1. ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
2. குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்து விட்டிருக்கும்போது… அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தாம்பத்திய உறவு மேற்கொள்ளலாமா?
3. கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா?
4. வட்டி வாங்கும் தந்தையின் சம்பாத்தியத்திலிருந்து மகன் சாப்பிடலாமா?
5. விமானத்தில் எவ்வாறு தொழுவது?
கேள்வி : பெண்களுக்கு ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்க இஸ்லாம் அனுமதிக்கிறதா?
பெண்களுக்கு ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்கும் போது பெண்களின் பிறப்பு உறுப்பை பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை. (உயிருக்கு ஆபத்தான நேரத்தில், மாற்று வழி இல்லாத போது ஆண் டாக்டர்களை பிரசவம் பார்க்க அனுமதிக்கலாம் – பதிலை முழுமையாக படியுங்கள்)
‘(நபியே!) முஃமினான ஆண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். அவர்களின் வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்…’ (அல்குர்ஆன் 24:30) ‘முஃமினான பெண்ணுக்குச் சொல்வீராக! அவர்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். அவர்களது வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்…’ (அல்குர்ஆன் 24:31)
ஒவ்வொருவரும் அனுமதிக்கப்படாவைகளை பார்ப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். பிறர் பார்க்கும் அளவுக்கு தனது அங்கங்களை வெளிப்படுத்தவும் கூடாது என்பதை இந்த வசனங்களிலிருந்து விளங்கலாம்.
திருக்குர்ஆனில் இன்னும் சில வசனங்கள் இதே கருத்தைக் கூறுகின்றன.
இதிலிருந்து பெண்களுக்கு பிரசவம் பார்க்க ஆண் டாக்டர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை என்பதை விளங்கலாம். முன்பே திட்டமிட்டு கைனகாலஜி படித்த பெண் டாக்டர்களை பிரசவத்திற்கு ஏற்பாடு செய்வதே நல்லது.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சென்ற போது, ‘இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள், ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர். இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புஹாரி 1361)
இந்த ஹதீஸில் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார் என்பதிலிருந்து பொதுவாக வெட்கத்தலங்களை பிறரிடமிருந்து மறைக்க வேண்டும் என்பதை கூறினாலும் பெண்கள் ஆண்களிலிருந்தும் ஆண்கள் பெண்களிலிருந்தும் மறைக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த குர்ஆன் வசனங்களும் ஹதீஸும் சாதாரண நிலையில் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைச் சொல்கிறது. ஆனால் பிரசவம் போன்ற அசாதாரண நிலைக்கு இது பொருந்துமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
இது பிரசவம் போன்ற அசாதாரண நிலைக்கும் பொருந்தும் பொதுவான கட்டளையாகும், என்றாலும் சில தவிர்க்க முடியாத நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரசவம் சிரமானதாக இருக்கும் போது அல்லது அறுவை சிகிச்சையாக ஆகும் போது ஆண் டாக்டர்களின் உதவி தேவைப்படும். அப்போது நாம் ஆண் டாக்டர்களை அனுமதிப்பது தான் சிறந்தது. இல்லையேல் தாய் சேயின் உயிருக்கு ஆபத்தாக ஆகிவிடும்.
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:
‘எந்த ஒரு ஆத்மாவையும் கொல்லாதீர்கள்’ (அல்குர்ஆன் 6:151)
‘நாம் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்தி மீறி கஷ்டப்படுத்துவதில்லை’ (அல்குர்ஆன் 6:152)
உயிருக்கு ஆபத்தான நேரத்தில், மாற்று வழி இல்லாத போது ஆண் டாக்டர்களை பிரசவம் பார்க்க அனுமதிக்கலாம் என்பதற்கு இந்த வசனங்கள் ஆதாரங்களாகும்.
மேலும், நிர்பந்தத்தின் போது ஹராமாக்கப்பட்ட பொருள் கூட உண்ண அனுமதிக்கும் குர்ஆன் வசனம் கூட இதற்கு ஆதாரமாகும். ‘(நபியே!) நீர் கூறும்; ”தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் – (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 6:145)
சுருக்கமாக சொல்வதென்றால், பிரசவத்திற்கு பெண் டாக்டர்களையே ஏற்பாடு செய்ய வேண்டும். நமது முயற்சிக்குரிய நற்கூலியை அல்லாஹ் தர போதுமானவன். முடியாத பட்சத்திலோ அல்லது ஆபத்தான சூழ்நிலையிலோ ஆண் டாக்டர்களை அனுமதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
கேள்வி : குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்து விட்டிருந்தால்…அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தாம்பத்திய உறவு மேற்கொள்ளலாமா?
‘முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய துதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால் அவர்கள் சொல்(வது) எல்லாம் ‘நாங்கள் செவியேற்றோம் (அதற்குக்) கீழ்படிந்தோம்’ என்பது தான், இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்’. (அல்குர்ஆன் 24:51)
எந்த விஷயமாக இருந்தாலும் குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரம் இருந்தால் அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் கூறுகிறது.
