பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
( மணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக )
ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா……!
ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத… புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். ஆகவே, ஓரளவுக்காவது அந்த புரியாத புதிரை புரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சி.
கட்டுரையின் கடைசியில்… உங்கள் சந்தோஷத்துக்காக ஒரு… ?!
சரி…! ஆராய்ச்சிக்கு வருவோம்;
ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், ஆனால் விவாதங்களில் அவர்களால் வெல்ல முடிவதில்லை என்பது தற்போதைய ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
ஆண்களின் மூலையை விட பெண்களின் மூலை சிறியதாக இருந்தும் கூட பெண்களே பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவின் பல்டமோர் நகரத்து பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஆண் பெண் இருபாலாரின் சிறுமூலை பெருமூலை என்ற இருமூலைகளிலும் பேச்சில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்தார்கள். அவ்விரு பகுதிகளிலும் பெண்களே அதிக அடர்த்தியான உயிரணுக்களைப் பெற்றிருந்தனர். பெண்கள் ஏன் அதிக பேசும் திறனை பெற்றிருக்கின்றனர் என்பதை விளக்க இந்த ஆராய்சி உதவுகிறது என்று தாமஸ் க்ளாபர் கூறினார்.
கல்வியாலும் சுற்றுப்புற சூழலை அமைக்கிற காரணிகளாலும் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசும் திறனை பெற்றனர் என்ற நம்பிக்கைக்கு இந்த ஆராய்சியின் முடிவுகள் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் விவாதம் என்று வந்து விடுமானால் பெண்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் வல்லவர்கள். நூறு சதவிதம் சரியான பக்கத்தில் இருந்து கொண்டு பெண்கள் விவாதம் புரிந்தாலும் அவர்கள் கிட்டத்தட்ட எப்போதும் தவறான பக்கத்தில் இருப்பதாகவே பிறரால் பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஒரு ஆராய்சி உறுதி செய்கிறது.
தங்களிடம் எதிர்வாதம் புரியும்படி ஆண்களை தூண்டிவிடுகிற போதெல்லாம் பெண்கள் வாதம் புரிய தயாராகி விடுவார்கள், தான் உணர்சி வசப்பட்டு விட்டதாக தங்களுக்கு தாங்களே ஒரு சாயத்தைப் பூசிக் கொண்டு வாதத்தை நிறுத்திக் கொள்வார்கள்.
பிரிட்டானிய மனநோய் மருத்துவர் டாக்டர் எலிசபெத் மேப்ஸ்டோன் என்பவர் குறிப்பாக 600 நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் அவ்விரு பாலாருக்கும் இடையே நடக்கக் கூடிய வாய்த்தகராறுகளை டைரியில்; எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 15 வருடங்களாக அந்த தகராறில் பயன்படுத்திய வார்த்தைகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.
நியாயமாகவும் காரணத்தோடும் நடப்பதாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள், கோபம், அச்சம் இது போன்ற மற்ற உணர்வுகளுக்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்களாக பெண்களை நடத்துகிறார்கள் என்று எலிசபெத் கூறுகிறார்.
பெண்கள் ஆண்களோடு செய்யும் விவாதங்களில் உணர்வுபூர்வமான அறிவுப்பூர்வமற்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முயற்சிக்கும் போது திணறிப் போய் விடுகிறார்கள், அதனாலேயே அவர்களது வாதம் எடுபடாமல் போய் விடுகிறது.
எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு.
அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், ”எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்” என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.
அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷயங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள் ‘டிக்’ செய்த குணங்கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!
நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்கள் நிச்சயமாக இறைவனின் அருட் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.
நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.
இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள்.
பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.
அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை… மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.
இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.
உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்… உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.
கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய ”டிகிரியில்” கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.சரி… எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?
பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.
ஆனால் ஆண்கள் அப்படியில்லை… பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர்.
பொது இடங்களில் கூடும்… பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.
அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.
பெண்களைப் புரிந்து கொள்ளாத எந்த ஆணின் வாழ்க்கையும் இனிக்காது என்பது எதார்த்தமான உண்மை.கணவன் மனைவிக்கிடையில் நகைச்சுவை உணர்வு இருந்தால் அங்கு சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்!
இதோ ஒரு நகைச்சுவை காட்சி உங்களுக்காக!
மனைவி: ”என்னங்க, துவரம் பருப்பு இல்லை.
மல்லி இல்லை. தேங்காய் எண்ணெய் இல்லை.
ஜீனி இல்லை. ஆஃபிஸிலிருந்து வரும்போது
வாங்கிட்டு வாங்க…”
கணவன்: ”ஏன்டி, ஆஃபிஸ் போகும்போது,
”இல்லை, இல்லை”ன்னு சொல்லி
எரிச்சலைக் கிளப்புற?”
புத்திசாலியான மனைவியின் பதில்:
”என்னங்க,துவரம் பருப்பு டப்பா காலியா இருக்கு.
மல்லி டப்பா காலியா இருக்கு.
தெங்காய் எண்ணெய் பாட்டில் காலியா இருக்கு.
ஜீனி டப்பா காலியா இருக்கு… இப்ப ஓகேயா?”
Posted by: Abu Safiyah