அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள்
ஈவிரக்கமற்ற படுகொலைகளால் ஈராக் நாட்டையும் ஆப்கனையும் குதறிக்கொண்டிருக்கும் அமெரிக்க நாசகார அரசுப் படையினரின் மத்தியில் இருந்தும் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் தோன்ற ஆரம்பத்துள்ளன. சென்ற தலைமுறையில் வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த முன்னாள் படைவீரர்களின் உந்துதலால் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ”குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்” எனும் நிகழ்வு அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் ஈராக், ஆப்கன் போர்களில் பங்கெடுத்த அமெரிக்க வீரர்களில் 200 பேருக்கும் மேலானோர், அமெரிக்க ராணுவம் அந்நாடுகளில் செய்துள்ள படுகொலைகளையும், மனிதவிரோதச் செயல்களையும் அம்பலப்படுத்தினார்கள். நான்கு நாட்கள் நடந்த அச்சந்திப்பில் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ எனும் பேரால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர்களுக்கு எதிராக அமெரிக்கப் படை நடத்திய மனித உரிமை மீறல்கள் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட்டன. அமெரிக்காவின் பேரால் தாங்கள் செய்த கொடூரச் செயல்கள் மனசாட்சியை உறுத்தியதால் அவற்றை அம்பலப்படுத்துவதென்று முடிவு செய்த அப்போர்வீரர்களின் சாட்சியங்கள் தொகுக்கப்பட்டு ”குளிர்காலப் போர்வீரர்கள்: ஈராக், ஆப்கானிஸ்தான்: ஆக்கிரமிப்பின் சாட்சியங்கள்” என்ற நூலாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.
அந்நூலில் பதிவாகியிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் வான்வெளி உளவமைப்புப் பிரிவின் கீழ் ஈராக்கிற்கு சென்ற மைக்கேல் பிரிஸ்னர் எனும் முன்னாள் படைவீரரின் வாக்குமூலம் கீழே தரப்பட்டுள்ளது.
”அமெரிக்க இராணுவத்தில் நான் சேர்ந்தபோது இனவெறி என்பதே இராணுவத்தில் கிடையாது எனச் சொன்னார்கள். இவ்வெறியைக் களைவதற்காக, இராணுவத்தில் சேர்ந்த அனைவருக்கும் “சம வாய்ப்பு’ என்னும் பயிற்சி தந்தார்கள். ஒவ்வொரு இராணுவ யூனிட்டிலும் இனவெறிக்கூறுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அங்கே சமத்துவமின்மையும், இன ஒதுக்கலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகவே நான் உணர்ந்தேன்.
ஆனால் செப்டம்பர் 11, 2001 (இரட்டைக்கோபுரங்கள் தகர்ப்பு)க்குப் பிறகு “முக்காடு மண்டையர்கள்’, “ஒட்டகம் ஓட்டிகள்’ போன்ற சொற்களும், இச்சொற்களை விட அதிக துவேசமான “பழுப்பர்கள்’ எனும் சொல்லும் இராணுவத்தில் புழக்கத்தில் வந்தன. கட்டளையிடும் தகுதியில் உள்ள உயர்பதவி வகிப்பவர்கள்தான் இச்சொற்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். உடனடியாக இராணுவம் முழுக்க இனவெறியை உமிழும் வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் புழங்க ஆரம்பித்தன.
2003இல் நாங்கள் ஈராக்கிற்கு சென்றபோது, எங்கள் அகராதியில் “ஹாஜி’ எனும் புதிய வார்த்தை சேர்ந்தது. ஹாஜி என்றால் “எதிரி’ என எங்கள் அகராதியில் பொருள்படும். ஒவ்வொரு ஈராக்கியனுமே எங்களுக்கு “ஹாஜி’தான். “ஹஜ்’ பயணம் மேற்கொள்பவர்களைக் குறிக்கும் “ஹாஜி’ எனும் இஸ்லாமின் மிக உயர்வான சொல், மிக மோசமான விஷயத்துக்கு எங்களால் பயன்படுத்தப்பட்டது.
