தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சிக்குப்பின் குரான் ஹதீஸை தனது வாழ்க்கைபாதையாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு மத்தியில் பலமாக ஒருகருத்து விதைக்கப்பட்டுள்ளது அது என்னவெனில், தர்ஹாக்களுக்கு செல்லக்கூடிய, தர்காக்களில் நம்பிக்கையுடைய பெண்களை தவ்ஹீத்வாதிகள் திருமணம் செய்யக்கூடாது என்பதுதான்!
இதற்கு ஆதாரமாக ஒருவசனம் முன்வைக்கப்படுகிறது;
அல்லாஹ் கூறுகின்றான், “(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.” அல்குரான் 2:221.
இந்த வசனத்தில் மூலம் இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் கூறிவிட்டான் எனவே தர்காக்களை நம்பும் பெண்களை திருமணம் செய்வது ஹராம் என முடிவெடுத்துவிட்டார்கள். அதே நேரத்தில் மற்றொரு இணைவைப்பாளர்களான வேதம் கொடுக்கப்பட்டோரை திருமணம் செய்யலாம் என அல்லாஹ் அனுமதியளிப்பதை வசதியாக மறைத்துவிடுவார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்; “உங்களுக்குமுன் வேதம்கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களை வைப்பாட்டிகள் ஆக்கிகொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.” அல்குரான் 5:5
வேதம்கொடுக்கப்பட்டவர்கள் உசைர்[அலை] அவர்களை அல்லாஹ்வின் மகனென்று கூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்கள் அதோடு நபி[ஸல்] அவர்களை அல்லாஹ்வின் தூதரக ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்படிப்பட்ட யூதப்பெண்ணை மணக்க அனுமதியிருக்கும்போது அல்லாஹ்வை, ரசூலை, வேதத்தை, மலக்குகளை, மறுமையை, விதியை நம்பிய ஒருபெண் அறியாமையினால் தர்காவை நம்பினால் அவளை மணக்கக்கூடாது எனசொல்லமுடியாது.
அப்படியாயின், மேற்கண்ட
2;221வசனத்தின் விளக்கம்தான் என்ன?
இந்த வசனம் முழுக்க முழுக்க மக்கத்து முஷ்ரிக்கீங்களை மட்டும் குறிப்பதாகும்! மக்கத்து முஷ்ரிக்குகளுக்கும் இன்றைய தர்கவாதிகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை அல்லாஹ்விடத்தில் வாங்கித்தருவார்கள் என்றுநம்பி அவுலியாக்களிடம் கையேந்துவது மட்டுமே!
அதேநேரத்தில், மக்கத்து முஸ்ரிக்குகள் அல்லாஹ்வை நம்பினார்கள் ஆனால் நம்பவேண்டியவிதத்தில் நம்பவில்லை. இதுபோக அவர்கள் ரசூலை, வேதத்தை, மறுமையை, மலக்குகளை, விதியை இதுபோன்ற இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை அவர்கள் நம்பவில்லை.
இவைகளில் ஒன்றை ஏற்று ஒன்றை மறுத்தாலும் அவர்கள் நிராகரிப்பாளர்களாக ஆகிவிடுவர். அப்படியிருக்க அல்லாஹ்வை, மலக்குகளை, வேதத்தை, ரசூலை, மறுமையை, விதியை முழுமையாக நம்பியுள்ள முஸ்லிம்கள் அறியாமையினால் தர்காவில் வஸீலா தேடுகிறார்கள் என்பதற்காக அவர்களை மக்கத்து முஷ்ரிக்கீங்கள் பட்டியலில் சேர்ப்பதும், அவர்களின் பெண்களை திருமணம் செய்வது ஹராம் என பத்வா வழங்குவதும் ஏற்புடையதன்று!
வேண்டுமானால் தர்காக்களுக்கு செல்லும் பெண்ணை மணப்பதைவிட தவ்ஹீத் பெண்ணை மணப்பது சிறந்தது என்று கூறிக்கொள்ளுங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்!