Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாம் போராளிகள் மதமா?

Posted on January 15, 2009 by admin

கட்டுரையாசிரியர்: ப. சிதம்பரம் (மத்திய உள்துறை அமைச்சர்)

கிறிஸ்துவப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கு இளமையில் கிட்டியது முதலில் ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரீகள் நடத்திய கான்வென்ட் அடுத்து பிராடஸ்டண்ட் மிஷன் நடத்திய உயர்நிலைப்பள்ளி எல்லா வகுப்புகளிலும் இந்து சமயத்தைச் சார்ந்த மாணவர்களே (கான்வென்டில் மாணவிகளும்) மிக அதிகமாக இருந்தார்கள். சில கிறிஸ்தவர்கள். அபூர்வமாக சில முஸ்லிம்கள். ஆனால், ஒரு முக்கியமான விஷயம்: இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்று பொதுவாகத் தெரிந்தாலும் மதத்தின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது. பல நேரங்களில் ஒரு மாணவனின் பெயரைக் கொண்டுதான் அவனுடைய மதம் தெரிந்தது. நடை, உடை, உணவுப் பழக்கவழக்கங்களில் எந்த வேறுபாடும் தெரியவில்லை.

எல்லோரும் காமிக்ஸ் படித்தார்கள். எல்லோரும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள். நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில் மதம் ஒரு முக்கிய குறியீடாகக் கருதப்படவில்லை. ஒவ்வொரு மாணவனும் பைபிள் அல்லது அறநெறி பாடத்தை படிக்க வேண்டும் என்பது பள்ளியின் விதி. மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (அவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள்)அவர்களுடைய பெற்றோரின் சம்மதத்துடன் பைபிள் பாடத்தையே விரும்பித் தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக எல்லா முஸ்லிம் மாணவர்களும் பைபிள் வகுப்பிலேயே சேர்ந்தார்கள்.யாரும் யாரையும் கட்டாயமாகவோ அல்லது நைச்சியமாகப் பேசியோ மதமாற்றம்செய்ய முற்படவில்லை.

ஒவ்வொரு வகுப்பிலும் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மாணவர் தலைவர்.ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மாணவர் தலைவர் என்று மாணவர்களே தேர்ந்தெடுக்கவேண்டும். ஆறாவது வகுப்பில் (அப்பொழுது முதல் பாரம் என்று அழைத்தார்கள்) நாங்கள் தேர்ந்தெடுத்த மாணவர் தலைவரின் பெயர் ஏ.கே.மூஸா. பள்ளியோ கிறிஸ்துவர்கள் நடத்தும் பள்ளி. பல ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களே. பெரும்பான்மையான மாணவர்களோ இந்துக்கள். ஆனால்,எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓர் இஸ்லாமியர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏழாம்,எட்டாம்,ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளிலும் எங்கள் வகுப்புத் தலைவராக அதே ஏ.கே.மூஸா என்ற மாணவரையே தேர்ந்தெடுத்தோம். ஏ.கே.மூஸா எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். ஆனால், சராசரி மாணவர். சராசரி உயரம். சராசரி கவர்ச்சி. பதினோராம் வகுப்புக்கு வந்தோம். அதுவே பள்ளியில் இறுதி வகுப்பு. ஆண்டு முடிவில் எஸ்.எஸ் எல்.சி.தேர்வு எழுத வேண்டும்.பதினோராம் வகுப்பின் மாணவர் தலைவரே பள்ளியின் மாணவர் தலைவர் ஆவார். பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

அப்பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.குருவில்லா ஜேக்கப் அவர்கள். பள்ளி மாணவர் தலைவர் உயரமாக, கம்பீரமாக,கவர்ச்சியாக நன்றாகப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய விருப்பத்திற்கேற்ப பதினோராம் வகுப்பு மற்றும் பள்ளியின் மாணவர் தலைவராக நாங்கள் ஒரு கவர்ச்சிகரமான மாணவரைத் தேர்ந்து எடுத்தோம். அவருடைய பெயர் ஹாரூன் முஹம்மது.

பள்ளி வாழ்க்கை முடிந்த பிறகு ஏ.கே.மூஸாவுடன் தொடர்பு அறுந்து விட்டது. அவர் எங்கே, எப்படி, என்ன செய்து கொண்டிருந்தார்,செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஹாரூண் முஹம்மது ஆஸ்திரேலியா நாட்டில் குடியேறி குடியுரிமையும் பெற்றார். 1998ஆம் ஆண்டு அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நான் ஆஸ்திரேலியாவில் சந்தித்தேன். கான்வென்டில் படிக்கும்போது மல்லிகா என்றொரு மாணவி இருந்தார் பெயர் மல்லிகா என்றாலும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். மிக அழகான, மிக புத்திசாலியான பெண். வகுப்பில் அந்தப் பெண்ணுடன் தான் முதலிடத்திற்குப் போட்டி.

