கேள்வி : முஸ்லிம் பெண் இந்துவை திருமணம் செய்யலாமா?
பெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா?
அவ்வாறு திருமணம் செய்தால் பெற்றோரின் பங்கு என்ன?
இந்நிலையில் ஜமாத்தார்களின் நிலை என்ன?
பதில் : இந்துக்கள் இணைவைப்பவர்கள் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. இணைவைப்பவர்களை திருமணம் செய்து கொள்ள முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதற்கு கீழ்காணும் வசனம் சான்றாக உள்ளது.
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;.
அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;.
இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்;. (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;.
ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)
இந்துவை ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்கான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது ‘இணைவைப்பவர்கள் முஸ்லிமாகிய உங்களை நரகத்தில் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்ற பெரிய அபாயம் இருக்கிறது’ என்கிறான்.
முஸ்லிம்கள் ஈமானை நம்பிக்கையை இழக்க வேண்டியது வரும், அதனாலேயே அப்படிப்பட்ட திருமணத்தை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.
பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கும் போதும் அவ்வாறு திருமணம் செய்து கொள்வதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதைப் பார்க்கலாம்.
திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து செய்யக்கூடிய வாழ்க்கை ஒப்பந்தம். கணவன் மனைவியாக இருப்பதற்கு எடுத்துக் கொள்ளும் உறுதியான உடன்படிக்கை. திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகளை நன்கு யோசித்து எடுக்கப்படும் முடிவாகும் இது.
இணையாத ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு கொள்கைகள் ஒன்றாக ஆகவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் எவ்வாறு கணவன் மனைவியாக வாழ முடியும்? ஒரே இறைவன் என்று இஸ்லாம் சொல்கிறது, பல கடவுள்கள் என்பது இந்து மதத்தின் கொள்கை. இது இரண்டாவது காரணமாகும்.
இவற்றைக் கவனத்தில் கொள்ளாத வயதில் இப்படிப்பட்ட திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சார்ந்திருக்கும் மதம் தான் பெரிது என்ற நிலைக்கு வரும் போது பிரிந்து விடும் அபாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டே இவை தவிர்க்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
சுருக்கமாக சொல்வதானால், வாழ்க்கை என்பது ஒரு வாகனத்தைப் போன்றது, அதன் இருபக்க சக்கரங்கள் சமமான அளவில் இருந்தால் தான் வண்டி ஓடும். ஒரு சக்கரம் பெரிதாக மற்றொன்று சிறியதாக இருந்தால் வண்டி நீண்ட தொலைவிற்கு செல்லாது, செல்ல இயலாது. அப்படித்தான் திருமணமும், உகந்த ஜோடியை தேர்வு செய்து கொள்வது தான் அறிவுடமையாகும்..
பெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா?
இதில் பல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதில் ஒன்று பெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யக்கூடாது என்பதாகும்.. அதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.
‘எந்தப் பெண்ணாவது தனது பொறுப்பாளரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டால் அவளது திருமணம் செல்லாது, அவளது திருமணம் செல்லாது, அவளது திருமணம் செல்லாது…’ என்று மூன்று முறை நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூது 2078, திர்மிதி 1108, அஹ்மத்)
‘வலி (பொறுப்பாளர்) மூலமாகத் தவிர எந்தத் திருமணமும் இல்லை’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்கள்: அபூதாவூது 2080, திர்மிதி 1107, அஹ்மத்)
நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் வசனத்திலிருந்து பெண்ணுக்கு பொறுப்பாளர் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டிருப்பதை உணரலாம். ‘அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;…’ (அல்குர்ஆன் 2:221)
ஒரு பெண் யாருடைய பொறுப்பில் இருக்கிறாரோ அவரது சம்மதம் அவசியம் தேவை, பொறுப்பாளர்கள் அந்தப் பெண்ணின் பெற்றோராவும் இருக்கலாம் அல்லது பெற்றோர் இல்லாத பட்சத்தில் அவர்களை பொறுப்பெடுத்து வளர்த்து வரும் உறவினர்களாகவும் இருக்கலாம். அவர்களின் சம்மதம் இல்லையேல் அந்த திருமணம் செல்லாது என்பது மேற்கண்ட குர்ஆன் ஹதீஸின் விளக்கமாகும்.
இரண்டாது விஷயம் திருமணம் செய்யும் பெண்ணின் சம்மதத்தை பொறுப்பாளர் பெறுவதும் அவசியமாகும். அதற்கான ஆதாரம் வருமாறு.
‘விதவையின் அனுமதி பெறாமல் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கலாகாது. கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதம் பெறாமல் திருமணம் செய்து வைக்கலாகாது. மௌனமே அவளது சம்மதமாகும்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புஹாரி 5136, முஸ்லிம் 2773, அபூதாவூது 2087, திர்மிதி 1113)
மற்றொரு ஹதீஸில் பெண்ணின் சம்மதம் இன்றி செய்து வைத்த திருமணத்தை நபி صلى الله عليه وسلم அவர்கள் ரத்து செய்தார்கள். அந்த ஹதீஸ் வருமாறு.
