Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்

Posted on January 20, 2009 by admin

    Habib Ur. Rahman      

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

‘நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?’ (அல்குர்ஆன் 4:122)

‘ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.’ (அல்குர்ஆன் 2:148)

‘நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.’ (அல்குர்ஆன் 22:77)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.’இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று (வரவிருக்கும்) குழப்பத்திற்கு (முன்னால்) நற்செயல்களில் போட்டி இடுங்கள். (அந்தக் குழப்பம் வந்தால்) ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது மார்க்கத்தை விற்று விடுவான்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 186)

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து நல்ல செயல்களின் காரணமாகவே சுவனம் செல்ல முடியும் என்று தெரிகின்றது.

நாம் ஒவ்வொரு நாளும் நம்மையே அறியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்து வருகின்றோம்.. அவற்றை அழிக்கும் கருவியாக இருக்கக் கூடிய நல்ல செயல்களை நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

‘அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப் படையாகவும் (நல் வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.’ (அல்குர்ஆன் 13:22)

நன்மை என்றால் தொழுகை, நோன்பு, ஸகாத் இவை தான் நன்மை என்று நாம் நினைத்து வைத்துள்ளோம். இவை தவிர இன்னும் எவ்வளவோ நல்ல செயல்கள் உள்ளன. அவை அதிக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாகவும் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.

அல்லாஹ்வை நினைவு கூர்வது

எந்தச் சிரமத்தையும் எடுத்துக் கொள்ளாமல் ”சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்” என்று கூறினால் அந்த வார்த்தைகள் அதிக நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன..

‘இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 7563)

ஸலாம் கூறுதல்

இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை.

‘ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ”இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்” என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 12)

‘ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ”(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)” என்று கூறினார்கள்.

பிறகு மற்றொரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ”(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)” என்று கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 2613)

தீங்கு தரும் பொருளை அகற்றுவது

நாம் செல்லும் பாதையில் மக்களுக்குத் தொல்லை தரும் பொருளை அகற்றினால் அதற்கும் நமக்கு நன்மை உண்டு.

‘ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்” என்று நபிصلى الله عليه وسلمஅவர்கள் சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2472)

‘தொல்லை தரும் பொருளை  அகற்றிப் போடுவது தர்மமாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 246)

நல்ல வார்த்தைகளைப் பேசுதல்

தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய முடியும்.

‘நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6023)

‘பேரீச்சம் பழத்’தின் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை விட்டுத் தப்பிக்க நினையுங்கள். இல்லையென்றால் நல்ல வார்த்தையின் மூலம் (நரகத்தை விட்டுத் தப்பியுங்கள்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா  ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6023)

மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

‘ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், ”உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்” என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1534)

பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்

வழியில் நாம் சந்திக்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்து நல்ல எண்ணத்துடன் புன்னகைத்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஓர் அருமையான மார்க்கத்தில் இருக்கும் நாம் அதன் சிறப்பைப் பற்றி தெரியாமல் இருக்கின்றோம்.

‘உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4760)

கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் காட்டும் அன்புக்கு நன்மைகள் கிடைப்பது போன்று, விலங்கினத்தின் மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது.

கால்நடைகளுக்குச் சூடு வைப்பதையும் போட்டியில் அது தோல்வியடைந்தால் அதைச் சுட்டுக் கொல்வதையும் பார்க்கும் மக்கள், இஸ்லாத்தின் இந்த உன்னதத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர் (தம் மனதிற்குள்) ”எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார்.அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.. (அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2363, 6009)

குறைந்த தர்மம் அதிக நன்மை

நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும்.

எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ/அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்/ அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா  ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1410)

இது போன்ற சின்னச் சின்னச் செயல்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளன. அவற்றை நாம் செய்து நன்மை செய்யும் நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb