உள்ளங்களை இணைக்கும் உணவு
(பாசம் பொங்க; முழுமையாக படியுங்கள். அற்புதமான கட்டுரை)
[ ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள்.
மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, ”இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க…” என்பாள்.
எனக்காகவே சிரத்தை எடுத்து பண்ணியிருக்கே. உனக்கு கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணுமே. உனக்காக இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமே..”’ என்று பதிலுக்கு கணவர் சொல்வார்.
அம்மா நீங்க சமைத்து ரொம்ப களைத்து போயிருப்பீங்க.. நீங்களும் உட்காருங்க நான் எல்லோருக்கும் பரிமாறுகிறேன்..” என்பான், மகன்.
இப்படி ஒருவருக்கொருவர் அன்பால் போட்டி போடும் போது, அங்கே அன்னியோன்யம் உருவாகும். அதற்கு முன்புவரை அவர்களுக்குள் ஏதாவது மனவிலகல் இருந்திருந்தாலும், ஒன்றாக இருந்து உணவருந்தும் போது அந்த நெருக்கடி மறைந்து நெருக்கம் தோன்றியிருக்கும்.
ஒரு குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது உணவை மட்டுமல்ல, மனதையும் பங்கிடுகிறோம்.]
புது ஜீவனை பிரசவித்து இந்த உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தும் தாய்தான், அதற்கு முதல் உணவைப் புகட்டுகிறாள். அது, தாய்ப்பால். உயிரோடு, தன் உணர்வோடு கலந்த உணவை ஊட்டும் தாய், மாதங்கள் பல கடந்த பின்பு உடலில் இருந்து குழந்தையைப் பிரித்து, புதுப்புது ருசியை அறிமுகம் செய்கிறாள்.
குழந்தைக்காக ஒவ்வொரு காய்கறியையும் பார்த்து பார்த்து வாங்கி, எதிலெல்லாம் என்னென்ன சத்து இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை ருசியோடு சமைத்துக் கொடுக்கிறாள்.
என்னதான் சத்து இருந்தாலும், எவ்வளவுதான் அது சுவையாக இருந்தாலும் ”இதோ சமைத்து வைத்திருக்கிறேன். எடுத்து சாப்பிடு” என்று தாய் கூறுவதில்லை. சாப்பிடுவதற்கான சூழ்நிலை, மனநிலை, சுற்றுச்சூழல் போன்றவை குழந்தைக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக நிலாவைக்காட்டி, பறவைகள்-பிராணிகளைக் காட்டி, பாட்டுப்பாடி, கதைகள் சொல்லி தாய் உணவூட்டுகிறார். இது தாய்மையின் இன்றியமையாத பண்பு.
வீடு எதனால் அமைக்கப்பட்டது? என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், செங்கல், சிமெண்ட், இரும்பு… என்ற கட்டுமானப் பொருட்களால் ஆனது என்று பதிலளித்தால், பதில் சரி. ஆனால் அவை அனைத்தும் உயிரற்றவை. அன்பு என்ற உயிர் அதனுள் இருந்தால் மட்டுமே வீடு வீடாக அமையும். இல்லாவிட்டால் கல்லறைக்கும்-வீட்டிற்கும் வித்தியாசம் இருக்காது. இப்போது பெரும்பாலான வீடுகள், நவீன சவுகரியமான கல்லறைகள் போலத்தான் இருந்து கொண்டிருக்கின்றன.
உணவு எதனால் அமைகிறது? என்ற கேள்வியைக் கேட்டால், ”பிரியாணியில் இந்தெந்த பொருட்கள் எல்லாம் சேர்கிறது. ஜாங்கிரியில் இந்தெந்த பொருளெல்லாம் சேர்க்கப்படுகிறது” என்பது அதற்கான தத்துவார்த்தமான பதில் அல்ல. இத்தனை பொருட்களையும் கலந்தால் ஒரு உணவு தயாராகிவிடும் என்பது உண்மைதான். ஆனால் அந்த உணவு சரியான நேரத்தில், சரியான சூழலில் அன்போடும், பாசத்தோடும் பரிமாறப்பட வேண்டும். அப்படியானால்தான் உடலுக்கும், மனதுக்குக்கும் பலன் தருவதாக அந்த உணவு அமையும்.
