காலண்டரினுள் ஊடுருவிய ஷிர்க்
மனித குலம் பல்லாயிரமாண்டுகளை கடந்துவிட்ட போதிலும் மூட நம்பிக்கை அகன்ற பாடில்லை. பகுத்தறிவைப் பற்றி பறை சாற்றும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
காலத்தின் தேவைகளில் ஒன்றாகிவிட்ட காலண்டரை எடுத்துக் கொண்டால் அதில் இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பல விஷயங்கள் ஊடுருவிவிட்டதைக் காணமுடியும். இதில் மிக முக்கியமாக இரண்டைக் கூறலாம். ஒன்று உருவப்படங்கள் நிறைந்து காணப்படுவது. இரண்டு இராசி பலன் பற்றிய குறிப்புகள்.
இது பற்றி சிறிது கவனம் செலுத்தினால் கூட இவை ஈமானின் அடிவேரையே சாய்த்துவிடும் என்பதை உணர முடியும். மனிதன் நரகத்தின் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லும் உருவ வழிபாடுகளில் சிக்குண்டதற்குக் காரணம் உருவப்படங்கள் தாம் என்பதை உணர்ந்து நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவப்படங்களை வைத்திருப்பதை கடுமையாக கண்டித்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுமிடத்து “எந்த வீட்டில் நாய் உருவப்படங்கள் இருக்குமோ அங்கு ரஹ்மத்துடைய வானவர்கள் வருகை புரிய மாட்டார்கள்” என நவின்றார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
இது பற்றி சற்றும் சிந்திக்காமல் நம்முடைய சில இஸ்லாமிய சகோதரர்கள் இணைவைப்பவர்களின் தெய்வங்கள் பொறிக்கப்பட்ட காலண்டர்களையும் தன் வீட்டில் மாட்டி வைத்திருப்பது தான் வேதனைக்குரிய விஷயம். சிறிய அளவில் பொறிக்கப்பட்ட உருவங்களும் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
நாங்களா வாங்கினோம்? இலவசமாக கொடுக்கப்பட்டதுதானே? என்று காரணம் கூறும் புண்ணியவான்கள் அந்த உருவங்கள் மீது இறைவனின் வல்லமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இயற்கை காட்சிகள் உள்ளடங்கிய படங்களையாவது ஒட்டிவைக்கலாமே?
இரண்டாவது விஷயமான இராசி பலனில் மனிதன் பிறந்த தேதியை வைத்து கணக்குப் பார்ப்பது, நல்ல நேரம் கெட்ட நேரம் ராகுகாலம் என காலத்தைப் பிரிப்பது இவையனைத்தும் காலண்டரினுள் அரங்கேறி இருப்பதைக் காணலாம். இதனால் நமக்கென்ன என்று சும்மா இருந்து விட முடியாது. காரணம் நம் சமுதாயத்தினர்களில் வேறு யாருமல்ல மிகவும் குறைந்த எண்ணிக்கையினர்தான் காலண்டரில் போடப்பட்டுள்ள நல்ல கெட்ட நேரங்களைப் பார்க்காமல் வீட்டு விசேஷங்களை நடத்தி முடிக்கின்றார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
இது பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது ‘எம்மனிதன் சோதிடக்காரனிடம் வருவானோ அவன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட மார்க்கத்தை நிராகரித்தவனாவான்’ (நூல்: அஹ்மத், அபூதாவூத்)
என்றும், ‘சோதிடக்காரனிடம் குறி கேட்பவனின், ஒப்புக்கொள்ளப்பட்ட நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.’ (நூல்: முஸ்லிம்) என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
இங்கு இன்னொரு விஷயத்தை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். இஸ்லாமியர்கள் நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இவைகளை நிறைவேற்ற இஸ்லாமிய மாதங்களை கணக்கிடுவது இன்றியமையாத ஒன்று. இப்படி இருக்க,
நம்மில் எத்தனை நபர்களுக்கு இஸ்லாமிய மாதங்கள், நாட்கள் பற்றி கணக்கு தெரியும்? இலட்சத்தில் ஒரு நபர் கூட கணக்கிட்டு முறையாக ஞாபகம் வைத்திருப்பது அரிதிலும் அரிதுதான்!
இஸ்லாத்தின் மீதுள்ள நமது பற்று இவ்வளவுதானா?
குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அச்சிட்டு விநியோகம் செய்யும் நம் சமுதாய அன்பர்கள் குர்ஆன் ஆயத்துக்கள் ஹதீஸ்கள் மற்றும் நேர்வழி நடந்த நம் முன்னோர்களின் உபதேசங்களை இணைத்து காலண்டர்கள் அச்சடித்து விநியோகம் செய்தால் காலண்டரில் சோதிடம் பார்த்து ஈமானை இழக்க முனையும் நம் சகோதரர்களையாவது காக்கலாமே! இதுவும் நன்மையான காரியமே!
மவ்லவி, ஜஅபர்ஸாதிக் யூசுபி, திண்டுக்கல்.