நாங்கள் ஈராக்கில் எதிர்கொண்ட “ஹாஜி’க்களில் ஒன்றைப் பற்றி சொல்லப்போகிறேன். ”ஈராக்கில் ஐந்தாறு வீடுகள் மட்டும் தற்போது இராணுவத்துக்கு சொந்தமாகி விட்டதென்றும், அவ்வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களை விரட்டி விடவேண்டுமென்றும்” எங்களுக்குக் கட்டளையிட்டனர். அவ்வீடுகளுக்கு சென்று “இனி இவ்வீடுகள் உங்களுடையதல்ல’ என்பதைச் சொன்னோம். ஆனால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடோ, இழப்பீடோ நாங்கள் தரவில்லை. அவர்கள் எங்கு போவது என்பதையும் சொல்லவில்லை. அக்குடும்பத்தினர் குழப்பமும் பீதியுமடைந்தனர். அடுத்து என்ன செய்வது என்பதை அறியா அம்மக்கள் வீடுகளை உடனடியாகக் காலி செய்யவில்லை. உடனே அவர்களை அங்கிருந்து நாங்கள் வலுக்கட்டாயமாய் விரட்டி அடித்தோம்.
ஒரு பெண்மணி, இரண்டு சிறுமியர், நடுத்தர வயதுடைய இரு ஆண்கள் இவர்களைத் தவிர ஒரு முதியவர் ஆகியோர் அடங்கிய குடும்பம் ஒன்றை வீதியில் வீசி எறிந்தோம். வீட்டை விட்டு வெளியேற மறுத்துப் போராடிய முதியோர் உள்ளிட்ட ஆண்கள் அனைவரையும் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பினோம்.
இவ்வாறு நூற்றுக்கணக்கான குடும்பத்தினரை அவர்கள் வசித்து வந்த வீடுகளில் இருந்து விசாரணை எனும் பெயரால் சில மாதங்களிலேயே துரத்தி அடித்தோம்.
இதன் பின்னர் நடந்த ஒரு விசாரணைச் சம்பவம், ஈராக்கில் நாங்கள் நடத்தி வரும் ஆக்கிரமிப்பின் இயல்பை எனக்குத் தெளிவாக உணர்த்தியது.
அந்த விசாரணைக் கைதி ஏற்கெனவே உள்ளாடைகள் உரியப்பட்டு அம்மணமாக இருந்தான். அவனது புறங்கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. தலையை கோணிப் பையால் மூடியிருந்தனர். அவனை, சுவர் ஒன்றின் முன்னால் அவனுடைய மூக்கு சுவரை உரசும் வண்ணம் நிறுத்தி இருந்தோம். முகத்தைக் கூட பார்க்க முடியாத அக்கைதியின் மண்டையை உரசினாற்போல் உலோக நாற்காலி ஒன்றினால் சுவரில் ஓங்கி அடிக்கவேண்டியதே, எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை. விசாரணைக்கான கேள்வியை சக படைவீரன் கைதியிடம் கேட்பான். அவனிடம் இருந்து வரும் பதில் எதுவாய் இருப்பினும், எனது வேலை அவனது காதை உரசினாற்போல ஓங்கிப் பெரும் சப்தம் வரும் வரை சுவற்றில் அடிப்பதுதான். அவன் களைத்துச் சோர்ந்துவிடும் வரை மாற்றி மாற்றி இதனைச் செய்தோம்.