இஸ்லாமியச் சட்டம்,மதம்,வாழ்க்கைமுறை ஆகியவற்றுடன் சட்டக்கல்லுரியில் படிக்கும்போது தான் அறிமுகம் ஏற்பட்டது. இந்து சட்டங்கள் என்றொரு பாடம் இருந்தது. அதைப் போலவே இஸ்லாமிய வாழ்க்கை முறை பற்றி பல மாயைத்தோற்றங்கள் இருந்தன. இந்து சமுதாயத்தின் மத்தியில் அறியாமையே இருந்தது. இஸ்லாமிய சட்டங்களை படித்த பிறகு தான் அந்த அறியாமை விலகியது. இஸ்லாம் ஓர் உயர்ந்த வாழ்க்கை முறை என்பதை யாரும் மறுக்க இயலாது. இந்து திருமணச்சட்டங்கள், இந்து வாரிசுரிமைச் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து இஸ்லாமியச் சட்டங்கள் வேறுபடுகின்றன என்பது உண்மையே. ஆனால், இந்த வேறுபாடுகளின் காரணமாக மட்டுமே இந்து சட்டங்கள் தரம் உயர்ந்தவை என்றோ, இஸ்லாமியச் சட்டங்கள் தரம் குறைந்தவை என்றோமுடிவுக்கு வர முடியாது.

இந்து சட்டங்களை இறைவனே அருளினார் என்று வேதங்களும் உபநிஷத்துக்களும் குறிப்பிடுவதைப்போல இஸ்லாமியச் சட்டங்களை இறைவன் தம்முடைய தூதர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம்) மூலம் அருளினான் என்று இஸ்லாமியர் நம்புகிறார்கள். இஸ்லாமிய வாழ்க்கை முறையிலும் இஸ்லாமியச் சட்டங்களிலும் பல அம்சங்கள் என்னைக் கவர்ந்துள்ளன.

மனித உரிமைகளைப் பற்றி இஸ்லாமிய பிரகடனம் என்றொரு பிரகடனத்தை 1981 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.. மதத்தில் கட்டாயம் கிடையாது என்பது முக்கியமான கொள்கை.முஸ்லிம் நாடுகளில் வாழ்கின்ற சிறுபான்மை சமயத்தினர் அவர்களுடைய மதம் வகுத்துள்ள சட்ட விதிகளைப் பின் பற்றி வாழ உரிமை உண்டு என்று பிரகடனம் அறிவிக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கையில் அவரை யாரும் கட்டாயப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ கூடாது என்பது திருக்குர் ஆனின் அடிப்படைக் கொள்கை.

பெண்களுக்கும் சொத்துரிமை இல்லாத காலத்தில் தோன்றியது இஸ்லாம். பெண்கள் தங்கள் பெயரில் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமையை இஸ்லாம் அறிவிக்கிறது. அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம்) ஒரு மாமனிதர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த பலம் பொருந்திய சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ என்று வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார்.

தம்முடைய யங் இந்தியா பத்திரிகைகளில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம்) அவர்களின் உயர் பண்புகளைக் குறித்து மகாத்மா காந்தி எழுதியதைப் பாருங்கள். இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஒர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை,தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை,தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு,அவரது அஞ்சாமை,இறைவன் மீதும் தமது பிரசாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள்.

இஸ்லாம் ஒரு போராளிகளின் மதம் என்றொரு தோற்றம் இருக்கிறது. வாள் பலம் கொண்டே இஸ்லாம் பரவியது என்றும் வாள் பலத்தைக் கொண்டு இஸ்லாமியர் மற்றவர்களை அச்சுறுத்துகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இஸ்லாமிய இயக்கம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகே முன்னேறியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம்) இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டதை நபித்துவம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம்) அவர்களின் பணியை இஸ்லாம் அழைப்புப் பணி என குறிப்பிடுகிறது. இந்த அழைப்புப் பணியை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.முதல் காலகட்டம் மக்கா நகரில் நடந்த சகாப்தம்.இது 13 ஆண்டுகள் நீடித்தது.இரண்டாவது கால கட்டம் மதனீ சகாப்தம்.இது 10 ஆண்டுகள் நீடித்தது.

