ஒரு நிகழ்ச்சி:
“ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் (ஹஸன் அல்லது ஹுசைன்) ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள்.
அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே – நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன்.
தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி விட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள்.
நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை!” (நூல்கள்: அன் நஸயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்)
இன்னொரு நிகழ்ச்சி:
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் அமர்ந்து அளவளாவும் அவைக்கு, நபித்தோழர் ஒருவர் தம் குழந்தையையும் அழைத்து வருவார். அந்தக் குழந்தை நேரே நபியவர்களிடம் ஓடிச்சென்று அவர்களின் முதுகில் ஏறத் தொடங்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்குழந்தையை தம் மடியில் அமர்த்திக் கொள்வார்கள். ஆனால் பின்னர் அக்குழந்தை இறந்து விட்டது!
எனவே அக்குழந்தையின் தந்தை நபியவர்களின் அவைக்கு வர இயலவில்லை. இதைக் கவனித்த நபியவர்கள் எங்கே ‘அவரைக் காணோம்?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் அவருடைய குழந்தை இறந்து விட்ட செய்தியைச் சொன்னார்கள்.
பின்னர் அக் குழந்தையின் தந்தையை நபியவர்கள் சந்தித்து விசாரித்த போது, தமது குழந்தை இறந்து விட்ட விபரத்தைத் தெரிவித்தார் அந்த நபித்தோழர். அவருக்கு ஆறுதல் சொன்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் கேட்டார்கள்:
”தோழரே! எது உங்களுக்கு விருப்பமானது? உங்கள் மகன் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பதையா அல்லது சுவர்க்கத்துக்கு நீங்கள் செல்லும் போது, எந்த வாசல் வழியாக நீங்கள் நுழைந்திட முற்பட்டாலும், உங்கள் மகன் அங்கெல்லாம் வந்து நின்று கொண்டு உங்களை வரவேற்பதற்காக அதன் கதவுகளைத் திறந்து விடக் காத்திருப்பதையா?”
அவர் சொன்னார்: ”யா ரசூலுல்லாஹ்! என் மகன் எனக்கு முன்னேயே சுவர்க்கம் சென்று என்னை வரவேற்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: “உங்களுக்கு அது கிடைக்கும்!” (நூல்: அன் நஸயீ)
இந்த இரண்டு நிகழ்வுகளில் இருந்தும் நாம் நிறைய பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளன. அதே நேரத்தில் இங்கே ஒரே ஒரு பாடத்தை மட்டும் நினைவூட்டுவோம். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் குழந்தைகள் பள்ளிவாசலோடு இணைக்கப் பட்டிருந்தார்கள் என்பது தான் அந்தப் பாடம்.
இந்தப் ஒரே ஒரு பாடத்தை நாம் மறந்து போய் விட்டதன் பலனைத் தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்! புரிகின்றதா?