தொழுகையின் சிறப்பு
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9
அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது “தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது” என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்
“(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்.” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ
“உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்
“நமக்கும் அவர்களுக்குமிடையே (நிராகரிப்பவர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காபிராகிவிட்டார்.” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, அஹ்மது
“யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்