குழந்தைகளின் ஆரம்பக் கல்வி இஸ்லாம்
குழந்தைகள் பெற்றோருக்குக் கண்குளிர்ச்சியாவார்கள். குடும்ப அமைப்பைத் தழைக்கச் செய்யும் குலக்கொழுந்துகள் ஆவார்கள். குடும்பக் கட்டுமானத்தின் வாரிசுகள் மட்டுமின்றி, சமுதாய, தேச சீரமைப்புகளுடைய வருங்காலச் சந்ததிகளாகத் திகழ்கின்றனர். அவர்களால்தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. மேற்கூறிய அனைத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமும் அவர்களுக்கு ஊட்டப் படும் இஸ்லாமிய ஆரம்பக் கல்வி மூலமும் தான் சாத்தியமாகும்.
நல்ல கல்வி
குழந்தைகளை நல்லொழுக்கமுடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாகும். குழந்தைகளுக்கு மிகச்சிறந்த கல்வியளித்து, உயர் பட்டதாரிகளாக அவர்களை உருவாக்கி மகிழ்வதற்காகப் பெற்றோர் காலமெல்லாம் படாதபாடு படுகின்றனர். செல்வமும் கல்வியும் சேர்த்துக் கொடுத்தாலுங்கூட நல்லொழுக்கமில்லாவிட்டால் அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. நல்லொழுக்கம் என்னும் அடித்தளத்தின் மீது, கல்வி, செல்வம் முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். அப்போது தான் குழந்தைகள் மட்டுமின்றி குடும்பமும் சமுதாயமும் பெரும் பயன் பெறும்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:
“ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை விடச் சிறந்ததாக வேறு எதையும் விட்டுச் செல்வது கிடையாது” (அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
கலாச்சாரச் சீரழிவு
காணும் திசையெங்கும் இப்போது ஒழுங்கீனங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவை பள்ளிக் குழந்தைகளின் சின்னஞ்சிறு வயதிலேயே அவர்களுடைய மனதில் பதிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சினிமா, டிவி, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற கலாச்சாரச் சீரழிவு சக்திகளால் இக்காலக் குழந்தைகள் பெரிதும் கவரப்படுகின்றனர். இவற்றிலிருந்து பெற்றோர் தங்களைக் காத்துக் கொள்வதோடு, தம் குழந்தைகளையும் காத்து வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்லாமியக் கல்விதான் ஒரே தீர்வு.
இஸ்லாமியக் கல்வி
குழந்தைகளுக்குப் பிள்ளைப் பருவத்திலேயே தொழுகையைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடவேண்டும்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:
“குழந்தை ஏழு வயதை எட்டி விடும்போது, தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதை அடைந்தும் தொழுகையைத் தவறவிட்டால், அடியுங்கள். மேலும், படுக்கையைத் தனித்து அமையுங்கள்” [அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி); நூல்: முஸ்லிம்].
“நிச்சயமாகத் தொழுகையானது, மானக்கேடான, கேவலமான செயல்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கின்றது” எனத் திருமறை குர்ஆன் (29:45) கூறுகின்றது.
நமக்கெல்லாம் பேரருளாக இறைவனால் வழங்கப் பட்டுள்ள திருமறை குர்ஆன் பற்றிய கல்வியையும் நபி(ஸல்) அவர்களின் நல்வாழ்க்கை பற்றிய வரலாற்று அறிவையும் குழந்தைகளின் மனதில் பதியுமாறு எடுத்துரைத்து, அவர்களை இளம் பருவத்திலேயே இஸ்லாமிய வார்ப்பில் வடித்தெடுக்க வேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:
“தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும்” [நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ்(ரலி)].
மருத்துவம், பொறியியல், கம்ப்யூட்டர் கல்வி போன்ற துறைகளில் தம் பிள்ளைகளைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று அதீத அக்கறை எடுக்கும் முஸ்லிம் பெற்றோர் பலர், தம் பிள்ளைகள் இஸ்லாத்தின் அடிப்படைகளாகிய திருக்குர்ஆனைப் பற்றியும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைப் பற்றியும் ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே என்று நினைப்பதில்லை.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:
“அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும்” [அறிவிப்பாளர்: அனஸ்(ரலி); நூல்: இப்னுமாஜா].
ஏழு வயதில் குழந்தைகளைத் தொழுமாறு ஏவக் கடமைப் பட்ட பெற்றோர், தம் எழுபது வயதில் கூடத் தொழுகையை மறந்து திரிகின்ற அவல நிலை, நம் கண்ணெதிரே காணப் படுகின்றது.