வீட்டிற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குடும்பமே ஒன்றாவதற்கு வீடு ஒரு கூடு போல் இருப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் உணவை ஒன்று கூடி உண்ணும் விஷயத்தில் பழைய காலத்திற்கும் இப்போதைக்கும் நிறைய வேறுபாடு. முன்பெல்லாம் பசியை தாங்கிக்கொண்டு ஒருவருக்காக இன்னொருவர் காத்திருப்பதும், எல்லோரும் வந்த பின்பு ஒன்றாக அமர்ந்து உண்ணுவதும் பாசத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இருந்தது.
குழந்தை பசிக்கிறது என்று தாயிடம் சொன்னாலும், ”அப்பா வரட்டும். அது வரை பொறுத்திருப்போம்” என்று தாய் காத்திருப்பார். குழந்தை பசிக்கிறது என்று சொல்லும் அதே நேரத்தில் தனது பசியையும் தாயார் உணர்ந்திருக்கவே செய்வார். அதே பசி கணவருக்கும் இருக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும். கணவர் என்ற ஒருவருக்காக தானும், குழந்தையும் பசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆயினும் பசியை போக்குவது மட்டுமே உணவின் நோக்கம் அல்ல, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போதுதான் உணவின் முழுமையை உணர்ந்து கொள்ள முடியும் என்று தாய்மார்கள் நம்பினார்கள்.
ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள்.
மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, ”இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க…” என்பாள்.
எனக்காகவே சிரத்தை எடுத்து பண்ணியிருக்கே. உனக்கு கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணுமே. உனக்காக இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமே..”’ என்று பதிலுக்கு கணவர் சொல்வார்.
அம்மா நீங்க சமைத்து ரொம்ப களைத்து போயிருப்பீங்க.. நீங்களும் உட்காருங்க நான் எல்லோருக்கும் பரிமாறுகிறேன்..” என்பான், மகன்.
இப்படி ஒருவருக்கொருவர் அன்பால் போட்டி போடும் போது, அங்கே அன்னியோன்யம் உருவாகும். அதற்கு முன்புவரை அவர்களுக்குள் ஏதாவது மனவிலகல் இருந்திருந்தாலும், ஒன்றாக இருந்து உணவருந்தும் போது அந்த நெருக்கடி மறைந்து நெருக்கம் தோன்றியிருக்கும்.
ஹோட்டலில் கூட இப்படி ஒன்றாகச் சாப்பிடலாமே! என்று நீங்கள் கேட்கலாம். நான்கு பேர்களைக் கொண்ட உங்கள் குடும்பம் ஹோட்டல் மேஜையைச் சுற்றி உட்காருகிறது. என்னென்ன பொருட்கள் கலந்தது, யார் தயாரித்தது, யாருக்காக தயாரித்தது, எப்படி தயாரித்தது… எதுவுமே தெரியாது. ஆனால் நீங்கள் கேட்ட பெயருள்ள உணவு உங்கள் முன்னால் இருக்கும். அங்கே சாப்பாட்டு போட்டி நடந்து கொண்டிருப்பது போல் பலரும் பலவிதத்தில் உண்டு கொண்டிருப்பார்கள். நீங்களும் அந்த வேகத்திற்கு தக்கபடி உண்டுவிட்டு, எழுந்து போவீர்கள். அங்கே உங்களுக்கு பேச நேரம் இருக்காது. உங்கள் உணர்வுகளை பங்கிட்டுக்கொள்ள வாய்ப்பும் இருக்காது. அங்கே பசி மட்டுமே ஆறும். அன்பு மேம்பாடென்று எதுவும் இருக்காது.
பிரச்சினைகள் நிறைந்த இரண்டு குடும்பத்தினரை ஒன்றாக்க விரும்பும் மூன்றாவது குடும்பத்தார், இரு குடும்பத்தினரையும் அழைத்து விருந்து வைப்பது கிராமத்து வழக்கம். உணவருந்திக் கொண்டே பேசும்போது முக்கியமான பிரச்சினைகள்கூட எளிதாகி, தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்.