அவன் ஒழுங்காக நிற்கிறானா என்பதைச் சோதிக்கும்படி என்னுடைய சார்ஜென்ட் உத்தரவிட்டார். அவன் காலில் ஏதோ பிரச்சினை மாதிரி தெரிந்தது. அவனது காலில் காயம் ஒன்று இருந்ததால் நேராக நிற்க இயலாமல், அவன் தரையை நோக்கிச் சரிந்தவண்ணம் இருந்தான். அவனை நேராக நிற்க வைக்க உத்தரவு வரவே, அவன் கால்களைப் பிடித்து நேராக நிறுத்தினேன். ஆனால், பலனில்லை. மீண்டும் மீண்டும் சரிந்து விழுந்தான். உத்தரவைச் சரியாக நான் நிறைவேற்றவில்லை என்று சார்ஜெண்ட் என் மீது கோபப்பட்டு, அக்கைதியை அவரே தூக்கி எழுப்ப அவனுடைய முகத்தைச் சுவரில் தடார் என்று மோதவைத்து நிறுத்தினார். மீண்டும் சரிந்த கைதியை மாறிமாறிச் சுவற்றோடு சேர்த்து அறைந்தார். சற்று நேரத்தில் எல்லாம், சார்ஜெண்ட் வெளியே போய்விட்டார். இப்போது கீழே சரிந்து விழுந்த கைதியைத் தூக்கி நிறுத்தினேன். அவனது முகத்தோடு சேர்த்துக் கட்டியிருந்த கோணிப்பையில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியேறிக்கொண்டிருந்தது.
அவனை அப்படியே உட்கார வைத்து விட்டேன். சார்ஜெண்ட் வரும் அறிகுறி தெரிந்ததும், மீண்டும் அவனை எழுப்பி நிற்க வைப்பதை ஆரம்பித்தேன்.
நான் செய்த இந்த இராணுவ சேவையை எண்ணிப் பார்க்கையில் மிகவும் வெட்கப்படுகிறேன். எங்காவது வயதான மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம், ஈராக்கில் வீடுகளை விட்டு எங்களால் ஸ்ட்ரெச்சர்களில் கட்டாயமாகத் தூக்கிப்போடப்பட்டு ஈராக் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட முதியவர்கள் நினைவுக்கு வந்து நான் குற்ற உணர்வுக்கு உள்ளாகிறேன்.
குழந்தைகளோடு இருக்கும் தாய்மார்களைப் பார்க்கும்போதெல்லாம் எங்களால் வெளியேற்றப்பட்ட எண்ணற்ற தாய்மார்களும் அவர்களின் குழந்தைகளும் கதறக் கதற அழுத கண்ணீர் நினைவில் எழும்புகிறது. ஆயுதம் தரித்த நாங்கள் தெருவில் வீசி எறிந்த குழந்தைகள் நினைவில் வந்து என்னை வதைக்கின்றனர்.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுகிறோம் என்று எங்களிடம் சொன்னார்கள். உண்மையில் பயங்கரவாதி நான்தான். பயங்கரவாதமே எங்கள் படை எடுப்புதான்.
இனவெறிதான், இப்பேரழிவுகளையும் அடுத்தவர்களின் நாட்டை அநியாயமாக ஆக்கிரமித்திருப்பதையும் நாங்கள் நியாயப்படுத்தும் முக்கிய கருவியாக உள்ளது.
எங்கள் வீரர்களிடம் இந்த வெறி மட்டும் இல்லாமல் இருந்தால், தாங்களும் ஈராக்கின் சாதாரண மக்களைப் போன்றவர்கள்தான் என்பதனையும், அமெரிக்காவின் கோடீஸ்வரர்களால் ஏவப்பட்ட படையினர்தாம் நாங்கள் என்பதையும் உணர்வார்கள்.
“நான் ஈராக்கில் பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு வீசி எறிந்தேன். ஈராக்கை விட்டு இங்கு (அமெரிக்கா) வந்து பார்த்தால், பொருளாதாரப் பின்னடைவால் இங்கும் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன. நம்முடைய எதிரி எங்கோ ஐந்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இல்லை. அவர்கள் இங்கேதான் (அமெரிக்காவில்) தத்தம் வீடுகளில் இருக்கின்றார்கள். நாம் அணிதிரண்டு போராடினால் இப்போரை நம்மால் நிறுத்த முடியும். இந்த அரசையே நிலைகுலைய வைக்க முடியும். நம்மால் புதியதோர் உலகை உருவாக்கவும் முடியும்.”
மொழியாக்கம்: செங்கதிர் – புதிய ஜனநாயகம்