குழந்தைகளைக் கண்காணித்தல்
பெற்றோர், தம் மக்களைக் கண்காணித்து, எதைப் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கென எப்படிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் அவர்கள் தங்களை அறியாமலேயே எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தம் பிள்ளைகளுடன் இணைந்திருக்கும் அவர்களின் நண்பர்களைப் பற்றியும் ஓய்வு நேரங்களில் எப்படிப்பட்ட இடங்களுக்குத் தம் பிள்ளைகள் செல்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அவர்கள் அறியாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
தீய பழக்கங்களின்பால் தம் பிள்ளைகள் செல்வது தெரிய வந்தால் அவர்களை மென்மையான, அறிவுப்பூர்வமான அணுகுமுறையின் மூலம் தடுத்து, நேர்வழியின் பக்கம் திருப்ப வேண்டும்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:
“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இயற்கையிலேயே பிறக்கின்றது. பெற்றோர்களே அக்குழந்தையை யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி விடுகிறார்கள்” [நூல்: புகாரீ].
எனவே, பிள்ளைகளின் அறிவை இஸ்லாமியக் கல்வியின் மூலம் வளர்த்து, நற்பயிற்சிகளால் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். மேலும், குழந்தைப் பருவத்திலேயே இஸ்லாமிய நெறி சார்ந்த கல்வியைக் குழந்தைகளுக்குப் புகட்டுதல் வேண்டும்.
அவலநிலை
இன்றைய இளைய தலைமுறையினரிடம் காணப்படக்கூடிய அவலமான குணம் யாதெனில், பெற்றோர்களை மதிக்காத தன்மை. இது தற்கால உலகப்படிப்பின் விளைவால் ஏற்படுகிறது. இன்றைய உலகக் கல்வியின் விளைவு என்னவெனில், படிக்கக் கூடிய மாணவர்களில் பெரும்பாலோர், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. அக்கிரமம், பாவங்கள் நிகழ்ந்தாலும் அதைக் கண்டும் காணாமல் ‘நமக்கேன் வம்பு?’ என்ற அலட்சிய நிலைதான், இன்றைய நவீன தலைமுறையினரிடம் மேலோங்கி நிற்கிறது.
தீர்வு
இதற்கு ஒரே பரிகாரம், குழந்தைகளுக்கு உலகக்கல்வி கற்பிப்பதோடு நின்று விடாமல் ‘தீனிய்யாத்’ எனும் இஸ்லாமிய மார்க்கக் கல்வியும் கற்றுக் கொடுக்க வேண்டும். எத்தனை உயர் பட்டப்படிப்புகள் படித்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்த இஸ்லாமியக் கல்வியைப் பயிலாமல், ‘படிப்பு’ பூர்த்தியடையாது. இஸ்லாமியக் கல்விதான், தனிமனித ஒழுக்கம், சிறந்த கூட்டு வாழ்வு, பொதுநலநோக்கு, தொலைதூரப் பார்வை, ஆதரவற்றோர் அரவணைப்பு, இறை கடமைகளை நிறைவேற்றல், மனித உரிமைகள் பேணல் போன்ற உயர்தரமான பண்பு நலன்களைப் போதிக்கிறது. மேலும்,
“ஒருவன் பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் பயனுள்ள இஸ்லாமியக் கல்வியானது, அவன் இறந்த பின்பும் அவனுக்குத் தொடர்ந்து நன்மைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்” என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லுரையாகும் [நூல்: முஸ்லிம்].
இறைப்பற்றையும் நபி நேசத்தையும் குழந்தைகளுக்கு இளமை முதலே போதித்திட வேண்டும். ‘மம்மி-டாடி’ என்று குழந்தைகளால் அழைக்கப்படுவதைக் கேட்டு பெற்றோர் பூரித்துப் போகின்றனர். இந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி தீனுல் இஸ்லாத்தை மட்டம் தட்டுகிறது. எனவே இது குறித்து முஸ்லிம் சமுதாயம் அக்கறை எடுத்து, சிறார்களுக்கு ஆரம்பத்திலேயே இஸ்லாமியக் கல்வியைப் போதிக்க வேண்டும்.
பிள்ளைகளின் ஆளுமை
ஒரு குழந்தை வளரும் சூழல், அதன் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கும் விளைவுகளுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ, அதே போன்று ஒருவன் மாணவனாக இருந்து பெறும் அறிவும் அவனது வாழ்க்கையில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்த வல்லது. எனவே, மாணவப் பருவத்தின் போது அவர்களிடம் நற்பண்புகளையும் நல்லொழுக்கங்களையும் இஸ்லாமியக் கல்வி மூலம் ஏற்படுத்தினால் அவர்களது ஆளுமையை நெறிப்படுத்த முடியும்.
முடிவுரை
ஏகத்துவம் பற்றிப் பேசும் அல்குர்ஆன் வசனங்களின் கருத்துகள், நம் பிள்ளைகளின் குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்பட வேண்டும். அவர்களது பிஞ்சு மனங்களில் பசுமரத்தாணி போன்று பதியும்படியாகச் செய்துவிட வேண்டும்.
குழந்தைகள் உயர்ந்த ஒழுக்க சீலர்களாக, நற்குணங்கள் வாய்க்கப்பெற்றவர்களாக ஆகவேண்டுமென்றால், அவர்களது ஆரம்பக்கல்வி இஸ்லாமாக இருந்தால்தான் சாத்தியம்.