இப்போது எத்தனை குடும்பங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்?
18.6 சதவீத குடும்பங்களில் மட்டுமே தினமும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது 22.1 சதவீதம்பேர்.
மாதத்தில் ஒரு தடவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறவர்கள் 53 சதவீதம் பேர்.
நாளடைவில் இந்த சதவீதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுவிடும் போல் தெரிகிறது.
ஒன்றாக இருந்து உண்டால்தான் உறவுகளை மேம்படுத்த முடியும் என்பதை உலகமே புரிந்து கொண்டதால் இப்போது உலகநாடுகள் பலவற்றில் ”பேம்லி மீல்ஸ்” திட்டம் வலியுறுத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் இதை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாளைய வாழ்க்கையை வெற்றிகரமாக்க இன்றே திட்டமிட்டு செயல்பட வேண்டியவர்களாக இருப்பவர்கள் டீன்ஏஜினர். இந்த இளம்பருவத்தினர்தான் உணவில் அதிக அளவில் அலட்சியமாக இருந்து உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள். வீட்டில் உணவருந்துவதே தேவையா என்ற கேள்வியுடன் இவர்கள் இருந்து கொண்டிருப்பதால், சாப்பாடு மட்டுமின்றி ஆரோக்கியமும் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. ஒன்றாக உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தினால் இவர்கள் சமச்žரான சத்துக்கள் கொண்ட உணவை, சரியான நேரத்தில் சாப்பிடும் சூழ்நிலை உருவாகும்.
இளம் பெண்களிடம் ”பிரேக் பாஸ்ட் ஸ்கிப்பிங்” என்ற காலை உணவை தவிர்க்கும் பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காலையில் கல்லூரி செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் காலை உணவைத் தவிர்ப்பதை ஒரு ”நவீன கால நாகரீகம்” போல் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள் இன்று நாளை அல்ல… பிற்காலத்தில்தான் முழுமையாகப் புரியத் தொடங்கும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இவர்களும் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு விடுவார்கள்.
ஒரு குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது உணவை மட்டுமல்ல, மனதையும் பங்கிடுகிறோம்.
பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விடுவதாலும், ஒருவரைப் பற்றி இன்னொருவர் தவறாகப் புரிந்து கொள்வதாலும்தான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுகிறோம். ஒருவர் மீது இருக்கும் குறைபாட்டையும் எடுத்து வைப்போம். அதன் மூலம் பிரச்சினைகள் சுமூகமாக களையப்படும். மனபாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருகும்.
(வாசகர்களின் வசதிக்காக இதே இனையதளத்தின் வேறு பகுதியில் இடம்பெற்றுள்ள ”முதலில் யார் சாப்பிட வேண்டும்?” கட்டுரையை இங்கும் இடம்பெறச் செய்துள்ளோம்.)
முதலில் யார் சாப்பிட வேண்டும்?
மவ்லவி, S. லியாகத் அலி மன்பஈ
( Don’t miss it )
“உங்களில் ஒருவருக்கு அவரின் பணியாளர் உணவு சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடக் கொடுத்தால் அவரையும் தன்னுடன் அமரச் செய்து உண்ண வைக்க வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இல்லையெனில் குறைந்தபட்சம் ஒருக்வளம் அல்து இருகவளம் உணவை அவரது காலத்தில் வைத்து உண்ணச் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த உணவை சமைப்பதற்காக அவர்தானே நெருப்பின் சூட்டில் கஷ்டப்பட்டார்.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு பதிவு : ஸஹிஹ் முஸ்லிம்).
