சென்னையில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்:
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சறுக்கலையடுத்து, தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள் 8 சதவீதத்துக்கும் குறைவே.
பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1.20 லட்சம் மாணவர்கள் பி.இ. பட்டத்துடன் வெளியேறுகின்றனர்.
இவர்களில் 75,000 முதல் 80,000 பேர் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த 3 படிப்புகளுக்கும் அதிக முதலீடு தேவை இல்லை என்பதால் 90 சதவீத பொறியியல் கல்லூரிகளில் இப்படிப்புகள் மட்டுமே உள்ளன.
இப் படிப்புகளின் மீது மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் இருந்த மோகத்தால் பெரும்பாலான மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்ந்தனர்.
இந் நிலையில், உலக அளவில், ஐடி உள்ளிட்ட துறைகள் சார்ந்த “நீர்க்குமிழி’ பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் வல்லரசுகளாக இருந்த நாடுகள் கூட தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
சென்னையில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்: சென்னையில் மட்டும் ஓரிரு ஆண்டுகளில் ஐடி, கம்ப்யூட்டர் துறை சார்ந்த நிறுவனங்களை நம்பியிருந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கல்வித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் சர்வதேச அளவில் இந்திய தொழில் நிறுவனங்களின் நற்பெயரையும், நம்பகத் தன்மையையும் பெருமளவு பாதித்துள்ளது.
இது, ஐடி சார்ந்த தொழில் நிறுவனங்களையும் நேரடியாகப் பாதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் ஐடி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் உளிட்ட படிப்புகளைப் படிக்கும் ஆயிரக்கணக்கான பி.இ. மாணவர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.
கிடப்பில் போடப்படுமா ஐடி பூங்கா திட்டங்கள்? மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கும் அரசின் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்து டெக்னோகிராஃப்ட் இந்தியா காலேஜ் ஃபைண்டர் என்ற கல்வி ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் டி. நெடுஞ்செழியன் கூறியதாவது:
தற்போது ஐ.டி. மற்றும் கம்ப்யூட்டர் துறையில், விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்களே அசுர வளர்ச்சி பெற்று கோலோச்சுகின்றன.
இதர பெரும்பாலான நிறுவனங்கள் இந்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை. அதற்கான சூழலும் தற்போது இல்லை.
இத்துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளும் அல்லது ஆராய்ச்சித் திட்டங்களும் இதுவரை இல்லை என்று தெரியவந்துள்ளன.
வெளிநாடுகளில் எந்த மாதிரியான தொழில்நுட்பப் பணியாளர்கள், நிபுணர்கள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப பாடத் திட்டங்களை வகுப்பதில் நமது கல்வி, தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது இல்லை.
நாட்டில் 200 மில்லியன் செல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஆனால், செல் போன் உதிரிபாகங்கள் பெரும்பாலும் சீனா, கொரியா, தைவான் ஆகிய நாடுதளில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இதனால், நாட்டுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி, வணிக இழப்பு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை தமிழகத்தில் போதிய அளவில் தொடங்க வேண்டும். இதற்கேற்ப பொறியாளர்களை உருவாக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு, மருத்துவம், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய பொறியியல் படிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார் நெடுஞ்செழியன்.
நன்றி: தினமணி
வீடு ஒன்றின் விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை
ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த ஓமேக்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் பல அடுக்குமாடி குடியிருப்புகளை (10,000 வீடுகள்) நிறுவத் திட்டமிட்டுள்ளது. குறைந்த வருவாய் பிரிவினரை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த குடியிருப்புகளில், வீடு ஒன்றின் விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் இருக்கும். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஓமேக்ஸ் உருவாக்க உள்ள நகரியம் ஒன்றில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும். இந்த நகரியம் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோஹ்டாஸ் கோயல் கூறினார். இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 18 மாதங்களில் இத்திட்டம் முழுமையாக பூர்த்தியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (அது சரி! தமிழ் நாட்டில் எப்போது கட்டப் போகிறார்கள்? என்று கேட்கிறார் ஒரு சென்னை வாசி!)
வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு
விழுப்புரம்: திருமாவளவன் உடல்நிலை மோசமடைந்ததாக பரவிய தகவலைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பஸ் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டுவீச்சு, பஸ்கள் எரிப்பு சம்பவங்களும் நீடித்து வருகின்றன. சில இடங்களில் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டங்களில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளதாக டி.ஐ.ஜி. மாசானமுத்து தெரிவித்தார்.
படிப்பதற்கேற்ற விளக்கு
சென்னை: மின்னணு பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் பிபிஎல் நிறுவனம் மாணவர்களுக்கென பிரத்யேகமாக படிப்பதற்கான விளக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்டடிலைட்‘ என்ற பெயரில் இது விற்பனைக்கு வந்துள்ளது. சங்கர நேத்ராலயம் கண் மருத்துவமனையுடன் ஆய்வு செய்து கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விளக்கைப் பயன்படுத்துவதால் கண் சோர்வடைவதும் குறையும். அத்துடன் மின் வெட்டு பிரச்னைக்கும் தீர்வாக இது வந்துள்ளது. இந்த விளக்கை ரீசார்ஜ் செய்தால் 6 மணி நேரம் தொடர்ந்து எரியும். வெண்மை நிற பல்புகள் உள்ளதால் அது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அத்துடன் இது புற ஊதாக் கதிர்களோ அல்லது அகச் சிவப்பு கதிர்களோ உமிழாது. மேலும் சாதாரண பல்புகளைக் காட்டிலும் 10 சதவீதம் மின்சாரத்தை சேமிப்பதோடு 50 மடங்கு கூடுதலாக உழைக்கும். சூரிய ஒளி மூலமும் இது செயல்படும். இதற்கு தனி சூரிய ஒளி மின் தகடையும் இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனால் மின்சார வசதியே இல்லாத கிராமங்களில் வாழும் மாணவர்களுக்குக் கூட இது பயன்படும். விலை. 1,960.
மூக்குக் கண்ணாடி அணிபவர்களும் இனி விமானி ஆகலாம்
புது தில்லி: விமான பைலட்டுகள் தேர்வு முறையில் சில விதிமுறையை இந்திய விமானப் படை தளர்த்தியுள்ளது. இதனால் பார்வை குறைபாட்டால் மூக்குக் கண்ணாடி அணிந்துள்ளவர்களும் விமானிகள் தேர்வில் கலந்து கொண்டு கனவை நனவாக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனை. விமானிகளாக தேர்வான பின்னர் மூக்குக் கண்ணாடி அணிபவர்கள் கட்டாயம் கண்களில் சிறிய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைத்து விமானங்களையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டும் இயக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிமுறை தளர்வு இந்த ஆண்டில் இருந்தே நடைமுறைக்கு வந்துள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.