டாக்டர் D. முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H.,
குழந்தை வளர்ப்பதில் சில தாய்மார்கள் சிள தவறான பழக்க வழக்கங்களையும் மற்றும் கருத்துகளையும் நடைமுறை படுத்துகிறார்கள். அவைகள் பற்றி சற்று பார்ப்போம்.
1. குழந்தை பிறந்த உடன் கழுதை பால் கொடுக்க வேண்டும் என்ற தவறான வழக்கம் உள்ளது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் கழுதைப் பால் அஜீரணம் ஏற்படலாம்.
2. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும் போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சு உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.
3. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
4. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம் இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்கு பரவும்.
5. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் – தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டும்.
பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்‘ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்‘ என்று செய்கிறார்கள் இது மடமை.
6. ஒரு முறை டாக்டர் தந்த மருந்தையோ அல்லது அதே நோய் உள்ள மற்ற குழந்தைகளுக்கு டாக்டர் தரும் மருந்தையோ கொடுக்கிறார்கள். நோய் ஒரே மாதிரி தெரிந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குழந்தைக்கும் நோயின் தன்மை மாறுபடும்.
7. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளை சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.
8. அம்மையை பற்றி மூடப்பழக்கம் அனேகம் உள்ளன. அம்மை ஒரு வைரஸ் நோய் சில குழந்தைகளுக்கு தானாகவே சரியாகி விடும். இன்னும் சில குழந்தைகளுக்கு விபரீத விளைவை உண்டுபண்ணும் தற்சமயம் அம்மையை தடுக்கும் தடுப்பூசிகள் உள்ளன.
9. சில தாய்மார்கள் என் குழந்தைக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டு விட்டேன் பிறகு மீண்டும் மஞ்சள் காமாலை வந்து விட்டதே என்கிறார்கள். மஞ்சள் காமாலையில் பல வகை உண்டு. நம் நாட்டில் பொதுவாக மஞ்சள் காமாலை டீ க்குத்தான் தடுப்பூசி போடுகிறோம். மிக அரிதாக சிலர் மஞ்சள் காமாமல A தடுப்பூசி போடுகிறார்கள். மஞ்சள் காமாலை டீ தடுப்பூசி போடுவதால் அதை மட்டுமே தடுக்க வல்லது மற்ற வகைகளை தடுக்காது அது போல தடுப்பூசி போடுவதால் 100 சதவீதம் அந்த நோய் வராது என்ற உத்திரவாதம் கிடையாது தடுப்பூசி போடுவதால் அந்த நோயின் வீரியம் குறையும் விரைவாக குணமடைய உதவும் அந்த நோயால் வரும் பக்க விளைவுகள் குறையலாமே ஒழிய 100 சதவீதம் நோய் வராது என்று சொல்ல முடியாது.
10. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறு சிறு சலம் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி‘ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். நுண்கிருமிக்குரிய மருந்தை களிம்பு வடிவிலோ அல்லது மாத்திரையாக உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.
11. சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு அரிச கஞ்சி கொடுப்பதால் சளி பிடிப்பதாக கூறுகிறார்கள். சரியான முறையில் சுத்தமாக ஆரோக்கியமான முறையில் சமையல் செய்தால், கஞ்சியின் காரணமாக சளி பிடிக்காது.
12. சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நோய் வந்துவிட்டால், ஊசி போட்டால் மட்டும் தான் சரியாகும் என்று நினைக்கிறார்கள். மருத்துவச் சந்தையில் ஊசிக்கு நிகரான மருந்து மாத்திரைகள் இருக்கிறது.
உங்கள் குழந்தைகளுக்கு எது குணமளிக்கக் கூடியது என்பதை உங்கள் மருத்துவரை முடிவெடுக்க விடுங்கள்… மருத்துவரின் வைத்தியமுறையில் உங்கள் கருத்துக்களை திணிக்காதீர்கள்.
13. குழந்தைகளுக்கு தரும் உணவு முறையில் கடையில் கிடைக்கும் பாக்கெட் உணவு தான் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற உணவை நீங்களே வீட்டிலே சுத்தமாக தயாரித்து கொடுக்கலாம் விலையும் குறையும் உணவு தயார் பண்ணுவதில் நீங்கள் ஈடுபட்டுள்ளதால் நிம்மதியும் கிடைக்கும்.
14. வலிப்பு நோய் வந்தால் கையில் இரும்பினால் ஆன பொருளை கொடுத்தால் சரியாகிவிடும் என எண்ணுகிறார்கள். இது அறியாமை பொதுவாகவே வலிப்பு தானாகவே சிறிது நேரத்தில் சரியாகி விடும் இரும்பு கொடுக்கும் நேரமும் தானாக வலிப்பு நிற்கும் நேரமும் ஒன்று படுவதால் இந்த நினைப்பு வலிப்புக்கான காரணம் என்ன என்று அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும்.
15. சில குழந்தைகளுக்கு இருமுவது போல் தொண்டையில் குர்குர் என்று சப்தம் வருவதுண்டு. இதை சளி என்று நினைத்துக் கொண்டு மருந்து கொடுக்கிறார்கள். இது சளி அல்ல சிறிய தொண்டை குழாhய் அதில் எச்சிலை சேர்த்து வைத்து கொண்டு துப்பவும் தெரியாமல் விழுங்கவும் தெரியாமல் அந்த எச்சில் வழியாக மூச்சு விடுவதால் வரும் சப்தம் இதனுடன் ஒற்றை இருமல் அல்லது 2-3 தும்பல் கூட சேர்ந்து வரலாம். இதற்கு மருந்து மாத்திரை அவசியமில்லை. மூக்கு அடைத்து இருந்தால் மூக்கு சொட்டு மருந்து கொடுத்தால் மட்டும் போதும் வளர வளர இது சரியாகி விடும்.
16. தடுப்பூசி, போலியோ, சொட்டு மருந்து கொடுத்து சில மணி நேரத்துக்கு ஆகாரம் ஏதும் கொடுக்கக் கூடாது என்று நம்புகிறார்கள். அது சரியான நம்பிக்கை அல்ல.
17. பிறந்த சிலகுழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும் (Witch Milk) இதை நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல.
18. குளுகோஸ், ஸ்லைன் ஏற்றிய குழந்தைகளுக்கு அதனால் சளி பிடித்து விட்டது என்று கூறும் பழக்கத்திற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.
19. சில பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது‘ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்‘ என்று செய்கிறார்கள் இது தவறான பழக்கம்.
டாக்டர் D. முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H.,
சாமு சஜியா பேபி கிளினிக்
57, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, ஏழுகிணறு, சென்னை – 600 001.
போன் : 2528 6464, 2526 6464
– www.nidur.info