மனித உரிமைகள் பற்றியும் தொழிலாளரின் கடமைகள் பற்றியும் உரத்து முழங்கப்படும் இந்த யுகத்திலும் இது போன்ற ஒரு பிரகடனம் எங்காவது பிறந்திருக்கின்றதா உண்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
உங்களுக்காக சமையல் செய்து சாப்பாடு போடுபவர் உங்கள் பணியாளராகவோ உங்கள் மனைவியாகவோ இருக்கலாம். இங்கே நபிகளார் குறிப்பிடுவது உங்களின் வாழ்க்கைத் துணைவியாக இருந்து உங்களின் வாழ்வில் ஒன்றிவிட்ட மனைவியைப் பற்றி அல்ல. சம்பளம் பெறுவதைத் தவிர வேறு எந்த உரிமையும் பெறாத எந்த நேரமும், எந்த வேலைக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரவேண்டிய வேலைக்காரர்களைப் பற்றியே இங்கே குறிப்பிடுகின்றார்கள்.
சமையல்காரன் சமைத்துப் போடுவது கடமை அதற்காக அவன் சம்பளம் வாங்குகின்றான் அவ்வளவு தான். அவனுக்கு சாப்பாடு போட வேண்டுமா? என்ன? தேவையே இல்லை” என்போரும் “போனால் போகிறது மிச்சம் மீதி இருந்தால் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் ஆனால் நம்மோடு ஒன்றாக அமர்ந்தால் நம்மரியாதை என்னாகும்?” என்போரும் தான் உலகில் அதிகம். ஆனால் இங்கே நபிகளார் கூறும் அற்புதமான சமதர்மத்தையும் மனிதநேயத்தையும் சற்று சிந்தித்துப் பார்த்தால் இது போன்ற தத்துவங்கள் ஓர் இறைத்தூதரிடமிருந்தேயன்றி வெளிவர வாய்ப்பில்லை என்பதை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
அன்றைய அடிமைகள் : பணியாளர் என்று நபிகளார் குறிப்பிடுவது இன்றைய கால கட்டத்தில் ஊழியர்களையல்ல, உச்சி முதல் உள்ளங்கால் வரை தனக்கே உரிமையுள்ள அடிமைகள் பற்றியதாகும். ஏனெனில் அப்பொழுது வேலைக்காரர்களாக இருந்தவர்கள் விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகள் தாம். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது சம்பளமும் கிடையாது ஒரு பைசாவைக் கூடத்தம் கையில் வைத்துக் கொள்ளும் உரிமையோ அதை சேமிக்கவோ தம் இஷ்டப்படி செலவிடவோ எந்த அனுமதியும் வழங்கப்படாது. அந்தக் கற்காலத்தில் தான் வேலைக்காரனை ஒன்றாக வைத்து சாப்பிடச் சொல்கிறார்கள் காருண்ய நபியவர்கள்.
நெருப்பில் நின்றது நீயா? : அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தைக் கவனித்தீர்களா? சமையல் செய்வதற்கான நெருப்பைப்பற்ற வைத்ததிலிருந்து அதைப்பதை அரைத்து ஆட்டுவதை ஆட்டி இடிப்பதை இடித்து அடேயப்பா எத்தனை எத்தனை கஷ்டங்கள்.. நெருப்பின் அருகிலேயே நீண்ட நேரம் நின்று.. ஒவ்வொன்றாக கவனமுடன் செயல்பட்டதால் தானே உங்களுக்கு முன்னால் உணவு வந்தது? அவன் பட்ட கஷ்டத்திற்கு நீங்கள் கொடுக்கின்ற சில ஆயிரம் ரூபாய் கூலி நன்றியாகுமா?
அவன் பட்டபாடு அவனது உடலையும் உள்ளத்தையும் நெருப்பாக வாட்டி எடுத்திருக்கும் அந்த நேரத்தில் அவனையும் உங்களோடு உட்கார வைத்து அவன் சமைத்த உணவை முதன் முதலில் அவனையே சுவைத்துச் சாப்பிடச் செய்தால் அவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான்? காலமெல்லாம் இவரின் காலடியிலேயே நாம் கிடக்கவேண்டும் என்று எண்ண மாட்டானா? இந்த மகிழ்ச்சியை ஏன் அவனுக்கு வழங்கக்கூடாது. அந்த சமைமயலில் ஏதும் குறை இருப்பின் உடனே அவன் சரிசெய்து விடுவானல்லவா?
