வாஷிங்டன்: அமெரிக்காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் பராக் ஒபாமா.
அமெரிக்கா என்றாலே இஸ்லாமிய நாடுகளில் வெறுப்பு நிலவுகிறது. இதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒபாமா.
மத்திய கிழக்கு நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்த ஒபாமா முஸ்லிம் நாடுகளுடன் சமாதானமாக செயல்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.
‘எனது குடும்பத்தில் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் நான் வசித்தவன். இஸ்லாமிய நாடுகளுக்கு விரோதியாக அமெரிக்கா செயல்படுகிறது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். அதை புரியவைப்பதே எனது பணி. பரஸ்பர நலன், மரியாதை அடிப்படையில் புதிய கூட்டாளி உறவை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இதை அரேபிய, இஸ்லாமிய நாடுகள் ஏற்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்’ என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல்–பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அமெரிக்கா திடமாக உள்ளது. இப்படிச் செய் என்று கட்டளையிடுவதற்கு பதிலாக மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பதே நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது.
பதவியில் அமர்ந்து 100 நாள் ஆனதும் இஸ்லாமிய நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து இஸ்லாமிய நாடுகளிடம் நேரடியாக நான் பேச விரும்புகிறேன்.
எவற்றை அழித்தோம் என்பதை விட என்ன செய்தோம் என்பதை வைத்தே நாம் மதிப்பிடப்படுகிறோம். (முஸ்லிம்களை அழித்தோம் என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமோ…?)
பின்லேடன், ஜவாஹிரி போன்றவர்கள் செய்வது அழிவுவேலைதான். இதனால் மரணமும் அழிவும்தான் விளையும் என்பதை முஸ்லிம் நாடுகளுக்கு புரிந்துவிட்டது. (புஷ்ஷும் அவரது கூலிப்படைகளும் லட்சக்கணக்கான மக்களை அநியாயமாக் கொன்றது மட்டும் ஆக்க வேலையோ…?) முஸ்லிம் நாடுகள் முன்னேற்றம் அடைய தன்னாலான அனைத்தையும் அமெரிக்கா செய்யும். (……!!!!! ….?) அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன். (உண்மையை ஒப்புக்கொண்டவரை சரி! பரிகாரம் என்ன..?) பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த நட்புறவு மீண்டும் உருவாக பாடுபடுவேன் என்றார் ஒபாமா.
ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் வேலையிழப்பு
சிகாகோ: சர்வதேச பொருளாதார நெருக்கடி முதலில் அமெரிக்காவில் தோன்றி ஐரோப்பாவில் பரவி தற்போது இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் தாக்கி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 6 நிறுவனங்களில் ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை உள்ளிட்ட நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்டோமொபைல், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
திங்கள்கிழமை மட்டும் ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரையில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.
கேட்டர் பில்லர் நிறுவனம் 20 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் 15 ஆயிரம் பேருக்கு ஊதியமில்லா விடுப்பு அளித்துள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைஸர் 8,200 ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் 8 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. டெக்ஸôஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் 3,400 ஊழியர்களைக் குறைத்துள்ளது. ஹாலந்தைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஐஎன்ஜி 7,000 பேரைக் குறைத்துள்ளது.
டீரி நிறுவனம் 700 பேரையும் டைம் வார்னர் நிறுவனம் 800 பேரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 5.5 சதவீதம் வரை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் விசாரணை: கால வரையறை நிர்ணயிக்க வலியுறுத்தல்
புது தில்லி: பாஸ்போர்ட் வழங்குவதற்கு போலீஸ் விசாரணை மேற்கொள்வதில் கால வரையறை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக சீர்திருத்தக் குழு (ஏஆர்சி) இத்தகைய பரிந்துரையை அளித்துள்ளது. இதுகுறித்து குழுவின் தலைவர் வீரப்ப மொய்லி கூறியது:
பொதுவாக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பங்கள் வந்தால், விண்ணப்பதாரர்கள் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொள்ளும். ஆனால் இதற்கு கால தாமதம் ஆகிறது. இதனால் இதற்கு கால வரையறை நிர்ணயிக்க வேண்டும் என்று ஏஆர்சி அளித்த 11-வது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை தாமதம் ஆவதால் பாஸ்போர்ட் வழங்குவது தாமதம் ஆகிறது. மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மிகவும் சிக்கலாக உள்ளன. இதை பரிசீலிக்கும் பணிகளும் இதனால் தாமதமாகிறது என்றும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனாலேயே பெரும்பாலும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போர் ஏஜென்ட்டையோ அல்லது மூன்றாம் நபரையோ அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
விண்ணப்பங்களை ஏற்பதில் பகுதியளவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால் கால விரயம் ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும் மற்ற நடைமுறைகள் காரணமாக ஆன் லைனில் விண்ணப்பிப்போருக்கும் கால தாமதம் ஏற்படுகிறது.
பாஸ்போர்ட் வழங்குவதை விரைவுபடுத்த, அனைத்து பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் பணியை மத்திய அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது அதிகம் பேர் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
பாஸ்போர்ட்டில் பயோமெட்ரிக் முறை (கண் விழி பதிவு, கைவிரல் ரேகை பதிவு) ஆகியனவும், டிஜிட்டல் புகைப்பட முறையும் அமல்படுத்தப்படும்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்போருக்கும் எளிதில் கிடைக்க வழியேற்படும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் விண்ணப்பதாரரைப் பற்றி விசாரித்து அறியும் பணியை மற்றொரு துறை மேற்கொள்வதால் கால தாமதம் ஏற்படுகிறது. காவல்துறையும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டால் மட்டுமே இது விரைவுபடும்.
அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 34 அலுவலகங்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக மொய்லி தெரிவித்தார்.