திருக்குர் ஆன் அருளப்பட்டதன் நோக்கம்
”தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும் நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.” (அல்குர்ஆன் 18:02,03)
திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும் முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறான்.
அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான். இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
இவ்வுலகில் வாழும் மனிதன், தீமை செய்பவர்கள் சொகுசான இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதையும் நல்லறங்களில் ஈடுபடுவோர் துன்பங்களில் உழல்வதையும் காண்கிறான்.
நல்லவனாக வாழ்ந்தால் ஒரு பயனும் இல்லை. தீயவனாக நடப்பதால் ஒரு கேடும் இல்லை என்று அவனது மனம் கணக்குப் போடுகிறது. அவனும் தீயவனாக மாறி விடுகிறான்.
இந்த மனநிலையை மாற்றியமைப்பது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான நோக்கம்.
இவ்வுலகில் நல்லவனாக வாழும் போது பல இன்பங்களை இழக்க நேரிட்டாலும் பல துன்பங்களைச் சுமக்க நேரிட்டாலும் நல்லவனாக வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்! மாறாக நீங்கள் இழந்த இன்பங்களை விடப் பல மடங்கு இன்பங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
அந்த இன்பங்கள் சொற்பமான நாட்களில் முடிந்துவிடக் கூடியதல்ல. மாறாக என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை என்று ஆர்வமூட்டுவது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம்.
நல்ல காரியங்களில் ஈடுபட ஆர்வமிருந்தும் அதனால் எந்தப் பயனும் இல்லையே எனக் கருதுவோரை இந்த நம்பிக்கை நல்வழிப்படுத்தும்.
இது போலவே தீய காரியங்களில் ஈடுபடுபவன் தான் செய்யும் காரியங்கள் தீமையானவைதான் என்று அறிவுப்பூர்வமாக உணர்ந்தாலும் தனது தீய காரியங்களால் மற்றவர்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாக நேர்வதைக் கண்கூடாகக் கண்டாலும் அவன் அக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள மறுக்கிறான்.
காரணம் தான் செய்கின்ற தீய காரியங்களால் தனக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லையே! தனக்குச் செல்வமும் செல்வாக்கும் புகழும் தானே அதிகரிக்கிறது பிறகு ஏன் இக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்? என்றெல்லாம் நினைக்கக் கூடியவன் தீய காரியங்களில் தொடர்ந்து மூழ்கி விடுகிறான்.
தனது ஒவ்வொரு தீய செயலும் தன்னைப் படைத்த இறைவனால் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. அவனை எவ்வகையிலும் ஏமாற்ற இயலாது. இவ்வுலகில் வாழும் போதே தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ளாவிட்டால் அதே நிலையிலேயே மரணித்து விட்டால் கடவுளால் தண்டிக்கப்படுவோம். அந்தத் தண்டனை இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அடைகிற துன்பங்களை விடக் கடுமையானவை. தாங்கிக் கொள்ள முடியாதவை என்றெல்லாம் எச்சரிக்கவே இந்தக் குர்ஆன் அருளப்பட்டது.
மரணித்தவுடன் எல்லாம் முடிந்து விடுகிறது என்ற நம்பிக்கைதான் மனிதனது தீய செயல்களுக்கு அடிப்படையாகவுள்ளன. இந்த அடிப்படையைத் தகர்க்காமல் என்னதான் சட்டங்கள் போட்டாலும் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் அதனால் ஒரு பயனும் ஏற்படாது.
முதன் முதலில் நம்மைப் படைத்த இறைவன் மீண்டும் படைக்க ஆற்றல் மிக்கவனாகவுள்ளான். அவன் மக்கள் அனைவரையும் அழித்த பின் மீண்டும் அனைவரையும் உயிர்த்தெழச் செய்வான். உயிர்த்தெழச் செய்த பின் நல்லவர்கள் அழியாப் பேரின்பத்தை அடைவார்கள். தீயோர் தாங்க முடியாத நரக நெருப்பில் வீசப்படுவார்கள். இந்த அடிப்படை தான் இஸ்லாத்தின் வெற்றிக்கு மூலகாரணம்.
இந்த அடிப்படை தான் மற்ற சமுதாயங்களை விட முஸ்லிம்கள் வீரமிக்கவர்களாகத் திகழ்வதற்கும், மற்றவர்களை விட அதிகமதிகமாக வாரி வழங்கும் வள்ளல் தன்மைக்கும் இன்ன பிற சிறப்புத் தகுதிகளுக்கும் காரணமாக இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது.
திருக்குர்ஆனில் கூறப்படுகின்ற வரலாறுகளானாலும் அதில் கூறப்படுகின்ற உவமைகளானாலும் சட்டதிட்டங்களானாலும் கொள்கை முழக்கங்களானாலும் அனைத்துமே அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தான் கூறப்படுகின்றன.
மேலே நாம் எடுத்துக் காட்டிய இவ்வசனங்களும் இதைத்தான் கூறுகின்றன.
zazaakallaah khairan – www.thameem1984.spaces.live.