நம் வீட்டில் நடப்பதென்ன? இப்பழப்பட்ட உயரிய தத்துவத்தை இன்று செயல்படுத்துவோர் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை நாம் கணக்கெடுப்பதற்கு முன்னர் நம்முடைய இல்லங்களில் நமக்கு சமைத்துப்போடும் நம் வாழ்க்கைத்துணைவியுடம் இந்தப் பண்பாட்டை நாம் காட்டுகின்றோமோ என்பதைக் கொஞ்சம் எடைபோடுங்கள்.
கரண்டி பிடிப்பது யார்? : பெரும்பாலான குடும்பங்களில் வீட்டிலுள்ள கிழவர் முதல் குழந்தை வரை அத்தனை பேரும் வயிறார உண்டு கடைசியில் ஏதாவது மீதியிருந்தால் தான் சமையல் செய்தவர் சாப்பிட வேண்டும். அதுவும் வீட்டுக்குப் புதிதாக வந்த “மருமகள்” விஷயத்தில் மாமியார்களுக்கு ரொம்ப தாராள மனசுதான். சோறும் கறியும் சுடச்சுட ஆக்கிப் போட்ட மருமகள், எலும்பைக் கூட ருசிபார்க்க முடியாது சமையல் செய்த கையோடு அவள் சட்டிபானை கழுவர் போய்விட வேண்டும்.
குடும்பத்தலைவியான மாமியார் கரண்டியைப் பிடிக்க ஆரம்பித்தால் குடும்பத்திலுள்ளோருக்கு மட்டுமின்றி மூன்றாவது, நான்காவது தெருவிலுள்ள தன் பெண்மக்கள் வீட்டுக்கு கறிசால்னா அனுப்பி விட்டு, கடைசியில் வெறும் பானையைக் காட்டி “கறி சால்னா இன்றைக்குத் தீர்ந்து போய்விட்டது. அதனாலென்ன? அடுத்த வாரம் நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம். நீ ரசத்தையும் ஊறுகாயையும் வைத்து வயிறாரச் சாப்பிட்டுக் கொள்” என்று “தானம்” செய்கின்ற மாமியார்கள் நிச்சயம் உண்டு.
தனிக்குடித்தனம் ஏன்? : திருமணம் ஆகின்ற வரையில் தன் தாய்வீட்டில் அடுப்பில் கறி வேகும் பொழுதே முதல் ஆளாய்ப் போட்டுச் சாப்பிட்ட செல்லப் பிள்ளையான அவள் தன் மாமியார் வீட்டில் தான் சமைத்துப் போட்ட கறிசால்னாவை முகர்ந்து பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் மனம் வெதும்பிக் கொண்டிருந்தால் கூடிய விரைவில் தனிக்குடித்தனம் போவதற்குத் திட்டம் போடாமல் வேறு என்ன செய்வார்கள்? (சில வீடுகளில் மாமியாருக்கு இப்படி நடப்பது உண்டு).
இனி என்ன? : “நீ சாப்பிடும் பொழுது அவளைச் சாப்பிடச் செய்வதும் நீ உடை எடுக்கும் பொழுது அவளுக்கும் உடை எடுத்துக் கொடுப்பதும் உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளாகும்” என்று கூறிய ஏந்தல் நபியவர்கள் உன் மனைவியின் வாயில் நீ ஊட்டி விடும் உணவிற்காக இறைவனிடம் நீ நற்கூலி பெறுவாய்” என்றும் உணர்த்தி கணவன் சாப்பிடும் பொழுதே மனைவியையும் ஒன்றாக அமரச் செய்து அவர்களுக்கு ஊட்டியும் விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சரி…சரி..! இனிமேல் குறைந்தபட்சம் நாம் சாப்பிடும் பொழுது நம் மனைவியையும் நம்முடன் சாப்பிடச் சொல்ல முன் வருவோமா? கூட்டுக் குடும்பங்களில் இன்றைக்கு இதுவே பெரிய விஷயம் தான்.