உங்கள் கேள்விக்கான தடை குர்ஆனிலோ அல்லது ஹதீஸ் கிரந்தங்களிலோ காணப்பட வில்லை. எனவே இதற்கான தடை ஏதும் இல்லை.
கேள்வி : தந்தை ஹராமான முறையில் பணம் ஈட்டுகிறார், அதை மகன் உண்ணலாமா? வட்டி என்றால் என்ன? இன்ஸ்டால்மென்ட் கூடுமா?
ஒருவர் செய்யும் பாவம் மற்றவரைச் சாராது என்று இஸ்லாம் தெளிவாகவே சொல்கிறது. அதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காணக்கிடைக்கின்றன.
‘பாவம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார்’ (அல்குர்ஆன் 4:111)
‘(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே (பாவத்தை) சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்’ (அல்குர்ஆன் 6:164)
‘அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே’ (அல்குர்ஆன் 2:286)
‘எவன் நேர்வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர்வழியில் செல்கிறான். எவன் வழி கேட்டில் செல்கிறானோ அவன் தனக்கே கேடு செய்து கொண்டான். ஒருவன் இன்னொருவனின் சுமையை சுமக்க மாட்டான்.’ (அல்குர்ஆன் 17:15)
இன்னும் குர்ஆனின் பல இடங்களில்,
‘ஒரு ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (அல்குர்ஆன் 6:164, 17:15, 39:7, 53:38)
‘அந்த உம்மத்து (சமூகம்) சென்று விட்டது, அவர்கள் சம்பாத்தியவை அவர்களுக்கே.. நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்’ (அல்குர்ஆன் 2:134,141)
இந்த வசனங்கள், தந்தை வட்டி போன்ற பாவச் செயலைச் செய்தால் அது மகனைச் சாராது, தந்தையைத்தான் சாரும், தந்தை செய்தவற்றிற்காக மகன் விசாரிக்கப்பட மாட்டார் என்ற கருத்தை விளக்குகிறது.
கேள்வி : கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா?
ரமளான் நோன்பைப் பொறுத்த வரை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் நோயாளிகள் போன்றே கருதப்படுவர். அவர்களுக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருக்குமென்றிருந்தால் அச்சமயத்தில் நோன்பு நோற்காமல் விட்டு விட்டு பின்னர் அதனை களாச் செய்ய வேண்டும்.
சில அறிஞர்கள், ‘கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும், நோன்பை விட்டு விட்டு அதற்கு பரிகாரமாக ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழை என்ற வீதத்தில் உணவு வழங்கினால் போதுமானது’ என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இக்கருத்து பலவீனமானதாகும்.
நோயாளி மற்றும் பயணியைப் போல் நோன்பை விட்டு விட்டு பின்னர் களா செய்து கொள்ள வேண்டுமென்பதே சரியான கருத்தாகும்..
‘உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டு (நோன்பு நோற்றுக்) கொள்ளலாம்….’ (அல்குர்ஆன் அல்பகரா 2:184)
‘நிச்சயமாக அல்லாஹ் பயணிக்கு நோன்பை விடுவதற்கும், தொழுகையை (அரைவாசியாக) குறைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்துள்ளான். கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை அளித்துள்ளான்’ என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்கள்: அபூதாவூத், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா) – அஷ்ஷெய்க் இப்னு பாஸ் அவர்கள் வழங்கிய ஃபத்வா
கேள்வி : விமானத்தில் பயணம் செய்யும் போது தொழுகையை எப்படி நிறைவேற்றுவது?
தொழுகைக்கான நேரம் ஆரம்பமானதும் விமானத்தில் தொழுவது சிறந்ததா?
அல்லது விமான நிலையத்தை அடையும் வரை எதிர்பார்த்திருப்பதா?
ஃபத்வா: விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் வசதிக்கேற்ப தொழுவது கடமையாகும். நின்று தொழ முடிந்தால் அவ்வாறு செய்ய வேண்டும். அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்து தொழ வேண்டும். அப்போது ருகூஉ, சுஜுதை சைக்கினை மூலம் செய்யலாம். நின்று தொழுவதற்கு இடமும் வசதியும் இருந்தால் நின்று தொழுவதே கடமை.
‘உங்களால் முடியுமான அளவு அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன்: அத்தகாபுன் 64:16) ‘நின்று தொழுவீராக! முடியாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் முடியாவிட்டால் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் தொழுவீராக! அதற்கும் முடியாவிட்டால் மல்லாக்கப் படுத்துக் கொண்டு தொழுவீராக!’ என நபி (ஸல்) அவர்கள் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுக்குக் கூறினார்கள். (நூல்கள்: புகாரி, நஸாஈ)
தொழுகைக்குரிய முதல் நேரத்தில் அதனை நிறைவேற்றுவதே சிறந்தது. நேரம் முடிவதற்குள் விமானம் தரையிறங்கிய பின் தொழ விரும்பினால் அவ்வாறு தொழலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.
வாகனம், ரயில், கப்பல் போன்றவற்றில் தொழுவதன் சட்டமும் இவ்வாறானதே!