ஹமாஸ் போராளிகளையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் ஒழித்தே தீருவோம் என்று ஆவேசமாக காஸô பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேலிய ராணுவம். ஆனால், இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு குழந்தைகளும் அப்பாவிகளும்தான் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாத முகாம்களைத்தான் தாக்குகிறோம் என்கிறார்கள். ஆனால், மருத்துவமனைகளும், குடியிருப்புகளும்தான் அழிந்து கொண்டிருக்கின்றன.
ஒரு பிராந்தியத்தையே அழித்து, யாரை வெற்றிகொண்டு, எந்த மாதிரியான அமைதியை உருவாக்குவதற்கு இஸ்ரேலிய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.
இன்றைக்கு எந்த இயக்கத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறதோ அதே ஹமாஸ் இயக்கம்தான் இரு ஆண்டுகளுக்கு முன்பு காஸôவுக்கும் மேற்குக் கரைக்கும் ஒட்டுமொத்தமாக நடந்த பாலஸ்தீன பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அமைதி வேண்டும், அமைதி வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேலும், அமெரிக்காவும் அன்றைக்கு இருந்த ஆக்கபூர்வமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எந்த அமைதிப் பேச்சிலும் சேர்க்கவே கூடாது என்று உறுதியாக இருந்தார்கள்; மக்களின் மனப்போக்கை உதாசீனப்படுத்தினார்கள். இந்த நிலையில்தான், தற்போது மேற்குக் கரையில் ஆட்சியில் இருக்கும் மேற்கத்திய வாசனையுடைய ஃபதா கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹமாஸ் இயக்கம் காஸô பகுதிக்குள் முடங்க வேண்டியதாயிற்று.
ஆட்சியில் இருந்த காலத்தில் ஹமாஸ் இயக்கம் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கலாம். ஆனாலும், அந்தத் காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஹமாஸ் இயக்கத்தை அமைதி வழிக்குத் திருப்புவதன் மூலம் உலகின் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான சந்தர்ப்பம் இருந்தது. ஆனால், உண்மையிலேயே அமைதியை விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் இஸ்ரேலும் அமெரிக்காவும் பெருந்தன்மை சிறிதுமின்றி, ஹமாஸ் என்பது பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்துவதிலேயே குறியாக இருந்தன. உலகில் எத்தனையோ பயங்கரவாத இயக்கங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு அமைதிப் பாதைக்குத் திரும்பியிருக்கின்றன. அப்படியிருக்கையில், ஜனநாயக வழிக்குத் திரும்ப முயன்ற ஓர் இயக்கத்தை மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராட வைத்தது யார் தவறு?
இஸ்ரேல் கூறுவதுபோல், ஹமாஸ் இயக்கத்தையும் அதனை ஆதரிப்பவர்களையும் அழிக்க வேண்டும் என்றால் கடந்த தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்த காஸô மற்றும் மேற்குக்கரையில் வாழும் பொதுமக்களையும் அழிக்க வேண்டும் என்று அர்த்தமாகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக காஸôவில் இருந்துகொண்டு ஹமாஸ் இயக்கத்தினர் நடத்தும் ராக்கெட் தாக்குதலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதுதான். வழக்கமான பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லைதான். ஆனாலும், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு வெறுமனே ராணுவ நடவடிக்கை மட்டுமே போதாது. இஸ்ரேல் ராணுவம் நினைத்தால், காஸô பகுதியையே தரைமட்டமாக்கி “அமைதியை’ ஏற்படுத்திவிட முடியும். இஸ்ரேலை எதிர்த்து வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்பது ஹமாஸ் இயக்கத்தினருக்கும் தெரியும். அப்படியிருக்கையில், ராக்கெட் தாக்குதல் நடத்தி இஸ்ரேலை அவர்கள் சீண்டுவதற்கு, ஒடுக்கப்பட்ட மனோபாவம்தான் காரணமாக இருக்கக்கூடும். காஸ
ô பகுதியின் நிர்வாகமும் பாதுகாப்பும் இப்போது ஹமாஸின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சிறியதாக ராணுவம் ஒன்றும் இருக்கிறது. ஆனாலும் எல்லைப் பகுதி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காஸôவுக்குள் என்னவெல்லாம் வரலாம் என்பதை அந்தநாட்டு அரசுதான் முடிவெடுக்கிறது. அவ்வப்போது, இஸ்ரேல் அரசு விதிக்கும் தடைகளால், உணவுக்குக்கூட வழியில்லாமல் காஸô பகுதியில் வசிப்பவர்கள் தவிப்பது வாடிக்கை. இப்படிக் கல்வியறிவும், அடிப்படை வசதிகளும், வேலைவாய்ப்பும் கிடைக்காததால்தான் மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்.
ஹமாஸ் இயக்கத்தினரின் ராக்கெட் தாக்குதல் நடத்தும் திறனை அழிப்பதுதான் இஸ்ரேலின் இப்போதைய நோக்கம் என்று கூறப்பட்டாலும், இப்போது நடந்துவரும் தாக்குதலைப் பார்த்தால், காஸô பகுதியைத் முற்றிலுமாக தரைமட்டமாக்குவதுதான் அவர்களது நோக்கம் எனத் தெளிவாகத் தெரிகிறது. ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, மசூதிகளையும் பள்ளிகளையும் இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கியிருக்கிறது. தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல நூறு குழந்தைகள் காயமடைந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ்கள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடந்திருக்கிறது.
இந்த நிலை தொடர்ந்தால் பாலஸ்தீன அரசு என்ற பெயரில் மேற்குக் கரையை மட்டும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஃபதா கட்சி தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழவும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. அப்படி நடந்தால், லெபனான், சிரியா, ஜோர்டான் என நாலாபுறத்தில் இருந்தும் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்படும். இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு அந்த எதிர்ப்புகளைக்கூட தவிடுபொடியாக்க முடியும். ஆனால், ஆட்சி செய்வதற்கு அங்கு மயானங்கள் மட்டுமே இருக்கும்.
எம். மணிகண்டன்