‘கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆகவே நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்து வைத்த) அத்திருமணத்தை நபி صلى الله عليه وسلم அவர்கள் ரத்துச் செய்தார்கள். (அறிவிப்பாளர்: கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி), நூல்: புஹாரி 5138, 6945)
மற்றொரு ஹதீஸில்,
நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கன்னிப்பெண் வந்து, ‘என்னுடைய தந்தை எனது விருப்பமின்றியே என் திருமணத்தை நடத்தி விட்டார்’ என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அப்பெண் அத்திருமணத்தை முறித்து விடலாம், அல்லது தொடரலாம் என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க உரிமையளித்து விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்கள்: அபூதாவூது 2091, இப்னுமாஜா 1875, அஹ்மத், முஅத்தா)
சாட்சிகள் இன்றி திருமணங்கள் செய்யக்கூடாது
அதற்கான ஆதாரம் வருமாறு: ‘சாட்சிகள் இன்றி தானாகத் திருமணம் செய்யும் பெண்கள் தான் விபச்சாரிகளாவர்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி 1109)
பொறுப்பாளரின் சம்மதம், பெண்ணின் சம்மதம், சாட்சி இவை அனைத்தும் பெண்ணின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வளையங்களாகும். பெண்கள் எந்த விதத்திலும் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இஸ்லாம் இந்த விதி முறைகளை வகுத்துள்ளது. இதன் அருமை பெருமைகள் ஒரு பெண் பாதிக்கப்படும் போது தான் தெரிய வரும். அப்போது ஏற்படும் ஞானோதயத்தால் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவாக இருக்கும்.
பெற்றோரின் பங்கு என்ன?
எந்தப் பெற்றோரும் தனது பெண் பிள்ளைகளின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றே நினைப்பார்கள். சிக்கலான திருமண வாழ்க்கையை தாமாகவே தேர்ந்தெடுத்தால் யார் தான் விரும்புவார்கள். இப்படிப்பட்ட சிக்கலான சமயத்தில் பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் சொல்கிறது.
‘நபி صلى الله عليه وسلم அவர்களின் மகள் ஜைனபை (அவரது கணவர் அபுல் ஆஸ் இஸ்லாத்தை ஏற்காததால் அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார்கள், பிறகு அவர் இஸ்லாத்தை ஏற்ற பின்) முன்பு நடந்த திருமண ஒப்பந்தப்படி அபுல் ஆஸ் அவர்களோடு நபி صلى الله عليه وسلم அவர்கள் சேர்த்து வைத்தார்கள், புதிதாக எதையும் (ஒப்பந்தம்) செய்யவில்லை’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். (நூல்: அபூதாவூது 2232)
இந்த ஹதீஸ் இஸ்லாத்தை ஏற்காதவர்களோடு திருமணம் நடந்திருந்தால் இருவரையும் பிரித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறது. திருக்குர்ஆன் வசனம் 2:221 இணைவைப்பவர்களோடு திருமணம் செய்யக் கூடாது என்று கூறுவதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தை தனது பிள்ளைகளுக்கு போதிப்பது சிறுபிராயம் தொட்டு இருக்க வேண்டும். அப்போது தான் வாலிப வயதை அடையும் போது இஸ்லாமிய வட்டத்திற்குள் அவர்கள் இருப்பார்கள். அதை வலியுறுத்தும் ஒரு ஹதீஸை இங்கே தருகிறோம். ‘உங்களின் குழந்தைகளுக்கு ஏழு வயது ஆகும் போது தொழும்படி கட்டளையிடுங்கள்.. அவர்கள் பத்து வயது ஆகும் போது அது விஷயமாய் (மறுத்தால்) அவர்களை அடியுங்கள்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐபு (ரலி), நூல்: அபூதாவூது, திர்மிதி)
ஜமாத்தார்களின் நிலை?:
இப்படிப்பட்ட பொருந்தாத திருமணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து விடாமல் தடுப்பது ஜமாத்தார்களின் கடமை. அதற்காக ஒரு சில நடவடிக்கைகளை ஜமாத்தார்கள் எடுப்பது அவசியம், அவைகளாவன.
சம்பந்தப்பட்ட குடும்பத்தின் பொறுப்பாளர்களை ஜமாத்தார்கள் சந்தித்து போதிய உபதேசங்களை உடனடியாக வழங்க வேண்டும். இதுதான் இஸ்லாம் சொல்லும் முதல் நடவடிக்கையாகும்.
குர்ஆன் ஹதீஸை ஒவ்வொருவருக்கும் போதிக்கும் நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
தீர்வு:
குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டுதல்படி நடைபெறுவதே இஸ்லாமிய திருமணமாகும். அதற்கு மாற்றமாக அமைவது இஸ்லாமிய திருமணமாக ஆகாது. இஸ்லாமிய திருமணத்தில் ஆணும் பெண்ணும் முஸ்லிமாக இருக்க வேண்டும்.