.” (முஸ்லிம்)

வகுப்பறைத் தோழர்கள், பயணத் தோழர்கள், ஆருயிர்த் தோழர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் நட்பு இறைச் சிந்தனை இஸ்லாத்தின் கடமைகள் ஷரீஅத்தின் சட்ட வரம்புகளை விட்டு தூரமாக்கி படுமோசமாக உறவுகளுக்கு வழிவகுக்கலாகாது. தமக்கு மத்தியில் பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.

“முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர்.” ( சூரா அத்தவ்பா : 71)

நண்பர்களாக இருப்போம்! நன்மையை தீமையைத் தடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் நாம் தலையிடுவதில்லை என்ற வாதம் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இது கெட்ட நட்பாகும். கொல்லனின் துருத்தியில் இருந்து தெறிக்கும் தீப் பொறிகள் ஆடையை எரித்து விடுவது போல் கெட்ட நட்பு மறுஉலக பயன்பாடுகளை எரித்து விடும். கொல்லனின் துருத்தியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போல இவ்வுலக வாழ்வு துர்நாற்றமிக்கதாகவே அமையும்.

எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்.

இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb