(ஓற்றுமை இதழில் பிலால் பிலிப்ஸ் அவர்களது விரிவான பேட்டியிலிருந்து சுருக்கமாகத் தருகிறோம்)
கட்டுப்பாடுகளை விதிப்பதில் ‘கம்யூனிஸம்’ வரம்பு மீறிச்சென்றது. சுதந்திரத்தை அளிப்பதில் ‘முதலாளித்துவம்‘ வரம்பு மீறிச் சென்றது. இஸ்லாம் இந்த விஷயத்தில் நடுநிலையான போக்கைக் கடைப்பிடித்தது. இதனால்தான் இறைவன் முஸ்லிம்களை (‘உம்மத்தே வஸ்த்‘) நடுநிலையான சமுதாயம் என்று அழைக்கின்றான்.-அபூ ஆமினா பிலால் பிலிப்ஸ்.
டாக்டர் அபூ ஆமினா பிலால் பிலிப்ஸ் மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஜமாய்க்காவில் பிறந்தவர். தமது 25வது வயதில் இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் உள்ள பிரஸ்டன் பல்கலைக் கழகத்தில் இஸ்லாம் மற்றும் அரபித் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வரும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் இந்தியன் இஸ்லாமிக் மிஷன் அழைப்பின் பேரில் தமிழ் நாட்டுக்கு வந்திருந்த டாக்டர் பிலால் பிலிப்ஸ், சென்னை, நெல்லை, நாகர்கோவில் மற்றும் பெங்களூரில் சொற்பொழிவுகளை ஆற்றினார். அவர் அளித்திருந்த சிறப்புப் பேட்டியை வாரம் விட்டு வாரம் வரும் ‘ஒற்றுமை‘ பத்திரிக்கை பிரசுரித்திருந்தது.
ஒற்றுமை: வளைகுடா யுத்தம் முடிவடைந்த பிறகு சவூதியில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படையினரிடையே இஸ்லாத்தை எடுத்துரைக்கும் பணியை நீங்கள் மேற்கொண்டீர்கள் என்று அறிகிறோம். அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்!
பிலால்: வளைகுடா யுத்தம் முடிவடைந்த பிறகு அமெரிக்க வீரர்கள் இஸ்லாத்தை அறிய உதவிடும் முகாம்களை ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களிடையே இஸ்லாத்தைப் பற்றிய சொற்பொழிவுகளை நடத்தினோம். இஸ்லாம் குறித்த பிரசுரங்களையும் அவர்கள் மத்தியில் விநியோகித்தோம். பள்ளிவாசல்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றோம். இஸ்லாத்தைப் பற்றிய அவர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை எல்லாம் கேட்க அனுமதித்தோம். எவ்வித தடங்கலுமின்றி இஸ்லாத்தை அறியும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. இதன் விளைவாக அவர்களில் ஏராளமானோர் இஸ்லாத்தைத் தழுவினர். ஐந்தரை மாத கால இடைவெளியில் 3500 அமெரிக்க வீரர்கள் இஸ்லாத்தைத் தழுவினர்.
இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கு பலதரப்பட்ட காரணங்கள் இருந்தன. எனவே ஒரு குறிப்பிட்ட வகையான பிரச்சாரம்தான் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவ காரணமாக இருந்தது என்று கூறிட இயலாது. இருப்பினும், அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றது, முஸ்லிம்கள் எப்படி வழிபாடுகள் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது போன்றவையெல்லாம் அவர்கள் உள்ளங்களை கவர்ந்தன. சில முஸ்லிமல்லாதாருக்கு பள்ளிவாசல் மாயையாகத் தான் காட்சியளிக்கிறது. அங்கு என்ன நடைபnறுகின்றது என்பது பற்றியெல்லாம் அறியாதவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். எனவே முஸ்லிமல்லாதவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்து, அங்கு நடைபெறும் தொழுகையைக் காண அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது, நமது வீடுகளுக்கு அழைத்துச் செல்வது, பள்ளிவாசல் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் முஸ்லிமல்லாதாருக்காக நிகழ்ச்சிகளை நடத்துவது, இவையலெலாம் பெருமளவில் இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு உதவிடும்.
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம் وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُواْ شُهَدَاء عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا
Zazaakallaah khairan – Adhiraifarook