மக்கீ சகாப்தத்தில் நபிகள் நாயகத்தின் மீதும் அவருடைய அழைப்புப் பணியின் மீதும் சொல்லொணாத கொடுமைகளும்,அக்கிரமங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.அன்றைய அதிகாரவர்க்கத்தினர் நபிகள் நாயகத்தை பைத்தியக்காரர் என்று பழித்தார்கள். அவருடைய பேச்சைக் கேட்க யாரும் போகக் கூடாது என்று தடை விதித்தார்கள்.முஸ்லிம்களைக் கண்ட போது அவர்களைத் திட்டினார்கள்.வசை பாடினார்கள். ஆயினும் இஸ்லாமிய அழைப்பின்பால் மக்கள் கவனம் திரும்பி ஏராளமானவர்கள் திரண்டார்கள். தன்னுடைய இறுதி ஆயுதமாக வன்முறையை அதிகார வர்க்கம் ஏவி விட்டது. முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட துன்பங்கள் அவர்களால் தாங்க முடியாத அளவிற்குச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு,மக்கா நகரிலிருந்து வெளியேறுவது என்று நபிகள் நாயகம் முடிவெடுத்தார்.மக்கீ சகாப்தம் ஒரு பெரும் போராட்ட காலமாக இருந்தது.பிறகு தொடங்கியதே மதனீ சகாப்தம்.

தம்மையும் தம்முடைய மதத்தையும் தற்காத்துக் கொள்ளவே முஸ்லிம்கள் போராட்டக் குணத்தைவளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அரசியல் மற்றும் காழ்ப்பு உணர்வுகளின் காரணமாகவே இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் நடந்தது என்பதே உண்மை. பேராசிரியர் பெவான் என்னும் வரலாற்று நூலாசிரியர், முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம்) அவர்களைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டவையெல்லாம் இலக்கிய விந்தைகளாகிவிட்டன என்று குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் ஏகத்துவம்,மறுமை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்துகிறது. ஒரே இறைவன் என்பது மூலக்கோட்பாடு. அவனை ஒத்ததோ, விஞ்சியதோ ஏதுமில்லை.அவன் அதிபதி. அவனிடம் எந்த குற்றமும், குறையும் காண முடியாது.அவன் உடல்களை உருவாக்கியவன். ஆன்மாவை உண்டாக்கியவன். அவனே இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி. இதுவே ஏகத்துவம். உங்களுள் மறைந்திருப்பவையும்,இந்த உலகில் உங்களிடமிருந்து மறைக்கப்பட்டவையும் மறுஉலகில் உங்கள் முன் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பது மூலக்கோட்பாடு. இதுவே மறுமை. இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் என்ன குற்றத்தைக் காண முடியும்?எல்லா மதங்களிலும் அடிப்படைக் கோட்பாடுகளைச் சிதைப்பவர்கள் இருக்கிறார்கள்.

காலப்போக்கில் பல மூட நம்பிக்கைகளும் மலிந்து விடுகின்றன. மதம் என்பது ஒரு போர் வாளாக மாறிவிடுகிறது. இந்து சமயத்திலும்,கிறிஸ்துவ சமயத்திலும்,யூத சமயத்திலும் தீவிரவாதிகள் இருப்பதைப்போல் இஸ்லாத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இந்த தீவிரவாதிகளினால்தான் மதங்களிடையே பகை வளர்கிறது.இந்தத் தீவிரவாதிகளின் சொல்லையும் செயலையும் கொண்டு ஒரு மதத்தை மதிப்பிடக்கூடாது.

திருக்குர் ஆனைப் படிப்பதற்கும், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திருக்குர் ஆன் ஓதப்பட்ட காலம் கி.பி.610. ஓர் எழுத்துக் கூட மாறாமல் எந்த இடைச் செருகல்களுக்கும் உள்ளாகாமல் ஒரு நூல் உள்ளது என்றால் அது திருக்குர் ஆன் மட்டுமே என்று சர் வில்லியம் மூர் குறிப்பிடுகிறார்.

திருக்குர் ஆனை ஏற்று நபிகள் நாயகத்தை இறைத்தூதராகப் போற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களின் சகோதரர்கள் என்ற உணர்வு பரவ வேண்டும் என்று விழைகிறேன்.

(குடவாச ல் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட அருள் வசந்தம் எனும் மலரிலிருந்து)

Zazaakallaah khairan – Muduvai Hidayath & Fatimatu Al-Zzahra

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb